Showing posts with label nostalgia. Show all posts
Showing posts with label nostalgia. Show all posts

ழ - ஃபுல்


ஏக் தித்லி அனேக் தித்லியான்

ரயில் போன கதை

பிறவிப்பயனுக்கு வேணும் கல்கோனா

என் பதில் கடிதம் மரியாதை நிமித்தமானது

எப்டிடா என்னைக் கண்டுபிடிச்ச

பல்லாங்குழி


(Photo @ Dakshina Chitra, ECR, Chennai by Vidhoosh)

நன்றி: விபர ஆதாரம் புத்தகங்கள், விக்கிமீடியா, மரத்தடி, திண்ணை, கூகிள் குரூப் மற்றும் இன்னும் சில இணையங்கள். 2001 முதல் பல பத்திரிகைகள் மற்றும் இணைய பக்கங்களில் இருந்து சேகரித்தத் துணுக்குச் செய்திகளின் தொகுப்பே இக்கட்டுரை.

பல்லாங்குழி என்பது பதினான்கு குழி, பரல்+ஆடு்ம்+குழி = பரலாடும் குழி, பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்றும் பாண்டி விளையாட்டு என்றும் வழங்கப் படுகிறது. சீதைப் பாண்டி என்பது ஒருவர் மட்டுமே தனித்து ஆடும் பல்லாங்குழி விளையாட்டு ஆகும். இது மிக அரிதாகவே ஆடப்படுகிறது. பொதுவாக மரம் அல்லது உலோகத்தால் ஆனது. சில கோவில்களின் மேல் தளத்தில் (மாடி) கருங்கல்லில் குட்டி குட்டி குழிகளாக செதுக்கி இருக்கும். அவ்ளோ வெய்யில்ல அதும் கருங்கல்லுல உக்காந்து எப்படி விளையாடி இருப்பாங்க??

பல்லாங்குழியில் இரு வரிசைகளில் எதிரெதிரே ஏழு ஏழு குழிகள் இருக்கும். புளியங்கொட்டை, முத்துமணி, கழற்சிக்காய், குந்துமணி (குன்றின்மணி?), சிறு கூழாங்கல், அல்லது சோழி வைத்து பல்லாங்குழி ஆட்டம் ஆடப்படுகிறது. ஒவ்வொரு குழிக்கும் எட்டு எட்டு காய்கள் என்று நிரப்பி ஆடப் படும்.

இருவர் சேர்ந்து ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் மரம், இரும்பு, வெண்கலத்தாலான பல்லாங்குழிகள் பயன்படுத்தப்படும். இதில் பதினான்கு குழிகள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஏழு குழிகள் என்று பிரித்துக் கொண்டு எதிரெதிரே அமர்ந்து விளையாட வேண்டும். குழிகள் ஒவ்வொன்றிலும் எட்டு எட்டாக காய்கள் இட்டு நிரப்பப்படும். முதலில் ஆடுபவர் ஏதாவதொரு குழியில் உள்ள காய்களை எடுத்துப் பிரித்து விளையாடத் தொடங்குவார். அவ்வாறு பிரித்து விளையாடி வரும்போது குழி வெறுமையாக இருந்தால் அந்தக் குழியைத் துடைத்து அடுத்த குழியிலுள்ள காய்களை எடுத்துக் கொள்வார். இதனைத் துடைத்து எடுத்தல் என்று கூறுவர். பின் அடுத்தவர் ஆடத் தொடங்குவார். இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் ஆடிக் கொண்டு வரும்போது காய்கள் அனைத்தும் ஒருவருக்கே சொந்தமாகிவிட்டால் ஆட்டம் முடிவுற்றதாகக் கருதப்படும். அனுபவமும் சிந்திக்கும் திறனும் எண்களின் கணிப்பும் இவ்விளையாட்டில் வெற்றியைத் தேடித் தரும்.

பெண்கள் தீட்டுக்குரிய காலத்திலும் கருவுற்ற பெண்கள் அமர்ந்து பொழுதுபோக்குவதற்கும் இந்த விளையாட்டை ஆடினார்கள். கல்யாண சீரில் பல்லாங்குழியும் ஒன்றாக இடம் பெற்று வந்தது. காலப் போக்கில் விளையாட என்று ஒரு பொழுதே இல்லாமல் போனதால், இந்த விளையாட்டும் மறைந்தே போனது. தற்பொழுது (ஆப்பிரிக்க பழங்குடி விளையாட்டு) Mancala Game என்றும் branding செய்யப்பட்டும், gaming sites-களில் flash games ஆகவும் இருக்கிறது. Bao, Soro (Choro or Solo), Mangola, Gabata, Mulabalaba, Ayo and Sadeqa, என்றெல்லாம் பல் வேறு இடங்களில் பல்வேறு variationகளில் விளையாடப் படும். தென்னமெரிக்காவில் ஒலிம்பியாட் விளையாட்டுக்களில் mind games பிரிவில் இவ்விளையாட்டு இருக்கிறது என்பது கூடுதல் செய்தி. அமெரிக்காக்காரன் கொண்டாடினத்தானே "மதர்ஸ் டே". என்னவோ போடா மாதவா [ இப்போ சந்தோஷமா பலாபட்டறை ஷங்கர்:)) ஆனா பாருங்க ஒரு ஸ்லோகம் மட்டும் மிஸ்ஸிங் :)) ]

பல்லாங்குழி இலங்கையில் ஏதோ ஒரு பெயரில் இவ்விளையாட்டை விளையாடுவதாக ஒரு முறை என் இலங்கைத் தோழி ஒருவள் சொல்லி இருக்கிறாள். அவளது தொடர்பு துண்டித்துப் போனது. அவள் இப்போ கனடாவில் இருக்கலாம் :( இருக்க வேண்டும்! அவளோடு இந்த விளையாட்டின் பெயரும் என் குறிப்பிலிருந்து தொலைந்தே போனது. யாருக்கு தெரிந்தால் பகிரவும்.

Significance:

ஒரு மீனின் வயிற்றை ஒரு பகுதியில் மட்டும் கிழித்து அப்படியே திறந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அமைப்பு. ஒரே மனையாய் மூடியிருந்தது இப்போது பாதி பாதியாய் பிரிந்து, இந்த பக்க ஆட்டக்காரரக்கு பாதி அந்த பக்க ஆட்டக்காரருக்கு பாதி. அவர்களுக்கான பாதியில் இருப்பது ஏழு குழிகள். அவை:

1.சகஸ்ராரம்
2.ஆக்ஞா
3.விசுக்தி
4.அனாகதம்
5.மணிபூரகம்
6.சுவாதிஷ்டானம்
7.மூலாதாரம்

இந்த ஏழின் முழுமையும் இந்த ஆட்டத்தில் சரி பங்காய் பிரிக்கப் பட்டிருக்கிறது.
நம் ஞானியரின் பார்வையில் இந்த ஏழு சக்கரங்களும் இன்னொரு பார்வையில்
சுட்டிக்காட்டபட்டுள்ளன. சகஸ்ராரம் துவங்கி விசுக்திவரை - ஆகாயம் அல்லது மேலோகம் அல்லது சொர்க்கம் எனவும், அனாகதம் துவங்கி சுவாதிஷ்டானம் வரை பூலோகம் எனவும், கடைசி மூலாதாரம் அதற்கு கீழ் நரகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

முதல் மூன்று குழிகளிலிருந்து துவங்கப்படும் ஆட்டம் மிகுந்த லாபம்
தரக்கூடியதாகவும், பூமி, நரகம் என்று சொல்லக்கூடிய பகுதியில் துவங்கும்
ஆட்டத்தின் போக்குகள் வேறு மாதிரி இருப்பதையும் நீங்கள் விளையாடி பார்த்தால்
கண்கூடாக அனுபவிக்கலாம்.

குழிக்கு எட்டு காய்கள் என்பன, மனிதனின் எட்டு வகையான குணா நலன்களைக் குறிக்கிறது.

1. சுய கட்டுப்பாடு
2. பொறுமை
3. தியாகம்
4. தானம்
5. தூய்மை (அகம் மற்றும் புறம்)
6. தவம்
7. பிரம்ம ஞானம் (அதாவது பிற உயிர்கள் மீதான மரியாதை)
8. திருப்தி

ஆடும் முறை:

ஆட்டத்தில் குழிக்கு எட்டு காய்களாக ஆளுக்கு ஏழு குழிகளாகத் துல்லியமான சமத்தன்மையுடன் ஆட்டம் தொடங்குகிறது.

சுற்றிக் காய்களை இட்டு வந்து ஒரு வெற்றுக்குழியினைத் துடைத்து அடுத்து இருக்கு குழியில் உள்ள கைகளையும் அதற்கு நேர் எதிரே இருக்கும் குழியில் உள்ள காய்களும் அள்ள வேண்டும். அப்போது முதலில் இட்ட எட்டு காய்களுக்குப் பதிலாக நிறையக் காய்கள் கிடைக்கின்றன. (இதற்கும் ஒரு பெயர் சொல்லி எடுப்போம், மறந்து விட்டது)

ஆட்டத்தில் மற்றும் ஒரு இடைநிகழ்வும் ஏற்படுகிறது. ஒரு வெற்றுக் குழியில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு காயினையும் இட்டு வரும்போது அது நாலாகப் பெருகிய உடன் அதனைப் பசு என்ற பெயரில் அந்தக் குழிக்குரியவர் எடுத்துக் கொள்கிறார். இதன் விளைவாக ஆட்டத் தொடக்கத்தில் இருந்த எட்டு காய்கள் மீண்டும் ஒரு குழிக்கும் ஒரு போதும் திரும்பக் கிட்டுவதே இல்லை.

காய்களை இழந்தவர் (காட்டாக 16 காய்கள் குறைவாகக் கிடைத்தன என்றால்) தன்னுடைய பகுதியில் மூன்று குழிகளைக் காலியாக (தக்கம்) விட்டு விட்டு ஆட்டத்தைத் தொடர வேண்டும். அந்தக் குழியில் எதிரி (வென்றவர்) காய்களைப் போட மாட்டார். சில இடங்களில் தோற்றவரும் போடமாட்டார். இப்போது தோற்றவருடைய குழி இழப்புக்கு ஒரு நிரந்தரமின்மை ஏற்படுகிறது.

ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிறபோது அவர் கையில் எஞ்சியிருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய ஐந்து கூட இல்லாமல் நாலாக இருந்தால் குழிக்கு ஒவ்வொரு காயினை இட்டு ஆட்டம் தொடர்கிறது. இதற்குக் 'கஞ்சி காய்ச்சுதல்' என்று பெயர். கஞ்சி என்ற சொல் வறுமையினை உணர்த்தும் குறியீடாகும்.

தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் தோற்கின்ற போதே ஆட்டம் முழுமை பெறுகிறது.

விளையாடும் முறை 2:

ஒவ்வொரு குழியிலும் முதலில் 5 முத்துக்களை இட வேண்டும். பின்னர் ஒருவர் ஏதாவது ஒரு குழியில் இருந்து ஆரம்பித்து 5 முத்துக்களை குழிக்கு ஒன்றாகப் போட வேண்டும். கையில் இருக்கும் முத்து தீர்ந்த்தும் அடுத்த குழியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அடுத்த குழி காலியாக இருந்து, அதற்கு அடுத்த குழியில் முத்துக்கள் இருந்தால் அவை அனைத்தையும் வென்றதாக பொருள். ஆனால் அடுத்தடுத்து காலியான குழிகள் வந்தால் முதலில் ஆடியவர்க்கு ஒன்றும் இல்லை.

இதனிடையே காலியான குழிகளில் புதிதாய் முத்துக்கள் சேரும். 4 முத்து சேர்ந்ததும் அவரவர் பக்கத்தில் உள்ளதை அவரவரே எடுத்துக் கொள்ளலாம். இதை "பசு" என்று சொல்வோம். எல்லா குழிகளும் காலியானப்பின் மீண்டும் எல்லா குழிகளையும் 5 முத்துகளாக நிரப்ப வேண்டும். ஒருவரிடம் அதிக முத்து இருக்கலாம். மற்றொருவர் குறைவாக வைத்து இருக்கலாம். அதிக முத்து உள்ளவர்கள் தனது பக்கம் உள்ள எல்லா குழிகளையும் நிரப்ப வேண்டும். குறைவான முத்துக்கள் உள்ளோர் எத்தனை குழிகள் நிரப்ப முத்துக்கள் இருக்கிறதோ அத்தனை குழிகளை நிரப்ப வேண்டும். யார் வென்றாரோ அவரிடம் இருந்தே மீண்டும் விளையாட்டு தொடரும்.

விளையாட்டினூடே பாடப்படும் நாட்டுப்புறப் பாட்டு ஒன்று: (நன்றி: என் அம்மா வழிப் பாட்டியார் திருமதி.மீனாக்ஷி கோபாலன்) இப்பாடலின் ஊடாக வயற்காடும்., பூப்படைந்த பெண்மையையும், கருவுற்ற பெண்மணியும் பாதுகாப்பது குறித்த மறைபொருளாக மறைந்திருக்கும் செய்தியைக் கவனியுங்கள். அள்ள அள்ள குறையாத பாரம்பரியம். நம் வாரிசுகளுக்கும் அள்ளித் தருவோம்.


காடு வெட்டிக் கல் பொறுக்கிக் கம்பு சோளம் தினை விதைத்துக்
காலை-மாலை காட்டக் காக்கத் தங்கரத்தினமே
கண் விழித்து கிடந்தாளாம் பொன்னுரத்தினமே.

அள்ளி அள்ளி விதைச்சு வைச்ச அழகுத்தினை சாகாதடி
மொள்ள மொள்ள விதை விதைச்சதங்கரத்தினமே
மொந்தத் தினை சாகாதடி பொன்னுரத்தினமே

கறுப்பானை ஓடிவரக் கள்ளரெல்லாம் தினை விதைக்க
வெள்ளானை ஓடிவரத் தங்கரத்தினமே
வேடரெல்லாம் தினைவிதைக்கப் பொன்னுரத்தினமே

சின்னச்சின்ன வெற்றிலையாம் சேட்டுக்கடை மிட்டாயாம்
மாமன் வைச்ச மல்லிகைப்பூ தங்கரத்தினமே
கொண்டையிலே மணக்குதடி பொன்னுரத்தினமே

சாலையிலே ரெண்டுமரம் சர்க்காரு வச்சமரம்
ஓங்கி வளர்ந்தமரம் தங்கரத்தினமே
உனக்கேத்த தூக்குமரம் பொன்னுரத்தினமே

எல்லோரும் கட்டும்வேட்டி ஏழைக்கேற்ற மல்லுவேட்டி
சந்தனங் கட்டும்வேட்டி தங்கரத்தினமே
சரியான சரிகைவேட்டி பொன்னுரத்தினமே

ஒத்தத்தலை நாகன்வந்து ஒட்டாக்காட்டை அழிச்சிடுத்தே
ஆராரைக் காவல்வைப்போம் தங்கரத்தினமே
அழகான தினைப்பயிர்க்குப் பொன்னுரத்தினமே

தேவானையைக் காவல் வச்சா தீஞ்சிடுமே தினைப்பயிரு
வள்ளியைக் காவல்வைத்தால் தங்கரத்தினமே
வனத்துக்கொரு சேதமில்லை பொன்னுரத்தினமே

மூத்தண்ணன் பொண்சாதியை மூணுமாசம் காவல்வைப்போம்
ஏழையண்ணன் பொண்சாதியை தங்கரத்தினமே
ஏழுமாசம் காவல்வைப்போம் பொன்னுரத்தினமே

சாய்ந்திருந்து கிளிவிரட்டச் சாய்மானமும் பொன்னாலே
உட்கார்ந்து கிளிவிரட்டத் தங்கரத்தினமே
முக்காலியும் பொன்னாலே பொன்னுரத்தினமே

ஒன்பது இரவுகள்

நவராத்திரி வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

அதான் ஷோகேஸில் தினம் கொலு இருக்கே, எங்க குடும்பத்தில் பழக்கமில்லை, ஆகி வராது, யாரு அடுக்கி எடுத்து வைக்கிரது..... என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்து, இந்த வருஷம் மனம் மாறி அப்படியெல்லாம் சொல்லாமல், முதன் முதலாக கொலு வைத்த அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும், அவர்கள் பெற்ற குழந்தைகளின் முதல் மகிழ்ச்சிக்கும் வாழ்த்துக்கள்.

நான் இன்று Reader-ரில் சந்தித்த சகோதரி Mrs.Faizakader வைத்த கொலுவுக்கும் என் மனங்கனிந்த வாழ்த்துக்கள். ரொம்ப மகிழ்வாய் உணர்கிறேன் சகோதரி.

முதன்முதலாக புடவை கட்டி அப்பா வயிறுகலங்க புளிநீர் வார்த்த காலேஜ் பெண்களும்,

கிழவி முதல் குழந்தைகள் வரை ஒருத்தர் விடாமல், நம் வீட்டின் ஆண்கள் எல்லாரும் இரகசியமாய் இரசித்துக் கொள்ளும் மாற்றான் தோட்டத்து பூக்களின் அழகு அலங்காரங்களும்,

அவங்க சைடு இவங்க சைடு என்று திருமண வீட்டில் கூட தனிக் குழுக்களாக இருக்கும், இரு வீட்டு உறவுகளும் மந்திரம் போட்டா மாதிரி புன்னகையோடே சந்தித்துக் கொள்ளும் அதிசயங்களும், நடக்கும் ஒன்பது இரவுகள்.

இது அம்மா கொடுத்தது என்று பொக்கிஷமாய் பாதுகாக்கும், இந்த பொம்மையை அறுபது வருஷம் முன்னால் நான் சின்னவளா இருந்தபோது அடம் பண்ணி ஐம்பது காசுக்கு வாங்கினேன் என்று கூறி மகிழும் பாட்டி என்று ஒவ்வொரு பொம்மைக்குள்ளும் ஒரு கதை. இந்த ஒன்பது நாட்கள், குஜராத்தின் கர்பா, கல்கத்தாவின் பண்டாலா, தமிழ்நாட்டின் பொம்மைகளும் எத்தனை கதைகளையும் சந்திப்புக்களையும் நினைவுகளையும் கொடுத்துச் செல்கின்றன?

இந்த பொம்மைகள் பல வண்ணங்களில் பல ரூபங்களில், புன்னகைப்பது போலும் புன்னகைக்காமலும் படைத்தவன் கொடுத்த உணர்வுகளைச் சுமந்து, கடவுள், மஹாராஜா, சன்னியாசிகள், மூத்தோர்கள், தியாகிகள், சாதாரண மனிதர்கள், கிரிக்கெட், ஃபுட்பால் விளையாட்டு வீரர்கள், வயல், பூங்கா, மிருகங்கள், என்று உலகமே நம் வீட்டுக் கூடத்தில் அமைதியாய் நின்று, காட்சியளித்து, போய்விடும் மீண்டும் பெட்டிக்குள் புதையல்களாக. மீண்டும் அற்புத விளக்குத் தேய்படும் நாளுக்காக, பூதங்களாகக் காத்திருக்கும்.

நாமும் தினசரி சக்கரங்களின் அச்சுக்கள் போல மீண்டும் ஓட்டத்தைத் துவங்க, கொலுப்படியோடு மடித்து எல்லா உணர்வுகளையும், உறவுகளையும் லாஃப்டில் போட்டு மூடிவைக்கிறோம். இன்று லாலி பாடி ஒவ்வொரு பொம்மையாக துணியில் சுற்றி செட்-செட்டாக ஒரு கவரில் போட்டு எடுத்து வைக்கும்போது மனம் சுண்டலுக்காக அலையும் சிறுவர்கள் போல அலையும்.

இந்த பொம்மைகள் போலவே ஒவ்வொரு நாளும் ஒரு வீட்டிலேயே இருக்கும் குடும்பத்தார் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாது, பேசிக் கொள்ள நேரம் கூட இல்லாமல் ஏதோ ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

===============================================

மார்கண்டேய புராணத்தில் நவராத்திரி பற்றிய விவரங்கள் இருப்பதாக வீட்டுக்கு வந்திருந்த என் நண்பர் ஒருவர் சொன்னார். தேடிப் பிடித்து படித்தே விட்டேன்.

உங்களுடன் பகிர்தல்....

நவராத்திரி பற்றிய கதைகள் மார்கண்டேய புராணம், வாமன புராணம், வராஹ புராணம், சிவ புராணம், ஸ்கந்த புராணம், தேவி பாகவதம், கல்கி புராணம் போன்ற புனித நூல்களில் உள்ளன. ஒவ்வொன்றாகப் பகிர்கிறேன்.

தனு மஹரிஷியின் இரு புதல்வர்களான ஹிரம்ப-கரம்பன் இருவரும் தன் தவ வலிமையால் அளவில்லாத ஆற்றல்களைப் பெற்று விளங்கினார்கள். இந்திரனுக்கு இவர்கள் ஆற்றல்களைக் கண்டு பயம் வருகிறது. பேராற்றல் கொண்ட கரம்பனை இந்திரன் கொல்கிறான்.

இதனால் சினங்கொண்ட ஹிரம்பன் சிவனாரை நோக்கி கடுந்தவம் புரிந்து "தன்னை ஆண்கள், தேவ-அசுர-மனிதன் யாரும் கொல்லக் கூடாது" என்ற வரம் கேட்கிறான்.

சிவனோ அவனுக்கு "ஆண்கள், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் யாரும் உன்னைக் கொல்லமுடியாது. ஒரு பெண்ணே உன்னைக் கொல்வாள்" என்கிறார்.

இத்தனைப் ஆற்றல் பெற்ற பலசாலியான தன்னை ஒரு பெண்ணால் கொல்ல முடியுமா என்ற தலைகனம் மிகுந்து அட்டூழியங்கள் செய்ய ஆரம்பித்தான். தன் பலத்துக்கு நிகரான பலம் பொருந்திய பெண் யாருமே இவ்வுலகில் இல்லை என்று கர்வித்து மூவுலகின் மக்கள், தேவர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள் எல்லோரையும் இரக்கமின்றி வதைத்தான். உலகெங்கும் தமக்குக் கீழ் கட்டுப்பட்டதும் அவன் இந்திரலோகத்தையும் கைப்பற்ற ஆவலுற்றான்.

ஒரு முறை ஒரு யக்ஷனின் மாளிகைத் தோட்டத்தில் ஹிரம்பன் ஆண் எருமை ரூபத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறான். அப்போது ஒரு பெண் எருமை மீது மையல் கொள்கிறான். வேறொரு ஆண்-எருமை ஹிரம்பனின் உண்மையான உருவம் பற்றியறிந்து அவனை நெருப்பிலிடுகிறது. பெண் எருமையும் நெருப்பில் குதிக்கிறது.

ஆண்களால் கொல்லமுடியாது என்ற வரம் பெற்ற அசுரன், நெருப்பினின்றும் மீள்கிறான். நெருப்பில் விழுந்து இறக்கும் பெண் எருமை கர்ப்பமாக இருக்கிறதால் தலை எருமை போலும், உடல் மனிதன் போலுமாக உருவத்தோடு எழுகிறான் மகிஷன்.

வெறிகொண்ட மகிஷன், தம் படை முழுவதையும் திரட்டிக் கொண்டு, இந்திரலோகத்தை கைப்பற்றி, இந்திரனையும் அங்கிருந்த தேவர்களையும் துரத்தினான். பதறிய இந்திரனும் தேவர்களும் ப்ரம்மாவிடம் முறையிட்டார்கள். ப்ரம்மா அவர்களோடு சிவனிடம் முறையிடச் சென்றார். சிவன் யோகத்தியானநிலையில் இருந்ததால், விஷ்ணுவிடம் முறையிட்டார்கள். பெருஞ்சினம் கொண்ட விஷ்ணுவிடமிருந்து பேரொளி மிக்க ஆற்றல் ஒன்று வெளிப்பட்டது. இந்நிலையில் சிவனும் யோகத்தியானத்திலிருந்து மீண்டு, நடந்தவையறிந்து, தன் மூன்றாவது கண்ணைத் திறக்கிறார். மூன்றாவது கண்ணிலிருந்து வெளிப்பட்ட பேராற்றல் விஷ்ணுவிடமிருந்து வெளிப்பட்ட ஆற்றலோடு இணைந்து ஒளிர்ந்தது. மற்ற கடவுள்களும் தத்தம் தெய்வீக ஆற்றல்களை இந்த ஒளியில் இட்டார்கள்.

இவ்வொளி ஒரு பெண்ணாக உருவானது. அவள் முகத்தின் ஒளியானது சிவனின் தெய்வீகத்திற்கு ஒப்பானதாக இருந்தது. அவளது பத்து கரங்களும் விஷ்ணுவின் ஆற்றல்களையும், பாதங்கள் ப்ரம்மரூபமாகவும், கூந்தல் யமரூபமாகவும், உடல் சோமரூபமாகவும் (சோமன்=>சந்திரன்), வயிறு இந்திரரூபமாகவும், கால்கள் வருணரூபமாகவும், இடை பூதேவிரூபமாகவும், விரல்கள் சூரியனையும், வசுக்களையும் (கங்கையின் மகன்கள்) ஒத்ததாகவும், மூக்கு குபேரரூபமாகவும், அமையப் பெற்றிருந்தாள். அவள் பற்கள் ப்ரஜாபதி, கண்களின் ஒளி அக்னி, புருவங்கள் சந்திகளாகவும், காதுகள் வாயுரூபமாகவும், இவ்வாறாக தெய்வங்கள் மற்றும் தேவர்களின் பெண்ணாற்றலிலிருந்து "சக்தி"யாக உருவானாள்.

இவளுக்கு இந்திரனின் வஜ்ராயுதம், சிவனின் திரிசூலம், விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம், வருணனின் சங்கு, அக்னியின் ஈட்டி, வாசுகியின் சர்ப்பம், யமனின் இரும்புக்கோல், வாள் மற்றும் கேடயம், விஸ்வகர்மாவின் கோடாலி மற்றும் கவசம், ஹிமாவதனின் (மலையரசன்) ஆபரணங்கள் மற்றும் சிங்க வாகனம் ஆகியவற்றைப் பெற்றாள். இவள் பூமிக்கு அனுப்பப்படுகிறாள்.

அசுரனான மகிஷன், தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளை மணந்து கொள்ள தூதனுப்புகிறான். இறைவியோ, தன்னை போரில் தோற்கடித்தால் அவனை மணப்பதாகக் கூறுகிறாள். இதனால் மகிஷனின் கவனம் திசைமாறி தேவலோகத்தை விடுத்து பூமிக்குத் திரும்புகிறான்.

அவளோடான யுத்தத்தில் தம் படைகள் அனைத்தையும் இழக்கும் அசுரனுக்கு இறைவியின் ஆற்றல் புரிய ஆரம்பிக்கிறது.

அவளது ஸ்வாசக்காற்று பட்டு அவளது படைவீரர்கள் உயிர் பெற்று எழுகிறார்கள். அவளுக்காக அசுரன் ஏவும் கணைகள் எல்லாம் திரும்பி அவன் படையையே அழிக்கிறது. அதிர்ச்சியடையும் ஹிரம்பன் எருமையுருவம் (மகிஷ) கொண்டு இறைவியின் படைகளை தம் வாலால் விசிறியடிக்கிறான். இறைவியின் வாஹனமான சிங்கம் எருமையை நோக்கிப் பாய்கிறது. இறைவி எருமையின் மூக்கை மூக்கணாங்கயிற்றால் பிணைக்கிறாள். ஹிரம்பன் சிங்கமாகவும், பின் மனிதனாகவும் உருமாறி தப்பிக்கிறான். அப்போதும் இறைவியிடமிருந்து தப்ப முடியாமல் ஒரு பெரிய யானையின் உருவங்கொண்டு தந்தத்தால் சிங்கத்தைத் தாக்குகிறான்.

யானையின் தந்தத்தை இறைவியின் வாள் தூள் தூளாக்குகிறது. அசுரன் மீண்டும் எருமை வடிவங்கொண்டு மலைகளினூடே ஒளிந்து கொள்கிறான். இறைவி எருமையின் கொம்பைப் பிடித்து அடக்கி தரையில் தள்ளி இடக்காலால் மிதித்து, அவன் தலையைக் கொய்து, அவன் உடல் பாகங்களைப் பிய்த்து அவன் படைகள் மீதெறிந்து கொல்கிறாள்.

இப்போரானது ஒன்பது இரவுகள் நடைப்பெற்று, பத்தாம் நாள் அசுரவதம் நிகழ்கிறது. மகிஷரூபத்தில் இருந்த அசுரனை வதைத்தனால் இவளுக்கு மஹிஷாசுரமர்த்தினி என்ற பெயர் விளங்குகிறது. பத்தாம் நாள் தீமை அழிந்து நன்மை ஜெயிப்பதால் அந்நாளை விஜயதசமி எனக் கொண்டாடுகிறோம்.

ஹிரம்பன், மகிஷன் இவர்கள் செய்த தவறுகளுக்கும் அடுத்த உயிருக்கு இழைத்த தீங்குகளுக்கும் சரியான தீர்வும் கிடைத்தாகி விட்டது. பெண்மையின் ஆற்றலை குறைத்து மதிப்பிடும் நல்லவர்களுக்கு மகிஷன் ஒரு பாடமாகிறான்.

இதெல்லாம் சரி இதற்கெல்லாம் மூலமுதற்காரண கர்த்தாவான இந்திரனுக்கு என்ன தண்டனை? எங்காவது இந்திரனுக்கும் சரியான தண்டனை கிடைத்திருக்கும், என்று நம்பிக்கையோடு தேடிக் கொண்டே இருக்கிறேன். கிடைக்கும் கிடைக்கும்....

============================================



.

கல்லாங்காய் விளையாட்டுப் பாடல்கள்

இன்று இக்கவிதை படித்ததும்:

சரியா தப்பா எனக் கேட்டு சரியாகவே
தாண்டி தாண்டி பாண்டி விளையாடும்,
பத்து வயதில் 'உக்கார்ந்து' குழந்தை பருவத்தைத் தொலைத்து
'பெரியவள்' ஆகிப்போன பட்டணத்துப் பாப்பாக்களை
விளையாடத் தடைவிதித்து வீட்டுக்குள் உக்காரவைக்கும்
உலகில் எல்லாம் தெரிந்த உள்ளம் உள்ளவர்களுக்கு,
உங்களுக்குத் தெரியுமா?அந்த நாள் உபாதைகளை
அடியோடு போக்கிடவே நம் முன்னோர்கள் கண்ட
முழுத்தீர்வு தான் இந்த விளையாட்டோடு சேர்ந்த
வினை தீர்க்கும் மருந்து உணர்ந்து கொள் உடனே,
தொடரச் சொல் அதனை.
--துரை.ந.உ தூத்துக்குடி

எனக்குள் நிறைய நினைவலைகள். சில்லு விளையாட்டு, பல்லாங்குழி, கல்லாங்காய் அல்லது கல்லாங்கல் அல்லது கழங்காடுதல் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் இந்த விளையாட்டுக்கள் தரும் மகிழ்ச்சிக்கு வேறு பெயரே கிடையாது.

கல்லாங்கா விளையாட்டு, ஒண்ணாங்கா, ரெண்டாங்கா, மூணாங்கா, நாலாங்கா, அஞ்சாங்கா என்று போகும். இந்த விளையாட்டு விளையாட கருங்கல் பொறுக்குவதில் போட்டியே நடக்கும். அழகான உருண்டையான ஒரே அளவிலான கற்களை சேமித்தல் ஒரு கலை.

புளியங்கொட்டை, கூழாங்கற்கள் அல்லது ஜல்லிகற்கள் கரடும் முரடுமாக, சொரசொரவென்று ஆரம்பத்தில் இருக்கும். நாளடைவில் விளையாட விளையாட வழவழப்பாகிவிடும். நிறைய கருங்கற்களை தரையில் பரப்பி கற்களை கையால் மேலே எறிந்து சுழற்றிப் பிடிப்பது, புறங்கையில் பிடிப்பது, வாரிப் பிடிப்பது, போன்று பல விதங்கள். எனக்கு கொஞ்சம் மறந்து விட்டது. நினைவிருப்பவர்கள் பகிரலாம்.

விளையாடும் போது பாடும் பாடல்கள் இவை.

கொக்குச்சி கொக்குகுச்சி, ரெட்டை ரெட்டை சிலாக்கு
முக்குக்குச் சிலந்தி கடிபடுடி, நான்கு வந்தா வாரணும்
ஐயப்பன் சோலை, ஆறுமுக தாளம் போட்டு
ஏழுக்குக் கூழு குடி, எட்டுக்கு முட்டி போடு
ஒன்பது கம்பளம் விரிச்சு படு, பத்துக்கு பழம் கொடு.
கட்டை வச்சேன் கால் நீட்டி, கல்லெடுத்து ஆடினேன்,
ஈரிரண்டைப் போடடி, இறுக்கி மாட்டைக் கட்டடி
பருத்திக் கட்டி வையடி, பட்டு கட்ட முடியாம
முக்கட்டி வாணியன் சொல்லாட, சொல்லுஞ் சொல்லும் சேர்ந்தாட
வாணியன் வந்து வழக்காட, வாணிச்சி வந்து வசைபாட
நாலை வைச்சு நாலெடு, நாராயணன் பேரச் சொல்லு
பேரச் சொல்லி வாழ்ந்து நில்லு, ஐவரளி பசுமஞ்சள்
அரைக்க அரைக்கப் பத்தாது, பத்தாத மஞ்சள் பசுமஞ்சள்
ஆக்குருத்தலம் குருத்தலம், அடுப்புத் தண்டலம் தண்டலம்
வேம்பு கட்டால் வெண்கலம், ஏழு புத்திர சகாயம்,
புத்திர சகாயம் வேணாண்டி, மாடு கட்டினா மகராஜி.
எட்டும் பொட்டும் போடட்டும், ஒன்பதுநரி சித்திரத்தை
பேரன் பிறந்தத சொல்லத்தான், பேரிடவாடி பெரியக்கா
பத்திர சித்திர கோலாட்டம், பங்குனி மாசம் ஆடடி
வெள்ளிக்கிழமை அம்மன் கொண்டாட்டம்.

என்னை மறந்து இதை முணுத்த போது, எங்கள் வீட்டில் வீட்டு வேலை செய்யும் (பத்துப் பாத்திரம் தேய்ப்பது போன்ற) மீனாம்மா "இது என்ன பட்டிகாட்டு பாட்டு போல?" என்று என்னை அவங்க கிண்டல் பண்ணிட்டு போனாங்க... ஹ்ம்ம்..


..

இன்று போல் ஒரு வாழும் நாள்

அதிக கவனத்துடன் செய்ய வேண்டிய ப்ரோஜெக்ட்ஸ் கொடுத்த மன அழுத்தத்தில் பாடல்கள் கேட்பதே மறந்து விட்டது. இருந்த ஒரு நாளையும் வலைப் பக்கங்கள் படிக்கும் ஆசையில் பாடலை மறந்தேன்.

இன்று மீண்டும் ஒரு நாள் எனக்காகவே முழுமையாய் வாழ... மீண்டும் பாடல்கள் கேட்டேன்.

அட்னன் சாமி மற்றும் என் அம்மாவின் குரல் போன்ற கே.எஸ். சித்ரா பாடல்களைக் கேட்டு கொண்டிருந்தேன்.

இந்த ரெண்டு பாட்டையும் கேட்டு அப்படியே தூங்கிட்டேன். ஏதோ, யாம் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டும் என்றே ஆசை. ஆனால் ஆபிஸ்ல இருந்தா உங்களுக்கு இவை உதவாது. ஏன்னா நீங்க ஏற்கனவே...
(நசரேயன் நீங்க அப்பிடியே சிரிச்சிட்டே தூங்கிடுங்க - சரியா)

அட்னன் சாமி-யை இங்கே பாருங்கள், கேளுங்கள்.

சித்ரா-வின் தாலாட்டு இங்கே டவுன்லோட் செய்து கேளுங்கள். பெருமழாக்காலம் என்ற மலையாள சினிமாவிலிருந்து. இந்தப் பாட்டையும் கேளுங்கள், பாருங்கள்.

கொசுவத்தி வேறு பற்றிக் கொள்ள, முழிப்பு வந்து விட்டது ;(

பழைய நினைப்புடா பேராண்டி-ன்னு மகிழ்ந்து அப்பிடியே, dvd-ல மெக்கநாஸ் கோல்ட் (Macanas Gold) பார்க்கப்போறேன். அப்பறம், ஹைமா(Heima), டியர் ஜசரி-ஏ லெட்டர் டு சன் அபௌட் ஹிஸ் பாதர் (Dear Zachary: A Letter to a Son About His Father) என்ற இரண்டு டாகுமெண்டரிப் படங்கள் பார்க்கப் போகிறேன். இப்படங்களை நான் எத்தனாவது முறை பார்கிறேன் என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த முறை, இன்று போல் ஒரு வாழும் நாள் வந்தால் அதைப் பற்றியும் பகிர்கிறேன்.

பாக்றது டாகுமெண்டரி, இதுல என்ன பெருமைன்னு கேக்காதீங்க. நீங்க பாக்கலன்னா முடிந்த போது இப்படங்களைப் பார்க்கவும் என்றே எச்சரிக்கிறேன்..