எப்பிடி இருந்த நான்...

இதுவரை ஆஸ்துமா/ஜலதோஷ பிரச்சினை ஒன்றையே சமாளித்து வந்து ஜம்ம்னு நடமாடிக் கொண்டிருந்து, அவுட் பேஷன்ட் ஆகவே இருந்து விட்டேன். திடீர்ன்னு மருத்துவமனையில் சேரும் அளவுக்கு ஜுரம் வரும் என்று எதிர்பார்க்கலை.

நவம்பர் 22 2011 அன்று குளிர் தாங்காமல் தூக்கித் தூக்கிப் போட்டது. மதியம் அலுவலகத்தில் சொல்லிவிட்டு கால்டாக்சியில் மடிப்பாக்கம் திரும்பி, footprints ஸ்கூலில் இருந்த தர்ஷிணியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து தூங்கிப் போனோம், மறுநாள் ஒன்பது மணிவரை. ரஜாயை போர்த்திக் கொண்டிருந்ததால், உங்கள் அண்ணன் தலைவர், எங்கள் திடீர் சோம்பேறித்தனத்தால் ஏற்கனவே பழக்கப்பட்டிருந்ததால், எந்த பாதிப்பும் கொள்ளாமல் காலையில் கிளம்பியும் போயாச்சு.

ஆக, இப்படி இருந்தது. ரஜாய்குள் நிச்சயம் 101-102 எங்கள் ரெண்டு பேருக்கும் ஜுரம் இருந்திருக்கும். பதினோரு மணி வாக்கில் பசி தாங்க முடியாமல் கிளம்பி அம்மா வீடு. நல்லவேளை, கோவில் குளம் என்று எங்கும் போகலை. எலுமிச்சை ரசம் என்பதால் அவசரத்துக்கு சீரக-மிளகு சாதம் கொடுத்தார். தேவாமிர்தமா இருந்துது. சாப்ட்டுட்டு, தர்ஷிணி தூங்கிட்டாள். அவளை அப்பாவிடம் விட்டுட்டு, பக்கத்துலேயே இருந்த ஆஸ்பத்திரிக்கு முதலில் நான் வலது காலை எடுத்து வச்சேன். அப்போவும் பெரிய நம்பிக்கைதான் OP ஆகத்தான் இருக்கும்னு.

ஜுரம் 102. யாரங்கே, இந்த சப்ஜெக்டுக்கு ரத்த பரிசோதனை செய்யுங்கள்.. அப்டீன்னு ஆர்டர் போட்டாங்க OP டாக்டர். எங்களிடம் "ஜெனரல் வார்டில் தான் இடம் இருக்கு அட்மிட் ஆயிடுங்க. நாலு மணிக்கு ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் வந்துரும்" அப்டீன்னாங்க.

வந்துச்சே. மலேரியா.

வீட்ல/ஸ்கூல்ல கருப்பு ஹிட், அட்வான்ஸ்ட் குட் நைட், சாம்பிராணி/வேப்பிலை மூட்டம் எல்லாம் தான் உண்டு. ஸ்கூட்டரில் வரும்போது நைசா உக்காந்து கைல கால்ல கடிச்சுருப்பாளோ, மகா பாவி.. இருக்கும் இருக்கும்.. அப்டீன்னு நினைக்கறதுக்குள்ள சலைனுக்கு பட்டர்பிளை மாட்டி ஆவ்ன்னு கத்தவச்சாங்க.

அதோட சரின்னு பார்த்தேன். சாயந்திரம் கண்ணத் தொறந்தா ஜெனரல் வார்டுல ஸ்கரீன கொஞ்சம் நகத்தி போட்டு இன்னொரு பெட் போட்டிருக்கு. யாருடான்னு பார்த்தா நம்ம தர்ஷிணி!!

அம்மா, ரெண்டு ஊசி போட்டாம்மா என்று உதடு பிதுக்கி அழுதது ஒரு கதையாவே எழுதலாம்.

எனக்கும் அப்பிடியே கண்ணு கலங்கி ஒரே செண்டி. அழாத அழாதன்னு கட்டி புடிச்சேன். அதோட டென்குவும் வந்தார் நம்மிடம்... அவ்ளோ இம்முனிடி இங்க.

சின்ன மேடம் மறுநாள் மத்தியானம் "ஆத்துக்கு வந்து வீடு கட்டித் தருவியா"ன்னு கேட்டுட்டு போயிட்டாள்.

தர்ஷிணி டிஸ்சார்ஜுக்கு அப்புறம் எனக்கு ரூம் நம்பர் நாலு. எனக்குதான் வித விதமா குளிரு, டெம்பரேச்சர் என்று அஞ்சு நாள். அப்பாடான்னு வீட்டுக்கு போனேன்.

ரெண்டு நாள். ட்ரை குளியல் என்று ஒரே கொடுமை, துர்நாற்றம். யாருக்கும் தெரியாம வெந்நீர்ல தான குளிச்சேன். திரும்பவும் குளிர், நடுக்கம், ஒரே ஜுரம். கண்ணை திறந்தா டாக்டர் புன்னகைக்கிறார்.

இப்போது உடலெல்லாம் சிவப்பு சிவப்பாய் தடித்துப் போயிருந்தது. நாக்கு வறட்சி. உணவே செல்லலை. சாப்பாடு என்பதை பார்த்தாலே அப்படி ஒரு வெறுப்பு. மலேரியா, டெங்கு, இப்போ பாரா டைப்பாய்டாம்.

அம்மா வேறு ரகசியமா நிலவேம்பு கஷாயம், சர்பத் கஷாயம்-ன்னு வித விதமா வாமிட் பண்ண வச்சுக்கிட்டு இருந்தாங்க. கண்ணில் தண்ணீர் வர அழுவது அவமானம்னு நினைக்கிற கவரிமான் போல சிலபல கிலோக்களைச் சுமந்து கர்வமாய் காலை முதல் இரவு வரை சுற்றிக் கொண்டிருந்து, எப்படி இருந்த என்னை இப்படி ஆக்கிட்டீங்க...ன்னு நினைச்சு நினைச்சு வெம்பி கொண்டிருந்தேன்.

கொசுவை பார்க்கும் போதெல்லாம் தம்பி சந்தோஷு மாதிரி திரும்பத் திரும்ப எலக்ட்ரானிக் பேட்-டில் சுட்டு சுட்டு கொல்லணும்னு கோவம் கோவமாய் வந்துது. ஆனா டெங்கு/மலேரியா மகாலச்சுமிக்களை எப்படி அவ-தான்னு கண்டுபிடிக்கிறது.. இதெல்லாம் ஒரு பொழப்பான்னு விட்டுட்டேன்.

இப்படியாக இரண்டாம் முறை, எட்டு நாட்கள். இந்த தரம் மிச்ச சொச்ச மலேரியா மற்றும் பாரா டைபாயிட்..

டாக்டர் "அதெப்படி சீசனுக்கு எல்லா ஜுரத்துக்கும் ஒரே சாம்பிள் ஆகிட்டீங்க"ன்னார்...

டாக்டர், உங்களுக்கு சிப்பு சிப்பா வருது, எனக்கு BP ஏறுது..பில்லுல எதாச்சு டிஸ்கவுண்டு?ன்னு கேட்டேன்...

நீங்க ரெகுலர் "கஷ்ட"மராகிட்டீங்க அதான் விசிட்டுக்கு ஐந்நூறுக்கு பதிலா முன்னூறு மட்டுமே.. ன்னு ஆட்டோகாரன் லெவலுக்கு எறங்கி.. ஹி..ஹி.. சும்மா இல்ல நிஜமாதான்.. என்று விட்டு போனார்.

இது நாள் வரை நிலைக்கண்ணாடி என்ற ஒன்றையே கண்ணில் பார்க்காமல் இருந்துட்டேன். பார்த்தால் பயந்த கோளாறு வேறு வந்திருக்கலாம். ஏன்னா கேக்கறீங்க.. அதெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமே.. இருந்தாலும் இப்போ கூடுதலா, அம்மா கைங்கரியம்.. அகலபல் சீப்பால ஏதோ வலிக்காம வாரின தலை, இறுக்காம.. லேசா தழைய பின்னி விட்ட சிண்டு முடி, VLCC கூட ஆச்சிரியப்படும் அளவுக்கு ஒன்லி எய்டீன் டேஸ்ல குறைஞ்ச உடல் பருமன்...என்று எதுவுமே எனக்கு தெரியாது.

கண் மட்டும் பெரிசா இருந்துது என்றார் அம்மா. முகமெல்லாம் ஒட்டிப் போய் (எப்பிடி??) உடல் தோல் மட்டும் அங்கங்கே உதிர்ந்து கொண்டு இருந்தது. அம்மா தேங்காய் எண்ணெய் மாயிஸ்சரைசர் என்று வரிசையாய் அடுக்கினாங்க.. குளிக்காத அழுக்குக்கு ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம், ரத்தம் வந்தால் பாத்துக்கலாம் என்று சண்ட போட்டேன். டாக்டர் ஒரே ஒரு தரம் ஆசுபதிரியிலேயே குளிக்கலாம் என்று அனுமதித்தார்.

ஆச்சு... திரும்பே வீட்டுக்கு வந்தாச்சு. அஞ்சு நாள் ஓடி இருக்கும். ஒரு ரெவியூ, ரெண்டு ரெவியூ, ஆறாவது நாள் கடைசி ரெவியூவின் போது...

காலையிலேயே, Footprints ஸ்கூலில் ஒரு ஆயாம்மா வேலைக்கே வராமல் கையெழுத்து போட்டு சம்பளத்துக்கு தகறாரு பண்ணிக் கொண்டிருந்தாங்கன்னு எனக்கு காது கிழிய கிழிய அட்மின் வந்து புலம்பல். அந்த ஆயாவோடு பேசித் தொலைத்தேன். தன் இடத்து ஆட்களை கூட்டி வந்து கலாட்டா பண்ணுவேன் என்றெல்லாம் பேசினார். குழந்தைகள் இருக்கும் இடம். எனக்கு சுத்தமாய் பொறுமை கொஞ்சம் போய் விட்டது. அட்மின்னையும், மற்ற எல்லாரையும் அமைதியா போகச் சொல்லிட்டேன். FIR கொடுத்துடலாமான்னு தெரிஞ்ச ஒருத்தர் கிட்டே போன் பண்ணி பேசிட்டேன். பேரையும் வயசையும் மட்டும் சொல்லுங்கன்னு சொல்லிட்டு வச்சுட்டாங்க. அடுத்த அரைமணிக்கெல்லாம் போன் பண்ணி அந்த ஆயாம்மா நானே வேலைய விட்டுடறேன்னு சொல்லிட்டாங்க. பிரச்சினை தீர்ந்தது என்றுதான் நம்பினேன்.

இதே டென்ஷன்ல காலை தூங்க வேண்டியது இரண்டு மணிநேரம்.. ரெண்டு மணி வரை தூங்க முடியலை. ஒரு மணிக்கு அம்மா அருமையான சாத்துக்குடி ஜூஸ்-சும் நல்ல திட்டும் கொடுத்தாங்க.

முதுகு வலி தாங்கலை. படுத்துக் கொண்டே நீர்குமிழி திரைப்படம் யூ-ட்யூப்ல பார்த்தேன். நாகேஷ் புண்ணியத்தில் அழுதுகொண்டே தூங்கிப் போனேன். (இதுக்கு விமர்சனம் ஆற அமர எழுதணும்.. என்னா படம்ங்க.. நாகேஷ்.. செம செம.. இது தனியாதத்தான் எழுதணும்).

மதியம் ஒரு நாலு மணி இருக்கும். அம்மா தூங்கி கொண்டிருந்தாங்க. அப்பாவும் தம்பி ரூமில் படுத்திருந்தார். சரி, இது கடைசி ரெவ்யூ தானே, போயிட்டு வந்திடலாம், எதுக்கு சும்மா தொந்தரவு பண்ணனும்னு, ஜோரா கிளம்பினேன். மிச்சம் இருந்த கொழுப்பு... வேலை செய்தது. தனியாவே படி இறங்கி போயாச்சு.. தெரு முனை வரை, மனபலம் செலுத்தி விட்டது, கண் தெரியலை, கால் ரெண்டும் பின்னிக் கொண்டது, தெரு முனையில் இருக்கும் வாஸ்து பிள்ளையார் குட்டிக் கோவில் கான்க்ரீடில் டொங்குன்னு தலை முட்டற உணர்வு... மறுபடி எல்லாம் போச்சு என்று உணர ஆரம்பிச்சேன்.. யாரோ வாயில் தண்ணி ஊத்தினாங்க.. எப்பிடியோ ஆட்டோவில் ஏத்திட்டாங்க...

திரும்ப அதே ஆசுபத்திரி.. ஆனா இப்போ ICU. ரெண்டு நர்சுகள், ஒரு லேடி டாக்டர், "வித்யா என்னை தெரியுதா தெரியுதா" ன்னு கன்னத்தில் தட்டினாங்க. என் தம்பியின் பிரவுன் ஷர்ட் தெரிந்தது. கதவு தெரிந்தது. ஒரு தாத்தா, ஒரு பெண் என்று பார்த்துக்கொண்டு இருக்கும் போதே கண்ணுக்கு முன் கருப்பு கருப்பாய் திட்டுக்கள் படர்ந்தது. அவ்ளோதான், நான் செத்துப் போய் விட்டேன் என்று நம்ப ஆரம்பித்து விட்டிருந்தேன். அன்றிலிருந்து யார் பேசுவதும் என் காதில் விழவில்லை, ஆனால் என் பெண்ணை யார் பார்த்துக்கணும், அவளுக்கு இருக்கும் டெபாசிட்கள், அவளுக்கு என்னென்ன நகைகள் வாங்கியது வங்கியில் இருக்கு என்றெல்லாம் எழுதித் தர ஆரம்பித்திருந்தேன் என்றார்கள். எனக்கு நினைவில்லை.

டாக்டர்களும் அம்மாவும் ஒன்றுதான் என்பதையும், நானெல்லாம் எவ்வளவு அதிர்ஷ்டம் பண்ணியவள் என்பதையும் அன்றுதான் உணர்ந்தேன். மருத்துவர்களின் மருத்துவத்துக்கும் அதை தகுந்த காலத்தில் பெறும் வாய்ப்பைக் கொடுத்த கடவுளுக்கும் நன்றி. ஒரே ஒரு செகண்ட்தான், நான் இன்று நல்லவிதமாய் பிழைச்சுட்டேன். :-)

எங்கக்கா போன் பண்ணி வெறும் மலேரியாதானே, ஏன் GH-க்கு போகலை- ஒரே மாத்திரையில் ஒரே நாளில் குணமாயிருப்பே-ன்னு வழக்கமான டெசிபலில்தான் திட்னாங்க. எனக்குத்தான் காது டமால் டமால்ன்னு அதிர்ந்துது.

வீட்லேர்ந்து ரொம்ப தூரம்டி, அம்மாவால வர முடியாதே...ன்னேன்.

பேஷண்டுக்கு போன் பண்ணாதீங்க, முடிஞ்சா "get well soon"ன்னு sms அனுப்பலாம், கொஞ்சம் வசதி இருந்தா Electrol வாங்கித் தரலாம், இன்னும் கொஞ்சம் வசதி இருக்கிறவங்க சாத்துக்குடி பழம். நம்ம குசும்பன் மாதிரி சோழ மன்னர்கள், நான் தூக்கம் வராமல் விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு படுத்துக் கிடக்கும் நேரத்தில் படிக்க புஸ்தகம் வாங்க இருபதாயிரம் நாப்பதாயிரம் என அவர்களிடம் உள்ள பாக்கெட் சில்லறைகளில் இருந்து சிலபலத் துணுக்குகளை விட்டெறியலாம்.

=========================================================
அப்புறம் உபயோகமா சில குறிப்புக்கள்:
=========================================================

ஜுரமாக இருக்கேன்னு மோர் / ஜூஸ் குடிப்பதை தவிர்க்காதீங்க. ஓரளவுக்கு ஜுரம் கட்டுக்குள் வந்ததும் ரூம் டெம்பரேச்சரில் உள்ள நிறையா தண்ணீர் கலந்த மோர்/ஜூஸ் மற்றும் எலக்ட்றால் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

நிலவேம்பு (பொடி) கஷாயம்: இரண்டு சிட்டிகைப் பொடியை ஒரு டம்பளர் தண்ணீரில் கொதிக்க விட்டு, அரை டம்ப்ளரை குறுக்கி, ஒரே மடக்கில் குடித்து விடலாம். பின் தேனோ, கருப்பட்டி வெல்லமோ சாப்பிடலாம். உண்மையிலேயே பயனுள்ளது.

இந்நேரத்தில் சுடுதண்ணீர் குடிக்க ரொம்ப வேண்டி இருக்கும். அதில் சிறிது அதிமதுரம், சித்தரத்தை மற்றும் ஜீரகம் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் வாயில் உள்ள கசப்பு சுவை மறையும், சிறுநீர் நன்றாக பிரியும்.

மலம் இறுகி விட்டால், இஸப்கோல்/ஃபைப்ரில் என்ற பொடியை வெது வெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் அளவு மட்டும் போட்டு ஒரு செகண்டில் குடித்து விடுங்கள். அதன் பிறகு இரண்டு டம்பளர் நீரருந்துங்கள்.

மாதுளம்பழம் நிறையா சாப்பிடலாம். நான் சாப்பிட்டேன். அதில் உள்ள மஞ்சள் பகுதியை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் நீங்குகிறது. சொந்த அனுபவம். வாய் வழி உணவு / தண்ணீர் உட்கொள்ளல் அதிகம் இல்லாமல் மாத்திரை மருந்து என்று சாப்பிடும் போது வாய்/வயிற்றுப்புண் ஏற்படும். ஜெலூசில் போன்றவற்றுக்கு பதில் மாதுளை அருமையானது.

பப்பாளி பழம் ஒரு கப் அளவுக்கு சர்க்கரை போடாமல் சாப்பிடலாம்.

பிஸ்கட், பன், சப்பாத்தி போன்றவை ஜெரிக்க நீண்ட நேரம் ஆகிறது, ஒருநாள் நான் சாப்பிட்டு விட்டு பட்ட கஷ்டம் சொல்லித் தீராது.

13 comments:

வித்யா said...

அம்ம்மே. இத்தனையும் தாண்டி பொழச்சு வந்திருக்கீங்க. எமனாண்ட எதாவது கவுஜ எடுத்து விட்டீங்களா?

மோகன் குமார் said...

கஷ்டத்தையும் காமெடியா எழுதிருக்கீங்க

ஆமா கடைசியா மயக்கம் போட்டு ஐ. சி. யூ வரை போனது எதனாலே? அதுக்கான காரணம் சரியா சொல்லலையே?

நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பார். ஆனா கை விட மாட்டார். Take care .

ராமலக்ஷ்மி said...

திகிலான அனுபவங்கள். பயனுள்ள குறிப்புகளுக்கு நன்றி. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

Nundhaa said...

Welcome back Vidhya ... Get Well soon completely ... the way you have shared your experience is interesting to read

விஜி said...

ஓ இம்புட்டு நடந்து போயிடுச்சா :(

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

take rest

முத்துலெட்சுமி/muthuletchumi said...

takecare pa..

Rathnavel said...

நல்ல பயனுள்ள பதிவு.
நன்றி.

ஹுஸைனம்மா said...

என்னதிது, பதிவு போட்டு 2 நாளாகியும் ஒருத்தர்கூட நலம் விசாரிச்சு வரலை இன்னும்? எல்லாரும் அம்புட்டு பிஸியா?? இல்லை....

என்னைப்போல மெயில்ல விசாரிச்சுட்டாங்களா? :-)))))

Vidhoosh said...

வித்யா, மோகன், ராமலக்ஷ்மி, நந்தா, விஜி, ரமேஷ், முத்து-அக்கா, ரத்னவேல் ஸார், ஹுஸைனம்மா எல்லாருக்கும் நன்றி.

ஹுஸைனம்மா : எனக்குத்தான் இங்கே கமென்ட் ரிலீஸ் பண்ண கவனமில்லாமல் ஆகிவிட்டது..

சாரி.

Vetrimagal said...

உங்கள் கஷ்டத்தை இவ்வளவு லேசா எழுதி தள்ளிட்டீங்க! ஹேட்ஸ் ஆப்!

மிகவும் பலகீனமாக இருந்தாலும் கிருமிகள் தாக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இல்லையா? டேக் கேர்!

வணக்கம்.

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

Vasudevan Tirumurti said...

கொசு வலை இஸ் தெ பெஸ்ட்.
கர்மா எல்லாத்தையும் ஒரேயடியா தொலச்சுட்டா மாதிரி இருக்கு!

Post a Comment