ஒரு வாளி நிறையா வாழ்க்கை - பதின்மம் - தொடர் பதிவு

நண்பரே என்று விளித்தது எல்லாம் கடந்து போய் இப்போதெல்லாம் அண்ணாவாகிவிட்ட பா.ராஜாராம் அழைப்பு கிளறிவிட்ட நினைவுகள், பதின்மத்தின் ரகசியங்களைப் பொத்தி வைத்த டைரி குறிப்புக்கள். மறக்கவே முடியாத 'முதன் முதல்'கள் நிறைந்த பருவம், பதின்மம் என்றால் பதிமூன்று முதல் பதினெட்டு வரை மட்டும்தானே : ) ஆனால் இருபத்தொன்று வரை எனக்கு பதின் பருவம்தான். பதின் பருவங்களுக்கான அனைத்து சலனங்களும் முற்று பெற்றது. : )

அப்பா தினமும் தூங்கப் போகும் முன் டைரி எழுதுவார். அவரைப் பார்த்துக் கற்றுக்கொண்ட பல நல்ல விஷயங்களில் ஒன்று டைரி எழுதுவது. இரும்புலக்கையால் குட்டி, ஆணி வைத்து  மூன்று ஓட்டை போட்டு, ட்வைன் நூல் மற்றும் கோணி ஊசி கொண்டு புத்தகங்களை பைண்டு பண்ணக் கற்றுக் கொடுத்ததும் என் அப்பா. ஆனந்த விகடனில் வரும் ஸ்டெல்லா ப்ரூஸின் கதைகளையும், இந்திரா சௌந்தராஜனின் கோட்டைபுரத்து வீடு, தேவி பாலாவின் மடிசார் மாமி, சாவி கதைகள் என்று எல்லாவற்றையும் கிழித்துக்கிழித்து பைண்டு பண்ணி வைத்த கதைகளோடும், என் சொந்தக் கதைகளை எழுதி வைத்த டைரியோடு பிரிட்டானியா பிஸ்கட் அட்டைபெட்டியில் வைத்து, கட்டி வைத்தது நினைவில் இருக்கு. என் டைரிகள் எல்லாம் அப்பாவின் திருச்சி வீட்டில் பத்திரமாக இருக்கலாம் என்றே நம்புகிறேன்.  அவற்றை கரையான் தின்னாமல் இருந்தால் மீண்டும் படித்து விடவே ஆசை.

அம்மா வளர்ந்ததெல்லாம் (தேராதூன்) ஹ்ரிஷிகேசம் என்ற ஊரில்தான். அம்மா தமிழ் தெரியாமலேயே பதினாறு வயதில் தஞ்சாவூரில் இருக்கும் திருக்காட்டுப்பள்ளி போன்ற ஒரு குக்கிராமத்தில் மாமாபையனை மணந்து வந்து அப்புறம் பொன்னியின் செல்வனை எங்கள் பாட்டிக்கே படித்து காட்டும் அளவுக்கு தமிழ் கற்று,  சுத்தி உள்ள எட்டுபட்டி கிராமத்துக்க்கும் "ஹிந்தி திணிப்பு" செய்தவர். எங்களுக்கு எல்லாம் அம்மாதான். அப்பா ஒவ்வொரு ஞாயிறு அன்று மட்டும்தான் வீட்டில் இருப்பார். அப்பா  வரும்போதெல்லாம் தவறாமல் பூந்தளிர், அம்புலிமாமா, போன்ற கதைபுத்தகங்களோடு கல்கி, மஞ்சரி, கல்கண்டு, ஆனந்த விகடனும் வாங்கி வருவார். என் அம்மா படுக்கையில் இருந்த என் பாட்டிக்கு எல்லாப் புத்தகங்களையும் படித்து காட்டுவார். அப்போது நாங்களும் கதை கேட்போம். இப்படி வந்ததுதான் வாசித்தல் என்ற addiction.

"இவளுக்கு புஸ்தகம்தான் முக்கியம்னா ஏண்டி ஊருக்கெல்லாம் கூட்டிண்டு வர?" என்று என் "சோட்டி" பெரியம்மா என் அம்மாவைக் கடிந்து கொள்வதெல்லாம் நினைக்கையில் என் பெரியம்மா பசங்களோடு விளையாடாமல் லீவு நாட்களை தொலைத்து விட்ட வருத்தம் இன்றும் வரும்.

மூன்று பெண்கள் ஒரு கடைக்குட்டி சகோதரனில் மூன்றாவது வரிசையில் நான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது "இனிமே ஸ்கர்ட் போட்டுக்காதே" என்று அம்மா சொன்னதும் பயங்கர கோபம்தான் வந்தது. நித்யா, ஜெயஸ்ரீ எல்லாம் மிடி போட்டுக்கறா? என்று சண்டை போட்டிருக்கேன். அதனால் அம்மா வாங்கித் தந்த முதன்முதல் மாடர்ன் டிரஸ் -- இன்க் ப்ளூவும், பிங்க் கலருமாக இருக்கும் "நதியா" சுடிதார். அப்போதெல்லாம் ரெடிமேட் கிடையாது (அல்லது எனக்கு தெரியாது). தைக்கத் தயாராக துணி வெட்டியே வரும். இரவோடு இரவாக அம்மா தைத்து கொடுத்ததை ரொம்பநாள் வைத்திருந்தேன். தீபாவளிக்கு வாங்கி வரும் துணிகளில் எப்போதும் நாங்கள் எடுத்துக் கொண்டது போக மிஞ்சுவதைத்தான் பெரியக்கா எடுத்துக் கொள்வாள். தொட்டால் சிணுங்கி இரண்டாவது அக்காவுக்கு  எப்போதும் தான் எடுத்ததை விட பெரியக்கா எடுத்தது சிறப்பாக இருப்பதாகத் தோன்றும். அழுது அடம் பண்ணி மாற்றிக் கொள்வாள். அப்புறமும் அழுவாள். அம்மா தைத்ததில் அளவு சின்னதாக இருப்பதில் ஒன்று எனக்கு வந்து விடும்.

அக்காக்கள் இருவரும் ஒரே வகுப்பில் இணைந்து படித்தார்கள். அதனால் எப்போதும் அக்காக்கள் அணிந்து மீந்து போன பச்சை பாவாடையும் தாவணியும்தான் எனக்கு எப்போதும் ஸ்கூல் யூனிபார்ம். அவங்க படிச்சு காதெல்லாம் மடங்கின புஸ்தகம்தான் எனக்கு எப்போதும். காதெல்லாம் நிமிர்த்தி அப்பா சொன்னபடி அதை பைண்டு பண்ணி வைத்துக் கொள்வேன். அதனாலேயே புது புஸ்தக வாசனை மீது எனக்கு அப்படி ஒரு ஈர்ப்பு இருந்தது. தமிழாசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வித்யா என்றால் தனி பிரியம். தினமும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுதச் சொல்லி திருத்தித் தருவார். ஒருமுறை வசதியில் நலிந்த மாணவர்களுக்கு இலவச தமிழ் புத்தகம் தருவதாக அறிந்து நானும் 'புது புஸ்தக' ஆசையில் ஓடிப் போய் வரிசையில் நின்றிருந்தேன். கிருஷ்ணமூர்த்தி சார் "என் செல்ல மகளே. உன்னை இங்கு எதிர்ப்பார்க்கவில்லை" என்று சொன்னதும் புத்தகம் வாங்கமலேயே திரும்பினேன். அப்புறம் அன்றைய சாயந்திரம் என்னிடம் முதன்முதல்  புது புஸ்தகங்கள் நா.பார்த்தசாரதியும், தி.ஜானகிராமனும் குறிஞ்சி மலராகவும், அக்பர் சாஸ்திரியாகவும் வந்தார்கள். அன்றைய தினம்தான் சாரை நான் கடைசியாக பார்த்த தினம். அவருக்கு திருமணம் நிச்சயித்ததாக அறிந்ததும் அம்மாவிடம் சொல்லி ஒரு மரப் பவுண்டன் பேனா வாங்கிக் கொண்டு அவர் வீட்டுக்குப் போனதும்தான் தெரிந்தது அவர் தற்கொலை செய்து கொண்ட விஷயம். அழத் தோணவில்லை. ஆனால் ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. ரொம்ப நாள் வரைக்கும் தமிழ் புஸ்தகத்தை தொடாமல் இருந்தேன். ஒன்பதாம் வகுப்பு காலாண்டு தேர்வுக்கு முன்பே, அப்பாவுக்கு திருச்சிக்கு மாற்றல் ஆனது. வேரோடு பெயர்ந்தோம். பதினொன்றாம் வகுப்பில் ஹிந்தியையே இரண்டாம் பாடமாக எடுத்தேன்.

இன்றும் புத்தகங்களின் காதுகள் மடங்கியோ, அவற்றில் underline செய்து, புக் மார்க் செய்ய ஓரம் மடித்து, கோடு போட்டு, கிறுக்குபவர்களைக் கண்டால் "உங்கள் குழந்தையாக இருந்தால் இப்படித்தான் மூஞ்சில கிறுக்கி, காதைத் திருகி வைப்பீங்களா" என்று கேட்பேன்.

ஒருமுறை நவராத்திரியின் போது, அம்மா தன் கல்யாணப் பட்டுப் புடவைகளை எல்லாம் "நீங்க வேணா கட்டிக்கோங்கோடி" என்று கொடுத்தபோது, நான் தேர்ந்தெடுத்தது பர்பிள் கலரில் இருந்த வைர ஊசிப் புடவை. ஸ்கூல் யூனிபார்முக்கு போட்டுக்கொள்ளும் வெள்ளை ப்ளவுசையே அணிந்து முதன் முதல் புடவை அணிந்த போது, அப்போதான் மார்கெட்டிலிருந்து சைக்கிளில் திரும்பி வந்த அப்பா, புடவை அணிந்து நின்று கொண்டிருந்த எங்களைப் பார்த்து திரும்பவும் மார்கெட் போய், மல்லிகைப் பூ வாங்கி கொடுத்தது எனக்கு மறக்கவே முடியாதது. இந்தப் புடவை இன்றும் என்னிடம் இருக்கு. இப்போதும் தீபாவளி அன்றைக்கு முதலில் உடுத்துவது இந்தப் புடவையைத்தான்.

கூடத்தில் தேக்கு மரத்தில் மூன்று நாற்காலிகள் இருக்கும். அருகில் இருக்கும் மரபெஞ்சுக்கு அடியில் கட்டையில் தலைவைத்து படுத்துக் கொண்டு புஸ்தகம் படிப்பது என்னிடம் இருக்கும் ஒரு கேலிக்குரிய பழக்கம். அப்படித்தான் அன்றும். நவராத்திரி கடைசி தினமான விஜயதசமி. ஒருத்தர் தம் மனைவியோடு வீட்டுக்கு வந்தார். அப்பாவும் அவர்களும் பேசிக்கொண்டிருந்தது என் கவனத்தில் வரவில்லை. ஆனால் திடீரென்று என் அம்மா வந்து "கணேஷ், குமரேஷ், சுரேஷ்-க்கு இப்போ சின்ன வயசு தான். அப்புறம் எம் பொண்களை நான் நன்னா படிக்க வைக்கணும்னு ஆசை படறேன். ப்ராப்தம் இருந்தா விதூஷும் காலேஜ் முடிச்சதும் பாக்கலாம் " என்றதும் அவர்கள் கோபித்துக் கொண்டு போனது ஏன் என்று ரொம்ப நாளைக்கு எனக்கு புரியாமலேயே இருந்தது. புரிந்தபோது என் அம்மாவை பிரதக்ஷிண  நமஸ்காரம் பண்ணினேன்.


பதின்மத்தில் காதல் இல்லாமலா.. திருச்சியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் போது, எப்போதும் 9.15 மணி SR பஸ்ஸில் தான் பயணம். தினமும் ராஜேஷ் என்ற ஒரு பையன் பின்னாலேயே வருவான். இரண்டு வருடம் தினமும் பின்னாலேயே வந்து கடைசியில் பிளஸ்-டூ பரிட்சையின் கடைசி நாள் அன்று,  எக்லேர்ஸ் சாக்கலேட் கொடுத்து அவன் தன் காதலை என்னிடம் சொன்ன போது "நான் நா.பார்த்தசாரதியை காதலித்துக் கொண்டிருக்கிறேன்" என்று உடனே சொல்லிவிட்டேன். அவன் விழுந்து விழுந்து சிரிச்சதை பார்த்து எனக்கு பயங்கர கோபம் வந்தது. "போடா முட்டாள். உன்னை விட அவர் அழகா இருப்பார்" என்று திட்டி விட்டேன். இது லூசு என்று முடிவு கட்டி விட்டானோ என்னவோ, அப்புறம் அவன் வரவே இல்லை. இன்று வரையும் அவனை சந்திக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. பதின்பருவத்தில் காதலிக்கும் நல்ல வாய்ப்பை இழந்து விட்டேன் என்பது கூட ரொம்ப நாளைக்கு பிறகுதான் உரைத்தது. : ))

மிக முக்கியமாக ஒரு விஷயம், எங்கள் தம்பி... நாங்கள் பஸ்ஸில் போகும் போதெல்லாம் எப்போதும் எங்களை பாதுகாத்தவாறே நின்றிருப்பான். ஏனோ, நான் அப்போதெல்லாம் ரொம்ப ரசித்து மகிழ்ந்த நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்து ஆர்மியில் மருத்துவம் பயில விண்ணப்பித்து, சென்னை மடிப்பாக்கம் மின்சார ரயிலில் அப்பாவுடன் வந்திறங்கி, மடிப்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து நடந்தே OTC போன நாளெல்லாம், ஜாதிகோட்டா முறையால்  வீணானது. எனக்கு ஒதுக்கிய இடம், வெறும் 35000 பணத்துக்காக கேரளாவின் சூசன் என்ற பெண்ணுக்கு கிடைத்ததை அறிந்து வெறுத்துப் போய் திருச்சி ஹோலி கிராஸ் NUTRITION & DIETETICS என்ற படிப்புக்கு விண்ணப்பித்தேன். கிடைத்தது. ஆனால் வாழ்க்கை வேறு முகம் காட்டத் தயாராக இருந்தது. பெரியக்கா திருமணத்தின்போது, திருமணத்திருக்கும் முதல் நாள் மாலை சாலை விபத்தில் திருமண காண்டிராக்ட்-காரர் இறந்து போனதில் அப்பாவுக்கு ஏகப்பட்ட நஷ்டம். ஏற்கனவே பணம் வாங்கி போனவர்கள் எல்லாம் திரும்பத் திரும்ப வாசலில் வந்து நின்றார்கள். திருக்காட்டுப்பள்ளியில் இருந்த வயல், வீடு எல்லாவற்றையும் விற்றும் தீராத கடன். பத்தாம் வகுப்பில் பயின்ற ஆங்கில, தமிழ், ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் கற்ற தட்டச்சு, சுருக்கெழுத்து பதின் பருவம் முடியும் முன்னேயே, சென்னையில் அண்ணா சிலைக்கு அருகில் முதன் முதல் வேலையையும் வாங்கிக் கொடுத்தது. என் முதன்முதல் 1500 ரூபாய் சம்பளம் என் அப்பாவின் முகத்தில் கொடுத்த நிம்மதி, என்னை கல்லூரிக்கு போக விடாமல் செய்து விட்டது. படிப்பை அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அஞ்சல் வழியாகத் தொடர்ந்தேன்.

நிறையா அடிபட்டு, விழுந்து எழுந்து வாழ்கையைக் கற்று கொடுத்தது சென்னை. சென்னையில் ஜானகி சித்தி என்று என் அப்பாவின் சித்தி (பாட்டியின் தங்கை) திருமணமே புரியாமல் தனித்திருந்தார். அவரோடுதான் சென்னையில் வாசம். என் அம்மாவிடமோ, இல்லை அவனிடமோ கூட சொல்லாத என் முதல் காதலைப் பற்றிக் கூட அவரிடம் பகிர்ந்திருக்கிறேன். சென்னையில் சந்தித்த நண்பர்கள் பலரில் அவன் மிக முக்கியமானவன். சென்னைக்கு வரும் முன்னேயே நல்ல நண்பன். அவனிடம் எனக்கு காதல்தான் என்று நிச்சயித்த போது, அவனுக்கும் எனக்குமான வாழ்க்கை மீதான எதிர்பார்ப்புக்கள் மற்றும் விருப்பங்களின் வித்தியாசங்கள், என் பகுத்தறிவுக்கு எட்டி மூளை வென்று "இது ஒத்து வராது" என்று தீர்மானித்து விட்டது. மேலும் உப்புமாவைக் கிளறிக்கொண்டிருக்காமல் அவனை மரியாதைக்குரிய தொலைவிலேயே நிறுத்திவிட்டேன். ஜானகி சித்திக்கு இதில் ரொம்ப வருத்தம். எனக்கும். அப்போது மனசு "பகுத்தறிவைக் கொல்" என்று சொல்லும், ஆனால் இப்போது மனது SO WHAT? என்றும் கேட்கிறது :))

அப்போது நான் கடைசியாக எழுதிய கவிதை இது. இதற்குப் பிறகு எழுதுவது முற்றிலும் நின்றே போனது எனலாம். அதனால் வரலாற்று சிறப்பு மிக்கது இக்கவிதை :))

என் விரல் கோர்த்து முகம் நெருங்கியுன்
எண்ணம் கூறிய அன்றிரவில் நானும்
உன் விழி பார்த்திருந்தால் நம் பிரிவு
இவ்வளவு நெடியதாகியிருக்காது

(இதற்குப் பிறகான நெடியதொரு இடைவெளிக்குப் பின் நான் எழுதியது அக்கரை பச்சை)

பதின்பருவத்தின் முடிவில் வரும் மனமுதிர்ச்சி எனக்கு இருபத்தொரு வயதில் வந்து விட்டது என்று இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறேன். : )

பதின்பருவம் அலை கடலாக இருபத்தொரு வயது வரை விரிந்திருந்தது. சற்றும் எதிர்பாராமல் ஒருநாள் திடீரென நிலைபெற்றுவிட்டக் கிணற்றுநீர் வாழ்க்கை, ஒரு வாளி நிறைய பா.ராஜாராம் அண்ணாவுக்கு இன்று... : )

40 comments:

Vidhoosh said...

ஊருக்குப் போய் கொண்டிருக்கிறேன். செவ்வாய் வரை எல்லோரும் கடையை பாத்துக்கோங்க. :))

ஆயில்யன் said...

அவங்க படிச்சு காதெல்லாம் மடங்கின புஸ்தகம்தான் எனக்கு எப்போதும். //

நினைத்து ரசித்த வரிகள் :)

நட்புடன் ஜமால் said...

உங்கள் முதன் முதல்கள் அருமை.

ரொம்ப நேரமா படிச்சிக்கிட்டேயிருக்கேன்.

அடுத்த வரிகளுக்குள் போகுகையில் என் பத்தின்ப பகுதிகளுக்குள் சென்று வர இயன்றது.

நிறைய இருக்கு சொல்ல - எப்படி சொல்லன்னு தான் தெரியலை ...

பா.ராஜாராம் said...

கும்பகோணம்,திருச்சி,ஸ்ரீரங்கம்,சாத்தூர்,தஞ்சாவூர்,நெல்லை மக்களுக்கு என ஒரு கைவாகு,ஒரு பேனா!

மனசில் இருந்து கொட்டும்.கொட்டி கொட்டி நிறைக்கும் ஒரு வாஞ்சை.ப்ரியம் கசியும் எழுத்தோட்டம்.

நீங்களும் இதில் இருந்து தப்பவில்லை என் சகோதரி.

எழுதிக் கொண்டே இருங்கள்.அப்புறம்,இந்த தலைப்புக்குள் முங்கிப் போய்விட்டேன்.வாளி என்பதால் எக்கி வரையை பிடிச்சு வெளி வந்தேன்.

வெளியும் நிறைஞ்சு கிடக்கு.பிரியங்களால்.

Unknown said...

//இன்றும் புத்தகங்களின் காதுகள் மடங்கியோ, அவற்றில் underline செய்து, புக் மார்க் செய்ய ஓரம் மடித்து, கோடு போட்டு, கிறுக்குபவர்களைக் கண்டால் "உங்கள் குழந்தையாக இருந்தால் இப்படித்தான் மூஞ்சில கிறுக்கி, காதைத் திருகி வைப்பீங்களா" என்று கேட்பேன்//

சேம் ப்ளட்.

// "நான் நா.பார்த்தசாரதியை காதலித்துக் கொண்டிருக்கிறேன்" என்று உடனே சொல்லிவிட்டேன்//

:-)

அண்ணாமலையான் said...

நல்லா சந்தோஷமா போயிட்டு வாங்க....

மாதேவி said...

பதின்மவயது சம்பவங்களும் கவிதையும் மனத்தில் நிற்கிறது.

Unknown said...

அருமையான பகிர்வு..

அனைத்து ரசங்களையும் அனுபவித்திருக்கிறீர்கள் பதின்ம வயதில்.

மணிஜி said...

வித்யா...அருமையான கோர்வை!

Chitra said...

நினைவுகளை நன்றாக தொகுத்து, அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.
நன்றி.
Have a safe journey and a good weekend!

ramachandranusha(உஷா) said...

அழகாய் எழுதியிருக்கீங்க. ஆனால் கடைசியில் மனசு கனத்துப் போனது. இழந்ததை சொல்லும் பக்குவத்தைச் சொல்லும் தைரியத்துக்கு ஒரு சல்யூட்.

நசரேயன் said...

குன்டான் நிறைய பின்னூட்டம் போடலாமுன்னு நினைச்சேன்.

Paleo God said...

பாரா மேல கொட்டுன வாளில எல்லாரும் நனைஞ்சு கிடக்கோம்..

//நிறைய இருக்கு சொல்ல - எப்படி சொல்லன்னு தான் தெரியலை .//

ஜமால் சொன்னதுதான், எனக்கும் தெரியலைங்க..!

Raghu said...

//இன்றும் புத்தகங்களின் காதுகள் மடங்கியோ, அவற்றில் underline செய்து, புக் மார்க் செய்ய ஓரம் மடித்து, கோடு போட்டு, கிறுக்குபவர்களைக் கண்டால் "உங்கள் குழந்தையாக இருந்தால் இப்படித்தான் மூஞ்சில கிறுக்கி, காதைத் திருகி வைப்பீங்களா" என்று கேட்பேன்//

அருமையா சொல்லியிருக்கீங்க‌, நான் வாங்கும்‌ புத்த‌க‌ங்க‌ளில் என் பெய‌ரை கூட‌ எழுத‌ விரும்புவ‌தில்லை நான், அதுவும் சுஜாதா புத்த‌க‌ங்க‌ள் என்றால் என‌க்கு உண்மையாக‌வே குழ‌ந்தைக‌ள் போல‌:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வி்தூஷ் .. பதிவு முழுக்கவும் நிதானமா படிச்சேன்..
எதோ துக்கம் தொண்டையடைக்கத்தான் படிச்சேன்..

சரியான வார்த்தை வரலப்பா பின்னூட்டம் போட..

☀நான் ஆதவன்☀ said...

முத்தக்கா சொல்லி தான் இங்க விளையாட்ட வந்தேன். படிச்சவுடனே மனசு கனத்து தான் போச்சு.

நல்ல அருமையான & நேர்மையான பதின்ம பதிவு.

மீன்துள்ளியான் said...

நல்லா எழுதி இருக்கீங்க ..

Anonymous said...

//என் விரல் கோர்த்து முகம் நெருங்கியுன்
எண்ணம் கூறிய அன்றிரவில் நானும்
உன் விழி பார்த்திருந்தால் நம் பிரிவு
இவ்வளவு நெடியதாகியிருக்காது//

கவிதையும் பதிவு மாதிரியே அருமை வித்யா

Thekkikattan|தெகா said...

அருமை!

புலவன் புலிகேசி said...

அழகான அனுபவ விவரிப்பு

Thenammai Lakshmanan said...

வித்யா சின்ன வயதிலேயே இவ்வளவு அனுபவங்களாலே என்னைக் கலங்க அடிச்சிட்டீங்க

ராமலக்ஷ்மி said...

ஆசிரியரைத் தேடிச் சென்ற இடத்தில்.. அந்த அதிர்ச்சி சோகமாய் எங்களையும் சூழ்கிறது.

//இன்றும் புத்தகங்களின் காதுகள் மடங்கியோ, அவற்றில் underline செய்து, புக் மார்க் செய்ய ஓரம் மடித்து, கோடு போட்டு, கிறுக்குபவர்களைக் கண்டால் "உங்கள் குழந்தையாக இருந்தால் இப்படித்தான் மூஞ்சில கிறுக்கி, காதைத் திருகி வைப்பீங்களா" என்று கேட்பேன்.//

எனக்கும் புத்தகங்களை இப்படிச் செய்தால் பிடிக்காது. நல்ல கேட்டிருக்கிறீர்கள்.

வாளி நிறைய இறைத்ததை பகிர்ந்து கொண்டிருக்கும் விதம் அழகு. வாழ்த்துக்கள்.

creativemani said...

மிக அழகாய் எழுதியிருக்கீங்க மேடம்..

அம்பிகா said...

மனதில் நிற்கும் பதிவு. அருமையான எழுத்தோட்டம். கவிதை கண்கலங்க வைத்தது.

rajasundararajan said...

அருமையான பதிவு.

//உப்புமாவைக் கிளறிக்கொண்டிருக்காமல் அவனை மரியாதைக்குரிய தொலைவிலேயே நிறுத்திவிட்டேன்//

இது ஒரு ஞானம். தலைமுறை தலைமுறையாகப் படிப்பறிவு பெற்ற நாலாபுறமும் கவனித்துக் கற்ற அறிவாளிகளுக்கே இது கூடும்.

வாழ்த்துகள்.

அருவி said...

நானும் பார்க்கிறேன். பதின்மப் பதிவு எழுதுகிற ஒருவர் கூட முழு உண்மைகளையும் சொல்வதில்லை. ஆண்கள் கட்டை பிரமச்சாரிகளாகவும் பெண்கள் வர்ஜின்களாகவுமே தங்களை சித்தரித்துகொள்ளுகிறார்கள்!

Radhakrishnan said...

மிகவும் அழகிய நினைவலைகள், எங்கள் ஊர் கிராமம் ஞாபகத்துக்கு வந்தது.

அகநாழிகை said...

விதூஷ்,

மிகவும் அருமையான பதிவு.

இப்பதிவில் வாசித்ததும் மனம் உணர்கிற விஷயங்கள் பல.

அறியாமை, நேசம், ஆசை, நிராசை, துயரம், பாரம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என வாழ்வின் சகலச் சுவைகளையும் சொல்கிறது உங்கள் பதிவு.

சமீபத்தில் நான் வாசித்த மிகச்சிறந்த பதிவு இது என்பேன்.

இது வெற்றுப்புகழ்ச்சிக்காக சொல்லவில்லை.

அகநாழிகை said...

//இன்றும் புத்தகங்களின் காதுகள் மடங்கியோ, அவற்றில் underline செய்து, புக் மார்க் செய்ய ஓரம் மடித்து, கோடு போட்டு, கிறுக்குபவர்களைக் கண்டால் "உங்கள் குழந்தையாக இருந்தால் இப்படித்தான் மூஞ்சில கிறுக்கி, காதைத் திருகி வைப்பீங்களா" என்று கேட்பேன்//

இது ஒன்று போதும் உங்கள் சுவாரசியமான எழுத்து நடைக்கு.

வாழ்த்துகள்.

உயிரோடை said...

ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌ வித்யா. நீங்க‌ளும் திருச்சியா? புத்த‌க‌ங்க‌ளை நானும் ம‌ட‌க்க‌வோ அடியில் கோடோ கிழிக்க‌ மாட்டேன். சின்ன‌ வ‌ய‌சில் அம்மா அப்பாக்கு செல‌வு வைக்க‌ கூடாதுன்னு ஓசியில் ப‌டிக்கும் ப‌ழ‌க்க‌ம், அடுத்த‌வ‌ர் புத்த‌க‌த்தை அப்ப‌டியே திரும்ப‌ த‌ர‌ணும் என்ற‌ க‌வ‌ன‌ம், இன்று சொந்த‌ புத்த‌க‌ம் என்றாலும் அதே எண்ண‌ம் தொட‌ர்கின்ற‌து ந‌ல்ல‌ விச‌ய‌ம் தானே

Vidhoosh said...

நன்றி ஆயில்யன்.

நன்றி ஜமால். தொடர யாரையும் அழையுங்கள் என்ற விதியை இந்த பதிவில் மட்டும் மீறி விட்டேன். எதுக்குங்க பழசையெல்லாம் கிளறிக்கிட்டு. :(

பா.ராஜாராம்: நெஞ்சில் கனத்துக் கொண்டே இருந்த சுமையை ஒருவழியா இறக்கியாச்சு. :)

கே.வி.ஆர். : நன்றிங்க

அண்ணாமலையான்: அருமையான பயணம். இனிதாக இருந்தது. நன்றிங்க

மாதேவி: நன்றிங்க.

முகிலன்: என்ன செய்ய.. திரும்பிப் பாக்கும் போது, இப்போதே ரொம்ப வயசாகிவிட்ட மனநிலை மிஞ்சுகிறது. (யூத்தான் நாங்களும்னு சொல்லிகிரதுல இருக்கற சந்தோஷம் வேற)

நன்றி மணிஜி

நன்றி சித்ரா : அருமையான பயணம்.

நன்றி உஷா. உங்கள் நாவலை படிக்க இன்னும் வாய்க்கவில்லை. purchase cart-ட்டில் சேமித்து வைத்திருக்கிறேன். அடுத்தமுறை புத்தக வான்களில் இதுவும் நிச்சயம் இருக்கும்.

Vidhoosh said...

நசரேயன்: பிரியாணி குண்டானா.. குடுகுடுப்பை வீட்டுதா.. பயமா இருக்குங்க..:))

Vidhoosh said...

ஷங்கர் நன்றிங்க

முத்துலெட்சுமி / தேனம்மை / அம்பிகா:: அந்த ஒரு நிமிட விபத்து - திருமணம் நின்றது எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால்... மேலேந்து கீழ விழும்போது பறக்கும் உணர்வு வரும். விட்டுத் தள்ளுங்க. :)
///பல வேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?// என்ற பாரதியின் வரிகளை காப்பி பேஸ்ட் செய்து ஒட்டிக் கொண்டேன் மனசுக்குள். :)

ஆதவன்: நன்றிங்க.

மீந்துள்ளியான்: நன்றிங்க

சின்ன அம்மிணி: நன்றிங்க.

Thekkikattan|தெகா: உங்க ப்ரோபைல் போட்டோ பயமுறுத்துதுங்க...:))

புலவன் புலிகேசி: நன்றிங்க

நன்றி ராமலக்ஷ்மி

நன்றி மணிகண்டன்

நன்றி ராஜா சுந்தரராஜன்: நீங்கள் என் பக்கங்களை தொடர்ந்து வாசிக்கிறீர்கள் என்பதே மகிழ்ச்சிதான். புரண்டு புரண்டு மெத்தையின் ஒட்டுக்கு வந்து விடும்போது, தூக்கிப்போடும் பாருங்கள், அது போல விழாமல் சமாளித்தாகியாயிற்று. இனியும்..

அருவி: அடையாளம் காட்டி பேசியிருந்தால் உங்களுக்கும் பதில் சொல்லியிருப்பேன்.

வெ.ரா.கி: நன்றிங்க.

வாசு: ரொம்ப நன்றிங்க. :)

லாவண்யா: மிக்க நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப அழகா ரசனையோடு சொல்லிட்டீங்க.. சில இடங்களில் சிரிப்பையும் வரவழைத்துவிட்டீர்கள் :-)

CS. Mohan Kumar said...

ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க வித்யா. ஒரு கட்டுரையில் பல விஷயங்களை அநாயாசமா தொட்டு சென்றது ஆச்சரியமா இருக்கு !! மூன்று சகோதரிகள் - உடையை பகிர்வது, அப்பாவின் அன்பு, குடும்ப போராட்டம், காதல் இப்படி எத்தனை விஷயங்கள்!! மனதை தொடுகிறது பதிவு !!

நானும் தஞ்சை/ திருச்சி காரன். நீங்களும் அந்த ஊர் என அறிந்து மகிழ்ச்சி

Vidhya Chandrasekaran said...

அருமையான அதே சமயம் அழுத்தமான பதிவு விதூஷ்.

சுந்தரா said...

//எக்லேர்ஸ் சாக்கலேட் கொடுத்து அவன் தன் காதலை என்னிடம் சொன்ன போது "நான் நா.பார்த்தசாரதியை காதலித்துக் கொண்டிருக்கிறேன்" என்று உடனே சொல்லிவிட்டேன். அவன் விழுந்து விழுந்து சிரிச்சதை பார்த்து எனக்கு பயங்கர கோபம் வந்தது.//

எனக்கும்கூட சிரிப்பு வந்தது :)

பதின் பருவத்திலேயே,நிறைய பிரச்சனைகளைப்பார்த்து பக்குவப்பட்டுவிட்டீர்கள் என்று தோன்றியது.

அருமையா தொகுத்துச் சொல்லியிருக்கீங்க.

anujanya said...

விதூஷ், உங்களுக்கு ரொம்ப நல்லா எழுத வருகிறது. பிடித்த கல்வி படிக்க முடியாமல், படித்த கல்வியுடன் தொடர்ந்ததை அழகாகச் சொல்கிறீர்கள். போலவே மற்ற விஷயங்களும். இன்னும் நிறைய வாசித்து, நிறைய எழுதவும் செய்யுங்கள்.

அனுஜன்யா

Joe said...

சுவாரஸ்யமான கட்டுரை.

நீங்களும் திருச்சியா?

இரசிகை said...

nice..............:)

Post a Comment