புனிறு தீர் பொழுது - 4 : https://vidhoosh.blogspot.com/2022/05/4.html
புனிறு தீர் பொழுது - 3:
https://vidhoosh.blogspot.com/2022/05/3.html
புனிறு தீர் பொழுது - 2:
https://vidhoosh.blogspot.com/2022/05/2.html
புனிறு தீர் பொழுது - 1:
https://vidhoosh.blogspot.com/2022/05/1.html
"என் குழந்தையை எனக்குப் பிடிக்கவில்லை. இப்படிச்
சொல்வதற்காக என்னை ஒரு மோசமான அம்மா என்று எல்லோரும் நினைத்தால் என்ன செய்வது?"
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்மணி. அவர்
பெயர் நவ்யா என்று வைத்துக் கொள்வோம். தான் தன் முதற் குழந்தையைப் பெற்றெடுத்தபோது,
பிரசவத்திற்குப் பிறகான எடையைக் குறைப்பது கடினமாக இருந்தது.
நவ்யா சொன்னது "கர்ப்பகாலத்தில் அது பற்றிய
புத்தகங்களைப் படித்தேன், பல பெண்களிடம் அவர்களின் அனுபவத்தைப் பற்றிப் பேசினேன், எப்படிச்
சிறப்பாகத் தயாராக இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆலோசனை கேட்டேன். ஆனால் இத்தனைக்கும்
பிறகு எல்லாமே மங்கலாகி என் வாழ்வின் மூன்று
வாரங்களை இழந்தது போல் உள்ளது. நான் கவனக்குறைவாக மாறிவிட்டது மட்டும் தான் நினைவிருக்கிறது.
என் குழந்தை என்னை விட அதிக கவனம் பெறுகிறதே என்று பொறாமை இருந்தது. என்னவோ என் வாழ்வே
முடிந்துவிட்டது போல், இப்போது அனைவரின் கவனமும் குழந்தை மேல் மாறியது. வார்த்தைகளால்
விவரிக்க முடியாத கோபம், சோகம் மற்றும் நம்பிக்கையின்மை போன்ற உணர்வுகளோடு போராடிக்
கொண்டிருக்கிறேன். நான் தாய்ப்பால் கூட கொடுக்க விரும்பவில்லை."
நவ்யாவுக்கு நாம் திரைப்படங்களில் பார்க்கும்படி
கொண்டாட்டமான கலகலப்பான கர்ப்பகாலமாக இருந்தது. அசௌகரியம், காலைச் சுகவீனம், கால் வீக்கம்,
முதுகு வலி போன்றவை ஏதும் இல்லை. அவரது குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் அவளை மகிழ்ச்சியில்
திளைக்கச் செய்திருந்தது.
அவர் தன் அம்மா முதற்கொண்டு ஊரில் உள்ள பெண் தோழிகளின்
உதவியை நாடினார். ஆனால் பேசிப் பேசிப் பார்த்த பின்னும், அவருக்கோ கிடைத்தது "உங்களுக்கு
ஓய்வு தேவை" என்று டாக்டர் சொன்ன வெறும் அறிவுரை. "அட்ஜஸ்ட் செய்து கொள்"
போன்ற "அம்மான்னா சும்மாவா" அறிவுரைகள் தான். அது மட்டும் இல்லை "குழந்தைக்குப்
பாதுகாப்பான மடி தாயுடையது தான்" என்று வேறு கூறப்பட்டது.
பேபி ப்ளூஸ்? நாங்கள் எல்லாரும் இதைக் கடந்துதான்
வாழ்ந்திருக்கிறோம், இதெல்லாம் புதுசா, ரொம்ப அலட்டிக் கொள்ளாதே. ஊரில் இல்லாத அதிசயமா?
என்றெல்லாம் ஏச்சுப்பேச்சுக்களைக் கேட்க நேரிடும் அன்புள்ள அம்மாக்களே, மகப்பேற்றுக்கு
பிறகான மனச்சோர்வு உங்கள் தவறு அல்ல.
வேலைக்குப் போகும் பெண்கள் தாயாவது போராட்டம் என்றால்,
வீட்டு வேலை மட்டும் செய்து கொண்டு குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்கள் தாயாவது இன்னும்
அதிக சிக்கலானது. குறைந்த பட்சம் வேலைக்கு போகும் பெண்களுக்கு குழந்தையை மற்றவர் பொறுப்பில்
குற்றவுணர்வு ஏதும் இல்லாமல் விட்டுப் போகும் சுதந்திரமாவது இருக்கும்.
வேலைக்குப் போகாத பெண்களுக்கு மனச்சோர்வு என்பது
ஒரு பொதுவான நிகழ்வாகும்.
மனச்சோர்வை பெரும்பாலும், மூளைக்கு அதிக வேலை தரும்
செயல்கள், கடினமான இலக்குகள், மற்றும் உலகெங்கிலும் ஊதியம் மற்றும் வேலை அல்லது தொழில்களுடன்
தொடர்புபடுத்துகிறோம்.
நம்மில் பெரும்பாலோர் மனநலம் பற்றி விவாதிக்கக் கூடத்
தயங்குகிறோம், ஏதோ மனத்தடை இருக்கிறது.
உங்கள் வீட்டில், உங்களைச் சுற்றியுள்ள பெண்களின்
உண்மையான கதைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சி
செய்யுங்கள். ஒருவர் தனக்கு திரும்பி கனவில்
கூட வர விரும்பாத இருண்ட நாட்களைக் கடந்து இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு
உண்மையான தைரியம் தேவை. எவ்வளவு அதிக வெளிச்சம் இருக்கிறதோ அவ்வளவு இருண்ட நிழல் விழுகிறது.
அதே போல அடர்ந்த இருளுக்குப் பிறகும் வெளிச்சம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள
வேண்டும்.
பிறருடைய அனுபவம் மற்றும் மருத்துவர் / மனநல நிபுணரின்
ஆலோசனைகள் மனச்சோர்வைப் புரிந்துகொள்ள உதவும்.
மனச்சோர்வுக்கு ஒருவர் சுதந்திரமான எண்ணம் கொண்டவர்,
வெற்றிகரமானவர், உடற்பயிற்சி, தியானம், யோகா, சமூகப் பழக்க வழக்கம், நட்பு வட்டம்,
ஆரோக்கியமான உணவுப் பழக்கம், நேர்மறை மனப்பான்மை,
ஆரோக்கியமான வாழ்க்கை முறை பின்பற்றும்
நபர் என்றெல்லாம் தெரியாது, இன்னின்னார்
மன அழுத்தத்திற்கு ஆளாக முடியாது என்பதெல்லாம் தெரியாது. மன அழுத்தம் என்ற பெயரில் இது சிறிய அளவில் ஊடுருவி,
பின்னர் பெரியதாக மாறக்கூடும், மேலும் இது எந்த வயதினரையும் எந்த நேரத்திலும் பாதிக்கலாம்.
குழந்தைப் பேற்றுக்குப் பிறகு "எல்லாரும் செய்வதுதானே..
இதிலென்ன அதிசயம் ?" என்று கேட்பவர்கள் கூட என்னவற்றையெல்லாம் கடந்து வந்திருக்கக்
கூடும்.
உடல் ரீதியாக ஈடுபட்டிருந்தாலும் நீங்கள் மனரீதியாக
கவனம் செலுத்த இயலவில்லை என்பதை நீங்கள் அறியும் போது, உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கிறது
என்பதை அறிந்து கொள்ளலாம். எப்போதும் சோம்பேறித்தனமாக
உணர்வது தான் முதல் அறிகுறி.
தூங்க விரும்பும்போது குழந்தை அல்லது வேலைகள் காரணமாக
தூங்க முடியாது.
பசியாக உணர்ந்தாலும், உணவை அனுபவித்துச் சாப்பிட
முடியாமல் சோர்வாக இருக்கும் அல்லது சாப்பிடுவதற்கு
பிடிக்காது. அல்லது அப்போதுதான் குழந்தை அழும் இல்லை, ஈரம் செய்து விடும்.
சமைக்க விரும்பாதபோது, குழந்தைகளுக்கு சமைத்தே
வேண்டும்.
ஓய்வெடுக்க விரும்பினால் அல்லது சிறிது நேரம் வீட்டை
விட்டு வெளியே போக விரும்பினால், குழந்தைகளை விட்டு போக முடியாது
நாள் முழுவதும் பிஸியாக இருக்கும் முகம் கழுவக்கூட
நேரமில்லாமல் இருக்கும். பாத்ரூமில் குளிக்கக் கூட சுதந்திரம் இல்லாமல் இருக்கும்,
பாத்ரூம் கதவைத் தாழ்பாள் இட்டுக் கொண்டால் குழந்தை வீறிட்டு அழும், அல்லது அதற்குள்
ஏதாவது விஷமம் செய்து விடும்.
நவ்யாவுக்கு என்னவாயிற்று?
நவ்யா மகப்பேற்றுக்கு பிறகான மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இது ஒரு கொடூரமான உணர்வுகளைத் தரும் அதீத மனநல நிலை. தனக்குப் பிறந்தக் குழந்தைக்கு
உணர்ச்சிபூர்வமாக கவனமளிப்பதில் சிரமம் இருக்கும். இது குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும்
எண்ணங்களுக்குக் கூட வழிவகுக்கும்.
இந்தியாவில் மகப்பேற்றுக்கு பிறகான மனநோயின் பரவல்
பற்றிய புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. இந்தியாவில் பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு
உள்ளவர்களுக்கு தன் மனநிலை பற்றிய மிகக் குறைவான விழிப்புணர்வு உள்ளது. ஒரு அன்பான
குடும்ப சூழ்நிலை ஒரு புதிய தாயை ஹார்மோன் சமநிலையின் விளைவுகளிலிருந்து பாதுகாக்கும்
என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மனநலத்தை அல்லது மனநோய்கள் பற்றிய களங்கம், சமூகப் பார்வை மற்றும் நாட்டில் தொழில்முறை
உளவியல் நிபுணர்களின் பற்றாக்குறை பல பெண்களை PPD போன்ற மனநோய்களைத் தனியாகச் சமாளிக்க
வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றது.
பிரசவத்திற்கு முந்தைய மனச்சோர்வு என்பது உலகளாவிய
பிரச்சனையாகும் - ஏழு பெண்களில் ஒருவருக்கு மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு
(PPD) ஏற்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இந்த எண்ணிக்கை ஐந்தில்
ஒருவருக்கு உள்ளது. மனநல மற்றும் உளவியல் சிகிச்சை நிபுணர்களின் பற்றாக்குறை, அவசரமாக
உதவிக்கு தகுந்த ஒருவரை அணுகுவதை சாத்தியமற்றதாக்குகிறது.
முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா
பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் ஜனவரி 2022ல் தூக்கில் தொங்கி மரணித்த நிலையில்,
PPD பரவலாக உள்ளது, ஆனால் எப்போதும் கண்டறியப்படுவதில்லை என்பது மீண்டும் கவனம் பெறுகிறது.
குழந்தையை ரத்தம் வருமளவு தாக்கியது, குழந்தையை ஒரு
வாளி தண்ணீரில் மூழ்கடித்து கொன்றது, தலையணையால் அழுத்திக் கொன்றது, போன்ற செய்திகளை
நாம் அவ்வப்போது தினசரிப் பத்திரிகைகளில் காண்கிறோம்.
அப்பெண்மணிகள் கைது செய்யப்பட்டு, தீராத அவப்பெயருடன்,
கண்ணீருடன் வாழ வேண்டியிருக்கிறது.
"எல்லோரும் என்னை ஒரு கொலையாளி என்கிறார்கள்."
27 வயது உமா சென்னையில் தன் குழந்தையை ஏரியில் வீசியதாக கைதாகி தண்டனை பெற்றவர்.
பெரும்பாலான பெண்கள் 3 முதல் 6 மாதங்களுக்குள் தகுந்த
சிகிச்சை பெறும் போது குணமடைவார்கள். 4 தாய்மார்களில் 1 பேர் தங்கள் குழந்தைக்கு ஒரு
வயதாகதாகும் போது கூட மனச்சோர்விலேயே உள்ளனர்.
கவனிக்கப்படாத போது, மனநோயின் தீவிரம் அதிகரிக்கலாம். அன்புள்ள அம்மாக்களே, மகப்பேற்றுக்கு
பிறகான மனச்சோர்வு உங்கள் தவறு அல்ல.
சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள முழுமையான உடல்நலப்
பரிசோதனைக்குச் செல்லுங்கள். மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் உணர்வுகளை நேர்மையாக அடையாளம் கண்டு அணுகுங்கள்.
புதியதாகத் தாயாகி இருப்பவரின் நடத்தையில் சிறிதளவு
மாற்றங்கள் ஏற்பட்டாலும் குடும்பங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாமதமாகவே என்றாலும்
சமீப காலமாக மருத்துவர்கள் கர்ப்பிணிப் பெண்களுடன் PPD பற்றிய ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளனர்,
அவர்கள் தேவைப்பட்டால் சரியான நேரத்தில் உதவி பெறலாம். இது அனைத்து மருத்துவர்களிடையேயும்
வழக்கமாகிவிட்டால், விழிப்புணர்வு அதிகமாகும். பெண்கள் தாங்களாகவே முன்வந்து விரைவில்
உதவியை அணுகுவதை உறுதிசெய்யலாம். உறவுச் சிக்கல்கள், உயிரிழப்புக்கள் போன்றவற்றைத்
தவிர்க்கலாம்.
ஒருவர் மன உளைச்சலில் இருப்பதாகத் தெரிய வந்தால்
அல்லது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்தால், தமிழ்நாடு அரசு சுகாதார உதவி எண்ணை
104 அல்லது சினேகா தற்கொலை உதவி எண்ணை 044-24640050 என்ற எண்ணில் அழைக்கவும்.
5/5
0 comments:
Post a Comment