என் பதில் கடிதம் மரியாதை நிமித்தமானது

நீண்ட நாள் கழித்து நானே மறந்துவிட்ட தோழியொருத்தியின் கடிதம் கிடைத்தது. 19.11.1989 என்ற தேதியிட்ட அவளது கடிதம். நிச்சயம் நாளையேனும் மரியாதை நிமித்தமான என் பதில் கடிதம் எழுதி விடவே வேண்டும் - அன்புள்ள எனத் துவங்கி அன்போடு என முடித்து கையொப்பம் இட்டு நாளையேனும் அனுப்பி விட வேண்டும் என்று செய்ய மறந்து விடும் போதெல்லாம் நினைவு கூறுகிறேன். பல வருடங்களாக அதை என் பையில் வைத்து அலைந்து கொண்டிருக்கிறேன்.

ஒரு நாள் எனது அனைத்து தினசரி அலுவல்களிலிருந்தும் விடுப்பு எடுத்துக் கொண்டு தனியாக ஓரிடத்தில் பதில் கடிதம் எழுத அமர்ந்தே விட்டேன்.

"ப்ரியமான தோழி.... ஏன் இவ்வளவு தாமதமான பதில் என்றால்..." எனத் துவங்கியது என் பதில் கடிதம்.

என்னவென்றெல்லாம் எழுதுவது? எதையெதையெல்லாம் எழுதுவது? பல வருட தாமதத்திற்கு பல காரணங்கள் வரிசை கட்டி நின்றன. துண்டு துண்டாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடந்த வாழ்க்கையையும், கிழிந்து போயும் ஒட்டுபோட்டும் தைத்து வைத்த உணர்வுகளையும், எரித்துவிட்ட நினைவுகளையும் கோர்த்துக் கொண்டிருந்தேன்.

ஏர் முனையில் இளகும் நிலம் போல மனதைக் குதறிக்குதறி பண்படுத்திய வாழ்க்கையை எல்லாம் எழுதினேன். எழுத்தின் வழியே நினைவுகள் அலைபோல பொங்கிப் பொங்கி - சில முறை அழுதும், சில முறை சிரித்தும், என் விழிகளை நனைத்தன - என்னை எனக்கே அறிமுகம் செய்து வைத்தன.

பக்கங்கள் நிரம்பின. அன்றிலிருந்து பதில் கடிதம் எழுதுவது ஒரு வழமையாகிப் போனது. தினமும் காலை ஒரு பக்கமேனும் எழுதிவிடுகிறேன். சில நாட்கள் பக்கங்களெல்லாம் தீரும் வரை எழுதுகிறேன்.

அன்றிரவு வரை நீண்டு எழுதியெழுதி என்னையே கொட்டித் தீர்த்த பதில் கடிதத்தின் கீழ் "என்றும் உன்னை மறவாத அன்புடன்" என்று எழுதியே கையொப்பமிட்டேன். பின்பு அதை நான்காய் மடித்தேன். ஒரு வெள்ளை உறையில் போட்டு பையில் வைத்தேன். எழுதிய கடிதத்தை நாளை காலையிலேயே அஞ்சலில் சேர்த்து விட வேண்டுமென்று வைத்ததும் மறந்து போய் இன்னும் சில வருடங்கள் கழிந்தன.

நாட்கள் செல்லச் செல்ல, பதில் கடிதம் பற்றிய நினைவு வரும் போதெல்லாம் "இத்தனை காலங்கடந்து பதிலனுப்பினால் தவறாக நினைப்பாளோ? அனுப்பி என்ன ஆகப்போகிறது? இத்தனை தாமதமானது ரொம்பவே அநியாயம் இல்லையா? அங்கேயேதான் இருக்கிறாளோ என்னவோ? மின்னஞ்சல் ஃபேஸ்புக் காலத்தில் கடிதமெழுதுவதா... எந்த யுகத்திலிருக்கிறாய்? என்றெல்லாம் கற்பனை தோன்றி அக்கடிதத்தை அனுப்பாமல் இருக்கவும் பல காரணங்கள் உருவாகின. கடிதமெழுதுவது அவ்வளவு புராதனமாகிவிட்டதாயென்ன?

மரங்கள் கூடத்தான் உதிரும் இலைக் கொண்டு வசந்தகாலத்திற்கும், ஓடும் நதிகள் மணல்துகள்களைக் கொண்டு சமுத்திரங்களுக்கும் எழுதுகின்றன. ஒவ்வொரு கடிதத்திற்கும் அடுத்தடுத்து உடனேயே பதில் கடிதங்களும் கட்டாயம் வந்தே விடுகின்றன, மழையாகவும் அலைகளாகவும்.

நான்காய் மடிக்கப்பட்ட கடிதம் இருக்கும் ஒட்டப்பட்ட தபாலுறை என் பையில் நிரந்தரமாயிருக்கும் ஒன்றானது. போலவே, பிறகு என்றும் அவளையும் சந்திக்கவேயில்லை... மீண்டும் ஒருவேளை அவளிடமிருந்து இன்னொரு கடிதம் வந்துவிட்டால் அதற்கான பதிலாகவேனும் இதை அனுப்பி விடலாம்.

அவளது இன்னொரு கடிதம் வந்தேவிடுமென இன்றும் கூடத்தான் எதிர்பார்த்திருந்தேன். இன்றும் அவளுக்கான என் பதில் கடிதத்தை அனுப்பவியலாமல் போனது.

எல்லைகள் சுருங்கி தூரங்கள் குறைந்து உள்ளங்கை உலகம்தான். கூப்பிடு தொலைவுதான். எக்ஸ்பிரஸ் வேகத்தில் கடக்கும் காலங்கள் போல விரிந்து வரும் மனங்களுக்கிடையேயான தூரங்களை கடக்க யாருக்கு நேரமிருக்கிறது? எப்படிக் கடப்பது?

13 comments:

நட்புடன் ஜமால் said...

உண்மை தான் உலகம் சுறுங்கிவிட்டதென்று சொல்கிறோம்

மனங்கள் ஏனோ விலகி கொண்டே

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அருமை..!

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

திருவிளையாடல் தருமி (நாகேஷ்) மாதிரி, கேள்வி கேட்க மட்டும் நன்றாகத் தெரிகிறது......!


கேள்வி கேட்கத் தெரிஞ்ச மாதிரியே பதிலையும் தேடுங்க, நிச்சயம் கிடைக்கும்!

ருத்ர வீணை® said...

அருமை !!

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு வித்யா.

K.B.JANARTHANAN said...

கடிதம் எழுதறது சுலபம்க,
பதில் கடிதம் எழுதறது தான் கஷ்டமுங்க.

மரா said...

எதோ சொல்ல வர்றீங்க.ஆனா அது என்னான்னு தெரியலை...எனக்கு பிரியலை :)

மரா said...

நீங்க ஏன் கவிதை எழுதக்கூடாது?!!!

நசரேயன் said...

//நீங்க ஏன் கவிதை எழுதக்கூடாது?!!//

நாங்க இப்ப கொஞ்ச நாளாத்தான் நிம்மதியா இருக்கோம்

ambi said...

நல்லா இருக்கு. வில்லியம் ப்ளேக் ரேஞ்சுக்கு ட்ரை பண்ணி இருக்கீங்க. :))

சுரேகா.. said...

உண்மையிலேயே ...நாம் கடிதம் எழுதும் வழக்கத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டதில் ஒரு வலி இருக்கவே செய்கிறது.

நல்ல வரிகள்!

உயிரோடை said...

கடிதம் எழுதப்பட்டு அது உரியவர்க்கு அனுப்ப படவில்லை என்றால் அந்த கடிதம் பெரும் சுமை போலிருக்கும் அதனால் அனுப்பி விடுங்கள் தோழி.

சுரேகா.. said...

பாருங்க! பதில் பின்னூட்டம்கூட போடமுடியாமல் போய்விடுகிறது! :))

Post a Comment