விநாயக சதுர்த்தி

வரும் 11-செப்டம்பர்-2010 (சனிக்கிழமை) அன்று விநாயகர் சதுர்த்தி.

ரொம்ப deep-பா think பண்ணிகிட்டே போன வருஷ பூஜையின் போது ரோசிச்சது இது..

விநாயக சதுர்த்தி / பிள்ளையார் சதுர்த்தி என்றெல்லாம் கொண்டாடப் படும் விநாயகருக்கு, பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஹேரம்பன், லம்போதரர், குகாக்கிரசர், ஸ்கந்தபூர்வஜர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கஜமுகன், ஓங்காரன், பிரணவன் என்று பல பெயர்கள் உண்டு.

இக்கட்டுரையில் சில பகுதிகள் பத்திரிகையில் வந்தது மற்றும் இணையத்தில் நிறைய இடங்களில் இருந்து தொகுக்கப் பட்டது.

பூஜை எப்போது செய்ய வேண்டும்?

ஆவணி மாதம் சுக்கில பட்சத்தில் நான்காம் நாளன்று விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும்.

பூஜையறையில் ஒரு பலகையில் கோலமிட்டு ஒரு தலைவாழை இலை போடவேண்டும்.

இலையின் நுனி, வடக்கு பார்த்து இருக்க வேண்டும். அதில் பச்சரிசியைப் பரப்பி மேலே களிமண்ணால் செய்த பிள்ளையாரை வைக்க வேண்டும். அருகம்புல், எருக்கம்பூ, ஜாதிமல்லி போன்றவற்றைக் கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு, தேங்காய் பூரணம் வைத்த மோதகத்தை (கொழுக்கட்டையை) விநாயகருக்குப் படைக்க வேண்டும். இந்தக் கொழுக்கட்டைக்குள் ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது தெரியுமா? வெளியே இருக்கும் மாவு இந்த உலகத்தைக் குறிக்கிறது. உள்ளே இருக்கும் பூரணம்தான் இறைவன். இந்த உலக வாழ்க்கை என்ற மாயையைத் துறந்தால், 'இறைவன்' என்ற பூரணத்தை அடையலாம். கொழுக்கட்டையோடு அவல், பொரி, வெல்லம், கடலை, பழம், தேங்காய் போன்றவற்றையும் படைக்கலாம். பிறகு 108 விநாயக அஷ்டோத்திரம் சொல்லி, கற்பூர தீபம் காட்டி வழிபட வேண்டும்.

அடுத்த நாள் காலையில் புனர் பூஜை செய்ய வேண்டும். அதாவது தயிர்சாதம் செய்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகு, அன்று மாலையில் குளத்திலோ அல்லது கிணற்றிலோ பிள்ளையாரைக் கரைத்து விடலாம்!

நிவேதனம்:

மோதகம்
கடலைப் பருப்பு கொழுக்கட்டை
எள்ளுக் கொழுக்கட்டை
உளுத்தங் கொழுக்கட்டை

கொழுக்கட்டை தத்துவம்

விநாயகருக்கு மிகவும் விருப்பமானது “எருக்கனாம் கொழுக்கட்டை” என்பது. எருக்கன்-ஆம்-கொழுக்கட்டை; விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை என்று பொருள் தருகிறது. இதில் வைக்கப்படுகிற பூரணம்-தேங்காய்த்துருவல், வெல்லம், எள், ஏலக்காய் முதலிய சுவை மிக்க பொருள்களின் கலவை.

பூரணம்-நிறைவானது. வெள்ளையான மாவுப்பகுதி தூய மனம்; அதில் நிறைந்துள்ள தேங்காய்த் துருவல் பூரணம், மனம் முழுவதும் நிறைந்துள்ள தூய பக்தி. எருக்கனாம் கொழுக்கட்டையின் தத்துவம் இதுதான். மனம் நிறைந்த பக்தியுடன் இறைவனைத் தொழுவதே மிகச் சிறந்த வழிபாட்டு முறையாகும். இதைக் “கொழுக்கட்டை” தெரிவிக்கிறது. தேங்காய் “பூரணமாகிறது” விநாயகருக்கு உகந்ததாகிறது

விநாயகப் பெருமானுக்குச் சதுர்த்தி நாளில் கொழுக்கட்டை (மோதகம்) படைத்து வழிபாடு செய்வது ஏன்? கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதைத் தெரிவிக்கிறது.

கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. எவரும் அதிகம் விரும்பாத வெள்ளெருக்கு மாலை, மருத்துவக் குணமுடைய அருகன் புல் அர்ச்சனை ஆகியனவும் விநாயகருக்குப் பிடித்தமானவை. "மற்றவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கும் நான் ஆதரவாக நிற்பேன்' என்பதை வெள்ளெருக்கு மாலை தெரிவிக்கின்றது. "விநாயகரை வணங்கினால் நோய்கள் தீரும்; பிறவி நோயும் மாயும்' என்பதை அருகன்புல் அர்ச்சனை அறிவிக்கின்றது. கணபதியைத் தொழுவோம்! கவலையெல்லாம் மறப்போம்!

எலி வாஹனம் ஏன்?

மூல முதல்கடவுளான விநாய கருக்கு யானை முகமும், பெருத்த உடலும் கொடுத்து, சிறிய உருவம் கொண்ட மூஞ்சூறு (எலி) வாகன மாக இருப்பது விநோதம்தானே! முற்றும் அறிந்த மெய்ஞ்ஞானிகள், விநாயகப் பெருமானை மூஷிக வாகனனே என்று குறிப்பிட்டு அழைத்தனர். மூஷிகம் என்றால் யோக சாஸ்திரத்தில் மூச்சு என்று ஒரு பொருள்.

கண்ணுக்குத் தெரியாத மூஞ்சூறு, பெரிய உருவம் கொண்ட விநாயகருக்கு வாகனமாவது போல், நம் கண்ணுக்கு புலப்படாத மூச்சுகாற்று நம் வினையாகிய உடலைத் தூக்கிச் செல்ல வாகனமாக இருக்கிறது. அந்த மூச்சு, நம் உடலில் இல்லையெனில், இந்த உடலைச் சுமந்து செல்ல நான்கு பேரின் உதவி தேவைப்படுகிறது. ஆகவே, இந்த மூச்சுக்காற்றே பெருத்த உடலைத் தூக்கிச் செல்ல வாகனமாகி வருகிறது என்கிற பேருண்மையைச் சொல்கிறது இந்த வாகன அமைப்பு. அதனால், விநாயகப் பெருமானை வணங்கும்போது, ‘என்னை உயிருடன் நடமாட வைப்பவனே, உன்னை வணங்குகிறேன்’ என்று பிரார்த்திக்க வேண்டும்.

விநாயகர் பிறந்த கதை

உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே (அவர் அவதரித்த தினம்) விநாயக சதுர்த்தி எனக் கொள்ளப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச் செல்வதற்கு எண்ணினார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் சமைத்துத் தமது அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்றுவிட்டார். அச்சமயத்தில் மீண்டுவந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் சினங்கொண்ட சிவபிரான் பிள்ளையாரின் சிரத்தை அரிந்துவிட்டு உள்ளே சென்றுவிடார். நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து, பிள்ளையார் சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்துவிட்டதை அறிந்த அவர் ஆவேசங் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.

காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து 'வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு பணித்தார். பணிப்பின் பிரகாரம் கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொண்டார். சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு "கணேஷன்" என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு கணாதிபதியாகவும் நியமித்தாரென 'நாரத புராணத்தில்' தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார சரிதம். அது சம்பவித்தது ஆவணி மாதத்து சுக்கில பட்ஷ சதுர்த்தியன்றாகும். அன்றிலிருந்து அத்தினம் இந்து மதத்தின் உயர்வான ஒரு புனித தினமாக ஆகிவிட்டது.

விநாயகரும் தத்துவங்களும்:

தத்துவங்கள் தோன்றும் முறையில் முதற்கண் சுத்தமாயையில் இருந்து 'ஓம்' என்ற பிரணவ நாதமே தோன்றியது. பிள்ளையார் பிரணவ வடிவினர் ஆதலால் 'பிரணவன்' என்றும் 'மூத்த பிள்ளையார்' என்றும் அறியப்படுகின்றது. 'ஓங்கார நாத தத்துவம்' சிவனையும் சுட்டிநிற்பதால் சிவனும், பிள்ளையாரும் ஒன்றேயென்றும் கொள்ளமுடிகின்றது. பிரணவத்தை முற்றறிந்தவர் என்பதால் பிரணவன், பிரணவநாதன் என்றெல்லாக் அழைக்கப்படுகின்றார். 'ஓம்' என்ற பிரணவ மந்திர ரூபியான அவர் ஞானமே வடிவானவர். அவரது திருமேனிய ஒரு தத்துவ வித்தென ஆன்றோர் விஸ்தரித்துள்ளனர். அவருடைய இரு திருவடுகளிலே வலது திருவடியை "முற்றறிவு" அதாவது 'ஞானசக்தி' என்றும்“ இடது திருவடியை "முற்றுத்தொழில்" அதாவது 'கிரியாசக்தி' என்றும் உணர்த்தப்படுகின்றது. அவ்விரு திருவடிகளின் துணையின்றி உயிர்கள் ஒன்றினை அறிந்து கொள்ளவோ, செயலாற்றவோ முடியாது. எல்லாப் பொருட்களையும் ஆகாயம் தன் னுள் அடக்கவும், உண்டாக்கவும், விரிக்கவும், ஒடுக்கவும் கூடிய தன்மையைக்கொண்ட பரந்து விரிந்ததொரு பூதம். ஆகாயம் போலவே சகலவற்றையும் உள்ளடக்கிய தாகவே அவரது பேருந்தி காட்சி கொடுக் கின்றது. படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தி யங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது. ஐந்து கருமங்கட்கும் அவரே அதிபதி என்பதனால் அவருக்கு 'ஐங்கரன்' என்ற நாமம் விளங் குகின்றது. அவரை 'பஞ்சகிருத்திகள்' என்றும் கூறுவர்.அவரது முற்றறிந்த ஞானத்தை முறம் போன்று பரந்து விரிந்த இருசெவிகளும் விளக்குகின்றன.

வலது பக்கமுள்ள ஒடிந்த கொம்பு "பாசஞானத்தையும்' இடது பக்கமுள்ள கொம்பு "பதிஞானத்தையும்' உணர்த்துவதாக உள்ளன. விநாயகரின் அடிக்கீழ் மூஷிகம் அழுந்தி அமைதியாகக் காணப்படுவதை, பிரணவ மூர்த்தியின் அடிக்கீழ் ஆணவ மலம் வலிகெட்டு அமைதி காக்கும் என்பதை விளக்குகின்றது.

அவரது உந்தியைச் சுற்றியுள்ள சர்ப்பம் 'குண்டலினி சக்தியின்' வடிவம் என்பர். அதன் விரிவுகளும், சுருக்கங்களுமே பிரபஞ்சத்தின் தோற்றம், சுருக்கம் எனப்படுகின்றது. அதை அவர் உந்தியில் அணிந்திருப்பதானது, உலகிற்கு நிமித்த காரணர் அவர்தாம் என்பதையும் உணர்த்துகின்றது. மேலும் விநாயகர் முக்கண் உடையவரெனவும் விளக்கப்பட்டுள்ளது. முக்கண்ணுடைய பெருமை சிவனுக்கே உரியது. ஆயினும் கிரியா வழி, ரூப வழி நோக்குமிடத்து சிவனும் பிள்ளையாரும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.

மேலும், விநாயகருக்கு 'சித்தி', 'புத்தி' என இரு சக்திகள் உள்ளதாகவும் புராணங்களில் பேசப்படுகின்றது. விநாயகரின் வலது முன்கை அபய முத்திரையக் காட்டும், வலது பின்கையில் மழுவாயுதமும், இடது முன்கையில் மோதகம் அல்லது மாதுளம்பழம் வைத்திருப்பது போலவும், இடது பின்கையில் பாசக் கயிறோ அல்லது செந்தாமரை மலரோ கொண்டிருப்பது போலவும் சித்தரிக்கப்படுகின்றது. துதிக்கையில் நீர்க் கலசம் ஜகமண்டலம் ஒன்றை ஏந்தியிருப்பார். செம்பட்டு வஸ்திரத்தையே அணிந்திருப்பார். விநாயகருக்கு உகந்த முக்கிய நிவேதனப் பொருட்கள் மோதகம், கொழுக்கட்டை பஞ்சாமிர்தம், தேங்காய், அப்பம், அவல், பொரி, கரும்பு, சர்க்கரை முதலியனவாகும். செம்மலர்கள், அறுகம் புல் ஆகியவற்றைக் கொண்டு விநாயகரை அர்ச்சிப்பது மிகச் சிறந்தது.

குட்டிக் கொள்ளல்

முனிவர்களுள் முதல்வராகிய அகத்திய முனிவர் சிவபெருமானிடம் இருந்த காவரி நதியைக் கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென்திசை நோக்கி வருவாராய் குடகு மலையில் சிவபூசை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது இந்திரன் சீகாழியில் பூசை செய்துகொண்டிருந்தான் மழையின்றி நந்தவனம் வாடியது. நாரத முனிவர் இந்திரனைப் பார்த்து அகத்தியருடைய கமண்டலத்திலுள்ள காவிரி பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும் என்று கூறினார். இந்திரன் விநாயகனை வழிபட்டு வேண்டிக் கொண்டான். விநாயக மூர்த்தி காக்கை வடிவுடன் சென்று காவிரியடங்கிய கமண்டலத்தின் மீது அமர்ந்தார். அகத்தியர் காகத்தை கரத்தால் ஒட்டினார். காகம் உந்திப் பறந்தது. கமண்டலம் கவிழ்ந்து காவரி பெருக்கெடுத்து ஒடியது.அகத்தியர் காகத்தின் மீது சீறிப்பாய்ந்தார். அது அந்தண சிறுவனாகிநின்றது. அச் சிறுவனை இருகரங்களாலும் குட்டும் பொருட்டு குறுமுனி ஒடினார். பிள்ளையார் அவருக்கு அகப்படாமல் அங்கும் இங்குமாக ஒடினார். அகத்தியர் அச் சிறவனை அணுகிக் குட்டுவதற்கு இரு கரங்களையும் ஒங்கினார். ஐங்கரங்களுடன் விநாயகர் காட்சி தந்தருளினார். அகத்தியர் திகைத்து நடு நடுங்கினார்.

ஓங்காரப் பொருனே! வேத வித்தகனே ! உன்னைச் சிறியேன் அறியேனாகிக் குட்டுவதற்குக் கையை ஒங்கினேனே. என்னே என் சிறுமதி என்று தன் சென்னியிலேயே குட்டிக் கொண்டார். விநாயகர் அவருடைய கரங்களைப் பற்றி கருணை புரிந்தார்.இன்று முதல் நம் திருமுன் பயபத்தியுடன் சென்னியில் குட்டிக் கொண்டோர் கூரிய மகியும் சீரிய நிதியும் பெறுவார்கள் என்று வரமளித்தருளினார். இதனால் விநாயகரின் திருமுன் அடியார்கள் சிரத்தில் குட்டிக் கொள்ளும் மரபு உண்டாயிற்று.

தேங்காய் உடைப்பதன் காரணம்

தேங்காய் உடைப்பதன் காரணம் தேங்காய்க்கு மேலே உள்ள பச்சை மட்டை மாயா மலம் உரித்து எடுக்கின்ற நார்கள் கன்ம மலம் உடைத்து எடுக்கின்ற ஒடு ஆயவ மலம் இந்த மூன்றும் நீங்கினால் வெண்மையான பருப்பு வெளிப்படுகின்றது. இறைவனிடத்து மும்மலத்தை நீக்கி சுத்த சத்துவ சித்தத்தை அருளவேண்டுமென்று குறிப்பிடுவதே தேங்காய் உடைப்பதன் உட் பொருள் ஆகும்.
-திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்.

தோப்புக்கரணம்

நமது உள்ளங்காலில் இருந்து தலையுச்சி வரை அநேகம் நரம்புக் கற்றைகள் உள்ளன. நாம் சுறுசுறுப்பாக அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருந்தால் (தோப்புக்கரணத்தால்) அந்த நரம்புக்கற்றைகள் சுருங்கிச் சோர்வடையாமல் ர்ரத்தம் நன்கு பாய்ந்து மூளைக்கு பலம் கொடுக்கும். ஆந்த ர்ரத்தம் மூளைக்குச் சென்றால் மனதில் சாந்தமான நினைவுகள் மலரும்.

நாம் தோப்புக்கரணம் போடும் போது உடல் அசைவில் சுஷீம்னா என்ற நாடி தட்டி எழுப்பப்படுகிறது. இரு கரங்களில் நெற்றிப்பொட்டுக்களில் குட்டிக் கொள்ளும் போது ஸஷஸ்ராரம் என்ற இடத்தில் இருந்து யோகிகளுக்கு அமிர்தம் சிந்தும் விநாயக உபாஸனையின் மூலம் சுஷீம்னா நாடி அமிர்தகலசம் இரண்டும் ஒருங்கே இயங்குவதனால் பூரண பலன்களை அடைய முடிகிறது என்பர்.

எந்தத் தேவதையை வணங்கத் தொடங்கினாலும் முதல் விநாயகரை தியானித்து சுக்லாம் பரதரம் என்ற ஸ்துதியை கூறி நெற்றியில் குட்டிக் கொண்ட பின்னரே வணங்க வேண்டும் ர்வ்வாறு குட்டிக் கொள்வதால் ப்ரம்மரந்த்ரத்தில் அமிர்தம் பெருகி நாடிகளில் பாய்ந்து உபாசர்களுக்கு சோம்பல் முதலிய அவகுணங்களை விரட்டி நல்ல மனநிலையை அளிக்கிறது. மூலக்கனல் என்று சொல்லப்படுவதே சுஷீம்னா நாடி. இது மனித சரீரத்தில் அடி வயிற்றின் கீழ் ஒங்கார ரூபத்தில் அமைந்து செயலாயிற்றுகிறது.

இதைத் தட்டிச் செயல்படுத்தி மேல் நோக்கி ஸஹஸ்ரார மண்டலம் வரை செலுத்தி சிரஸிலிருக்கும் அமிர்தத்துடன் கலந்து அவ்விடமே அதை நிலைநிறுத்திக்கொண்டால் மனிதன் தன் நிலைமறந்து ப்ரும்மத்துடன் ஐக்கியப்பட்டு நிற்பான் பேரானந்தத்தைக் காண்பான். இந்த நாடியை செயல்படுத்துவதற்கு – தட்டி எழுப்புவதற்கு மூலாதாரத்தில் அளவில்லாத உஷணத்தை உண்டு பண்ணவேண்டும் அதற்கு மனத்தை ஒரே நிலையில் ஜக்கியப் படுத்தி நெடுங்காலம் ஜபதபங்கள் புரிய வேண்டும் அதிக உஷ்ணமான பொருட்களை உபயோகித்து பூசை முதலியக புரிதல் மறைமுகமான யோகத்தீமுட்டு என்று உணர்த்தவேயாகும் மூலாதாரத்திலுள்ள சுசுஷம்னா நாடி கணபதி என்பதாலே நமது ரிஷிகள் சாஸ்திர விற்பனர்கள் ஆகியோர் தாவர வர்க்கத்திலேயே மிக மிக உஷ்ணமான அறுகம் புல் வெள்ளெருக்கு வன்னிப்பத்திரம் ஆகியவை கணபதி பூசைக்கு உகந்தவை எனக் கூறியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெற்றிப் பொட்டில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போடுவதையும் விநாயக வழிபாடு மரபாக அமைத்துள்ளார்கள்.

ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும்

அறுகம்புல்லின் மகிமை புராணங்களிலே சிறப்பாக விநாயக புராணத்திலே விதந்து உரைக்கப் பட்டுள்ளமையை யாவரும் அறிவர். பார்க்கவ புராணத்திலே ஆனைமுகக் கடவுளுடைய பெருமை மிகவும் விரிவாக விளக்கப் பெற்றுள்ளது. பார்க்கவ புராணம் பிருகு முனிவரால் வழங்கப் பெற்றது. பிருகு முனிவர் இப்புராணம் யாவருக்கும் பயன்பட வேண்டும் என்னும் இலட்சியத்தோடு உபாசனா காண்டம் லீலா காண்டம் என்னும் இரண்டு காண்டங்களாக அமைந்து அவற்றை இருநூற்றைப்பது பிரிவுகளாக்கிப் பன்னிரண்டாயிரஞ் சுலோகங்களால் ஓரு புராணமாக்கினார்.

முதலாவது உபாசனா காண்டத்தில் அறுகம்புல்லின் பெருமை விதந்துரைக்கப்பட்டது நறுமணமுடைய பலவகையான மலர்கள் இருக்கவும் அறுகினால் நான்முகனை ஏன் வழிபடவேண்டும் என்பதை விளக்க அவந்தி பட்டணத்திலுள்ள கபலன் என்னும் பெயருடைய ஒர் அரசனுடைய கதை கூறப்படுகிறது. கபலனுடைய மனைவின் பெயர் சுபத்திரை. அவர்களைத் தேடி வந்த அந்தணருடைய பெயர் மதுசூதன் அம்முவரையும் அடியொற்றி அவர்கள் இயற்றிய செயல்களால் அறுகின் பெருமை உரைக்கப்படுகின்றது.

மேலும் அனலாசுரனை அழித்த ஆனைமுகக்கடவுளின் வெப்பம் தண்ணெனக் குளிரும் வண்ணம் எண்பதாயிரம் முனிவர்கள் அங்கு வந்து ஒவ்வொருவரும் இருபத்தோரறுகுகளை முடிமுதல் அடிவரை சொரிந்தார்கள் என்பதும் விநாயக புராணத்திலே எடுத்தரைக்கப் பெறுகின்றது.சுனக மன்னனுடைய பசு அறிவைப் போக்கிப் பதியறிவைக் கொடுத்து ஆட்கொண்ட நிகழ்ச்சியிலும் அறுகின் பெருமை விளக்கப்பட்டுள்ளது. ஒரு புல்லுக்கு நிகராகுமா குபேரனுடைய செல்வம் என்று கூறும் அளவிக்கு அறுகின் நிறைகோல் ஏறிய வரலாறு உண்டு. ஆனைமுகக்கடவுனுடைய திருவடிகளிலே சேர்க்கும் ஆறுகுக்கு இந்திரன் முதலானவர்களுடைய செல்வமும் ஒப்பாகாது. என்பது விநாயக புராணம் விளக்கும் உண்மை.

புராணங்கள் சாதாரண மக்களுக்கு நல்லறிவூட்டும் அறிவுக் கருவூலங்கள் என்று கொள்ளப்படும் பொழுது புராணங்களின் இலக்கியப் பணிபில் உட்பொதிந்து காணப்படும் படிமவாக்கங்களும் குறியீட்டுப் பண்புகளும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அறுகு என்பது சாதாரணமாக தரையிலே படரும் ஒரு புல்லு என்ற எளிமை ததும்பிய படிமவாக்கம் வாமனாவதாரம் போன்ற செயல் வீச்சுடன் இணையும் வண்ணம் அமைக்கப் பெற்றிருத்தல் குறிப்பிடத்தக்கது.சிறியன என்று கருதப்படுபவை விந்தை மிகு அணுவின் அடக்கமாய் ஆற்றலாய் ஒளிர்விடும் புனைவிலே சாமானியர்களின் பெருமை உணர்த்தப்படுதல் நினைவுக்குரியது.

=========================
மீள் பதிவு: அழிக்கப்பட்ட எனது இன்னொரு வலைதளத்தில் இருந்து.

வரும் 23-ஆகஸ்ட்-2009 (ஞாயிறு) அன்று விநாயகர் சதுர்த்தி. என்ற இந்த வரி மட்டும் மாற்றப்பட்டுள்ளது.

22 comments:

Vidhya Chandrasekaran said...

மே ஐ கம் இன்?

Vidhya Chandrasekaran said...

போன சதுர்த்திக்கு நீங்க பண்ண நெய்வேத்யத்தை சாப்பிட்டு தான் பிள்ளையார் கவுந்துட்டாரா??

Vidhya Chandrasekaran said...

எனக்கு பிள்ளையாரைப் பிடிக்கும். காரணம். அவர் எடுக்கும் அவதாரங்கள். வாழைஇலை முதற்கொண்டு வைரம் வரை எல்லாவற்றிலும் விதம் விதமாகச் செய்யலாம். என்னிடம் ஒரு பெரிய பிள்ளையார் கலெக்‌ஷனே இருக்கிறது:)

Vidhya Chandrasekaran said...

எங்கம்மா வீட்டில் உளுத்தங்கொழுக்கட்டை பழக்கமில்லை. மாமியார் பக்கம் எள்ளு பழக்கமில்லை. எனக்கு எல்லாமே பிடித்திருக்கிறது. தேங்காய் பூரணத்தை இன்னும் இறுகக் கிளறி உருட்டித் தருவார் அம்மா. கொழுக்கட்டையைவிட அதுதான் ரொம்பப் பிடிக்கும்.

எறும்பு said...

யாருமே இல்லாத கடைல வித்யா மட்டும் டீ ஆத்துறாங்க.
விதூஷ், போனாப்போகட்டும் நீங்க பண்ண கொழு"கட்டைய" கொடுத்து வித்யாவ ஒரு வலிப்பண்ணுங்க.

எறும்பு said...

//என்னிடம் ஒரு பெரிய பிள்ளையார் கலெக்‌ஷனே இருக்கிறது://

"ஒரு" பெரிய பிள்ளையார் எப்படி கலெக்சன் ஆகும் # டவுட்டு

எறும்பு said...

//போன சதுர்த்திக்கு நீங்க பண்ண நெய்வேத்யத்தை சாப்பிட்டு தான் பிள்ளையார் கவுந்துட்டாரா??//

பிள்ளையார் எப்படின்னு தெரியலை.. ஆனால் விதூஷ் வீட்ல, ப்ளீஸ் இந்த தடவை நீ நைவைத்தியம் ஏதும் பண்ணிடாதன்னு அவங்க குடும்பமே கெஞ்சினதா ஒரு செய்தி.

எறும்பு said...

அப்படி பதிவையே படிக்காம ஒரு நாலு கமெண்ட் தேத்தியாச்சு.

bye

ஸ்வாமி ஓம்கார் said...

//ஓங்காரன்//

ஏதோ என் பெயர் அடிபடுதேனு வந்து பார்த்தா... பெரிய இந்துத்துவா பதிவா இல்ல இருக்கு :))

//வரும் 23-ஆகஸ்ட்-2009//
பதிவுல மட்டும் மீள் பதிவா? இல்லை போன வருஷம் செஞ்ச அதே நைவேத்தியமே இந்தவருஷமுமா?

எறும்பு said...

//பெரிய இந்துத்துவா பதிவா இல்ல இருக்கு :))//

சாமி, இந்துத்துவத்திற்கு முன்னாடியோ பின்னாடியோ பார்ப்பனியத்த சேர்க்க மறந்துட்டேல்

எறும்பு said...

//ஏதோ என் பெயர் அடிபடுதேனு வந்து பார்த்தா.//

நானே அந்த வார்த்தையை இந்த பதிவுல தேடித்தான் கண்டுபிடிச்சேன். நீங்க எப்படி சாமி உங்க பேர எந்த பதிவுல போட்ருகான்னு கண்டுபிடிக்க ஏதும் software வச்ருகீங்களா!!

:)

R. Gopi said...

\\உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே (அவர் அவதரித்த தினம்) விநாயக சதுர்த்தி எனக் கொள்ளப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. \\

கோகுலாஷ்டமி, ராம நவமி எல்லாம் கூட அப்படித்தான். கடவுள், யதிகளுக்கு (சங்கரர், ராமானுஜர், இத்யாதி) திதி தான் கணக்கு. மனிதர்களுக்கு நட்சத்திரக் கணக்கு.

\\ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார்.\\

எங்கள் ஊருக்குப் பக்கத்தில் (ஊர் பெயர் நினைவில் இல்லை) உள்ள ஒரு சிவன் கோவிலில் நரமுக விநாயகர் சன்னதி உள்ளது.

\\அறுகு என்பது சாதாரணமாக தரையிலே படரும் ஒரு புல்லு என்ற எளிமை ததும்பிய படிமவாக்கம் வாமனாவதாரம் போன்ற செயல் வீச்சுடன் இணையும் வண்ணம் அமைக்கப் பெற்றிருத்தல் குறிப்பிடத்தக்கது.\\

அடேங்கப்பா, சூப்பர் மேட்டர்!

தெய்வத்தின் குரலில் ஒரு சில அத்தியாங்கள் படித்த திருப்தி.

Vidhoosh said...

நன்றி வித்யா: பிள்ளையார் சாப்பிடுவதாய் இருந்தால் இவ்ளோ விஸ்தாரமா நைவேதியங்கள் இருக்குமா? :))

ரொம்ப கரெக்ட். ஆமா... பிள்ளையார் எடுக்கும் fancy dress வேஷங்கள் கூட நம் மனிதர்கள் மூளை மாதிரித்தானே.. எப்பிடி அலங்காரம் பண்றோமோ அப்படியே இருக்கும் ... (கைத் தட்டணும்னு ஒவ்வொரு தரமும் சொல்லிண்டே இருக்கனுமா உங்களுக்கு....)

Vidhoosh said...

வித்யா: கொழுக்கட்டை செய்வது ரொம்ப ஈசி... மாவு கிளர்ரதுதான் கொஞ்சம் சிரமம்.. :(

Vidhoosh said...

வாங்க எறும்பு... கொழுக்கட்டை எல்லாம் சும்மா பஞ்சு மாதிரி மெத்து மெத்துன்னு வரும்.. எம்பொண்ணுக்கிட்ட கேளுங்க.

Vidhoosh said...

நமஸ்காரம் ஸ்வாமிஜி :)

போனவருஷம் செஞ்சா மாதிரியேதான்.. அதே நிவேதனம்தான் ... ஆனா போனவருஷம் செய்ததே இல்லை...:))

ஆமா... இந்துத்துவாதான்... எதுவுமே இல்லை என்றானபோது வெள்ளத்தில் மூழ்காமல் இருக்க பற்றிக் கொண்டது, இதை சரணாகதி என்று பற்றித்தான் கொண்டிருக்கிறேன் ... :) என்ன செய்யறது, ஏதாவது ஒன்று வேண்டி இருக்கு ஆதரவு என்று மனசுக்கு நம்பிக்கொள்ள.. :))

Vidhoosh said...

நன்றி கோபி. :)

Anonymous said...

நானும் விநாயகரும் பேசி ஒரு முடிவு பண்ணி பதிவு போடறோம். ஹாப்பி பர்த்டே புள்ளையார் :)

Anonymous said...

எனக்கு எல்லாமே பிடித்திருக்கிறது. //

ஆமாம் வித்யா, எனக்கும் விநாயகர் சதுர்த்திதான் பிடிக்கும், எல்லாம் பண்ணி ரசிச்சு சாப்பிடலாம் :)))

Madhavan Srinivasagopalan said...

Thanks for the details.

cheena (சீனா) said...

அன்பின் விதூஷ்

எனக்குப் பிடித்த - என் நண்பன் விநாயகரைப் பற்றிய இடுகை அருமை. இத்தனை செய்திகளையும் தேடிப்பிடித்து சென்ற வருடமே இட்டிருந்த இடுகையை மீள் பதிவு செய்தமை நன்று. எத்த்னை தடவை வேண்டுமானாலும் செய்யலாம்.

நல்வாழ்த்துகள் விதூஷ்
நட்புடன் சீனா

Vidhoosh said...

தேங்க்ஸ் மயில் :)

நன்றி மாதவன். :)

நன்றி சீனா சார். :)

Post a Comment