பெரியண்ணன் 2 - முன்ஷி பிரேம்சந்த்


பெரியண்ணன் 1 இங்கே

2

வருடத் தேர்வுகள் நடந்து முடிந்தன. பெரியண்ணன் ஃபெயில் ஆகி விட்டார், நான் பாஸ் செய்து, வகுப்பிலேயே முதல் மதிப்பெண் பெற்றிருந்தேன். இப்போது எனக்கும் அவருக்கும் வெறும் இரண்டு வருட இடைவெளியாக ஆகிப் போனது. அவரது தோள்மீது கையைப் போட்டுக் கொண்டு அவரிடம் "உங்கள் கடுமையான தவமெல்லாம் என்னவாயிற்று. என்னைப் பாருங்கள், ஜாலியாக விளையாடியும் கொண்டிருந்தேன், வகுப்பிலும் முதலேடுத்தேன்." என்று கேட்டு விடவேண்டும் என நெஞ்சு வரைக்கும் ஆசை இருந்தது. ஆனால் அவரோ அவ்வளவு கவலையோடும் வருத்தத்துடனும் இருந்ததால், என் மனம் நெகிழ்ந்து அவர் மீது இரக்கம் தோன்றியது, மேலும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் என் எண்ணத்தை வெட்ககரமாக நினைத்துக் கைவிட்டேன். ஆமாம், இப்போது அவரைப் பற்றியப் பெருமைக் கூட எனக்குக் கொஞ்சம் தோன்றியது. மேலும், பெரியண்ணன் மீது ஆத்மாபிமானம் கூட அதிகமானது, இப்போது அவர் குறித்த பய-வெறுப்புணர்வு கூட இல்லாமற் போனது. சுதந்திரதின விளையாட்டு நிகழ்ச்சிக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். இதயமும் உறுதியாகவே இருந்தது. ஒருவேளை அவர் மீண்டும் என்னை அவமானப்படுத்தினார் என்றால், நானும் நேருக்கு நேராக "இப்படி ரத்தம் சுண்டச் சுண்டப் படித்து அப்படியென்ன சாதித்து விட்டீர்கள்? நானோ விளையாட்டுத்தனமாக இருந்துகொண்டே வகுப்பில் முதல் மாணவனாகி விட்டேன்." என்றே கேட்டுவிடப் போகிறேன். இப்படி நெத்தியடியாக பதில் சொல்லும் தைரியம் இல்லாமல் இருந்தாலும் பெரியண்ணனின் ஆதிக்கம் இப்போது என் மீது இல்லை என்று என் நடவடிக்கைகள் மூலம் தெள்ளத் தெளிவானது. பெரியண்ணன் இதை நுகர்ந்து விட்டார், அவருக்கு ரொம்ப கூர்மையான நுண்ணறிவு, ஒருநாள் நான் விடியற்காலை நேரத்தில், காலை முழுதும் கில்லி-டண்டா விளையாடிவிட்டு சரியாக சாப்பிட்டு பள்ளிக்கு கிளம்பும் நேரத்திற்கு அறைக்குத் திரும்பினேன். அப்போது பெரியண்ணன் என் மீது நாக்கு-கத்தியை நீட்டி திட்டத் துவங்கினார், இந்த வருஷம் பாஸ் செய்து வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கிவிட்டதும், உனக்கு திமிராகி விட்டது, ஆனா தம்பி, பெரிய பெரிய ஆட்களுடைய கருவமே ஒன்றுமில்லாமல் போய் விட்டது, உனக்கு என்ன தகுதி இருக்கிறது, இராவணனின் நிலையைப் பற்றி இதிகாசத்தில் படித்திருப்பாய் தானே. அவரது வாழ்கையில் இருந்து என்ன உபதேசம் கிடைத்தது உனக்கு? இல்லை சும்மாவேனும் படித்து விட்டுப் போனாயா? பரீட்சை பாஸ் செய்து விடுவதொன்றும் பெரியதில்லை, அறிவு விரிவடைவதே நமது உண்மை நோக்கமாக இருக்க வேண்டும். எதைப் படித்தாலும், அதன் உட்கருத்தைப் புரிந்து கொள். இராவணன் பூமண்டலத்தில் அரசனாக இருந்தவன். அரசர்களுக்கெல்லாம் அரசன், சக்கரவர்த்தி என்று கருதப் பட்டவன். இப்போதெல்லாம் ஆங்கிலேய அரசாங்கத்தின் ஆதிக்கம் அதிகமாகி இருக்கிறது, ஆனால் இவர்களையெல்லாம் யாரும் சக்கரவர்த்தி என்றழைப்பதில்லை. உலகத்தில் எத்தனையோ நாடுகளில் ஆங்கிலேய ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் சுயசார்போடு சுதந்திரமாய் (சுவாதீன்) இருக்கிறார்கள். இராவணச் சக்கரவர்த்தி ராஜாவாக இருந்தவன். உலகத்தின் எல்லா நாடுகளும் அவருக்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்தன.ஆனால் அவனுக்கும் முடிவு உண்டானது, கருவம் ஒன்றே அவன் பெயர்-புகழ் எல்லாவற்றையும் அழித்தது, ஒரு வாய் தண்ணீர் கூட கொடுப்பவர் இல்லாமற் செய்தது. ஒருவன் எத்தனை குற்றங்கள் வேண்டுமென்றாலும் செய்யலாம், ஆனால் கருவம் மட்டும் கூடாது, தலைகனப்பட வேண்டாம். கருவப்பட்டாலோ உலகை விட்டே ஒழிவான்.

சைத்தான்களின் நிலைமையைப் பற்றியும் படித்திருப்பாய்தானே. ஈஸ்வரனிடம் உண்மையான பக்தியோடு இருக்கத் தன்னை விட்டால் யாருமில்லை என்று அவர்களுக்குத் தோன்றியது. கடைசியில் என்னாயிற்று.. சொர்க்கத்திலிருந்து நரகத்துக்குத் தள்ளப்பட்டார்கள். ஷாஹேரூம் கூட இப்படிப்பட்ட அஹங்காரத்தில் இருந்தான். பிச்சை எடுத்தேடுத்தே மரித்துப் போனான். நீயோ இப்போதுதான் ஒரேயொருதரம் பாஸ் செய்திருக்கிறாய். இப்போதே உனக்கு கருவம் தலைக்கு ஏறி விட்டது. அதனால்தான் நீ கைமீறிப் போய்விட்டாய். ஒன்றை நன்றாகப் புரிந்துகொள். நீயொன்றும் உன் உழைப்பால் முன்னேறி வரவில்லை, ஏதோ குருடனுக்கு ஒருநாள் ராஜபார்வை கிடைத்தது போல ஆகிவிட்டது. இது போல எப்போதேனும்தான் ஆகும். திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டிருக்காது. எப்போதாவது கில்லி-டண்டா விளையாடும் போது கூட யாராவது ஒருவன் குருட்டாம்போக்கில் இலக்கில் அடித்து விடுகிறான். இதனால் ஒருவன் வெற்றிகரமான விளையாட்டுவீரனாகி விடப்போவதில்லை. எவன் ஒருவனின் இலக்கு எப்போதுமே தவறுவதில்லையோ அவனே வெற்றிகரமான விளையாட்டு வீரன்.

நான் ஃபெயில் ஆகிவிட்டதைப் பார்த்துக்கொள்ளாதே. என்னுடைய கிளாசுக்கு வந்து, அல்ஜீப்ரா ஜ்யாமெற்றி போன்ற இரும்பு குண்டுகளைக் கடிக்க நேரும் போதும் இங்க்ளிஷ்தானின் இதிகாசங்களைப் படிக்கும் போதும், பல்லெல்லாம் கிடுகிடுத்துப் போய்விடும். பாதுஷாக்களின் பெயர்களையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. எட்டுக்கும் மேலே ஹென்றிக்கள் காலமாகிப் போய் சேர்ந்துவிட்டார்கள், யாருடைய காலங்கள் எப்போது முடிந்தது என்றெல்லாம் நினைவு வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதென்று நினைத்து விட்டாயா? ஏழாம் ஹென்றிக்கு பதிலாக எட்டாம் ஹென்றி என்று எழுதிவிட்டாயோ, தீர்ந்தது, எல்லாம் காலியாகி விடும். சுத்தம். சைபர் மார்க் கூடக் கிடைக்காது. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய். நூறு ஜேம்ஸ், நூறு வில்லியம்ஸ், கோடி சார்ல்ஸ் என்றெல்லாம் படிக்கும் போது, தலைச் சுற்றிப் போகும். உடம்பெல்லாம் சண்டமாருதம் தோன்றினாற்போலாகிவிடும். இந்த அபாக்கியவான்களுக் கெல்லாம் ஆளுக்கொரு பெயர் கூட கிடைக்காமல் போயிற்று. ஒரே பெயருக்குப் பின்னால் ஒன்றாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் என்று சேர்த்துக் கொண்டே போயிருக்கிறார்களே. என்னிடம் கேட்டிருந்தால்கூட பத்துலட்சம் பெயர் சொல்லியிருப்பேன்.

ஐயோ, இந்த ஜ்யாமெற்றி ஒன்றிருக்கிறதே, சாமியே சரணம்! ஏபிசி க்கு பதிலாக பிஏசின்னு எழுதி விட்டாலோ தீர்ந்தது கதை, எல்லா மார்க்கும் போய்விடும். (பார்க்க குறிப்பு 1). இருந்தாலும் அந்த ஏபிசிவிற்கும் பிஏசிவிற்கும் அப்படி என்ன வித்யாசம் என்று இந்த பேப்பர் திருத்தும் இதயமில்லாத ஆசிரியர்களிடம் ஏனோ யாருமே கேட்பதில்லை. அதுவுமில்லாமல் ஏதுமற்ற விஷயங்களுக்காக மாணவர்களைக் கொலை செய்கிறார்கள்? பருப்பு, சாதம், சப்பாத்தி என்று சாப்பிட்டால் என்ன, இல்லை சாதம், பருப்பு, சப்பாத்தி என்று சாப்பிட்டால்தான் என்ன? இதில் என்ன இருக்கிறது; ஆனால் பரீட்சை நடத்துபவர்களுக்கு இதெல்லாம் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது? அவர்கள் எல்லோருமே புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறதோ அதைத்தானே பார்க்கிறார்கள். மாணவர்களும் அட்சரம் பிசகாமல் மனப்பாடம் செய்து செதுக்கி விட வேண்டும் என்றே எதிர்பார்க்கவும் செய்கிறார்கள். மேலும் இப்படி மனப்பாடம் செய்வதையே கல்வி என்றாக்கி விட்டார்கள். இப்படித் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் படிப்பொன்றை படித்துத்தான் என்ன பயன்?

இந்தக் கோட்டை கொஞ்சம் நீளமாக இழுத்தால் இரண்டு மடங்கு நீளமாகும் என்று இதெல்லாம் போய் படித்து என்ன பிரயோஜனம்? இரண்டு மடங்கு ஆகட்டும், இல்லை நான்கு மடங்காகட்டும், இல்லை பாதியாகவே இருக்கட்டும், இதனால் எனக்கென்ன? எனக்கோ பரிட்சையில் எப்படியாவது பாஸ் செய்ய வேண்டும் என்றால் இதையெல்லாம் குருட்டாம்போக்கில் ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். "நேரத்தின் வரம்பு" என்பதைப் பற்றி ஒரு கட்டுரை எழுது என்று என்னவோ சர்வ சாதாரணமாய்ச் சொல்லிவிட்டார்கள், அதுவும் நான்கு பக்கத்துக்குக் குறைவில்லாமல், இப்போது பேப்பரை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பீர்களோ, பேனாவை கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பீர்களோ, அது உங்கள் கவலை, என் பேரைச் சொல்லி அழவேண்டாம் என்பது போல சொல்லிவிடுவார்கள்.

நேர வரம்பு இருப்பது நல்லதற்கே என்று யாருக்குத்தான் தெரியாது? இதனால் ஒருவரது வாழ்க்கை நெறிப்படுகிறது, அடுத்தவருக்கு அவரிடம் சிநேகம் உண்டாகிறது, மேலும் அவருடைய தொழிலில் நல்ல முறையில் வெற்றியும் ஏற்படுகிறது. இவ்வளவு சின்ன விஷயத்தை எப்படி நான்கு பக்கங்களுக்கு எழுதுவது? ஒரே வார்த்தையில் சொல்லிமுடித்து விடக்கூடிய விஷயத்தை, நான்கு பக்கங்களுக்கு எழுதவேண்டியதன் அவசியம்தான் என்ன?  நான் இதை நேர விரயம் என்றே நினைக்கிறேன். இப்படி வீணாக ஒரு விஷயத்தை இழுத்தடிப்பது நேர விரயம் மட்டும் இல்லாமல் நேரத்தை துர் உபயோகம் செய்து வீணடிப்பதும் ஆகும். யார் எதைச் சொன்னாலும் சட்-புட் என்று சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்ப்பது என்பதே நல்லது என்று நினைக்கிறேன். ஆனால், அப்படியில்லை, இவர்களுக்கு நான்கு பக்கம், அதுவும் ஃபுல்ஸ்கேப் பக்கத்தில் கலர்கலராய் எழுதிவிடவேண்டும், அதை எப்படி எழுதி இருந்தாலும் பரவாயில்லை. இது மாணவர்கள் மீதான வன்முறை இல்லையென்றால் வேறு என்ன? அதுவும் சுருக்கமாய் எழுதவேண்டுமாம்.. அபத்தம் என்று எதையாவது காட்டவேண்டும் என்றால் அது இதுதான். நேர வரம்பைப் பற்றி ஒரு கட்டுரையைச் சுருக்கமாய், நான்கு பக்கங்களுக்குக் குறையாமல் எழுதுக... ரொம்ப சரிதான், சுருக்கமாய் எழுதுவதால் நான்கு பக்கத்தோடு போயிற்று, இல்லையென்றால் ஒருவேளை நூறு-நூற்றைம்பது பக்கங்கள் எழுத வைத்திருப்பார்கள். வேகமாகவும் ஓடுங்கள்.. ஆனால் மெதுவாக என்பது போலாயிற்று. தலைகீழ் தர்க்கமாக இருக்கிறதே? ஒரு குழந்தை கூட இந்த விஷயத்தை எளிதாகப் புரிந்து கொள்ளும், ஆனால் இந்த ஆசிரியர்கள் இருக்கிறார்களே.. இந்தளவு கூட நிதானமற்றவர்கள். அவர்களுக்கு தாம் ஆசிரியர்கள் என்ற நினைப்பு இருக்கிறது.
பாரடா தம்பி.. என் வகுப்பிற்கு வந்தாயானால் தெரியும் சேதி, தலை கீழாக நின்று தண்ணீர் குடித்தால்தான், நிலவரம் என்னவென்று தெரியவரும் (படிக்க குறிப்பு 2)


இந்த வருஷம் முதல் மதிப்பெண் வாங்கி விட்டாய், அதற்கே உனக்கு தரையில் கால் பாவ மாட்டேன் என்கிறது. நான் சொல்வதை கேள். ஆயிரந்தான் நான் ஃபெயில் ஆகியிருந்தாலும், நான் உன்னை விடப் பெரியவன், உலக அனுபவம் உன்னைவிட எனக்கு அதிகம். நான் சொல்வதையெல்லாம் அப்படியே கேட்டு கட்டுப்பட்டு நடந்தால் பிழைத்தாய், இல்லையென்றால் பின்னால் வருத்தப் பட்டு பிரயோஜனமில்லை.

பள்ளிக்குப் போகவேண்டிய நேரமாகி விட்டது, இல்லையென்றால், இந்த உபதேசங்கள் எல்லாம் எப்போது முடிவடையும் என்பது அந்த ஈஸ்வரனுக்கே வெளிச்சம். இன்றையக் காலைச் சாப்பாடு எனக்கென்னவோ ருசிக்காமலே போகும் என்று தோன்றியது. பாஸ் செய்து வந்துவிட்டதற்கே இந்தளவு வசைபாடல் என்றால் ஃபெயில் ஆகிவிட்டால் என்னவாகும், உயிரை எடுத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் போலிருக்கிறதே? பெரியண்ணன் என்னவோ தன் வகுப்புப் பாடங்களை எல்லாம் பயங்கரமாக சித்தரித்து, என்னை பயமுறுத்தி விட்டார். பள்ளியை விட்டுவிட்டு வீட்டுக்கு ஓடிப்போகாமல் எப்படி இருந்தேன் என்பதைப் பற்றிய ஆச்சரியம் எனக்கே உண்டு. இத்தனை வசைபாடல்களுக்குப்  பிறகும் புத்தகங்கள் மீதான நிராசை என்னவோ அப்படியேதான் இருந்தது. விளையாடுவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் நழுவ விடாமல் பார்த்துக் கொண்டேன். படிக்கவும் செய்தேன், ஆனால் குறைவாக. இந்தவருடமும் அண்ணனிடம் இழிபடமால் தப்பித்து விட இப்படியே தினசரி ட்டாஸ்குகள் (task) அனைத்தும் செய்யப்பட்டு வந்தன. என் மீதே எனக்கு தோன்ற ஆரம்பித்திருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் காணாமல் போய் விட்டது, இதன் பிறகு திருடர்களைப் போல பயந்து நாட்களைக் கழிக்க ஆரம்பித்தேன்.

============== அடுத்தது கடைசி பாகம்=================

குறிப்பு 1: இந்த ஏ பி சிக்கு பிரேம்சந்த் அ, ப, ஜ, என்றும் அதை அ, ஜ, ப (அஜப்b) என்றும் மிகவும் அற்புதமாக தொடர்புபடுத்தி இருப்பார். எனக்கு அப்படி அதே போன்ற பொருள் வரும்படி எழுதத் தெரியவில்லை. :-)

குறிப்பு 2 : सारे पापड बेलने पड़ेंगे और तब आटे-दाल का भाव मालूम होगा - இது செம வாக்கியம். இதையும் தமிழ்ப் படுத்தத் தெரியவில்லை.

0 comments:

Post a Comment