வனப்ரஸ்தம்


ஆர் கோபி ஒரு BUZZ விட்டிருந்தார். அதைப் படித்ததும் சுடச் சுடத் தோன்றியது.
=======================================================================
ஜடிலோ முண்டி லுஞ்சித்தகேஷ:
காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
பஷ்யன்னபி ச ந பஷ்யதி மூட:
ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ: -- கோவிந்தாஷ்டகம் (14)

ஜடாமுடியுடன் ஒருவனும், சவரம் செய்த தலையுடன் ஒருவனும், நீண்டு வளர்க்கப்பட்டக் கூந்தலுடன் ஒருவனும், வேறு சிலர் காவியுடை தரித்தும் விதவிதமான வேஷங்களுடன் வயிற்றை நிரப்புகிறார்கள். நிதர்சனம் உணர்ந்தும் குருடர்கள் போல நடித்துத் தன்னையே ஏமாற்றிக் கொள்ளும் இவர்கள் மூடர்களேதான்.
========================================================================
எட்டு மணிக்கு முழிப்பு, கள்ளி சொட்டு மாதிரி காபி, ஒரு அரைமணிநேரம் படிக்கிறதா பேர் பண்ணிக்க வேண்டியது, ஒன்பது டு பத்து இசையருவியில் புதுப் பாட்டு, மறுபடியும் ஒரு டோஸ் காப்பி, ஆற அமரக் குளியல், ரெண்டு வித சட்னி, எள்ளு அரைத்த மிளகாய்ப் பொடி, சாம்பாரோட இட்லி, அப்புறம் டிவியில் ஏதோ ஒரு சினிமா, இன்னும் எல்லா சீரியலும் பாக்கவேண்டியது, இடையிடையே தர்ப்பூசணி, தோலுரித்த பனை நுங்கு, இளநீர், பலாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதோ ஒன்றாக தினம் ஒரு வகை, அவியல், கறி, கூட்டு, சாம்பார், ரசம், வத்தக் குழம்பு, மோர் மிளகாயுடன் மதிய சாப்பாடு, அளவான (ரெண்டு மணிநேரம்) மதியத் தூக்கம், சாயந்திரம் ரசகுல்லா, மிக்சர், காபி, கொஞ்சம் நடந்து போனா ஒரு சின்னத் தாமரைக் குளம், அருகேயே கோவில் என்ற பெயரில் ஒரு ஹால். அங்கே தினமும் ஏதோ ஒரு சொற்பொழிவு, பஜனை, ஜப-ஹோமங்கள் என்று நிகழும். ராத்திரி மறுபடியும் சாப்பாடு, சரியாய் ஒன்பது மணிக்கு தூக்கம் என்று எங்கள் நண்பரான தபோவன நிர்வாகி "தபோவனத்தில் ஒரு நாள்" வாழ்க்கையை விவரித்துச் சொல்லும்போதெல்லாம் எங்களையும் அறியாத ஒரு நிம்மதி பொங்கும்.

ராகவன் பிறந்ததுமே எல்.ஐ.சி போடுவது, கல்விக்கு சேமிப்பது, வரும் மருமகளுக்கு நகை வாங்கி வைப்பது, அவர்களுக்கு வீடு வாங்கி வைப்பது என்றெல்லாம் திட்டமிட்ட பின், நானும் அவரும் முடிவெடுத்தது தபோவனத்தில் ரிடயர்மென்ட்க்கு பிறகு சேர்ந்து நிம்மதியாய் இருப்பது என்பதுதான். அப்போதிலிருந்தே தபோவனத்தில் சேர்ந்து வாழ்க்கையின் மிகுதி நாட்களைக் கழிக்கத் தேவையான பணத்தையும் தனியாகச் சேமிக்க ஆரம்பித்தோம்.

ராகவனின் பிறந்த நாட்களை விமரிசையாகக் கொண்டாடிவிட்டு, எங்கள் பிறந்தநாட்களையும் திருமண நாளையும் வருடம் தவறாமல் தபோவனத்தில் கொண்டாட ஆரம்பித்தோம். அதே "தபோவனத்தில் ஒரு நாள்" அனுபவம்தான். ஆஹா! சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு மிதி மிதி என்று மிதிக்க ஆரம்பித்தோம். நாட்களும் தன்போக்கில்தான் ஓடியது. ராகவனுக்கு கல்யாணம் பண்ணி தனிக்குடித்தனம் வைத்தாயிற்று. மூன்று வருடம் கழித்து ஒரு ஆண் ஒரு பெண் என்று இரட்டைக் குழந்தைகள். எங்கள் தவப் புண்ணிய பலன்களை ஒரே தவணையில் பெற்றுவிட்டால் எப்படி இருக்கும், பேரன் பேத்திகளைக் கண்டு அதே போல உணர்ந்தோம்.

இன்னும் ஆறு மாசத்தில் ரிடயர்மெண்டும் வந்துவிடும். நான் இன்னும் இரண்டு மாதம் கழித்து ரெசிக்நேஷன் கொடுத்தால் சரியாக இருக்கும். காட்டன் சுடிதார்கள், நைட்டிக்கள், அவருக்கு குர்தா பைஜாமா, பெர்முடாஸ் டீஷர்ட் என்று எங்கள் பேக்கிங் ஆரம்பித்தது. என் நகைகள் புடவைகள் என்று எல்லாவற்றையும் மருமகளிடம் ஒப்படைத்தேன். அவரும் தான் இதுவரை குடும்பத்தில் செய்துவந்த தன் பொறுப்புக்களை எல்லாம் ராகவனிடம் ஒப்படைத்தார். அவர்களும் திறமையாகவே வரவுக்கு செலவுக்கும் ஏற்றவகையில் குடும்பம் நடத்தினர். எல்லாம் இனிமை. இனிமேல் தபோவனம்தான் என்று தினமும் நிம்மதியை நோக்கி கனவு காணத் துவங்கினோம்.

இந்த ஜன்னலுக்கு ஒன்றும் அந்த ஜன்னலுக்கு ஒன்றுமாய் கிடந்த கட்டில்களுக்கு இடையே ஆளுக்கு ஒரு பீரோ. பீரோவுக்கு எதிரே சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் ஒரு டிவி. டிவியில் இணைக்கப்பட்டிருக்கும் வயர்லெஸ் ஹெட்போன். ஃபேன் லைட் ஏசி என்று அனைத்துக்குமே ஆளுக்கு ஒரு ரிமோட் கண்ட்ரோல் தரப்பட்டிருந்தது. படுக்கைக்கு அருகிலேயே ஒரு காலிங் பெல் சுவிட்ச். அழைத்து இரண்டு நிமிடங்களுக்குள் யாராவது வந்து விடுவார்கள். சர்வீஸ்ட் அபார்ட்மென்ட் ரகமாக இருந்தது. எங்களுடையது ஸ்டுடியோ டைப் அபார்ட்மென்ட்.

ஒருவருடம் போனதே தெரியவில்லை.

"ஏசி கூலிங் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போலருக்கே!" என்றேன் நான்.

"டீ போட்டுத் தரவா" என்றார் ரவி.

"வேண்டாம். அப்படியொன்றும் குளிரலை" என்று ஜன்னல் கண்ணாடி வழியாகப் பார்க்க ஆரம்பித்தேன். பச்சை பசேலென்று ஏதோ மலைவாசஸ்தலத்தில் இருப்பது போல அத்தனை அழகு. இரும ஆரம்பித்தது.

"கார்த்தால மருந்து சாப்ட்டியா"

"நீங்க உங்கள் மருந்தெல்லாம் சாப்ட்டாச்சா?"

"எனக்கென்ன. நான் சாப்டுப்பேன்" என்றவர் "ராகவன் கிட்டேர்ந்து ஈமெயில் வந்திருக்கு"

"மருந்தை சாப்டுறுங்கோ. அப்பறம் மறந்து போயிடும்" என்றேன்.

"கிழவி.. கண்டுக்க மாட்டேங்கறியே. ராகவன் என்ன எழுதி இருக்கான்னு கேட்பியோன்னு நினைச்சேன்"

"என்ன எழுதி இருக்கப் போறான். நாங்க சௌக்கியம். ஏதாவது வேணும்னா ஈமெயில் பண்ணுங்கோ-ன்னு சொல்லி இருப்பான். பேசாம தூங்குங்கோ"

அரை முழுதும் மௌனம் நிரம்பியது. ரவி எழுந்து போய் அலமாரியில் இருந்து மருந்தை எடுத்துக் கொண்டு வந்தார் "இந்தா மருந்தை குடிச்சுட்டுத் தூங்கு"

"நீங்க எவ்ளோ நன்னா என்னை கவனிச்சுக்கறீங்க" என்றேன்.

"ஆனா எனக்கென்னவோ நீயில்லைனா என்ன பண்ணுவேனோன்னு பயம்மா இருக்கு. மருந்தை சரியா சாப்டு உன் ஹெல்தை பார்த்துக்கோ"

"ஆமாமாம், நீங்க முதல்ல போயிட்ட, நான் மட்டும் என்ன பண்ணப் போறேன்"

"வாழறது சாகரதெல்லாம் நம்ம கையிலேயா இருக்கு?"

"பதினோரு மணி ஆயிடுத்து" என்றபடி திரும்பிப் படுத்துக் கொண்டேன்.

"எனக்கு தூக்கமே வரலையே" என்றார் ரவி.

"ஜன்னல் வழியா வேடிக்கை பார்ப்பேளே"

"ம்ச்.. அதில்லென்ன புதுசா இருக்கு"

இருமல் அதிகமானது. "இனிமே என் சாவுதான் புதுசா இருக்கப் போறது"

"அப்போ என் சாவு மட்டும் பழசா இருக்குமா என்ன"

"பேசாமத் தூங்குங்கோ. ராத்திரில அபசகுனமா பேசிண்டு" என்றபடியே டிவி ரிமோட்டை எடுத்துக் கொண்டேன்.
=============================

0 comments:

Post a Comment