ஒரு படுக்கையறை கிச்சன் ஹால்


நான் சென்னையிலும் அவளும் குழந்தைகளும் ஊரிலும் என்று இரட்டைக் குடித்தனமாகவே ஆறு மாதம் தீர்ந்து போனது. எல்.ஐ.சி பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பு நேர டீக்கடை நண்பர்கள் குழுவாக இணைந்து இணைபிரியா நண்பர்கள் ஆகிப் போனோம். மொபைல் போன்கள் புழக்கப் படாத காலம்.

இந்த நாடோடி வாழ்கையில் பணிமாற்றம் கிடைத்து போகிற ஊரெல்லாம் சொந்த வீடு வாங்குமளவுக்கு வசதி வாய்ப்பிருந்தால் வேலைக்கே போவானேன். வீட்டுக்குச் சொந்தக்காரரும் குடியிருப்பவரும் மாமியாரும் மருமகளும் போல ஒத்திசைந்து குடித்தனம் பண்ண வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவதால் வீடு வாடகைக்குப் பிடிப்பதும் இரண்டு நாடுகளுக்கு இடையே யுத்த சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாவதும் ஒன்று. ஆனால், இன்றைய சூழலில் இது சாத்தியப்படுமா?

எப்படியாவது ஒரு வீடு வாங்கி, பிள்ளைகளைப் படிக்கவைத்து, ஒருவழியாய் செட்டில் ஆகிவிடவேண்டும் என்றுதான் ஒவ்வொரு குடும்பத் தலைவனின்/தலைவியின் எண்ணமாக இருக்கும். ஆனால் இந்த வகை ஆசைகள் பெருமளவில் பிரயாசையாகவே தங்கிவிடுகின்றன. அதானே வாழ்க்கை. அப்படித்தான் நம் ஒவ்வொரு ஆசைகளும் வாக்கு பலித்தது போல நிறைவேறி விட்டால், நாமும் தெய்வமாகி விட மாட்டோமா என்ன? கிடைத்தை வைத்துக் கொண்டு சந்தோஷமடைந்து, இன்னும் விரும்பும் மனிதனாகவே இருந்து விடத்தானே ஆசைப்படுகிறோம்.

சொந்த வீடு வாங்க வசதியில்லாத ஒரு சாதாரண கிளார்க்குக்கு, குடித்தனம் பண்ணுவதைக் காட்டிலும் வேறென்ன சமூக அனுபவங்கள் கிட்டிவிடப் போகிறது? அரசாங்க உத்தியோகம் என்ற நம்பிக்கையில் பெண்ணைக் கொடுத்துவிட்டதால் பிழைத்தேன். இல்லையென்றால் திருமணம் கூட அமைந்து வந்திருக்காது. நான்கு வருஷத்தில் மூன்று குழந்தைகள் என்று சாதனை படைத்தாயிற்று. சென்னைக்கு மாற்றலாகி வந்ததும், மேன்ஷனில் தங்கி வீடு தேடும் படலம் துவங்கிற்று. குடும்பமும் நடத்தி வாடகையும் கட்டுமளவுக்கு தகுந்தது போல வீடு எதுவுமே அமையவில்லை. இதே கவலையில் ஸ்டாம்புக் கணக்குகள் கூட தப்பும் தவறுமாக ஆரம்பித்தது.

வீட்டு ப்ரோக்கர்தான் கதியென்று ஆகிப்போனது. வீட்டு ஒரு மாத வாடகையை அவருக்குத் தந்துவிடவேண்டும். அதை வாங்கியதும் உன்பாடு வீட்டுக்கார் பாடென்று கண் காணாமல் மறைந்து விடுவார் ப்ரோக்கர்.

வீட்டுக்குச் சொந்தக்காரர் ஆரம்பித்தார் "இந்த கஷ்டத்துக்கு சொந்தமாய் வாங்கி விடுங்களேன்"

"இரண்டரை மூன்று இலட்சங்கள் ஆகும் சார். போதாதற்கு என் வேலை வேறு அடிக்கடி வேறு ஊர்களுக்கு மாற்றலாகி விடும்" என்றேன்.

"சென்னையில் வேறு வேலை ஏதும் கிடைக்காதா என்ன.. " என்றார்.

"அரசாங்க உத்தியோகம் சார்" என்றேன். எனக்கு விட்டால் போதும் என்ற உணர்விருந்தது.

அவர் வரிசையாய் கேள்விக் கணைகளை ஏவினார்.
அப்போ முதல் அப்பாயிண்டுமெண்டு உங்க ஊர்லையே கிடைச்சிட்டதாக்கும்?
இப்போ எங்கே தங்கி இருக்கீங்க?
நாலு வருஷத்தில் மூணு குழந்தையா?
ஆறு மாசத்தில் நாலு இடம் மாத்திடீங்க?
வாடகையெல்லாம் சரியா கொடுத்துருவீங்க இல்ல? கரெக்டா ஒண்ணாம் தேதியே வாடகையைக் கொடுத்திடணும் அதுவும் கேஷா.
விருந்தாளிங்க அடிக்கடி வருவாங்களா? உங்க அஞ்சு பேருக்கு மேல ஆளுங்க வந்தா தலைக்கு இத்தனை என்று அந்த மாச வாடகையில் சேர்த்துத் தரவேண்டும்.
அம்மா அப்பாவை சேர்த்து வச்சுப்பீங்களா?
ரெண்டு வேளை குளிப்பீங்களா?
எங்கியாவது ஊருக்கு போகிறா மாதிரி இருந்தா பத்து நாள் முன்னாடியே சொல்லிடணும்.
காலி பண்ணச் சொன்னா, அடுத்த பத்து நாள்ல சாவிய கொடுத்திறணும்.
ராத்திரி பத்து மணிக்கு மெயின் கேட்டை பூட்டிருவோம். வேற சாவி கிடையாது. பரவால்லையா?

இவர் சொன்ன கட்டளைகள் அனைத்தையும் கர்மஸ்ரத்தையாக பின்பற்றினேன். இதில் நான்காவது பிரசவத்துக்காக என் மனைவி பிறந்தகம் கிளம்பிப் போனாள். அன்றிலிருந்து வீட்டுக்காரர் தன் பரா(அ)க்கிராமங்களை ஆரம்பித்தார். தன் வீட்டுப் பிள்ளைகளைக் கொண்டு வந்து கீழே எங்கள் வீட்டில் விட்டுச் செல்வது, பெருக்கி வைத்த வாசலில் குப்பையை கொட்டுவது, எப்போதும் கீழே வந்து எங்கள் வாசற்படியில் அமர்ந்து யாருடனாவது பேசிக் கொண்டிருப்பது என்றெல்லாம். மூத்த பையன் பத்தாம் வகுப்பு படிப்பதால் தொந்தரவாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். "வேண்டுமானால் காலி பண்ணிருங்க"
================
அந்த ஐஞ்சாவது வீட்டை ஏன் மாத்தினீங்க?
எங்க ஆறுபேருக்குப் பத்தலை சார்.

அதே போல இப்படியேதான் இந்த முறை சம்பாஷணை துவங்கியது.

"இந்த பாருங்க சார். ரெண்டு ரூம் கிச்சன் போர்ஷன்தாங்க. நடுவில ஒத்தை சுவரு. சத்தம் போட்டு பேசக்கூடாது. சிரிக்க கூடாது. குடித்தனம் இருங்க. வாடகை கொடுங்க. அதை மட்டும் பண்ணுங்க. முக்கியமா பக்கத்துக்கு காம்பவுண்டில் இருக்கும் வீட்டுகாரனோட பேச்சுவார்த்தை வச்சுக்கக் கூடாது. சரியா" இந்தக் கண்டிஷன் மட்டும் புதியது என்பதாக.

தினமும் அவர்கள் வீட்டில் வீட்டுக்காரர் யாரையோ போனில் வசவாக பொழிந்து திட்டிக் கொண்டிருப்பார், எங்கள் சுப்ரபாதமே அதுவாக ஆகிப் போனது.

திடீரென்று ஒரு நாள் வந்து "நீங்கள் என்ன ப்ரஹச்சரணமா...வடமாளா.. " என்றார்.

"அஷ்டசஹஸ்ரம்"

"ஐயே.. நாங்க பிராம்ணாளுக்குத்தானே வாடகைக்கு விடரோம்னு சொல்லி இருந்தோம். நீங்க இதெல்லாம் முன்னையே சொல்றதில்லையா"

ப்ரைவேட்டுக்கு மாறிடலாம்னு ஒரே யோசனையா இருக்கு. நல்ல வேலையா கிடைச்ச அப்புறம் ஒரு பெட் ரூம் கிச்சன் கிடைச்சா வாங்கிடலாம்னு பாக்கறேன். என்ன சொல்றே.. என்றேன் மனைவியிடம்.

====================
ப்ளாக்கில் கூட வெளியிடக்கூடாத அளவுக்கு இதொண்ணும் அவ்ளோ மோசமானது இல்லை என்பதால், இன்னிக்கு ரிலீஸ். பழைய ஆட்-குறிப்பு டயரியில் "காபி சாப்ட்டாச்சா" என்றே கேட்டுக் கொண்டிருக்கும் பக்கத்து குடித்தனக்காரர் பற்றிய குறிப்பில் இருந்து, ஸ்க்ரிப்ளிங்ஸ் வித்யா-வுடனான இன்றைய பஸ் talk எல்லாம் கலந்தது.

6 comments:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

பக்கோடா பேப்பர்கள்//

இன்னுமா இந்தப் பேப்பர் விக்குது? :))

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஹையா நான்தான் பர்ஸ்ட்!

எல் கே said...

கொஞ்சம் பழசு மாதிரி இருந்தாலும் இன்னிக்கும் இதெல்லாம் நடக்குது

துளசி கோபால் said...

இப்போதைய விலைவாசியில் இனி சென்னையில் சொந்த வீடு.......ஊஹூம்........நோ ச்சான்ஸ்:(

4 issues too much!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

@துளசி டீச்சர்: சென்னை என்பது மவுண்ட் ரோடும் அது சார்ந்த பகுதிகளும் மட்டும் இல்லை! :)) 10-15 லட்சம் இருந்தா 40 கிலோ மீட்டரில் தனி வீடு சாத்தியம்தான்.

துளசி கோபால் said...

ஷங்கர்,

நாப்பது கிலோ மீட்டர் தள்ளி இருப்பதற்கு கன்யாகுமரியே பெட்டர்!

வாணிமஹால், மூசிக் அகடெமி, இன்னும் மற்ற சபாக்கள் எல்லாம் கிட்டக்க வேணுமேப்பா எனக்கு. கூடவே அநந்தனும் வேணும். இப்படி வேணுங்கள் ஏராளம்:(

Post a Comment