தமிழ் இலக்கியத்தின் மறக்கப்பட்ட பாதி - விதூஷ்

இந்தியாவின் உயர்ந்த இலக்கிய மரியாதையாகக் கருதப்படும் ஞானபீட விருது பற்றி அனைவரும் பேசும்போது ஒரு வேதனையான கேள்வி தொடர்ந்து எழுகிறது. ஏன் தமிழ் பெண் எழுத்தாளர்களின் குரல் இந்த விருதின் வரலாற்றில் கேட்கப்படவேயில்லை? ஞானபீட விருது 1961ம் ஆண்டிலிருந்து, இந்திய அரசியலமைப்பில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகளில் இலக்கியத்திற்குச் செய்த சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. உலகின் மிகப் பழமையான மற்றும் செழுமையான இலக்கிய மரபுகளில் ஒன்றான தமிழ் மொழி, சங்க காலத்திலிருந்து இன்றுவரை எண்ணற்ற சிந்தனைகளையும் உணர்வுகளையும் உருவாக்கி வந்திருக்கிறது. அந்த மரபில் பெண்களின் பங்களிப்பு மிகப் பெரிது. ஆனாலும், இவ்விருது தமிழ் இலக்கிய பெண் எழுத்தாளர்களை பக்கம் பார்க்கவே இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அறுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இந்த உயரிய விருதின் பட்டியலில் ஒரு தமிழ் பெண் எழுத்தாளரின் பெயர்கூட இல்லாதது சாதாரண கவனப்பிழையால் ஏற்பட்டத் தவறு என்று பார்க்கமுடியவில்லை. இது திட்டமிட்ட புறக்கணிப்பு. இந்த மௌனம் வெறும் புள்ளிவிவரங்களின் குறைபாடல்ல, அது சமகாலத்து இலக்கிய அமைப்பின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.அவர்கள் கவனிக்காத குரல்கள் மறைந்துவிட்டன.

இந்த நிலையைப் பார்க்கும்போது எழும் உணர்வு வெறும் வருத்தமென்று குறைக்கமுடியவில்லை. அது கோபமாகவும் மாறுகிறது. ஏனெனில் தமிழ் இலக்கியத்தில் பெண்கள் எழுதவில்லை என்று சொல்ல முடியாது. அவர்கள் எழுதியிருக்கிறார்கள், போராடியிருக்கிறார்கள், புதிய மொழியையும் புதிய பார்வையையும் உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களது எழுத்துகள் மனித அனுபவத்தின் ஆழத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன. இருந்தும் அந்த குரல்கள் தேசிய விருது பட்டியல்களில் ஒலிக்காதபோது, அது ஒரு இலக்கியத் தவறாகவும், அமைப்பில் உள்ள நெறி குறையாகவும் தோன்றுகிறது. இந்தத் தேர்ந்தெடுத்த குருட்டுப்பார்வை தமிழ் இலக்கியத்தின் உண்மையான பரப்பைச் சுருக்கி காட்டுகிறது.

தமிழ் பெண் எழுத்தாளர்கள் காணப்படவில்லை என்பது உண்மையில்லை. அவர்களை காண விரும்பாத ஒரு அமைப்பு தான் அவர்களை நிழலில் வைத்திருக்கிறது. தமிழ் இலக்கிய உலகில் பல ஆண் எழுத்தாளர்கள் தங்களைத் தொடர்ந்து கவனத்தின் மையத்தில் வைத்திருக்க ஒரு விதமான மலிவான சர்ச்சைகள் மூலம் குழப்பத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். சர்ச்சைகள், விவாத மேடைகள், அரசியல் அணிவகுப்புகள், ஊடக கவனம் என இவை எல்லாம் அவர்களைத் தொடர்ந்து வெளிச்சத்தில் வைத்திருக்கின்றன. ஆனால் அதற்குப் புறம்பாக, அமைதியாகவும் தீவிரமாகவும் எழுதிக்கொண்டிருக்கும் பெண்கள் உள்ளனர். அவர்கள் தங்களைப் பற்றி சத்தமாக பேசிக் கொள்ளவில்லை என்பதாலே அவர்கள் இருப்பே இல்லாதவர்கள் என்று ஆகிவிட முடியாது. அவர்கள் எழுத்துகள் இருக்கின்றன. அவற்றின் ஆழமும் உண்மையும் தீவிரமாய் அவர்களைப் போலவே இயங்கிக் கொண்டே இருக்கின்றன.

ஒரு சமூகத்தின் இலக்கியம் அதன் ஆன்மாவின் குரல் என்றால், அந்த ஆன்மாவின் பாதியை மௌனப்படுத்தி, ஊமையாக்கியபடி அந்த இலக்கியத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. தமிழ் பெண்களின் எழுத்துகள் இல்லாமல் தமிழ் இலக்கிய வரலாறு முழுமையடையாது. அந்த குரல்களை தொடர்ந்து புறக்கணிப்பது ஒரு விருது பட்டியலை வெறுமையாக வைப்பதோடு, நம் பாரம்பரியத்தைப் புரிந்து கொள்ள மறுக்கும் அலட்சிய மனப்போக்கையே காட்டுகிறது. அந்த மௌனம் ஒருநாள் உடைய வேண்டியது அவசியம், ஏனெனில் உண்மையான இலக்கியம் இறுதியில் யாருடைய அமைதியின் கனத்தையும் தாங்கிக் கொள்ளாது, அது கேட்கப்பட வேண்டிய குரலாக மீண்டும் மீண்டும் எழும்.

மார்ச் 2026 வரையிலான காலகட்டத்தில், மூன்று தமிழ் எழுத்தாளர்கள், ஆண்கள், மட்டுமே இவ்விருதைப் பெற்றுள்ளனர். 1975-ல் தமிழ் இலக்கியத்திற்காக அகிலன், 2002-ல் ஜெயகாந்தன், மற்றும் 2025-ம் ஆண்டிற்கான விருது அறிவிக்கப்பட்ட வைரமுத்து ஆகியோர் ஆவர். இந்த மூவரும் ஆண்கள். அறுபது ஆண்டுகளுக்கும் மேலான இந்த விருதின் வரலாற்றில், பெண் இலக்கியவாதிகளின் தமிழ் இலக்கியப் பண்பாட்டின் செழுமையையும் வரலாற்று ஆழத்தையும் கொண்டிருந்தாலும் ஒரு தமிழ் பெண் எழுத்தாளருக்கும் இதுவரை ஞானபீட விருது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க உண்மை.


இந்த நிலை இந்தியாவின் பிற மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மேலும் தெளிவாகத் தெரிகிறது. 1976-ல் வங்காள இலக்கியத்திற்காக ஆஷாபூர்ணா தேவி ஞானபீட விருதைப் பெற்றார். 1982-ல் பஞ்சாபி இலக்கியத்திற்காக அம்ரிதா ப்ரீதம் கௌரவிக்கப்பட்டார். 1983-ல் இந்தி இலக்கியத்திற்காக மகாதேவி வர்மா, 1989-ல் உருது இலக்கியத்திற்காக குர்ரதுலைன் ஹைதர், 1996-ல் வங்காள இலக்கியத்திற்காக மகாஸ்வேதா தேவி, 2000-ல் அசாமி இலக்கியத்திற்காக இந்திரா கோஸ்வாமி, 2017-ல் இந்தி இலக்கியத்திற்காக கிருஷ்ணா சோப்தி, 2011-ல் ஒடியா இலக்கியத்திற்காக பிரதிபா ராய் என கௌரவிக்கப்பட்டனர். பல்வேறு மொழி மரபுகளைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்கள், இந்திய இலக்கியத்தின் மிக உயர்ந்த தளத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த விருதுகள் உணர்த்துகின்றன. இதன் மூலம் இந்தியாவின் பல மொழிகளில் பெண்கள் இலக்கியத்தில் உயர்ந்த நிலையைப் பெற்றுள்ளனர் என்பதும் தெளிவாகிறது. ஆனால் உலகின் மிகப் பழமையான மற்றும் தொடர்ந்து வாழ்ந்து வரும் இலக்கிய மரபுகளில் ஒன்றான தமிழ் இலக்கியத்தில் இதுவரை ஒரு பெண் எழுத்தாளருக்குப் கூட இந்த விருது வழங்கப்படவில்லை என்பது கவலைக்கிடமான விஷயமாகிறது.

இந்த நிலைக்குக் காரணமாக இலக்கிய நிறுவனங்களின் கட்டமைப்பு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. பல காலங்களாக, தேசிய அளவிலான இலக்கிய அங்கீகாரத்தை நிர்ணயித்த வட்டங்களான பதிப்பாளர்கள், விமர்சகர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் விருதுக் குழுக்கள் ஆகியவை பெரும்பாலும் ஆண்களின் ஆதிக்கத்திலேயே இருந்து வருகின்றன. எந்தெந்த எழுத்தாளர்கள் தேசிய அளவில் கவனம்பெற்று அறியப்பட வேண்டும் என்பதையும், யாருடைய படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு அந்தந்த மாநில எல்லைகளைத் தாண்டி முன்னிறுத்தப்பட வேண்டும், யாருக்கு இலக்கிய மேடைகளில் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும்  என்பதை அனைத்தையும் இவ்வமைப்புகளே பெரும்பாலும் தீர்மானிக்கின்றன. பல தமிழ் பெண் எழுத்தாளர்கள் தமிழகத்திற்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆழ்ந்த ஆளுமையைப் பெற்றிருந்தபோதிலும், அவர்களது படைப்புகள் போதுமான அளவில் பிற இந்திய மொழிகளுக்கும் ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்கப்படாததால், அல்லது மொழிபெயர்ப்பு மற்றும் உரிய முன்னெடுப்புகள் குறைவாக இருந்ததன் காரணமாக, தேசிய அளவிலான இலக்கிய விவாதங்களில் போதிய பிரதிநிதித்துவம் பெறாமலே இருந்துவிட்டனர்.

மேலும், இலக்கியப் படைப்புகளது மதிப்பீட்டில், இலக்கியக் கருப்பொருள் சார்ந்த பாரபட்சமும் நிலவி வருகிறது. பல தமிழ் பெண் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் பெரும்பாலும் ஆணாதிக்கம், பாலியல் மற்றும் சாதி ஒடுக்குமுறை, பெண்களின் உடல் மற்றும் சுதந்திரம், மற்றும் பெண்களின் உளவியல் அனுபவங்கள்  உள்ளிட்ட சமூக மரபுகளை சவால் செய்யும் தலைப்புகளைப் பற்றிப் பேசி வருகின்றனர். இத்தகைய கருப்பொருட்கள் பாரம்பரிய இலக்கிய வட்டங்களுக்கு சவாலாக இருந்ததால், படைப்புகள் கலை ரீதியாக சக்திவாய்ந்ததாகவும் அறிவுபூர்வமாக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்தபோதிலும், இத்தகைய கருப்பொருள்கள் சில நேரங்களில் இலக்கியம் என்று பார்க்காமல், விளிம்புநிலை அல்லது சமூக 'எழுத்து' எனக் குறைக்கப்பட்டு மதிப்பிடப்படுகின்றன. ஆனால் அவற்றின் கலைப்பண்பும் அறிவியல் ஆழமும் மிக உயர்ந்தவை என்பதில் சந்தேகமில்லை. இதன் விளைவாக, தமிழ் இலக்கியத்தில் மிகவும் முக்கியமான அசல் பெண் குரல்கள், ஆண்களுக்கு கிடைப்பதைப் போலவே, இலக்கிய கூட்டமைப்புக்களின் ஆதரவு மற்றும் தேசிய அளவிலான அங்கீகாரத்திலிருந்து புறக்கணிக்கப்படுகின்றன.

இதில் கவனிக்கப்படவேண்டிய மிகப் பெரிய விஷயம் என்னவென்றால், தமிழ் இலக்கியத்தின் தொடக்கத்தில் இருந்தே ஒரு பெண் கவிஞரின் குரல் இன்றும் ஒலித்துக் கொண்டே உள்ளது. அவ்வையார் போன்ற பெண் கவிஞரின் நெறிப்பாடல்கள், பல நூற்றாண்டுகளாக தமிழ் சமூகத்தின் நெறிமுறைகள், பண்பாடு மற்றும் கலாச்சாரத்திற்கு அடித்தளமாக உள்ளன. சங்க காலம் முதல் இன்றுவரை, தமிழ் இலக்கிய கற்பனையை வடிவமைப்பதில் பெண்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். நவீன தமிழ் இலக்கிய காலத்தில் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களை உருவாகியுள்ளனர். அவர்களின் பங்களிப்புகள் பரவலாக மதிக்கப்படுகின்றன. அவர்களில் அம்பை, பெண்களின் சுதந்திரம், அடையாளம், மற்றும் சமூக அனுபவங்களை ஆழமான தத்துவ பார்வையுடன் எழுதும் முக்கியமான எழுத்தாளர். சுயசரிதை படைப்பான பாமா எழுதிய கருக்கு இந்திய தலித் இலக்கியத்தின் முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது. சல்மா தனது கவிதைகளிலும் நாவல்களிலும் சமூக கட்டுப்பாடுகளுக்குள் வாழும் பெண்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்துகிறார். பி.சிவகாமி தனது நாவல்களில் சாதி படிநிலை, பாலின அநீதிகள் மற்றும் ஆணாதிக்கத்தை வலுவாக விமர்சிக்கிறார். பரவலாக வாசிக்கப்பட்ட புனைகதை, தமிழ் நடுத்தர வர்க்க வாழ்க்கையில் பெண்களின் சித்தரிப்பை மறுவடிவமைத்த லட்சுமி, வித்யா சுப்ரமணியம் ஆகியோர் அடங்குவர்.

சங்க காலத்திலிருந்து இன்றுவரை தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளனர். ஆகையால் தமிழ் பெண் எழுத்தாளர்கள் ஞானபீட பட்டியலில் இல்லாதது அவர்கள் திறமைக்குறைவினால் அல்ல. இலக்கிய மகத்துவத்தின் குறைபாட்டினாலும் அல்ல, மாறாக பெண்களின் படைப்புகளை அங்கீகரிக்கும் இலக்கிய அமைப்புகள் அதை எவ்வாறு அங்கீகரித்து உயர்த்துகின்றன என்பதில் உள்ள இடைவெளியை, அதன் வழிமுறைகளில் உள்ள குறைபாடுகளையே பிரதிபலிக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வை சரிசெய்வது ஒரு விருது பட்டியலை மாற்றுவது மட்டுமல்ல. இந்திய இலக்கியத்தின் உண்மையான வரலாற்றை முழுமையாக வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் அமையும்.

எழுத்து என்பது ஒரு ஏதோ பொருளீட்டும் தொழில் இல்லை. அது ஒரு மனிதனின் உள்ளத்தின் பிரதிபலிப்பு. ஒருவர் என்ன எழுதுகிறார் என்பது அவர் யார் என்பதையும் வெளிப்படுத்துகிறது. ஒரு எழுத்தாளரின் படைப்புகள் அவர் உள்ளத்தின் கண்ணாடி. அந்த அளவில் பார்த்தால், நம் இலக்கிய உலகம் கேட்க வேண்டிய ஒரு கடினமான கேள்வி உள்ளது. ஒரு எழுத்தாளரைச் சுற்றிலும் ஒழுக்கம் குறித்த விமர்சனக் கேள்விகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து எழும்பும் போது, அவரது எழுத்து மட்டும் உண்மையில் எந்த உயரத்தில் நிற்கிறது? இலக்கியத்தின் மையத்தில் இருக்க வேண்டியது கலைச் சுத்தமும் மனித மரியாதையும் தான். அந்த அடிப்படைகளைப் புறக்கணித்தபோது, விருதுகள் வெறும் அலங்காரங்களாக மட்டுமே மாறிவிடுகின்றன.

அந்தக் கேள்வி இங்கே இன்னும் கடுமையாகிறது. ஒருபுறம் வைரமுத்து போன்ற ஒருவர் இருக்கிறார். அவரது சுற்றிலும் நீண்ட காலமாக ஒழுக்கம் பற்றிய கடுமையான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன. மறுபுறம் அம்பை, சிவகாமி, சல்மா, பாமா, லட்சுமி, வித்யா சுப்ரமணியம், போன்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக ஆழமான சிந்தனையுடனும் கலை நுட்பத்துடனும் பெண்களின் அனுபவங்களை, சமூகத்தின் மறைக்கப்பட்ட உண்மைகளை, மனித உறவுகளின் நுணுக்கங்களை ஆராய்ந்து எழுதியவர்கள் இவர்கள். அவர்களது இருப்பு அமைதியாக இருக்கலாம். ஆனால் அந்த அமைதிக்குள் ஒரு நெறித் தெளிவு இருக்கிறது, ஒரு அறிவு நேர்மை இருக்கிறது. அந்த அளவில் பார்த்தால், கேள்வி மிகவும் நேர்மையானதாக மாறுகிறது. இவர்கள் விருதுக்கான அளவுகோலில் எந்த அளவில் குறைவாகிறார்கள்?

இந்தக் கேள்வி யாரோ ஒரே ஒருவரைப் பற்றியது என்று மட்டுபடுத்திப் பார்க்கக் கூடாது. ஒரு பெரிய அமைப்பைப் பற்றியது. இலக்கிய மேடைகள் சில நேரங்களில் குரல் அதிகமுள்ளவர்களை விரும்புகின்றன. ஆனால் உண்மையான இலக்கியம் பல நேரங்களில் தனித்த அமைதியில்தான் உருவாகிறது. சர்ச்சைகள் உருவாக்கும் வெளிச்சம் தற்காலிகமானது. ஆனால் உண்மையான எழுத்து காலத்தைத் தாண்டி நிற்கும். அந்த அளவைக் கொண்டு பார்த்தால், தமிழ் பெண்கள் எழுதிய பல படைப்புகள் நம் இலக்கியத்தின் மிகச் சுத்தமான குரல்களாக உள்ளன. அவர்களை புறக்கணிப்பது அந்த குரல்களை கேட்க மறுக்கும் அமைப்பின் பெரும் குறைபாடு.

அதனால் தான் இந்த மௌனம் கோபத்தை உருவாக்குகிறது. ஏனெனில் இது வெறும் விருது பட்டியல் பற்றிய விவாதமாக நின்று விடாமல், நாம் இலக்கியத்தில் எதை மதிக்கிறோம் என்ற அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. சத்தமா, அல்லது சத்தியமா? மேடை வெளிச்சமா, அல்லது உள்ளத்தின் ஒளியா? தமிழ் இலக்கியம் உண்மையில் தன் மரபை மதிக்க வேண்டுமெனில், அது ஒருநாள் இந்த கேள்விகளுக்கு நேருக்கு நேராக பதில் சொல்ல வேண்டியிருக்கும். அந்த நாளில், உண்மையான எழுத்தின் மதிப்பு எந்த சர்ச்சையையும் விட உயர்ந்தது என்பதை வரலாறு தானாகவே நிரூபிக்கும்.

-விதூஷ்

0 comments:

Post a Comment