இவர் அவர் அவள் - பாகம் 2

பாகம் 1 இங்கே

இருளில் தன் நிழல் கூட பூதங்கள் போன்றதொரு பயத்தைக் கொடுத்தது. புத்தகத்தை மூடி வைத்து விட்டு, ஜன்னலோரம் வந்து நின்றார் அவர். விடியற்காலை ஆகி விட்டிருந்தது. புழுக்கம் வேறு அதிகமாகவும் அப்போதுதான் மின்விசிறி போடப்படாமல் இருப்பதை கவனித்தார் அவர்.

"எனக்கு என்ன ஆச்சு. இலட்சியம் நேர்மை அது இது என் வாழ்கையை வீணாக அடித்து விட்டேனோ. என் வயதே ஆனாலும் அரசாங்க உத்தியோகம் நிரந்தர வருமானம் நிம்மதியான வாழ்க்கை என்று காலத்தை ஒட்டுகிறாரே கருப்பையா வாத்தியார். பெரிசா என்ன சாதிச்சோம். என்னோட படிச்சவன் எல்லாம் பொண்டாட்டி குழந்தை குட்டி, காரு பங்களான்னு படு சௌக்கியமா இருக்காங்க.. இந்தத் தூக்கில் தொங்கக் கூட தைரியம் இல்லாமல்.... இன்னிக்கு ஒரு வழியாய் இந்தப் போராட்டத்தை முடிக்க வேண்டியதுதான்... நாளை தெருவுக்கு வந்துவிடும் என் உடல்" என்று நினைக்கும் போதே அவருக்குள் ஒரு பெருமூச்சு எழும்பி கன்னத்தை நனைத்தது.

"அழுகிறேனோ"

"ஏன் இந்த அழுகை. நெஞ்சு கூட கொஞ்சம் வலிக்கிறதே. அப்படியென்றால் நான் போடுவதெல்லாம் பொய் வேஷமா... உயிரில்லாத என் உடல் என்னவாகும், நான் போனதைக் குறித்து யாரும் அழுவார்களா.."

"இல்லை.. இன்றோடு முடித்தே விட வேண்டும்" கதவை 'பட்' என்று சாத்தும் விழையும் போதுதான் அவர் அவளைக் கவனித்தார். யாரவள்?

"ஹையோ. இந்த விடியாமூஞ்சியை போகும்போதே பார்த்தாச்சு. இன்னிக்கு பொழுது எப்படிப் போகுமோ தெரியவில்லை? சனியன்." என்று சற்றே உரக்கவே திட்டியபடி ஸ்கூட்டியை நகர்த்தப் பார்த்தாள் அவள். பின் டயரில் முழுதும் காற்று இறங்கியிருந்தது.

"மேடம்... ஏதும் உதவி தேவையா" என்று கேட்டார் இவர்.

"ம்ச்" என்றபடி வேறு பதிலேதும் கூறாமல் விரைந்தாள் அவள்.

ஸ்டார் கோலம் போட்டுக் கொண்டிருந்த கருப்பையா இவரை பார்த்து புன்னகைத்தார். "என்ன சார். இன்னிக்கு எங்கேயும் போகலையா"

"இந்த ஆள் பேச ஆரம்பிச்சுடுவாரே" என்று மனசுக்குள் புலம்பியபடியே "இல்ல சார். வேலை ஏதும் இல்லை" என்றார்.

"இவ்ளோ நாள் பக்கத்துல இருக்கோம். உங்க பேரே தெரியாது சார். வக்கீலா சார் நீங்க.. நீங்க போடும் காபி வாசனை ஆளை தூக்கும் சார் ஹி ஹி " என்றபடி வீட்டுக்குள்ளேயே வந்து விட்டிருந்தார்.

வீட்டுக்குள் தொங்கிக் கொண்டிருந்த தூக்குக் கயிற்றைப் பார்த்ததும் "அம்மா.. மகமாயி.. இது என்ன.. என்ன சார்..." என்று திடுக்கிட்டார்.

தர்மசங்கடமாய்ப் போனது இவருக்கு.

"ஆமா உங்க பேரு என்னான்னு சொன்னிங்க"

"ராமன்.. பால் இன்னும் வாங்கப் போகலை சார்" என்றபடி வாசற் படிக்கு அருகில் நின்று கதவை நன்றாகத் திறந்து வைத்துக்கொண்டே சொன்னார் அவர்.

"நீங்க ராமாயணம் படிச்சிருக்கீங்களா..." என்றபடியே தரையில் அமர்ந்து கொண்டார் கருப்பையா "அந்த மகாமாயியே பார்த்து என்னை அனுப்பி வச்சிருக்கா" என்று புன்னகைத்தார்.

"மகமாயி எல்லாம் ஒன்னும் இல்லீங்க. இந்தக் கயிறு இங்கதான் மூணு வருஷமா தொங்கிட்டிருக்கு ... நான்தான் தொங்கலை" என்றார் ராமன்.

"ராமனை போல ஒரு ஆதர்ஷபுருஷன் யாருமே கிடையாது தெரியுங்களா.. கடவுள்னா அவருதாங்க"

"ம்ம். ஆனா பகவான் கிகவான் என்று யாருங்கிடையாது. ராமன் அன்னிக்கி ராஜாவா இருந்தார். அதுனால எல்லோருக்கும் அவரைத் தெரிஞ்சுது, இதிகாசம் படிச்சுட்டீங்க. அவரை மாதிரி ஆயிரம் பேர் இருக்காங்க லோகத்துல.. "

"பிரமாதமா பேசுறீங்க ராமன். பிராமணரா நீங்க... பேச்சுல தெரியுது. அதான். அது சரி.. அப்போ ராமன் வேண்டாம்.. சீதையை மாதிரி யாராவது உண்டா."

"498 A தெரியுமோ... இன்னிக்கு சீதைகளும் ராதைகளும் அதைத்தான் ஆயுதமா எடுத்துண்டு இருக்கா... அந்த சீதை மாதிரி கண்ணீர் விட்டுண்டு உக்காதிருக்க மாட்டா.. உங்க ராமருக்கும் லட்சுமணனுக்கும் desertion கேசும் சேத்து போட்டு போறும் போறும்னு எண்ண வச்சிருப்பா தெரியுமோ" என்று உரக்க சிரித்தார்.

கருப்பையா முகம் ஃபேர் அண்ட் லவ்லி இல்லாமலேயே சிவந்தது. "இப்டியே பேசிக்கிட்டு இருங்க.. ஒரு பய பொண்ணு தரமாட்டான்... தொலையட்டும்.. முப்பத்து முக்கோடி தெய்வங்கள் இருக்குன்னு சொல்லி இருக்கே உங்க புத்தகங்களிலே ... அதுல ஒன்னு கூடவா இல்லைன்னு சொல்றீங்க.. ராமாயணம் வேண்டாம். மகாபாரதத்துல நிறையா கேரக்டர் இருக்கு... அதுலேர்ந்து பேசலாம்.."

"ஸ்கூல் லீவா சார் இன்னிக்கு.."

"கிருஷ்ணன் எவ்ளோ பெரிய புத்திசாலி..."

"பரமார்த்தன்தான் போங்க.. அதுக்கு பேரு ராஜதந்திரம் சார்.. அப்டீன்னா நேருவும் பிஸ்மார்க்கும்தான் பகவான். அவரை ஏன் நமஸ்காரம் செய்யறதில்லை"

"துரோணாச்சாரியார்... எவ்ளோ பெரிய குரு"

"அவருக்கு நீங்க உசத்தி சார்... குறைஞ்சபட்சம் பாடம் சொல்லிதரலேன்னா கூட விரல வெட்டாம இருக்கீங்களே..."

"தான வீரன் கர்ணன்??"

"முட்டாள் ... இமோஷனல் முட்டாள் சார் அவன்"

கருப்பையாவுக்கு வேறு யாரும் நினைவுக்கு வரவில்லை. "கடவுளே யாரும் இல்லையோ... கடவுளும் ஒருவேளை மனுஷந்தானோ?" யோசிக்க ஆரம்பித்தார் கருப்பையா.

(அடுத்தது கடைசி பகுதி)

13 comments:

பாச மலர் / Paasa Malar said...

நல்ல சுவாரசியம்....

//"498 A தெரியுமோ... இன்னிக்கு சீதைகளும் ராதைகளும் அதைத்தான் ஆயுதமா எடுத்துண்டு இருக்கா... அந்த சீதை மாதிரி கண்ணீர் விட்டுண்டு உக்காதிருக்க மாட்டா.. உங்க ராமருக்கும் லட்சுமணனுக்கும் desertion கேசும் சேத்து போட்டு போறும் போறும்னு எண்ண வச்சிருப்பா தெரியுமோ" என்று உரக்க சிரித்தார்.//

//"முட்டாள் ... இமோஷனல் முட்டாள் சார் அவன்"//

//"கடவுளே யாரும் இல்லையோ... கடவுளும் ஒருவேளை மனுஷந்தானோ?"//

நல்ல வரிகள்...மிகவும் ரசித்த வரிகள்

மிகவும் சுவாரசியம்

அடுத்தது கடைசிப் பகுதியா....

VISA said...

//கருப்பையா முகம் ஃபேர் அண்ட் லவ்லி இல்லாமலேயே சிவந்தது/

அட!!!

creativemani said...

மேடம்.. இதெல்லாம் சரி.. விதுரநீதி என்னாச்சு?

Vidhoosh said...

நன்றி பாச மலர்

நன்றி விசா

நன்றி மணிகண்டன். டிராப்டில் இருக்கு. பக்கோடா மடிக்க எதுவும் இல்லன்னா டமால்னு வந்து குதிச்சுடுவார் விதுரர். :)

Santhappanசாந்தப்பன் said...

//கருப்பையா முகம் ஃபேர் அண்ட் லவ்லி இல்லாமலேயே சிவந்தது//

வித்தியாசமா இருக்கே!!

மிகவும் சுவாரசியம்

Chitra said...

///கருப்பையா முகம் ஃபேர் அண்ட் லவ்லி இல்லாமலேயே சிவந்தது///


.... நல்ல எழுத்து நடையில், ஒரு தொடர் கதை..... :-)

நசரேயன் said...

//புழுக்கம் வேறு அதிகமாகவும் அப்போதுதான் மின்விசிறி போடப்படாமல் இருப்பதை கவனித்தார் அவர்//

மின்சாரம் இருந்தாதானே போடுவாரு ?

//
இந்தத் தூக்கில் தொங்கக் கூட தைரியம் இல்லாமல்....//

இந்த கதை படிச்சா தைரியம் வரும்

//"அழுகிறேனோ" //

இல்லை படிச்ச நான் தான் அழுதேன்

//உயிரில்லாத என் உடல் என்னவாகு//

மருத்துவரிடம் தான் கேட்கணும்

//
என்று சற்றே உரக்கவே திட்டியபடி //

சத்தம் எங்க ஊரு வரைக்கும் கேட்டது

//
"மேடம்... ஏதும் உதவி தேவையா" //
ஆயிரம் ரூபா கடனா வேண்டும் கொடுக்க முடியுமா ?

//
கருப்பையா முகம் ஃபேர் அண்ட் லவ்லி இல்லாமலேயே சிவந்தது//

என்னைவிட சிகப்போ ?

பா.ராஜாராம் said...

முதல் பகுதி வர்ணனைகள் எனில்,

இதில் டயலாக்ஸ், எழுத்தாளரே.(realy)

சந்தோசமாய் இருக்கு சகோ.

அடுத்த பகுதிக்குள் முடித்து விட முடியுமா?ஆச்சர்யமாத்தான் இருக்கு.பார்க்கலாம்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல வரிகள்

Vidhoosh said...

நன்றி பிள்ளையாண்டான்

நன்றி சித்ரா

வாங்க நசரேயா.. என்ன இன்னும் கச்சேரி கூடலயேன்னு பாத்தேன்.. :)) ஏன்.. கடன்தானே.. சும்மா அம்பது கோடி கேக்குறது.. சமத்து போறலை நசர்
//என்னைவிட சிகப்போ ?/// இவ்ளோ பொறாமை கூடாதுங்க... யாராலையும் உங்க நிறத்துக்கு பக்கத்துல வரமுடியுமா? எப்போதும் நீங்கதான் தல தலைவா.. :))

நன்றி பா.ராஜாராம். :) அய்.. ஆமா.. தேவை இல்லாததை வெட்டி வெட்டி எரிஞ்சு வேகமா முடிச்சுட்டேன்.

நன்றி டி வி ஆர் சார்.

Sundar சுந்தர் said...

//மின்விசிறி ...//

அப்ப கயிறு எங்கே?

//பெருமூச்சு எழும்பி கன்னத்தை நனைத்தது.//

எப்டி அப்டி?

//(அடுத்தது கடைசி பகுதி)

முடி முதலில். போன் பண்ணித்தான் ஆகணும்!

rajasundararajan said...

//"மகமாயி எல்லாம் ஒன்னும் இல்லீங்க. இந்தக் கயிறு இங்கதான் மூணு வருஷமா தொங்கிட்டிருக்கு ... நான்தான் தொங்கலை" என்றார் ராமன்.//

இதை வாசித்ததும் கைதட்டிக் கொண்டாடினேன். என்னா ஸர்ரியலிஸம்!

அப்புறமா முதற்பகுதிக் கதைக்குப் போனேன். கேரக்டர்கள் அறிமுகம் ஒரே புள்ளியில் வந்து முடிகிற புதுமையாய் இருந்தது. என்றாலும், நேசமித்ரன் தளத்தில் பிங்க் ஃப்ளாய்டு கேட்க நேர்ந்ததில், Year after year/ I wish you were here என்கிற வரிகளே ரீங்கரித்துக்கொண்டு இருந்ததால், சரி, கதை முடியட்டும் அப்புறமாய்ப் பின்னூட்டம் இடலாம் என்று மூடிவைத்தேன். இதெல்லாம் நேற்று.

இன்று, இறுதிப் பகுதியை எதிர்பார்த்துத் திறந்ததில் ஏமாற்றாம். அதற்கென்ன பைய வரட்டும். ஆனால் நல்லது செய்யச் சுணங்கக் கூடாது என்று இன்றைக்கே இந்த என் பாராட்டுகள்!

வாழ்க!

Radhakrishnan said...

ராமன் வக்கீல், கருப்பையா வாத்தியார், அவள் யார்? 498 A எங்களுக்கு தெரியாதே. :)

Post a Comment