புனிறு தீர் பொழுது - 2

 

புனிறு தீர் பொழுது - 1: https://vidhoosh.blogspot.com/2022/05/1.html

பிறப்புக்கு முந்தைய கர்ப்பகாலம் மற்றும்  பிரசவத்திற்கு பிந்தைய காலங்களில்  மிகவும் பொதுவான ரீதியில் உளவியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவ்வுளவியல் சிக்கல்கள் பல்வேறு தீவிரத்தன்மை மற்றும் பலவகையான அறிகுறிகளுடன் இருக்கின்றன.

 

மனநல கோளாறுகளின் அறிகுறிகளுக்கு தெளிவான காரணங்கள் எதுவும் இல்லை. மகப்பேற்றுக்கு பிறகான மனநல கோளாறு இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில், பெண்களிடையே பாலின அடிப்படையிலானதாகவும், குடும்ப வரலாற்றில் பரம்பரை நோயாக மனநல நோய்கள் இருந்து வந்திருப்பின் அதிகமாக ஏற்படுகிறது. திட்டமிடப்படாத கர்ப்பம், டீனேஜ் கர்ப்பம், திருமணம் ஆகாமல் கர்ப்பமானது, கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்திற்குப் பின் கணவர் மரணமடைதல்/பிரிதல், கணவர் அல்லாத மற்றவர்களோடு உடல் உறவு வைத்திருத்தல், குறைவான அல்லது போதுமான கல்வியறிவு இல்லாத தாய்மார்கள், புகைபிடிக்கும் / மதுவருந்தும் பழக்கம் உள்ள பெண்கள், பொருளாதாரத் சிக்கல்கள், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை நிகழ்வுகள், குழந்தை பராமரிப்பு தொடர்பான மன அழுத்தங்கள் தைராய்டு கோளாறு, குறைந்த எடையுடன் குழந்தை  மற்றும் பிறவி குறைபாடுள்ள குழந்தை பிறந்த தாய்மார்கள் போன்ற பல்வேறு காரணிகளால் பாதிப்படையும் மரபணு பாதிப்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றின் கலவையால் ஏற்படலாம்.

 

மிகவும் பொதுவான மனநலப் பிரச்சனைகளில் ஒன்று பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு ஆகும். முதல் குழந்தை பிறந்த முதல் வருடத்தில் முதல் சில வாரங்களில் ஏற்படுகிறது.  கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் கர்ப்ப காலத்தில் முதலில் மனச்சோர்வடைவார்கள்.

மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு மேற்கத்திய சமூகங்களில் உள்ள அனைத்து தாய்மார்களிலும் தோராயமாக இந்தியப் பெண்களில் 23% என சமீபத்திய தொற்றுநோயியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

கொரோனா காலகட்டத்தில் பதிவாகியுள்ள மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வின் காரணம் 34 சதவீதம் பெண் குழந்தை பிறப்போடு தொடர்புடையது என்று அறியத் தருகிறது.

 

பல ஆய்வுகள் நீண்டகால, கடுமையான மனச்சோர்வு அப்பெண்களின் சமூக உறவுகள், குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கத்தை ஆவணப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக அதிக விவாகரத்து விகிதங்கள், குழந்தையுடன் அதிக பிணைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் அப்பெண், அவள் குடும்பம்  பாதிப்படைவது மட்டும் அவளுக்கு பிறந்த குழந்தைகளிடையே உடல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியைக் குறைக்கிறது.

 

என்னோடு பணியில் இருந்த 50 வயதுப் பெண்மணி ஒருவர், சிறந்த தலைமைப் பண்புகள் உடையவர். முக பக்கவாத பாதிப்பு உடையவர். இது அவர் இரண்டு வயதுக்கு குழந்தையாய் இருந்த போது அவரது அம்மா அடித்ததால் ஏற்பட்ட பாதிப்பு. இதனால் அவருக்கு அவருடைய அம்மா மீது தீராத ஆனால் வெளிப்படுத்த முடியாத வன்மமும், கோபமும் உண்டு. முக பக்கவாதத்தால் பேசும் போது அவரது வாய் இடது புறமாய் இழுத்துக்கொள்ளும். ஆனால் புதிதாகப் பார்ப்பவருக்கு (அல்லது) இந்த விஷயம் தெரியாதவருக்கு அதை கவனிக்கத் தோன்றாது. ஆனால், அப்பெண்மணியோ அவர் உரையாடும் போதும், மேடைப் பேச்சின் போதும் மிகவும் பதட்டமாய் இருப்பார். அவர் தாய்க்கு PPD.

 

23 வயது பெண், அவள் தாய்க்கு self harming / self injurious behaviour symptoms கொண்ட PPD. பிறந்ததில் இருந்து 15 வருடங்கள் தாயைப் பிரிந்தே வளர்த்திருக்கிறாள். அவள் பருவம் எய்திய போது தாய் அவளோடு இருக்கவில்லை. 23 வயதிலும் அவளுக்கு தன் உணர்வுகளை சரியான விதத்தில் வெளிப்படுத்தத் தெரியவில்லை, அதிக மகிழ்ச்சி அல்லது துக்கம் ஏற்படும் போது கார்ட்டூன் காரெக்டர்கள் (டோரேமான், மிக்கி மவுஸ் போன்றவை) போல குரல் எழுப்புகிறாள். அவளால் யாரையும் நம்ப முடியாத trust issues இருக்கிறது. யாராவது வேலை சொன்னால், சோர்வாக இருந்தாலும் கூட அதை செய்கிறாள் - அமைதியாக. உரத்த குரலில் பேசினால் பயப்படுகிறாள்.

 

ஒரு உதாரணத்துக்குத் தான் சொல்லி இருக்கிறேன். தாயின் PPD பாதிப்பு, குழந்தைகளுக்கு ஒரு ஸ்பெக்ட்ரம் போன்ற பலவகைப்பட்ட மனநல பாதிப்பை உண்டாக்கும்.

 

தாய்வழி மனநலப் பிரச்சனைகள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல; இது குறைவான உணர்திறன் கொண்ட குழந்தைகளின் நடத்தை பிரச்சனைகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. பிறந்த குழந்தைகளுக்கும் அவர்களின் தாய், மற்றும் முதன்மை பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான அன்றாட தொடர்புகள் குழந்தைப் பருவம் முழுவதும் நரம்பியல், அறிவாற்றல், உணர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சியை பாதிக்கின்றன.

 

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் தாய்வழி மனநலக் கோளாறுகளின் எதிர்மறையான விளைவுகள் வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீண்டகால சமூகத் துன்பங்களின் காரணமாக உள்ளன என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. குறைந்த வருமானம் கொண்ட சமூக அமைப்புகளில், தாய்வழி மனச்சோர்வு குறைந்த பிறப்பு எடை மற்றும் முதல் வருடத்தில் ஊட்டச்சத்து குறைவாக இருப்பது, அதிக வயிற்றுப்போக்கு நோய்கள், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி குறைபாடு ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடையதாக இருக்கின்றது.

 

அதிக வருமானம் கொண்ட நாடுகளில், பிரசவத்திற்குப் பின் வழக்கமான  கவனிப்புடன் உளவியல் ஆலோசனைகள் மனச்சோர்வைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை சான்றுகள் காட்டுகின்றன.

 

அதேபோல, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்தாலும் கூட, இந்தியாவில் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு, நீண்ட நாட்கள் தொடர்ந்து தாய்ப்பாலூட்டுதல், குழந்தை பராமரிப்பில் குடும்ப ஆதரவின் மூலம் சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் குழு உளவியல் நுட்பங்கள் இந்திய குடும்ப அமைப்பில் மிகவும் பயனுள்ளதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கின்றன.

இந்தியாவின் பெரும்பாலான இடங்களில், பெண்கள் பிரசவங்கள் பொதுவானதாக இருக்கும் கூட்டுக் குடும்பங்களிலும், நெரிசலான இடங்களில் வசிக்கும் குடும்பங்களிலும், ஒட்டுமொத்த குடும்பம் மற்றும் சமூகம் சம்பந்தப்பட்ட தலையீடுகள் அதிகமிருக்கும் பெண்களுக்கு, இப்படிப்பட்ட சூழ்நிலைகள் மனஅழுத்தத்தைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரியவருகிறது.

பல தலைமுறைகளாக கூட்டுக் குடும்பங்களில் பெண்கள் வாழும் அமைப்புகளில், இந்த அணுகுமுறை புதிய குழந்தை மற்றும் தாயைப் பராமரிக்கும் பொதுவான முயற்சியில் முழு குடும்பத்தையும் ஈடுபடுத்துவதை சாத்தியமாக்கும்.

ஆனால் அதே சமயம் மனநோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களைப் பராமரிப்பதற்கான ஒரு மாதிரியை உருவாக்க நாம் ஒரு சமூகமாய் ஒன்றுபட்டு முன்னெடுக்க வேண்டும். இதில் குடும்பம் தவிர, மகப்பேறு மருத்துவர், மனநல நிபுணர், மற்றும் சமூக நலப் பணியாளர்/செவிலியர்கள்/பயிற்சி பெற்ற மருத்துவச்சிகள் அல்லது ஆயாக்கள் ஆகியோரைக் கொண்ட தாய்-சேய் பராமரிப்பில் கவனம் செலுத்தும் குழுவை உள்ளடக்கி ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தி அதை சமூகத்திற்கு அணுகக்கூடிய வகையில் உத்திகள் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

 

குழந்தை பிறப்பதற்கு முன்பும், பிறக்கும் போதும், பின்பும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதுகாப்பாக உணர்வது ஒவ்வொரு பெண்ணின் உரிமை.  மனநல நிபுணர்கள், மகப்பேறியல் நிபுணர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் நிரல் திட்டமிடுபவர்கள் தங்கள் நாட்டிற்கு அல்லது உள்ளூர் சமூகத்திற்கு ஏற்ற மலிவு விலையில் உத்திகளைத் திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் கூடுதல் பொறுப்பு ஏற்று பாதுகாப்பான தாய்மை மற்றும் குழந்தை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் கலாச்சார ரீதியாக நல்ல நடைமுறைகளை உருவாக்கி பரிந்துரைப்பது அவசியம்.

 

2/5

புனிறு தீர் பொழுது - 1

எங்கள் அபார்ட்மென்ட்டில் புதியதாக தாயான ஒருவரைச் சமீபத்தில் சந்தித்த போது அவர் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார். ஏற்கனவே மூன்று வயதில் ஒரு குழந்தை வேறு இருக்கிறான். தன்னை PPD காரணமாக விவாகரத்து செய்வதால் அதை எப்படி சட்டபூர்வமாகச் சமாளிப்பது என்று கேட்டார்.

PPD ஆங்கிலத்தில் போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் என்றறியப்படும் மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு.
நம் உடலில் இருந்து ஒரு பாகம் திடீரென்று கழற்றி வைக்கப் பட்டால் எப்படி இருக்கும்?

பல் விழுவது முதல் அப்பன்டிசிஸ் நீக்கம் வரை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஏறத்தாழ பத்து மாத காலம் உடலோடு ஒன்றாக இருந்த வயிற்றுச் சுமை திடீரென்று பெறுவலியோடு நீங்கும் பொழுது ஒரு பெண்ணின் உடல் மனம் ஆன்மா எல்லாவற்றிலும் அதீத மாற்றங்கள் ஏற்படும்.
குழந்தை பிறந்து முதல் மூன்று வாரங்களில் ஒரு பெண்ணுக்கு சோகம், எதையோ இழந்து விட்ட உணர்வு, பதற்றம், குற்றவுணர்வு போன்றவை ஏற்படக்கூடும்.
இதற்கு ஆண் பெண் பாலின பாகுபாடு அல்லது ஆதிக்க மனநிலை என்று எல்லாவித காரணங்களும் பிரித்து ஆராயப்பட்டு விட்டன. ஆனால், பிள்ளைப்பேறுக்கு பிறகான பெண்கள் மனநலம் பற்றி நாம் கவனஞ் செலுத்தி அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அதுதான் மகப்பேறு விடுப்பு இருக்கிறதே? அந்த ஆறு மாதகாலம் அம்மா வீட்டில் தானே இருக்கிறார்கள்? அதிக வேலைகள் செய்ய விடுவதில்லையே? வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருக்கிறோமே? என்று நீங்கள் சமாதானப் படுத்திக் கொள்ளும் காரணங்கள் எல்லாமே முதன் முதலில் தாயான பெண்ணுக்கு செய்வதாக ஏமாற்றிக் கொள்வதுதான். நாம் பார்க்கும் திரைப்படங்களில் கூட "தாய்மை"யை அலாதியான ஆனந்தமயமான குதூகலமான ஒன்றையே பார்க்கிறோம். போதாக்குறைக்கு அவளை சகமனுஷியாகப் பார்ப்பதைக் கூட நிறுத்திவிட்டு "தெய்வீக" கிரீடத்தை வேறு ஏற்றி வைத்து சுமக்க வைக்கிறோம்.
இந்தியாவில் மகப்பேற்றுக்குப் பிறகான மனஅழுத்தம் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறதா என்று நீங்கள் யோசித்தால் இந்தக் கட்டுரை உங்களுக்கு ஒரு விழிப்புணர்வாய் இருக்கும். சிவில் கோர்ட்டில் கவனித்துப் பார்த்திருந்தீர்கள் என்றால், பெரும்பாலான விவாகரத்துகள் திருமணமாகி குறைந்த காலகட்டத்துக்குள்ளேயோ அல்லது இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளை நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் டேகேர் சென்டரில் விட்டு வரும்படியாகவே இருக்கும்.
இந்தியாவில் மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு அல்லது பேபி ப்ளூஸ் என்பது ஒருபோதும் விவாதிக்கப்படாத ஒரு விஷயமாகவே இருக்கிறது. தாத்தா பாட்டிக்கள் புதிய வாரிசு கூட அந்த அற்புதக் கணங்களை மகிழ்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கணவன்மார்களோ குழந்தையைக் கையாள்வதற்கு மிகவும் பயப்படுகிறார்கள் அல்லது மனைவிக்கு உதவுவதில் குழப்பமடைகிறார்கள். இந்தக் கூத்தில் "அவள்" கஷ்டப்படுகிறாளா என்று கூட யாரும் பார்ப்பதில்லை.
புதிய உயிருக்கு அபரிமிதமான அன்பும் கவனமும் தேவை. ஆனால் தாய்க்கு அவள் கர்ப்பமாக இருந்தபோது பெற்ற அக்கறை போல அவ்வளவு அதிகமாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் அவளுக்கான கவனம் தேவை.
அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை, நம்மால் டயாபெட்டீஸ், கான்ஸர், HIV-AIDS-STD, ஆனானப்பட்ட கொரோனா போன்ற எல்லாவற்றையும் சகஜமாக ஏற்றுக் கொள்ள முடிந்து விட்டது. ஆனால் அது எந்த வகையான மனநலப் பிரச்சனையாக இருந்தாலும், அது தனக்கும் தன் குடும்பத்துக்கும் தீராத களங்கம் உண்டாக்கி விட்டதை போல ஒரு மாயை ஏற்பட்டு விடுகிறது. மிக சர்வ சாதாரணமாக 5ல் ஒருவருக்கு இருக்கும் டிப்ரஷன் என்ற மனச்சோர்வை குடும்பத்தினர்கள் கையாள்வதை நான் பார்த்திருக்கிறேன். தன் குடும்ப உறுப்பினர் ஒருவர் மனச்சோர்வடைந்துள்ளார், ஆனால் ஒருபோதும் அது பற்றி வெளிப்படையாக விவாதிக்கப்படுவதில்லை! ஏதோ மனஅழுத்தம் தொற்றிக்கொள்ளும் வியாதி போல பதறிப் போகிறார்கள்! அதை முடி மறைத்து, பாதிப்படைந்த நபரைக் குற்றவுணர்வுக்குத் தள்ளி, ஏதோ நடக்கூடாத ஒன்று நடந்து விட்டதைப் போல மேலும் பதட்டத்துக்கு ஆளாக்கி, மாத்திரை மருந்துகளை சாப்பிடவிடாமல் செய்து, இன்னுமும் மூடி மூடி வியாதி அதிகமாக ஆகி விடும்.
இந்தியப் பெண்கள் இயற்கையாகவே தாய்மை குணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கள் குழந்தைகளின் மீது அன்பும், பற்றும் தன்னிச்சையாய் வந்து விடவேண்டியதாக இருக்கிறது. மிகக் கசப்பான உண்மை என்னவெனில், ஒவ்வொரு 7 பெண்களில் ஒருவர் பிரசவத்திற்குப் பின் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார். இதைப் பற்றி ஒருபோதும் பேசப்படுவதில்லை - ஏனென்றால் குழந்தையைக் கவனிக்கவே முழு நேரமும் தேவைப்படும் போது அதன் அம்மாவுக்கு யாருக்கு நேரம் இருக்கிறது?
மனச்சோர்வு என்பது ஒரு தாற்காலிக conditionதான் என்பதை புரிந்து கொள்ளவோ அல்லது ஒப்புக்கொள்ளவோ தவறிவிட்டோம். நிலைமை இப்படி இருக்கும் போது, பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வை அவர்கள் எவ்வாறு புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும், குழந்தை பிறந்த பிறகு ஒரு தாய் சோகமாக இருக்கக்கூடும் அல்லது மனச்சோர்வடைந்திருப்பாள் என்பதை நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பெரியவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
சில கணவர்கள் தம் மனைவி பிள்ளைப் பேற்றுக்கு பின் வரக்கூடிய மனச்சோர்வு (PPD) ஏற்படும்போது அதை எப்படி கையாளுவது என்று தெரியாமல், உறவுச் சிக்கல் பெரிதாகாமல் அல்லது மேலும் மனஅழுத்தத்தை உண்டாக்கிக் கொள்ளாமல் சரியான முறையில் அதைப் பற்றி நேர்மறையாக உரையாடி சரி செய்து கொள்வது என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பது ஒரு பெரிய காரணமாக இருக்கிறது.
நம்மிடம் உள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால் சாதாரண உரையாடல் (discussion) கூட விவாதமாகவே (argument) ஆக்கி விடுவதுதான். உரக்கச் சத்தமாய் அல்லது கீழ்மைப் படுத்தி அல்லது (பெரும்பாலும் பழிச்சொல் பயன்படுத்தி) அதட்டிப் பேசுவது ஆளுமை குணம், அல்லது எதிராளியை அடக்கும் ஒரு உத்தி என்று நம்புவதுதான்.
மகப்பேற்றுக்கு பிறகான மனஅழுத்தம் எப்போது மனச்சோர்வு ஆகிவிடுகிறது என்று என் கூட பணிபுரிந்த பெண்கள் அனைவரையும் நினைத்துப் பார்க்கிறேன்.
என் முதல் குழந்தையைப் பெற்ற பிறகு உடலிலோ மனத்திலோ பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. எனக்கான வாழ்க்கைப் பயணம் அப்போதுதான் துவங்கி இருந்தது. ஆனால் இரண்டாவது குழந்தை, ஆமாம், அப்போதுதான் நான் நன்றாக மாட்டிக்கொண்டேன். ஏனென்றால், என் தொழில்முறையில் ஏணியின் உச்சிக்கு ஒரு படி தான் இருந்தது. Social support என்று நாம் சொல்லிக் கொள்ளும் அம்மா-வழி / புகுந்த வீட்டு வழி ஆதரவுக்கு இருப்பவர்கள் எல்லோருமே வயதானவர்களாக ஆகிவிட்டிருந்தனர். எனக்கும் ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான வயதும் உடல் பலமும் இல்லாமல் ஆகி விட்டிருந்தது. உண்மையில் இது மிக மிக மிக மிகவும் கடினமானது என்பதைத் தவிர வேறெந்த மந்திரஜாலமேதும் அதற்குப் பதிலாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. "அதை எப்படிச் சமாளிப்பது" என்ற கேள்வி, மேற்சொன்ன எல்லாவற்றிற்கும் ஒரு நல்ல தீர்வாக, பிரச்சினைகளைச் சரிசெய்யும் திறன் கொண்ட ஒரு மேஜிக் பட்டன் போல என்னை இதைப் பற்றி எழுதத் தூண்டுகிறது.
இப்போது PPDயின் தாக்கம் விவகாரத்துக்கானக் காரணங்களை எவ்வாறு உண்டாக்குகின்றன என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். சரியாகக் கண்டறியப்படாத (undiagnosed) PPD காரணமாக இன்று நம் சமூகத்தில் 20-30% முதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகிறது. நான் ஏற்கனவே கற்றறிந்தது என்னவென்றால், பெற்றோர் ஆன பிறகு முதல் வருடம் திருமணமான தம்பதிகளுக்கு மிகவும் சவாலானது. இந்த சவால் தீராத பிரச்சினையாகும் என்பது பிரசவத்திற்கு முந்தைய மனநிலை அல்லது மகப்பேற்றுக்கு பிறகான மனஅழுத்தம் (கவனிக்க: மனச் சோர்வு இல்லை) போன்ற கவலைகள், உறவுச் சிக்கல்களை ஏற்கனவே சரியாய் நிர்வகிக்காத ஒரு ஜோடிக்குப் பொருந்தும்.
விவாகரத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்று தம்பதிச் சண்டைகள், பெரும்பாலும் பேசினாலே தீரக்கூடிய சில்லரைத்தனமான, ஆனால் பேசாமல் இருந்ததால் புகைச்சலாகிவிட்ட சண்டையாகவே இருக்கின்றன.
பல சமயங்களில், ஒரு பெண் மகப்பேற்றுக்கு பிறகு ரத்த இழப்பினால் ஏற்பட்ட நலக் குறைவு, உடல் அசதி, மன அழுத்தம், சோர்வு அல்லது பதட்டம் ஆகிவற்றால் அவதிப்படும்போது அவளுடைய துணை குழப்பமடைகிறான். அவளுக்கு எப்படி உதவுவது என்று தெரியாமல் அல்லது தன்னால் எதுவும் செய்ய முடியாது ஆகி அக் கையாலாகாதத்தனம் கோபமாக மாறுகிறது.
மேலும் பெண்களுக்கு எப்போதுமே தனது பிரச்சினைகளை தன் துணைவருக்கு எப்படி விளக்குவது என்று தெரியாது. ஏனெனில் biological wiring அப்படியானது பெண்களின் துரதிருஷ்டம்.
இருவருக்கும் குழப்பம், ஏமாற்றம் அதனால் கோபம். அப்பாவுக்கு அம்மா மீது கோபம். அம்மாவுக்கு அப்பா மீது கோபம். என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மற்றவரிடம் எப்படிப் பேசுவது என்று இருவருக்கும் தெரியாது, அதனால் அவர்கள் பேசுவதை நிறுத்துகிறார்கள். அல்லது பேசுவது கத்தலும் கூச்சலுமாக மாறும். மனங்கள் உடைந்து திருமண உறவு முடிவடைகிறது.
மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு காரணமாக சம்பந்தப்பட்ட ஒவ்வொரு உறவிலும் போராட்டங்கள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் திருமண பந்தம் இதிலிருந்து மீள முடியாது சிக்கலில் மாட்டிக் கொள்கிறது.
விவாகரத்துக்கான காரணம் மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு என்று நாம் கருதலாம், PPD உண்மையில் ஒட்டகத்தின் முதுகை உடைத்த கடைசி வைக்கோற்புல்லாக இருக்கலாம். பெரும்பாலும் தினப்பாடு வேலைகளின் சவால்கள், நம்பிக்கையின்மை, விசுவாசமின்மை, பொருளாதாரச் சிக்கல்கள், அல்லது சரியே செய்ய முடியாத வேறுபாடுகள் போன்ற பெரிதாக்கப்பட்ட ஏதோவொன்றின் காரணமாக திருமணம் முடிவடைகிறது.
உறவு மோதல் ஒரு கசப்பான உண்மை. பெண்கள் மனதாலும் உடலாலும் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் வரையில் அவர்களைச் சார்ந்த குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை. அந்த அம்மா யாராக இருந்தாலும், அவள் எவ்வளவு வலிமையானவளாக இருந்தாலும், சில நேரங்களில் அம்மாக்களுக்கு அவர்கள் உணரும் எண்ணற்ற சிக்கலான உணர்ச்சிகளை அவள் அதைத் தனியே கடந்து செல்வாள் என்று எதிர்பார்க்க முடியாது. அப்போது அந்தப் புதைமணலில் இருந்து மீண்டும் அவளை மீட்டு உருவாக்க கணவன்-மனைவி இரண்டு பேரும் ஒன்றாக முயற்சி செய்ய வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சாதாரண மனிதன்

எங்கிருந்தும்... எங்கும்

சென்று சேர்கின்றன
அவன் கால்கள்
வெகு சாதாரணமாக
அந்தச் சாதாரண நடையால்
பூமி தட்டையாகிறது
அந்தக் கால்கள் இயங்கும் போதெல்லாம்
அது எங்கிருந்து செல்கிறதோ
அங்கே மீண்டும் வருகிறது
ஒரு துன்பத்திலிருந்து
அடுத்தத் துன்பத்திற்கு
நகர்வதைப் போலவே
தன் துன்பங்களைத் தொடர்ந்து
நடக்கின்றன அக்கால்கள்
மிகச் சாதாரணமாக.
- விதூஷ் / 9.May.2022

நிலைக்கண்ணாடி

 என்ன சொன்னீர்கள்

'அது மிகவும் முக்கியமா?'
என்றா கேட்டீர்கள்
உங்களிடமிருந்து பதில்களை மட்டுமே
பெறும் கேள்விகளைக் கேட்கும்
யாருக்கும் கேட்காத குரல்கள் கேட்டு
அழ விரும்பும் போதெல்லாம் சிரிப்பீர்கள்
இந்த விசித்திரமான நகரத்தின்
விசித்திரம் உங்களை பயமுறுத்துகிறதா?
இந்த நகரத்திலிருந்து உங்களால்
தப்பிச் செல்ல முடியும்
வேறொரு விசித்திரமான உலகத்திற்கு
அங்கே எல்லாம் வேறுபட்டவையாய் இருக்கின்றன
உங்களை அவர்கள் அனைவரும்
விசித்திரமானவர்கள் என்று கூறுகிறார்கள்
இங்கே அது இயல்புக்கு மாறாக இருக்கின்றது
நீங்கள் வித்தியாசமாக இருக்க விரும்பினால்
நீங்கள் சுதந்திரமாக இருக்க விரும்பினால்
தேடிக் கொண்டே இருங்கள்
நிலைக்கண்ணாடியில் ஒரு நாள்
மாறுவேடத்தில் வருவீர்கள்.
- விதூஷ் / 9.5.2022

நாராயணீயம் ப்ரத²மத³ஶகம் - 1.4

நாராயணீயம் ப்ரத²மத³ஶகம்

ப்ரத²மத³ஶகம் (4)  


நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி⁴பரமானந்த³பீயூஷரூபே

நிர்லீனானேகமுக்தாவலிஸுப⁴க³தமே நிர்மலப்³ரஹ்மஸிந்தௌ⁴ |

கல்லோலோல்லாஸதுல்யம் க²லு விமலதரம் ஸத்த்வமாஹுஸ்ததா³த்மா

கஸ்மான்னோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ்த்வத்கலாஸ்வேவ பூ⁴மன் || 1-4 ||


निष्कम्पे नित्यपूर्णे निरवधिपरमाऩन्दपीयूषरूपे

निर्लीऩाऩेकमुक्तावलिसुभगतमे निर्मलब्रह्मसिन्धौ |

कल्लोलोल्लासतुल्यम् खलु विमलतरम् सत्त्वमाहुस्तदात्मा

कस्माऩ्ऩो निष्कलस्त्वम् सकल इति वचस्त्वत्कलास्वेव भूमऩ् || 1-4 ||


பகவானே! நீங்கள் எப்பொழுதும் நிறைந்து, மாற்றமில்லாத, மாறாத, சுத்த சத்வ வடிவம். அனைத்து உண்மையான பக்தர்களுக்கும் அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கும் இயல்புடையவர். எண்ணற்ற முக்தி பெற்ற ஆத்மாக்கள் உனது பிரம்மானந்தத்தில் மூழ்கி, இந்தப் பெருங்கடலின் அலைகளில் தூய முத்துக்கள் போல பதிக்கப்பட்டுள்ளன. எனவே அது மிகவும் பிரகாசமாக உள்ளது. பகவான் கிருஷ்ணர் மட்டுமே முழுமையானவர் என்று அழைக்கப்படுவார். எனவே உன்னை ஏன் பூர்ண அவதாரம் (நிஷ்கலா) என்று அழைக்கக் கூடாது?


========

சுத்த சத்வம் என்றால் என்ன?


வாழும் உயிரினம் நிர்ணய அமைப்பு ரீதியாக தூய்மையானது. 


அஸங்கோ³ ஹ்ய் அயம்ʼ புருஷ꞉ (ஸ்ரீமத் பாகவதம் 4.3.23)


வேத இலக்கியங்களில் ஆத்மா எப்பொழுதும் தூய்மையானதாகவும், பௌதிக பற்றுதலால் மாசுபடாததாகவும் இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆன்மாவுடன் உடலை அடையாளம் காண்பது தவறான புரிதலின் காரணமாகும். ஒருவன் முழுதும் கிருஷ்ண உணர்வோடு இருக்கும்போதே, ஒருவன் தனது தூய, அசல் அமைப்பு (சுத்த சத்வ) நிலையில் இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இருப்பு நிலை சுத்த-சத்வ என்று அழைக்கப்படுகிறது, அதாவது அது பொருள் குணங்களுக்கு அப்பாற்பட்டது. இந்த சுத்த-சத்வ இருப்பு உள் ஆற்றலின் நேரடி செயல்பாட்டின் கீழ் இருப்பதால், இந்த நிலையில் ஜட உணர்வின் செயல்பாடுகள் நிறுத்தப்படுகின்றன.


ஜடம் என்றால் உணர்வற்றது என்றல்லவா கற்றுறிக்கிறோம். அதென்ன ஜட உணர்வு?


உதாரணமாக, இரும்பை நெருப்பில் போட்டால், அது சூடாகவும், சிவப்பாக எரியும் போது, ​​அது இரும்பாக இருந்தாலும், அது நெருப்பைப் போலவும் செயல்படுகிறது. இதேபோல், தாமிரத்தை மின்னூட்டம் செய்யும்போது, ​​தாமிரமாக இருக்கும் அதன் செயல் நின்றுவிடுகிறது; அது மின்சாரமாக செயல்படுகிறது. பகவத் கீதை (14.26) மேலும் இறைவனிடம் கலப்படமற்ற பக்தித் தொண்டில் ஈடுபடும் எவரும் ஒரே நேரத்தில் தூய பிரம்ம நிலைக்கு உயர்த்தப்படுவதை உறுதிப்படுத்துகிறது.


மாம்ʼ ச யோ (அ)வ்யபி⁴சாரேண

ப⁴க்தி-யோகே³ன ஸேவதே

ஸ கு³ணான் ஸமதீத்யைதான்

ப்³ரஹ்ம-பூ⁴யாய கல்பதே (BG 14.26)


நிறைவு குறைதலும் குறைவு நிறைதலும் உலகியலில் நாளும் நிகழ்தலின், பரம்பொருட்கு அது இல்லை யெனச் சொல்ல, “பூரணம்” என்கின்றார். சுத்தமாகிய சிவம் சுத்த சிவமெனப்படுகிறது. வேதங்களில் மந்திரங்களாலும் பிராமணங்களாலும் கூறப்படும், தெய்வப் பொருள்கள் அனைத்திற்கும் பெரிதாக உபநிடதங்கள் உரைக்கும், பிரமப் பொருள் என்பதை விளக்கப் “பெரிய பரம்பொருள்” எனக் குறிக்கின்றார். பிரமத்தைப் பெரிய பொருளெனவும். தத்துவமசி என்னும், உபதேச மந்திரத்தை மகாவாக்கியமென்றும் உரைப்பது தமிழ் மரபு. இவ்வாறே அகம்பிரமாஸ்மி என்னும் பாவனை மந்திரம் சிவோகம் பாவனை என்று வழங்கும் என அறிக. மலப்பிணிப்பால் உளதாகிய குறைபாட்டால் உலகிற், பிறந்து உழலுமாறு புலப்பட, “குறையணிந்து திரிகின்றேன்” என்று வருந்துகிறார் ஞானசம்பந்தப் பெருமான்.

பூரணம் என்றால் முழுமையான, நிறைவான என்று பொருள். இருப்பு நிலை என்றும் பூரணமாகவே இருக்கிறது. ஆனால் இயக்க நிலையான பிரபஞ்சத்தில் சிருஷ்டியின் நிமித்தம் ஏற்படும் குறைபாடுகளினின்று தன்னை நிறைவுபடுத்திக் கொள்வதற்கான இயக்கமே இயற்கையின் இயக்கமாக இருக்கிறது. 'தோற்றதுக்கு வராமலிருப்பது பூரணம். தோற்றதுக்கு வந்திருப்பதும் பூரணமே. பூரணத்தில் இருந்து பூரணம் வந்த பின்னும் பூரணம் பூரணமாகவே இருக்கிறது என்பது வேத வாக்கு. அது பூரணம்; இதுவும் பூர்ணம்; பூரணத்திலிருந்தே இந்த பூர்ணம்(பிரபஞ்சம்) உதித்திருக்கிறது; பூரணத்திலிருந்து இந்தப் பூரணத்தை (பிரபஞ்சத்தை) எடுத்து விட்டால், பூரணமே எங்கும் நிறைந்து இருக்கிறது.


ஓம் பூர்ணமத; பூரணமிதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே |

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவ வசிஷ்யதே | ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திஹி என்கிறது ஸ்ரீ உபநிஷத்.


பூர்ணம் அதாவது முழுமை என்னும் சொல்லே ஏழு முறை திரும்ப வருவதும் இருக்கும் இந்த ஸ்லோகம் மிக உயர்ந்த பொருள் கொண்டது. முக்கிய பிரச்சனை மொழிபெயர்ப்பில் உள்ளது. வேதாந்த சாஸ்திரத்தில், "அத ஹ" (அது) மற்றும் "இத" (இது) என்பவை மிகவும் ஆழமான அர்த்தம் கொண்டது. "அதம்" எப்போதும் பூர்ணமாக இருக்கும் வெளிப்படுத்தப்படாத பிரம்மனுக்கு ஒத்திருக்கிறது. இதம் உங்கள் முன் நாம் அன்றாடம் காணும் வெளிப்பட்ட பிரபஞ்சத்திற்கு ஒத்திருக்கிறது. இந்த ஸ்லோகம் கூறுவது, வெளிப்படுத்தப்படாத பிரம்மத்திற்கும், வெளிப்பட்ட பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பை. வெளிப்பட்ட பிரபஞ்சம் பூர்ணத்திலிருந்து வெளிவருகிறது, எனவே இது பூர்ணம் என்றும் தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது. அது மீண்டும் பிரம்மனுக்குள் மூழ்கும்போது, ​​மீண்டும் எஞ்சியிருப்பது எப்போதும் பூர்ணமாக இருக்கும் வெளிப்படாத பிரம்மமே.


இந்த ஸ்லோகம் முடிவிலி முரண்பாட்டின் (infinity paradox) எண்ணிக்கையைக் குறிக்கிறது. இது பிரதிநிதித்துவமான உரையின் வடிவில் உள்ளது. “பூர்ணம்”=முழுமை அல்லது முடிவிலியைக் குறிக்கும் அனைத்தும். 


“பூர்ணம் அத” எனும் போது கட்டளை வாக்கியம் (imperative speech in English grammar) “அந்த முடிவிலியில்” (இடு அல்லது சேர்) 


“பூர்ணஸ்ய" =முடிவிலியிலிருந்து, 


"பூர்ணம் ஆதாயா" (ஆதா என்பது பாதியாக இருப்பது அல்லது அதில் சிறிது பகுதியை எடுத்துக் கொள்வது), 


"பூர்ணமேவ" (முடிவிலி மட்டும்), 

வசிஷ்யதே (இருக்கிறது).

இதை equation ஆக எழுதினால் ∞ + ∞ = (∞ + ∞) - (1/2 / 𝑥(எக்ஸ்)) ∞ = ∞



பிரபஞ்சம் மற்றும் மனதின் புரிந்துகொள்ள முடியாத பரந்த தன்மையைப் புரிந்துகொள்வதற்காக இது திரும்பத் திரும்பச் வருகிறது, மேலும் இந்த பெரிய முடிவிலியில் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளும்போது தாழ்மையுடன் பணிய உணர்கிறோம். அது "சாந்தி சாந்தி சாந்திஹி" என்று முடிகிறது. அதாவது "அமைதி நிலவட்டும்".


என் குறைபட்ட புரிதலில், இந்த ஸ்லோகம் முழு பிரபஞ்சமும் எல்லா நேரங்களிலும் பிரம்மனால் (கடவுள் / matter) நிறைந்திருக்கிறது என்பதை சாதகனுக்கு நினைவூட்டுகிறது, எனவே உபநிடதங்களில் நாம் காணும் அனைத்தும் கடவுளையே சுட்டிக்காட்டுகின்றன.


உதாரணத்துக்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வெய்யிலில் வைக்கும் போது சூரியனின் ப்ரதிபலிப்பு அதில் தெரியும். இதே போல எத்தனை பாத்திரங்களில் நீர் நிரப்பி வைத்தாலும் சூரியனின் ப்ரதிபலிப்பு எல்லாவற்றிலும் தெரியும். இப்போது பாத்திரங்களில் இருக்கும் நீரைக் கொட்டிவிட்டால் சூரியன் இல்லாமல் போய்விடுமா? They are both parts of the same reality, and any gain or loss we perceive is illusory. மாயை. The Whole அல்லது பூர்ணம் remains.


கடலில் இருந்துதான் அலை எழுகிறது. அலை வேறு கடல் வேறு என்று தோன்றினாலும், அலை கடலுக்கு அன்னியமானதல்ல. அது கடலில் இருந்து தோன்றி, கடலில் நிலைபெற்று, கடலில் ஒடுங்கி விடுகிறது. இதில் கடல் பூரணம். அலை பிரபஞ்சம். அலை எழுவதால் கடலுக்கு குறைவு ஒன்றும் நேர்ந்து விடுவதில்லை.


இங்கு எதுவுமே அழிவதில்லை. அழிவு என்ற வார்த்தையே பொய்தான். ஒரு பொருளோ, ஆற்றலோ வேறொரு பொருளாகவோ, ஆற்றலாகவோ மாறுமே அல்லாது அழிவதில்லை. விஞ்ஞானத்தில் இதை Law of Conservation of Energy ''Energy can neither be created nor destroyed, but can be transformed from one form to another'' என்று சொல்வார்கள். பரம்பொருள் உலகைக் கடந்தும் இருக்கிறார். உலகில் ஊடுருவியும் இருக்கிறார். அத்தகைய பரம்பொருள் பஞ்ச இந்திரியங்களுக்கு எட்டாதவர். மனம், மொழி இவற்றிற்குத் தட்டுப்படாதவர். அத்தகைய அதீத நிலையில் அவர் பரிபூரணமாய் விளங்குகிறார். அவரே இப்பிரபஞ்சமாகவும், இதில் காணும் சேதன, அசேதனப் பொருட்களாகவும் விளங்குகிறார். இதனைத்தான் வள்ளுவர் ஆதிபகவன் முதற்கே உலகு என்று குறிபபிடுகிறார். நீரும், நிலமும், ஆகாயமும், காற்றும், நெருப்பும் அனைத்தும் அவரே. ஒளியாகவும், ஒளி பிரகாசிக்கும் வெளியாகவும் பஞ்சபூதங்களாவும் அவரே இருக்கின்றார். எப்படி பிரபஞ்சம் தோன்றியது என்பது பற்றி விஞ்ஞானிகள் கூறும் கருத்தும் இதுதான்.


எனவே பூரணம் என்பது தோற்றத்துக்கு அப்பாலுள்ள நிலை, தோன்றியுள்ள நிலை ஆகிய அனைத்தும் அதுவே என்பது கோட்பாடு. தோன்றியுள்ள அனைத்தும் தோற்றத்துக்கு அப்பாலுள்ள அதிலிருந்து தோன்றி, அதிலேயே நிலை பெற்று அதிலேயே ஒடுங்கி விடுகின்றன. எனவே அதற்கு அப்பால் எதுவுமில்லை. அதுவே யாதுமாகி நிற்கின்றது. எல்லையில் அடங்காதது பூரணம். இயற்கையில் உள்ளவைகள் அனைத்தும் எல்லைக்கு உட்பட்டவைகள். அவை அனைத்தும் பூரணத்தில் அடங்கி விடுகின்றன. மேலும் அதைப் பற்றி ஆராயுமிடத்து குறை ஒன்றுமில்லாத நிறை நிலையாக அது விளங்குவது தெரிகின்றது. எனினும் அதை முழுவதுமாக ஆராய முடிவதில்லை. 


எனவே புலப்படுகின்ற இந்தப் பிரபஞ்சத்தில் பூரணத்தைக் காண முயற்சி செய்கிறான் சாதகன். பூரணத்தை அதனுள் காண்கிறான் ஞானி. பூரணத்திலேயே புதைந்து கிடக்கிறான் நிறை ஞானி. பூரணத்தையே எப்பொழுதும் உணர்பவன் தானே பூரணமாக ஆகி விடுகிறான். பூரணம் அகண்டமானது. கண்டம் என்றால் துண்டுபட்டது. அகண்டம் என்றால் துண்டுபடாதது. கால தேச வர்த்தமானத்துக்கு அங்கு இடமில்லை. பூரணத்தில் இரண்டு என்பதே கிடையாது. எல்லாம் ஒன்றுதான். ஜீவபோதம் இருக்கும் வரை பூரணத்தின் தன்மை விளங்காது. பரபோதத்தில்தான் குறைவில்லாத நிறைநிலை வாய்க்கிறது. பூரணம் உணர்வுக்கு வருகிறது. உடல் உணர்வு கொண்டு விளங்குவது ஜீவபோதம். பரமாத்ம உணர்விலேயே திளைத்திருப்பது பரபோதம்.


எள்ளில் எண்ணெய் போன்றும், விறகில் தீ போன்றும், பாலில் நெய் போன்றும், ஊற்றில் நீர் போன்றும் பரம்பொருள் அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாகத் திகழ்கிறான். எள்ளும் எண்ணெயும் ஒரே வஸ்து. பிரிக்கும் பொழுது இரண்டாகிறது. அதுபோல பரம்பொருள் ஒருவனே என்றாலும், அவனே பிரபஞ்சமாகவும் விளங்குகிறான். எள், விறகு, ஊற்று, பால் இவற்றை முன்னணியில் வைத்துப் பார்க்கும் பொழுது அவற்றில் உள்ள எண்ணெய், நெருப்பு, நீர், நெய் இவையெல்லாம் மறைந்து பின்னணியில் இருக்கின்றன. அது போலவே ஜீவ உபாதிகளோடு கூடிய ஜீவனை முன்னணியில் வைத்துப் பார்க்கும் பொழுது பரம்பொருள் அந்தராத்மாவாக மறைவாக இருக்கிறார். ஜீவபோதம் அகலும் பொழுது ஜீவாத்மா பூரணமாகத் திகழும் பரமாத்மாவில் லயமாகி விடுகின்றான்.


பரம்பொருள் எல்லையற்றவர், எங்கும் நிறைந்தவர். அவரை நாம் மொழிகளைக் கொண்டு விளக்க முற்படும் பொழுது, எல்லையற்றப் பரம்பொருளை ஒரு எல்லைக்குள் கொண்டு வந்து விடுகிறோமல்லவா ? உவமைகளைச் சொல்லி இறைவன் இப்படி இருக்கிறார், இறைவன் அப்படி இருக்கிறார் என்று சொல்லும் பொழுது, சொல்லப்படாமல் விடுபட்டுப்போன மற்ற விஷயங்களில் இறைவன் இல்லையா ? என்ற கேள்வி வந்து விடுகுறதே ? அதனால்தான் வேதங்களுக்கும் அப்பாற்பட்டவர் அதாவது ''மறைக்கப்பாலாய்'' என்று சொல்கிறார்கள். நாம் காணுகின்ற பொருள்களெல்லாம் அவரே என்பதை ''எல்லாமாய்'' ''யாதுமாகி'' என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் நாம் காணும் இவை தவிர மற்றவற்றில் இறைவன் இல்லையா? ' என்ற கேள்வி எழுவதால் வருமே என்பால் அவர் அனைத்தையும் கடந்தவர், அப்பாற்பட்டவர், அல்லதுமாய் இருந்தனை என்கிறார்கள். எங்கும், எதிலும், எப்பொழுதும் பரவி, நிரம்பி நிற்பதோடு, அனைத்திற்கும் ஆதாரமாகக், அனைத்தையும் கடந்தும் நிற்பவர் அவரே பூரணமானவர்.



Sloka 1:https://vidhoosh.blogspot.com/2021/11/11.html

Sloka 2: https://vidhoosh.blogspot.com/2021/11/12.html

Sloka 3: https://vidhoosh.blogspot.com/2021/12/13.html

Sloka 4: https://vidhoosh.blogspot.com/2022/01/14.html

நாராயணீயம் ப்ரத²மத³ஶகம் - 1.3

 நாராயணீயம் ப்ரத²மத³ஶகம்

ப்ரத²மத³ஶகம் (3) 

ஸத்த்வம் யத்தத்புராப்யாமபரிகலனதோ நிர்மலம் தேன தாவத்-

பூதைர்பூதேந்த்³ரியைஸ்தே வபுரிதி ப³ஹுஶ ஶ்ரூயதே வ்யாஸவாக்யம் |

தத்ஸ்வச்ச²த்வாத்³யத³ச்சா²தி³தபரஸுக²சித்³³ர்பனிர்பாஸரூபம்

தஸ்மின் தன்யா ரமந்தே ஶ்ருதிமதிமதுரே ஸுக்³ரஹே விக்³ரஹே தே || 1-3 ||

 

सत्त्वम् यत्तत्पुराभ्यामपरिकलऩतो निर्मलम् तेऩ तावत्-
भूतैर्भूतेन्द्रियैस्ते वपुरिति बहुशः श्रूयते व्यासवाक्यम् |
तत्स्वच्छत्वाद्यदच्छादितपरसुखचिद्गर्भऩिर्भासरूपम्
तस्मिऩ् धऩ्या रमन्ते श्रुतिमतिमधुरे सुग्रहे विग्रहे ते || 1-3 ||

 

sattvam yattatpurābhyāmaparikalaṉato nirmalam teṉa tāvat-

bhūtairbhūtendriyaiste vapuriti bahuśaḥ śrūyate vyāsavākyam |

tatsvacchatvādyadacchāditaparasukhacidgarbhaṉirbhāsarūpam

tasmiṉ dhaṉyā ramante śrutimatimadhure sugrahe vigrahe te || 1-3 ||

 

மகா வியாசர் இறைவனை சுத்த சத்வ வடிவில் அடையாளம் காட்டியுள்ளார். மற்ற இரண்டு குணங்களுடன் (ரஜஸ் மற்றும் தமஸ்) ஒப்பிடும்போது, ​​அந்த சத்வ குணம் முற்றிலும் தூய்மையானது. அவற்றால் (அவ்விரு குணங்களால்) கறைபடாதது. அத்தகைய தூய சத்வ குணத்தில் இருந்து உமது வடிவம் பிறந்தது. நுட்பமான கூறுகள் மற்றும் புலன்கள் மற்றும் செயல் உறுப்புகளால் ஆனது. பல சாஸ்திரங்களில் வியாச முனிவர் இவ்வாறு மீண்டும் மீண்டும் கூறுகிறார். இத்தகைய தூய்மையின் காரணமாக இறைவனின் திருவடிவம், இந்த தூய தெய்வீகத்தை தியானிப்பதன் நிமித்தம் (இது ஒளிமயமான பிரம்மம்) உள்ளிருக்கும் உன்னதமான பேரின்பத்தையும் உணர்வையும் எந்தத் தடையுமின்றி மிகவும் பிரகாசமாக, முழுமையாக வெளிப்படுத்துகிறது.    அந்த வடிவம் மனதுக்கும் செவிகளுக்கும் இன்பம் தருவதாக உள்ளது. அந்த வடிவத்தில் அதிர்ஷ்டசாலிகள் (நல்ல செயல்களைக் கொண்டவர்கள்) கண்டு மகிழ்ச்சி கொள்கிறார்கள். அந்த வடிவம் மனதுக்கும் செவிகளுக்கும் இன்பம் தருகிறது, இப்படியான வடிவத்தால் உமது திருவுருவத்தை பக்தர்கள் எளிதில் கிரகிக்க முடியும்.

 

=======================

ஆயுர்வேதத்தின் படி, மனிதன் இயற்கையின் ஐந்து அடிப்படைக் கூறுகளான பஞ்ச மகாபூதங்களால் ஆனவன், அதாவது ஆகாசம் (ஈதர் அல்லது விண்வெளி), வாயு (காற்று), தேஜஸ் (நெருப்பு), அப் (நீர்) மற்றும் பிருத்வி (பூமி). இந்த ஐந்து கூறுகளும் வெவ்வேறு உடல் உறுப்புகள் மற்றும் உறுப்பு அமைப்புகளை உருவாக்க மனிதனில் உருவாகியுள்ளன, அவற்றில் ஐந்து புலன்கள் (காது, தோல், கண், நாக்கு மற்றும் மூக்கு) புலன்களை உருவாக்குகின்றன, இதன் மூலம் மனிதன் வெளியுலகத்தை ஐந்து வித்தியாசமான வழிகளில் உணர்கிறான். இந்த உணர்வு உறுப்புகள் மூலம், வெளிப்புற பொருள் உணரப்படுவது மட்டுமல்லாமல், ஆற்றல் வடிவில் உட்புறமும் மனித உடலில் உறிஞ்சப்படுகிறது. இந்த ஆற்றல் திரிதோஷம் (மூன்று தோஷங்கள்) எனப்படும் (இன்பத்தை நுகரும்) மூன்று அடிப்படை மனப்பாங்குகளின் (humors) வடிவத்தில் மனித உடலை உருவாக்குகிறது.

Hippocrates; The four humors, or fluid substances, of the body were blood, yellow bile, black bile, and phlegm. This theory was closely related to the theory of the four elements: earth, fire, water, and air.

திரிதோஷங்களும் பஞ்ச மகாபூதங்களிலிருந்து உருவாகின்றன, வாத தோஷத்தில், சம்பந்தப்பட்ட மகாபூதங்கள் காற்று (வாயு) & விண்வெளி (ஆகாசம்); பித்த தோஷத்தில், நெருப்பு (அக்னி) மற்றும் நீர் (ஜலம்) ஈடுபடுகின்றன, மேலும் கப தோஷத்தில், நீர் (ஜலம்) மற்றும் பூமி (பிருத்வி) மஹாபூதங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த மனப்பாங்குகள் (திரிதோஷங்கள்) உளவியல் ரீதியாக திரிகுணங்களுக்கு (சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்) ஒத்திருக்கிறது. இது மனிதர்களில் ஆளுமையின் வெளிப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.

(த்ரி)குணம் என்ற கருத்து அதர்வ வேதத்திற்கு முந்தையது, இது பகவத் கீதையில் முதலில் விவாதிக்கப்பட்டது மற்றும் பின்னர் சாங்கிய தர்சனத்தில் சேர்க்கப்பட்டது. நவீன காலத்திலும் ஆளுமை பற்றிய கருத்தை விளக்க திரிகுணத்தின் கருத்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

நனவின் வளர்ச்சியானது திரிகுணத்தின் இந்த கருத்தில் வேரூன்றியுள்ளது. இவை (சத்வ) நிலைத்தன்மை எனப்படும்; ரஜாக்கள் செயல்படுத்தல் என்றும் தமஸ் செயலற்ற நிலை என்றும் அழைக்கப்படுகிறது. மனச் செயல்பாடுகள் மற்றும் மன செயல்முறைகள் (மனோவிருத்தி, மனோபிரவித்தி) ஆகிய செயல்பாடுகளை மனஸ் கூறுகிறது. அவை திரிகுணத்தின் வெளிப்பாடுகளாகக் கருதப்படுகின்றன. இந்த உளவியல் அம்சங்கள் மனிதர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, நாம் உண்ணும் உணவு, நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் மற்றும் நாம் வாழும் சூழலில் உள்ள மற்ற அனைத்து கூறுகளும் உட்பட கிட்டத்தட்ட அனைத்து உயிரினங்களுக்கும் காரணமாக இருக்கின்றது. ஒவ்வொரு உயிரினமும் குண/பிரகிருதி என்ற ஒன்று அல்லது மற்ற அம்சங்களின் ஆதிக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது, இது அந்த விஷயத்திற்கு அதன் தனித்துவமான தரத்தை அளிக்கிறது.

அனைத்து மனிதர்களும் மூன்று குணங்களின் கலவையாக இருக்கிறார்கள், எனவே இந்த மூன்று அம்சங்களும் ஒன்று அல்லது மற்ற குணங்களின் ஆதிக்கத்தின் அடிப்படையில் வெவ்வேறு வகையான ஆளுமைகளை ஊக்குவிக்கின்றன. ஒவ்வொரு ஆளுமையும் அவரவர் வழிபாட்டு முறை, உட்கொள்ளும் உணவின் வகை மற்றும் அன்றாட வாழ்க்கையின் பிற செயல்பாடுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படலாம்.

 

சங்க காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் சைன பௌத்த சமயங்கள் செல்வாக்குப் பெற்றன.  துறவறத்திற்குப் பெருமை ஏற்பட்டது . அதனால் மக்களின் காதல்  வாழ்வுக்கும் இல்லறத்திற்கும் இருந்த பெருமை குறையத் தலைப்பட்டது .  இந்த உலகில் உள்ள இன்பங்களை வெறுத்து , மறுமையை மட்டும்  நாடுவதே கடமை என்ற மனப்பான்மை வலுத்தது . ஆடல்பாடல்  ஓவியம் சிற்பம் முதலிய கலைகளின் மதிப்புக் குன்றியது . இந்த நிலையிலும் சிலப்பதிகாரம் இருவகை நிலைகளையும் எடுத்துரைத்து இரண்டிற்கும் பாலம் போலவே அமைந்தது . சிலப்பதிகாரத்தில் துறவறம் பெருமையுறக் கூறப்படுகிறது ; இல்லறமும் கற்பும் பெருமை பெறப் பேசப்படுகின்றன . நிலையாமையும் வற்புறுத்தப்படுகிறது ; கலைகளும் போற்றப்படுகின்றன . காப்பியத்தின் முடிவில் மட்டுமே தேகத்துக்கு உறுதுணை தேடுமின் என மறுமைக்கு உரிய முயற்சி வலியுறுத்திக் கூறப்படுகிறது . மற்ற இடங்களில் எல்லாம் , இரண்டும் மாறி மாறி விளக்கப்படுகின்றன . ஆழ்வார் நாயன்மார் பாடல்களில் துறவறம் பழிக்கப்படவில்லை ; இல்லறம் வெறுக்கப்படவில்லை . நிலையாமை உணர்த்தப்படுகிறது ; கலைகளும் போற்றப்படுகின்றன . இந்த உலக இன்பங்களை நுகர்ந்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம் என்ற தெளிவைப் பக்தி இலக்கியம் தருகிறது . உலக வாழ்வைக் கண்டு அஞ்சும் அச்சம் நீங்கி , மக்கள் கூடி வழிபாடு செய்து பக்தியுணர்ச்சியில் திளைத்திருக்க ஊக்கமூட்டுகிறது . மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்கிறது திருஞானசம்பந்தர் பாடிய தேவாரத்தில் உள்ள அறிவுரை. சைனத் துறவியாக , துறவிகளில் தலைவராக இருந்து சைவ சமயத்திற்குத் திரும்பியவர் எனக் கூறப்படும் திருநாவுக்கரசர் பாடியுள்ள தேவாரம் பின்வரும் பாடலில் இயற்கை தரும் இன்பங்களும் இயற்கையைப் பயன்படுத்திப் பெறும் இன்பங்களும் கலை இன்பங்களும் எல்லாம் இறைவன் தரும் இன்பங்களே என்ற உண்மை விளங்குகிறது.

 

குருகாம் வயிரமாம் கூறு நாளாம்

கொள்ளும் கிழமையாம் கோளே தானாம்

பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்

பழத்தின் இரதமாம் பாட்டில் பண்ணாம்

ஒருகால் உமையாளோர் பாக னுமாம்

உள் நின்ற நாவிற்கு உரையா டியாம்

கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும்

கண்ணாம் கருகாவூர் எந்தை தானே .

இதே போல உண்ணும் சோறு , பருகும் நீர் , தின்னும் வெற்றிலை முதலிய எல்லாம் கண்ணனாகிய எம்பெருமானே , அவன் அருளால் பெறும் இன்பங்களே என்று கண்ணீர் மல்கி உருக வேண்டும் என்பது நம்மாழ்வாரின் அறிவுரை . இவ்வாறே மற்ற ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடிய பாடல்களிலும் இறைவனை நினைந்து உருகும் பக்தியே மேலோங்கி நிற்க , மற்ற விருப்பு வெறுப்புகளும் கொள்கைகளும் அச்சங்களும் பின்னிலை அடைகின்றன.

 

ஆழ்வார் நாயன்மார்களின் பக்திப் பாடல்கள் விளைத்த புரட்சி ஒன்று ; கடவுளுக்குமுன் மக்கள் எல்லோரும் சமமானவர்கள் , கடவுள் ஒருவரே எல்லா மக்களுக்கும் தலைவர் என்ற கருத்தைப் பரப்ப அந்தப் பாடல்கள் உதவின. அதனால் , அரசர்களையும் செல்வர்களையும் பாடுவதற்குப் பயன்பட்ட தமிழ் , கடவுளைப் பாடுவதற்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்ற கொள்கை வளர்ந்தது . அரசர்களுடைய அரண்மனைகளையும் செல்வர்களின் மாளிகைகளையும் நாடிச் சென்று ஏங்கி நின்றவர்களைத் திருப்பிக் கோயில்களை நாடி நிற்கச் செய்தார்கள் . அரண்மனைக்குப் பெயராக அதுவரையில் வழங்கிவந்த கோயில் என்ற சொல்லே கடவுளின் ஆலயத்துக்கு உரிய சொல்லாகுமாறு மாறுதல் ஏற்பட்டுவிட்டது . நாட்டில் அதுவரையில் மிக உயர்ந்த கட்டடமாக இருந்தவை அரண்மனைகளே . பக்திப் பாடல்கள் செய்த புரட்சியின் விளைவாக , அரண்மனைகளுக்கு இருந்த சிறப்பெல்லாம் கோயில்களுக்கு உரியன ஆயின . அரண்மனைகளைவிட உயர்ந்த கட்டடங்களாகக் கோயில்களின் கோபுரங்கள் ஓங்கி நிற்கும்படியான மாறுதலைச் செய்த பெருமை பக்திப் பாடல்களுக்கே உண்டு . அரண்மனைக்குச் சென்று விடியற்காலையில் அரசன் துயிலெழுமாறு பாடிவந்த இசைப்புலவர்களையும் மற்றவர்களையும் கோயிலை நாடிச் சென்று வைகறையில் துயிலெழுப்பும் பாடல் (திருப்பள்ளியெழுச்சி ) பாடும்படியாகச் சமயத்தலைவர்கள் செய்துவிட்டார்கள் . அரண்மனையில் இருந்த அரசனும் வைகறையில்  எழுந்து கோயிலுக்குச் சென்று மக்களோடு சேர்ந்து திருப்பள்ளியெழுச்சி வழிபாட்டில் கலந்துகொள்ளும்படியான நிலைமை ஏற்பட்டது. அரண்மனையில் நிகழ்ந்துவந்த விழாக்கள் பல , கோயில்களில் கடவுளுக்கு உரிய திருவிழாக்களாக மாறின . மனிதர்க்குள் இருந்து வந்த உயர்வுதாழ்வுகளும் சாதிவேறுபாடுகளும் ஒருவாறு புறக்கணிக்கப்படுவதற்கும் இந்தத் திருப்பம் பயன்பட்டது எனலாம்.

 

இந்த உடம்பின் இயல்பு எப்படி இருக்கிறது? சூட்சும தேகம் வெளியாவது என்றால் என்ன? நெல் முளைத்தால், அதை பார்க்கும்போது வெண்டாகி(முளைகட்டு நெல்) இருக்கும். அந்த நெல் முளைத்துவிடும். அந்த நெல் வெண்டாகி விடும்.

நெல் முளைத்து அதன் இலைகள் விரிய ஆரம்பிக்கும்போது அந்த நெல்லை அதுவரை பாதுகாத்து வந்த மேலே இருந்த உமி நெற்பயிரை விட்டு தானே கழன்று கீழே விழுந்துவிடும். இதை தஞ்சை பகுதியில் வெண்டாதல் என்பார்கள். அதுவரை நெல்லாயிருந்த அந்த அரிசியானது தக்க சூழ்நிலையில் முளைத்து நெல் என்ற நிலையிலிருந்து செடியாக மாறிவிட்டதால் அங்கே நெல் இல்லை, ஆக ஒன்றுமில்லாமல் ஆகி விடும்.

அது போன்று, இந்த புறதேகம் வீழ்ச்சியடைகிறது, வெண்டாகி விடுகிறது, ஒன்றும் வலுவில்லாமல் போய்விடுகிறது. பதர் போன்று ஆகிவிடும். வெண்டு முளைத்ததற்கப்புறம் வெண்டாகி விடுமென்று சொல்வார். அது மாதிரி, முளைக்கக் கூடிய ஒன்று சூட்சும தேகம். இப்படி ஒரு உண்மை இருக்கிறது. எனவே முளைக்கக்கூடிய ஒன்றுதான் உண்மையான ஆன்மிகம். ஒவ்வொருவரும் அந்த தேகத்தைப் பற்றியே தெரியாமல் இருக்கிறார்கள்.

இப்படி ஒரு தேகம் நம்மிடம் இருக்கிறது. அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும்? இப்படி ஒன்று இருக்கிறது. பிடித்துக் கரையேறிக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருக்காது. ஏன் ஒரு சிலருக்கு மட்டும்தான் அந்த ஆர்வம் இருக்கிறது? யாரொருவன் ஞானிகளை தினம் பயபக்தியோடு வணங்கி பூஜை செய்கிறானோ, அவர்களுக்கு இது கைகூடுகிறது. கழிக்கின்ற மக்கள் அந்த வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள்.

வழிபாடு எப்பொழுது மனிதன் துவங்குகிறான் என்று எதார்த்தமாக சிந்தித்துப் பாருங்கள் தான் தன்னுடையது என்று எண்ணம் கொண்டு என்னால் எல்லாம் முடியும் என்ற எண்ணம் இருப்பவர்கள் பெரும்பாலும் வழிபாடு செய்வதில்லை எப்பொழுது தன்னால்  ஒன்றை செய்யமுடியவில்யோ அப்பொழுது இயற்கையாகவே அவன் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாடு நோக்கி செல்கிறான். சிறுவயதில் ஆசிரியர் வரக்கூடாது என்று வேண்டுவான் அல்லது விடுமுறை வேண்டும் என்று வேண்டுவான் இப்படி தன்னால் முடியாததை ஏதோ ஒன்று அதை செய்யும் என்ற நம்பிக்கையில் அதை நோக்கி வழிபாடு செய்கிறான் அது நாளடைவில் அதிதீவிரமாக செயல்படுவது காரணம் என்னவென்றால் தன்னை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறான் அந்த சக்தி தான் நம்மை வழி நடத்துகிறது என்பதை உணர்கிறான் அந்த உணர்வு எப்பொழுது நம்மிடம் தோன்றும் என்றால் நம்மிடம் இருக்கும் ஆணவம் நெகிழ்ந்து போகிறதோ அப்பொழுது தான் நம்மிடம் வழிபாடு என்ற எண்ணமே தோன்றுகிறது இது மனிதன் இயற்கை ஆகும்.

அந்த வகையில் வழிபாட்டை நான்கு விதமாக சுருக்கமாக வகைபடுத்தி உள்ளார்கள்  நம் முன்னோர்கள்

சரியை - தாதமார்க்கம் (தாச மார்க்கம்)

கிரியை - சற்புத்திர மார்க்கம்

யோகம் - சகமார்க்கம்

ஞானம் - சன்மார்க்கம்

இதன் விரிவு ஒவ்வொன்றிலும் நான்காக பிரிந்து பதினாறாக  விதமாக விரிவு பெறுகிறது. அவை

சரியையில் நான்கு

சரியையிற் சரியை - சரியை நெறியில் திருக்கோயிலில் திருவிளக்கிடுதல் முதலான தொண்டுகள்.

சரியையிற் கிரியை - ஒருமூர்த்தியை வழிபடல்.

சரியையில் யோகம் - வழிபடும் கடவுளையும் சிவனையும்தியானித்தல்.

சரியையில் ஞானம் - சரியை வழிபாட்டால் அனுபவம் வாய்க்கப் பெறுவது.

கிரியையில் நான்கு

கிரியையிற் சரியை - பூசைப் பொருட்களைத் திரட்டல்.

கிரியையிற் கிரியை - புறத்தில் பூசித்தல்.

கிரியையில் யோகம் - அகத்தில் பூசித்தல்.

கிரியையில் ஞானம் - மேற்கூறிய கிரியைகளால் ஓர் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.

யோகத்தில் நான்கு

யோகத்திற் சரியை - இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்.

யோகத்திற் கிரியை - பிரத்தியாகாரம், தாரணை.

யோகத்தில் யோகம் - தியானம்.

யோகத்தில் ஞானம் - சமாதி.

ஞானத்தில் நான்கு

ஞானத்திற் சரியை - ஞானநூல்களைக் கேட்டல்.

ஞானத்திற் கிரியை - ஞானநூல்களைச் சிந்தித்தல்.

ஞானத்தில் யோகம் - ஞானநூல்களைத் தெளிதல்.

ஞானத்தில் ஞானம் - ஞான நிட்டை கூடல்.

 

Sloka 1:https://vidhoosh.blogspot.com/2021/11/11.html

Sloka 2: https://vidhoosh.blogspot.com/2021/11/12.html

Sloka 3: https://vidhoosh.blogspot.com/2021/12/13.html


நாராயணீயம் ப்ரத²மத³ஶகம் - 1.2

நாராயணீயம் ப்ரத²மத³ஶகம்

ப்ரத²மத³ஶகம் (2) 

ஏவந்து³ர்லப்⁴யவஸ்துன்யபி ஸுலப⁴தயா ஹஸ்தலப்³தே⁴ யத³ன்யத்

தன்வா வாசா தி⁴யா வா ப⁴ஜதி ப³த ஜன꞉ க்ஷுத்³ரதைவ ஸ்பு²டேயம் |

ஏதே தாவத்³வயம் து ஸ்தி²ரதரமனஸா விஶ்வபீடா³பஹத்யை

நிஶ்ஶேஷாத்மானமேனம் கு³ருபவனபுராதீ⁴ஶமேவாஶ்ரயாம꞉ || 1-2 ||


இரண்டாம் ஸ்லோகத்தின் பொருள்: 


இந்த முறையில், இது போன்ற அரிய விஷயங்களை அனைவரும் எளிதில் அணுக முடியும். உயிரினங்களில் சிறந்த மனித ஜன்மம் எடுத்த நாங்கள் உடல் பேச்சாலும் மனதாலும் மற்ற உலக விஷயங்களைப் பின்பற்றுகிறோம். உண்மையில் இது பரிதாபத்திற்குரியது. இருப்பினும், கிருஷ்ண பக்தர்களாகிய நாங்கள், உலகத் துன்பங்கள் அனைத்தையும் நீக்குவதற்கு முழு மனதுடன், பிரபஞ்சத்தின் அனைத்து உயிரினங்களின் முழு ஆன்மாவின் உருவமாக இருக்கும் குருவாயூர் அப்பனே, உம்மைச் சரணடைகிறோம்.

============

நாம் சரணடைவது இயலாமையால் இல்லை. ஆனால் சரணடைவதால் நிவாரணத்தை உணர்கிறோம். நாம் சரணடையும் போது, நாம் ஏதோ ஒன்றை விட்டுவிடுகிறோம், ஆனால் விடுவது என்பது நாம் நினைக்கும் விதத்தில் அல்ல. உதாரணத்துக்கு மிகக் கடினமான ஒரு சூழல் நம் வாழ்க்கையில் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். நம்மால் எதுவுமே செய்ய இயலாத கையறு நிலை, அப்போது, நாம் அச்சூழலை விட்டு ஓடி ஒளியாமல், அல்லது அச்சூழலைக் கண்டு பதட்டம் கொள்ளாமல் இருக்க, ஒரு நம்பிக்கையாக சரணாகதி உதவுகிறது. சரணாகதி அடையும் நிலையில், நாம் சூழ்நிலையை நம்மால் நிர்வகிக்க முடியும் அல்லது நிர்வகிக்க முடியும், அல்லது அப்படி உதவக்கூடிய எதையும் அறிவோம் என்ற ஆணவத்தை/மாயையை/கருத்தை விட்டுவிடுகிறோம்.


சரணடைதல் என்பது எனது பங்குக்கான செயல் ஏதும் இல்லாவிட்டாலும், எல்லாம் சரியாகிவிடும் என்பதை அறிந்து, இருப்பதை முழுமையாக ஏற்றுக்கொள்வது.


ஒரு நபர், சூழ்நிலை அல்லது விளைவு மீதான நமது கட்டுப்பாட்டை விட்டுவிடுவது சரணாகதி. யாரையாவது அல்லது எதையாவதுக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எப்பொழுது ஏற்படுகிறது? அது பயத்தில் வேரூன்றியுள்ளது. ஒரு சூழ்நிலை நாம் நினைப்பதை விட வித்தியாசமாக மாறினால் என்ன நடக்கும் என்று நாம் பயப்படுகிறோம். அதைவிட, நாம் நினைப்பது நடந்தே ஆக வேண்டும் என்ற impulsive desire கூட அந்தப் பயத்துக்கு மூலகாரணமாக இருக்கிறது.


நாம் எதையாவதுக் கட்டுப்படுத்த முயலும்போது, எது சிறந்தது என்று நமக்குத் தெரியும் என்றும், நாம் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுவிட்டோம், அனைத்தும் உணர்ந்த சர்வவல்லமையுடன் பார்க்கிறோம் என்று கருதுகிறோம். நாம் கட்டுப்படுத்த முயலும்போது, நமது யோஜனைகள், நமது திட்டங்கள் மற்ற அனைவருக்கும் சிறந்தது என்று முடிவு செய்கிறோம். பிரச்சனை என்னவென்றால், கட்டுப்படுத்துவது என்பது நமது தனிப்பட்ட கணிப்புகள், நம்பிக்கை அமைப்புகள் மற்றும் இவற்றின் இணைப்புகளிலிருந்து உருவாகிறது - நமது மதிப்பை நிரூபிக்கவும், பெருமைக்காகவும் நாம்தான் சரி என்று நிரூபிக்கவும் முயற்சி செய்கிறோம்.


சரணடைவது என்பது நம்மை விட பெரிய ஒன்றை நம்புவதாகும், இது பிரபஞ்சத்தின் மீதான நமது நம்பிக்கையை ஆழப்படுத்த உதவுகிறது.


ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்-னின் கூற்றுப்படி- our greatest skill is to decide whether we believe in an altruistic, supportive universe or an antagonistic universe that is out to get us. Do you believe the Universe has your back, or do you believe that life is a tough battle with many forces fighting against you? Glass half full or half empty?


பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் நேர்மறையான உணர்வு நமக்கு இருக்கும்போது நம்மை விட மேலான ஒன்றை நம்புவது எளிது. இவ்வித நம்பிக்கை ஆரம்பத்தில் நம் குழந்தைப் பருவத்திலிருந்தே உருவாவது, இதற்கு credit அன்பான, ஸ்திரமான குடும்பத்தைத் தந்த பெற்றோருக்குரியது. பிரபஞ்சம் அதன் பங்கைச் செய்யும் என்று  நாம் நம்புகிறோம், நமக்கு ஆதரவு மற்றும் உதவி வரும் என்றும் நம்புகிறோம்.


இப்படி நாம் நம்பத் தொடங்கும் போது, ​​நம் சிந்தனை, தர்க்கரீதியான மனதில் இருந்து ஆன்மீகத்திற்கு நகர்கிறது. ஒரு ஆன்மீக நம்பிக்கை நம்மை நம் புலன்களால் உணரக்கூடிய வடிவத்திற்கு அப்பால் பார்க்க முன்செலுத்துகிறது. உணர மட்டுமே முடிந்த, ஆனால் புலன்களுக்குத் தெரியாததையும் காணாததையும் நம்புகிறோம். இதயம் மற்றும் நமது உள்ளுணர்வு நம்மை வழிநடத்த அனுமதிக்கிறோம், இப்படிச் செய்யும்போது நாம் தனிப்பட்ட கணிப்பாகக் கருதுவது, ஒன்றைக் கட்டுப்படுத்துவது, பிரச்சினைகளை தற்குறியாகக் கையாளுதல் மற்றும் பிரச்சினைகளின் எல்லைகளை வரையறுப்பது ஆகியவற்றின் அவசியம் இல்லாமற்போகிறது.


சில சிக்கல்கள் இந்த நம்பிக்கை மீதான சந்தேகத்தை, நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகின்றன. வாழ்க்கையில் தொடர்ந்து நிகழும் எதிர்மறையான நிகழ்வுகள், உறவுச் சிக்கல்கள், பணப்பிரச்சினைகள் போன்றவை. உண்மையில் கூர்ந்து நோக்கினால், இவை எல்லாமே வெவ்வேறு வகையில் உருவானவைதான், அதேபோல தொடர்ந்து இருப்பதில்லை. ஒன்று முடிந்ததும் இன்னொன்று என்று நாமாக ஏற்படுத்திக் கொண்ட ஒன்றாகவே இருக்கின்றன.


உதாரணத்துக்கு ஒரு சராசரி நாள், அன்றைய தினம் காலையில் தலைவலியோடு எழுந்திருக்கிறோம் அல்லது traffic jamமில் மாட்டிக் கொண்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கவனித்துப்பார்த்தீர்கள் என்றால் அதிகபட்சம் தலைவலி / போக்குவரத்து நெரிசல் ஒரு மணி நேரம் மட்டுமே நீடிக்கிறது. ஆனால், அந்த பிரச்சினையில் உண்டான mood change எதிர்மறையாக நாள் முழுதும் நம்மைச் சிடுசிடுப்போடு இருக்க வைக்கிறது, இல்லையா?


இப்போது இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்

நீங்கள் எதற்காக பயப்படுகிறீர்கள்?


நீங்கள் சூழலைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் என்ன மோசமாய் போய்விடும்?


நீங்கள் நம்புவதெல்லாம் உண்மையா?


நீங்கள் நினைப்பது போல் எல்லாம் நடக்கவில்லை என்றால் உங்கள் நிலைமை மோசமாகிவிடும் என்பது முற்றிலும் உண்மையா?

எதையெல்லாம் விடமுடியாமல் நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள்?


Synchronocity தத்துவத்தின்படி நான் விரும்பும் அனைத்தும் என்னை விரும்புகின்றன என்பதை முழுமையான ஆழமான நம்பிக்கையின் ஊடாக அவை நம் வழியில் வருகின்றன. சுருக்கமாக எண்ணம் போல் வாழ்வு.


சரணாகதியால் என்னென்ன நன்மைகள் கிடைக்கக்கூடும்?

நாம் non-judgemental ஆக மாறக்கூடும்

இந்த நொடியில் மகிழ்ச்சியாக வாழக் கற்றுக் கொள்கிறோம், ஏனென்றால், கடந்த காலம் அல்லது எதிர்காலத்தைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, நம்மால் சரணாகதி அடைய முடிவதில்லை.

ப்ரத்யாஹாரம் (withdrawal of senses) என்ற யோக நிலை எளிதில் கிட்டும்.


Sloka 1:https://vidhoosh.blogspot.com/2021/11/11.html

Sloka 2: https://vidhoosh.blogspot.com/2021/11/12.html

நாராயணீயம் ப்ரத²மத³ஶகம் - 1.1

 நாராயணீயம் ப்ரத²மத³ஶகம்

ப்ரத²மத³ஶகம் (1) – ப⁴க³வத꞉ ஸ்வரூபம் ததா² மாஹாத்ம்யம்

ஸாந்த்³ரானந்தா³வபோ³தா⁴த்மகமனுபமிதம் காலதே³ஶாவதி⁴ப்⁴யாம்

நிர்முக்தம் நித்யமுக்தம் நிக³மஶதஸஹஸ்ரேண நிர்பா⁴ஸ்யமானம் |

அஸ்பஷ்டம் த்³ருஷ்டமாத்ரே புனருருபுருஷார்தா²த்மகம் ப்³ரஹ்ம தத்த்வம்

தத்தாவத்³பா⁴தி ஸாக்ஷாத்³கு³ருபவனபுரே ஹந்த பா⁴க்³யம் ஜனானாம் || 1-1 ||

सान्द्रानन्दावबोधात्मकमनुपमितं कालदेशावधिभ्यां

निर्मुक्तं नित्यमुक्तं निगमशतसहस्रेण निर्भास्यमानम् ।

अस्पष्टं दृष्टमात्रे पुनरुरुपुरुषार्थात्मकं ब्रह्म तत्वं

तत्तावद्भाति साक्षाद् गुरुपवनपुरे हन्त भाग्यं जनानाम् ॥ १ ॥

முதல் ஸ்லோகத்தின் பொருள்: 

கடக்கவியலாத பேரின்பம் இது, தூய நனவின் தன்மை கொண்டது, இதற்கு இணையானது அல்லது ஒப்பானது ஏதும் இல்லாதது, கால-நேரம் மற்றும் இட வரம்புகள் முற்றிலும் இல்லாதது. எப்போதும் மாயையிலிருந்து விடுபட்டுள்ளது. பிரம்மஞானத்தை நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான உபநிடத விளக்கங்கள் தெளிவாக்க முயல்கின்றன, இன்னும் தெளிவாக இல்லை. பிரம்மதத்துவம் ஆரம்பத்தில் எளிதில் புரிந்து கொள்ள முடியாதது. ஆனால் முயன்று அதை உணர்ந்து கொள்வதே மிக உயர்ந்த புருஷார்த்தம், அதாவது விடுதலை, அது மிகவும் யதார்த்தமானதாக  நம் மானுடக் கண்  முன்னே குருவாயூர் கோவிலில் (ஸ்ரீ கிருஷ்ணரின் உருவமாக) ஒளிர்கிறது.  அற்புதமானது, ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைத் தேடும் மக்களின் அதிர்ஷ்டம்தான் இது.

====================

உன்னத யதார்த்தமான பிரம்ம தத்துவம் என்ற உன்னத உண்மை, வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அது மனதுக்கும் புலன்களுக்கும் எட்டாதது. இது அறிவுக்கு அப்பாற்பட்டது. இது மற்ற அனைத்திற்கும் வெளிச்சமாய் இருக்கிறது, ஆனால் எதுவும் அதற்கு ஒளி அல்ல. வார்த்தைகளால் அதை வெளிப்படுத்த முடியாது. மனம் அதை நினைக்க முடியாது. புத்தியால் அதை புரிந்து கொள்ள முடியாது. புலன்களால் அதை உணர முடியாது. அப்படிப்பட்ட அற்புதம்தான் உண்மை. பிரம்மஞானம் என்பது எதையாவது பற்றிய அறிவு அல்ல, மாறாக முழுமையான அறிவாக மாறுவது. அது எல்லையற்றது. அது ஒரு அனுபவம். கருத்து அல்ல. இது முழுமையானது, எனவே, இருமை (கடவுள் - உலகம், பொருள்-ஆன்மா, உடல் - மனம் போன்ற dualistic elements) மற்றும் முரண்பாடான நிகழ்வுகளுக்கு அல்லது கருத்துக்கு (இல்லாத - இருக்கிற, நிறைய - அரிதாக, பின் - முன், முடியும் - முடியாது, ஆபத்து - பாதுகாப்பு, இருள் - ஒளி, கிழக்கு - மேற்கு, தோல்வி - வெற்றி, நன்மை-தீமை போன்ற pairs of opposites) அப்பாற்பட்டது. அதை அறிவதே மிகப் பெரிய பாக்கியம், அதை அறியாமலேயே இறக்கும் ஆன்மா  துரதிஷ்டசாலி.

அழிவுக்கு ஏதுவான விஷயங்கள் தற்காலிகமானவை,  அவற்றை பின்தொடர்வது மதிப்புக்குரியது அல்ல. அதனால் பல வருட வாழ்க்கை கூட மிகவும் சிறியதாகி விடக்கூடும். பொருட்களை அனுபவிப்பதால் எந்தப் பயனும் இல்லை. மனிதன் செல்வத்தில் திருப்தி அடைவதில்லை. எவ்வளவு பெருகிறோமோ, அவ்வளவு தேவைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இன்னும் இன்னும் தேவைகள் கூடிக் கொண்டே போவதால், இன்னும் செல்வம் வேண்டியதாகி விடுகிறது.

தனது மனசாட்சிக்குத் தெரிந்தாலும் கூட மனிதன் அழியாதவராகவே மாற விரும்புகிறார். துரதிர்ஷ்டவசமாக, அவர் உண்மையில் நல்லவற்றுக்குப்  புறம்பாக தனக்கு இன்பமானதைப் பின்பற்றுகிறார். நல்லது ஒன்று, இன்பமானது மற்றொன்று. ஒன்று விடுவிக்கிறது, மற்றொன்று பிணைக்கிறது. அந்தக் கணம் நமக்கு அது கவர்ச்சியாக இருந்தாலும் இன்பத்தை பற்றிக் கொள்ளக்கூடாது.

வெறும் பக்தி மூலம், தினசரி குடும்ப வாழ்க்கையின் தேவைகளை முடித்து விட்டு, சாதாரண பூஜை விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அல்லது எதுவும் செய்யாமல் வெறும் சிந்தனையை ஒருமித்து சில நொடிகள் பிரார்த்தனை செய்வதன் மூலம், நாம் materialistic வாழ்வு வாழ்ந்து கொண்டே, ஆன்மசக்தி பெற முடியுமா?

Retrocausality கோட்பாடு காரணம் (cause) மற்றும் விளைவு (effect) பற்றிய ஒரு கோட்பாடு, அதில் ஒரு விளைவு அது நிகழ்ந்ததன் காரணத்தை காலப்போக்கில் முன்வைக்கிறது, எனவே பிந்தைய நிகழ்வு (காரணம்) முந்தையதை (விளைவு) பாதிக்கிறது. நாம் இன்று செய்யும் ஒவ்வொரு செயலும் (action) என்றோ ஒரு நாள் முன்பே நாம் செய்த செயலுக்குக் காரணமாக இருந்திருக்குமா? இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் நாராயணீயத்தில் பேசப்பட்டிருக்கும் பிரம்மதத்துவத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

இதை மிகவும் நமக்கு எளிதாகப் புரியும்படி நம்மைச் சுற்றியே நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஆனால் அவற்றை நாம் கவனக்குறைவால் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். நாம் பின்னாளில் ஏதாவது (விளைவு) நடக்கும் என்று முன்னறிவிப்பு செய்யும் போது (காரணம்) அது ஒரு retrocausality.

ஒரு நல்ல உதாரணம் ஒரு சபரிமலைக்குச் செல்லவதற்காகக் குடிப்பழக்கத்தை விட்டுவிடுவது, உடல்எடை குறைய உடற்பயிற்சி செய்வது, ஜுரம் சரியாக மருந்து சாப்பிடுவது, ஆபரேஷன் செய்து கொள்ள ஆஸ்பத்திரியில் சேருவது, மாதக் கடைசியில் சம்பளம் வரும் என்று மாதம் முழுக்க வேலை செய்வது, என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்கிறோம் என்பது உண்மையாய் இருக்க முடியாது, அப்படித்தானே?