புனிறு தீர் பொழுது - 4

புனிறு தீர் பொழுது - 3: https://vidhoosh.blogspot.com/2022/05/3.html

புனிறு தீர் பொழுது - 2: https://vidhoosh.blogspot.com/2022/05/2.html

புனிறு தீர் பொழுது - 1: https://vidhoosh.blogspot.com/2022/05/1.html

 

வேலைக்குப் போகும் தாய்மார்கள் PPDயை எப்படி சமாளிக்கிறார்கள்?

அன்று இரவு 2 மணி இருக்கும். என் அலுவலகத் தோழியிடம் (ஜானகி என்று வைத்துக் கொள்வோம்) இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவளுடைய கணவர் ஊரில் இல்லை. முதன்முதலாக டிப்ரஷன் அறிகுறிகளின் கோரப்பல் அவளுக்கு தெரியவந்திருக்கிறது. அது PPD என்று அவளுக்கும் தெரியாது. இன்னும் diagnose ஆக வில்லை. நள்ளிரவில் பதற்றம் மிகுந்து அழுகை பீறிட்டுக் கொண்டு வர, "I'm sorry it's late. But something is terribly wrong. I'm scared to be alone with the baby. I think it's panic attack. Please help" என்றாள். உடனே அவள் கணவருக்குத் தெரிவித்து விட்டு, அவளையும் அவள் கைக்குழந்தையையும் எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தேன். "I'm Ok" என்று சொல்லியபடி அசதியில் உறங்கிப் போனாள். ஆனால் அவள் ஓகே இல்லை என்பது எனக்குத் தெரியும்.

வெளி உலகத்திற்கு, அவளுக்கு உடல்நலக் குறைவு எதுவும் இல்லை. வேலைக்குப் போய் கொண்டிருந்தாள். தன் குழந்தையை நல்லவிதமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். வீட்டையும் நல்லவிதமாகவே நிர்வகித்தாள். ஆனால் இரவு நேரத்திலும் பணியிடத்திலும்  பாத்ரூமில் அழுது கொண்டிருப்பாள்.

PPD இல்லையா இருக்கிறதா என்பது தாண்டி, எண்ணற்ற பெண்களுக்கு, குழந்தைப் பேற்றுக்குப் பின்னால் மீண்டும் வேலைக்குச் செல்வது என்பதே மிகப்பெரிய சவால் தான்.  PPD, உடல் எடைகூடுதல் அல்லது சிசேரியன் வலிகள், தாய்ப்பால் ஊட்டுவதில் பிரச்சினைகள், போன்றவை இல்லாவிட்டாலும் கூட, முதல் இரண்டு வருடம் கைக்குழந்தை வளர்ப்பு என்பதே 24 மணிநேரத்துக்கும் உழைப்பைக் கேட்கும்.

இதையும் தாண்டி பொருளாதாரம் அல்லது குடும்ப சூழல் காரணமாகவோ, பணியிடத்து அழுத்தம் காரணமாகவோ, வேறெந்த காரணமோ, வேலைக்குப் போகிறாள் என்பதே சாதனைதான்.

பெண்கள் தன் உத்தியோகத்தை பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமில்லை, சுயசார்பு அடையவும் அலாதியான ஆத்ம திருப்தியும் அளிக்கிறது. குழந்தைப் பேறுக்கு பின்னும் நம் வாழ்க்கை முன்பு இருந்ததைப் போலவே இருக்கவும், நம் தினசரி வேலைகளையும் முன்பு போலவே கையாளவும் விரும்புகிறோம், எதிர்பார்க்கிறோம்.

பிரச்சனை என்னவென்றால், மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு மெதுவாக, நாம் உணரும் முன்னரே முழுமையாக ஆக்ரமித்து விடுகிறது. அதை உணரும் போதோ, அல்லது episodes எனப்படும் திடீர் திடீரென உண்டாகும் episodic attacksசை அனுபவிக்கும் போது, பயத்தாலும் பதட்டத்தாலும் அறிகுறிகளை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும்.

PPD என்பது தனிமையில் அழுவதோ பேபி ப்ளூஸ்-சோ மட்டுமல்ல. நம் வாழ்க்கையின் மிகப்பெரிய meeting / presentation போது ஏற்படும் panic attack போன்று, நாம் சற்றும்  எதிர்பார்க்காத போது, நிகழக்கூடும்.

PPDயால் ஒருவர் பாதிக்கப்பட்டால் என்னென்ன மாற்றங்கள் நிகழக்கூடும்.

மனநிலை மாற்றங்கள்: கோபம், பதட்டம், குற்ற உணர்வு, நம்பிக்கையின்மை, எதிலும் ஆர்வம் இல்லாமல் உணருவது, மகிழ்ச்சியை உணர முடியாமல் இருப்பது, அல்லது பீதி அடைதல் (பேய்/கருப்பு உருவங்கள், gory காட்சிகள் போன்றவை மீண்டும் மீண்டும் மனதில் தோன்றுவது), மனச்சோர்வு

நடவடிக்கை மாற்றங்கள்: அழுகை, அமைதியின்மை, தூக்கமின்மை, பசியின்மை, அதிக எரிச்சல் உணர்வு , குழந்தையுடன் பிணைப்பு ஏற்படுத்திக் கொள்வதில் சிரமம், வழக்கத்திற்கு மாறான உடற்சோர்வு அல்லது பசியின்மை

எடை: எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு

அறிவாற்றல்: கவனச் சிதறல், சுழற்சியாய் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வரும் தேவையற்ற, தவிர்க்க விரும்பியும் தவிர்க்கவே முடியாத எண்ணங்கள்

ஜானகி எப்போதும் சுறுசுறுப்பாய் வேலை செய்பவள். கணவரின் அலுவல் பயணங்கள் நிறைந்தது என்பதால், அவள் தனியாகவே பெரும்பாலும் தினசரி குடும்ப வேலைகளைத் திறமையாக நிர்வகிக்கிறாள். அவளே எல்லாவற்றையும் சமாளிப்பாள். தனது மற்ற பிரச்சினைகளைப் போலவே PPD-யையும் ஒரு கட்டம் வரை அவள் தானே சமாளித்துவிடலாம் என்று நினைத்தாள். பிரச்சினைகளை சரிசெய்வதற்கு நமக்கு பிரச்சினை ஏதோ இருக்கிறது என்று ஒப்புக்கொள்வது முதல் வழி, இரண்டாவது யாரிடமாவது உதவி கேட்பது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் கூட அதை நீங்கள் தனியாகக் கையாள வேண்டியதில்லை. உங்கள் அலுவலகத்தில் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது என்று நீங்கள் நினைத்தால், சொல்லத் தேவையில்லை. ஆனால் மறுத்தவரையோ அல்லது மனநல ஆலோசகரையோ பார்த்து பேசவேண்டியது அவசியம். ஜானகிக்கு PPD இருப்பது இதுவரை பணியிடத்தில் யாருக்கும் தெரியாது.

புத்திசாலித்தனமாகவும் சுதந்திரமாகவும் இருப்பது என்பது எப்போது, யாரிடம் உதவி கேட்க வேண்டும் என்பதை அறிவதுதான், இல்லையா?

பின்னோக்கிப் பார்த்தால், ஜானகி தன் அலுவலகத்தில் PPD பற்றி பேசாததும் சொல்லாமல் இருப்பதும் மிகவும் புத்திசாலித்தனமான நடவடிக்கை அல்ல, ஆனால் அவள் அப்படித்தான் செய்தாள். சொன்னால் அவள் தன் நற்பெயரையும் வேலையையும் கூட இழக்கக்கூடும் என்று நினைக்கிறாள். ஏன் ஜானகி அப்படி நினைக்கிறாள்?

இந்தியாவில் disabilities act என்பது பெயரளவில் தான் இருக்கிறது. சமீபத்தில் தான் அங்கங்கே ஒன்றிரண்டு நிறுவனங்கள் இதைக் குறித்து சிந்திக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். நாம் பேசுவது பெரும்பான்மை பெண்கள் வேலைக்குப் போகும் தனியார் நிறுவனங்களைப் பற்றி மட்டுமே. IT நிறுவனங்களில் WFH வசதி கூட கொரோனா காலகட்டத்துக்குப் பின்தான் பரவலாக ஆனது.

 

நிதர்சனத்தில், maternity leave என்பதே நிறைய பெண்களுக்கு இல்லை என்பதே உண்மை. ஏன்? Maternity leave என்பது விடுப்பில் செல்லும் பெண்ணுக்கு ஆறு மாத காலம் வரை முழுச் சம்பளம் அல்லது basic payயாவது தரவேண்டும், சட்டபூர்வமாக. ஆனால், நடைமுறையில் பெரும்பாலான நிறுவனங்கள் அவர்களை resign செய்யச் சொல்லி விட்டு, மீண்டும் வரச் சொல்கிறார்கள்.

ஆனால், PPDயை அல்லது உளவியல் நோய்கள் பொறுத்த வரை பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இயலாமை பற்றி அலுவலகத்துக்கு தெரியாவிட்டால், அலுவலகம் சட்டத்திற்குக் கட்டுப்படத் தேவையில்லை. சொன்னாலோ மதில் மேல் பூனை நிலைமைதான், எப்போது எந்தக் காரணம் சொல்லி வேலையை விட்டு அனுப்புவார்கள் என்று தெரியாது.

நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், பணியிடத்தில் ஜானகியால் முற்றிலும் பயனற்ற நாட்கள் இருந்தன. கூடுதல் வேலை செய்யும் நிலை இருந்தால், அவளால் எதுவும் செய்ய முடியாது, அழுவதைத் தவிர.

அவள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது (ஒவ்வொரு episode முடியும் போதும் அது நடக்கும்) அவள் நிறுவனத்திற்கு விலைமதிப்பற்ற சொத்து என்பதை நிரூபிப்பாள்.

PPDக்கிடையே அதிக வேலைகளை எடுத்துக்கொண்டு, அரைகுறையான வேலையைச் செய்வது அவளை dull light-டில் காட்டும். அவள் இன்னும் மோசமாக depressed ஆக உணருவாள். பின்னர்... கண்ணீர் காட்சிகள். இப்படித்தான் ஜானகியின் அந்த இரண்டு வருடங்கள் ஓடின. சரியான medications மற்றும் மனநல ஆலோசனைக்குப் பின் அவள் மீண்டு விட்டாள். அந்த இரு வருடங்கள் நரகமாக இருந்தாலும் - அவள் இன்னும் அதே நிறுவனத்தில் இருக்கிறாள், முன்பை விட நன்றாகவே இருக்கிறாள் இன்னும் உயர்ந்த பொறுப்பில்.

 

உங்கள் பணி ஒப்பந்தத்தின்படி, அது சம்பளப் பலன்களாக இருந்தாலும், வேறு எதுவாக இருந்தாலும் சரி, நிறுவனம் உங்களுக்கு என்ன வாக்குறுதியளித்தது என்பது குறித்து நீங்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியம். தவறான அல்லது போதுமான அறிவிப்பு இல்லாமல் பணிநீக்கம் செய்வது, அல்லது உங்களை வேலையை விட்டுச் செல்லச் சொல்வது என்று அந்த ஒப்பந்தத்தை மீறி நியாயம் வழங்கத் தவறினால், நீங்கள் நீதிமன்றத்திற்குப் போகலாம்.

 

நிறுவனத்துக்கு எதிராக நீங்கள் வழக்குத் தாக்கல் செய்தால், நீங்கள் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். முதலில், தீவிர ஆய்வுக்கு உங்களை நீங்களே ஆளாக்கிக் கொள்கிறீர்கள். உங்கள் தினசரி வேலை அட்டவணை (work schedule), நீங்கள் செய்த வேலை (work done), சக ஊழியர்களுடனான உங்கள் பழக்கம் (inter personal relationships at work) மற்றும் பலவற்றை நிறுவனம் ஆய்வு செய்யும். ஒரு சிறிய தவறு கூட உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம். கடந்த காலத்தில் உங்களுக்கு சிக்கல்கள் இருந்ததா என்று பார்க்க, நிறுவனம் உங்களின் முந்தைய வேலைவாய்ப்பு பதிவுகளை ஆராயலாம். கூடுதலாக, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை நுண்ணோக்கின் கீழ் வரலாம். மன அழுத்தத்திற்கான காரணம் வேலையா அல்லது தனிப்பட்ட வாழ்க்கையா என்பதை நிறுவனம் கண்டறிய முயற்சிக்கும். நீங்கள் 'வழக்குப் போடும்' பணியாளராகவும் பார்க்கப்படுவீர்கள், இது உங்கள் எதிர்கால வேலைவாய்ப்பை பாதிக்கும். பயமுறுத்துவதற்கு சொல்லவில்லை.. ஒரு HR ஊழியராக என் கடந்த கால அனுபவங்களில் இவை எல்லாம் நிகழ்வதைப் பார்த்திருக்கிறேன். மனம் வெதும்பி, அப்படித் துன்புறும் பணியாளருக்கு, அவர் பக்கம் நியாயம் இருந்தால் வேறு நிறுவனங்களில் பணியமர்த்த recommend செய்வதைத் தவிர வேறேதும் செய்ய முடியவில்லை என்பதே வெட்கம் கெட்ட உண்மை.

 

4/5

0 comments:

Post a Comment