பிறவிப்பயனுக்கு வேணும் கல்கோனா

என் நண்பன் கிஷோரிடம் லிஸ்ட் கொடுத்து "இதெல்லாம் நம்மூரு டேஸ்டில் இங்க கிடைக்கலை. அங்கேருந்து கொஞ்சம் வாங்கிக் கொடேன்" என்றேன்.

கூரியரில் வந்தது. எம் பொண்ணு அரைகிலோ சூட மிட்டாயை ஒரே நாளில் கபளீகரம் பண்ணி விடுவாளோன்னு பயத்துல "காக்கா கொண்டு போயிடுத்து' அப்டீன்னு சொல்லி வச்சிருந்தேன். கிஷோரோடு தொலைபேசும் போது, "அம்மா எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டா" என்று சொல்லி மானத்தை வாங்கினாள் :-( என்ன நினைச்சானோ "குழந்தை பொய் சொல்லாது"ன்னான். ஹுக்கும்...

பிறவிப் பயன் காணவேண்டுமா... சாப்ட்டு பாருங்க? அதுதான் பேரு நிலை.... அருமையான சுவைக்கு நான் காரண்டி...

================================================================

கல்கோனா அல்லது கமர்கட்டு: முன்னல்லாம் கொஞ்சம் தீஞ்சு போய் கருப்பா இருக்கும், இப்போ பதமா பண்றாங்க போலருக்கு. கோல்கேட் பேஸ்டுக்கு இந்தப் பதமே ஜாஸ்தின்னு, சட்டுன்னு கரைஞ்சு போயிடுது. ஆலங்குச்சி வேறு கிடைப்பதில்லையாமே?

வெல்லத்தை நன்றாக முதிர்பாகு ஆகும் வரை காய்ச்சி அதில் தேங்காய் துருவலை போட்டு நன்றாக சுருண்டு கையால் எடுத்து உருட்டும் பதம் வந்ததும் கீழே இறக்கி வைத்து சிறிது கையில் நெய் தடவிக் கொண்டு உருண்டைகளாக பிடிக்கவும். பொட்டுக் கடலை அல்லது நிலக்கடலை பொடித்துக் கொண்டும் பண்ணலாம்.

எலந்த வடை: ஆஹா... என்னே யாம் செய்த தவம்? தர்ஷிணி வயிற்றில் இருந்த போது, பாஸ்கர் கிட்டே எலந்த வடைதான் வேணும்னு ஒரு நாள் அடம் பண்ணி, தேடி புடிச்சு எங்கிருந்தோ வாங்கி வந்தார். ஆனால் அதில் எலந்தகொட்டை எல்லாமும் சேர்ந்து அரைபட்டு நன்றாகவே இல்லை. இருந்தாலும் விடாம சாப்டோமில்ல..!!

தேன் மிட்டாய்: சக்கரைபாகில் ஊறிய பொறித்த மைதாமாவு உருண்டைகள்.. சுவையை சும்மா வார்த்தைல சொல்லிட முடியாது.




ஒரு ரூபா மிட்டாய்/கோல்ட் காயின் மிட்டாய்/சூட மிட்டாய்: நடுவில் ஒரு ஓட்டை போட்டு நூல் கட்டி இருக்கும். கொஞ்சம் மிட்டாய் நிறையா விளையாட்டு ... :-))






சீரக மிட்டாய் / பல்லி மிட்டாய் / எலி புழுக்கை மிட்டாய் :)) இதை பற்றியெல்லாம் சொல்லணுமாக்கும். எங்க அம்மா இதையும் தீபாவளி மிக்சரில் போடுவாங்க.






ஆரஞ்சு மிட்டாய் / புளிப்பு மிட்டாய்:
இப்போதும் கிடைக்கிறது நிறைய பெட்டிக் கடைகளில்.


ஜவ்வு மிட்டாய் / வாச்சு மிட்டாய்:
கன்னத்துக் கொசுறும், நெக்லசு, வாட்ச், தேள், பல்லி என்று பலவடிவம் எடுக்கும். எதனால் செய்தது என்று நினைவில்லை.  ஆனால் மூங்கில் கழியில் சுற்றி எடுத்து வருவார்.. மூங்கில் கழியின் தலையில் ஒரு பொம்மை கைதட்டிக் கொண்டே வரும்...


thanks: google images
தேங்காய் மிட்டாய் / பர்பி:தேங்காய்த் துருவலும் சர்கரைப் பாகும்.

எள்ளு மிட்டாய் / கருப்பட்டி மிட்டாய் அல்லது எள்ளுருண்டை: கருப்பட்டி வெல்லப் பாகும் கருப்பு எள்ளும்.

கடலை மிட்டாய்: சொல்லவா வேணும்... வெல்லப் பாகும் வறுத்த கடலையும்.







ஸ்வீட் சிகரெட்: வெள்ளையாய் முனையில் சிகப்பாய் இருக்கும். இதுவும் சக்கரை மிட்டாயாகவே இருந்திருக்க வேண்டும். இப்போது அந்த டேஸ்ட் கூட நினைவுக்கு வரவில்லை. சிகப்பு கலரை உதட்டில் லிப்ஸ்டிக் போல அப்பிக்கொண்டு.... அட அடா.. what a life!

குட்டுருண்டை: புளியாம்பழம் ... அதுவும் அடுத்த வீட்டில் திருடியதாகவே இருக்க வேண்டும். :-)) புளியை கொட்டை இல்லாமல் நார் இல்லாமல், உருட்டிக் கொண்டு, வெல்லம், உப்பு, மிளகாய்ப் பொடி, கொஞ்சம் கரம் மசாலா பொடி போட்டு நசுக்கி உருட்டி, தென்னம் ஈர்க்கில் சொருகி "லாலி பாப்" மாதிரி சாப்டா.. தானாவே ஒரு கண்ணடித்துக் கொண்டு  'டக்' என்று நாக்கு சொடுக்கு போடும்.

இப்டி கூட பிசைஞ்சு 
விளையாடிக்கலாம். :))
பஞ்சு மிட்டாய்: இதெல்லாம் வீட்டில் செய்ய முடியாது. காத்திருந்துதான் திருவிழாவில் சாப்பிடுவோம். இப்போ எளிதில் கிடைக்கிறது. அப்படியே சாப்டா கன்னத்தில் பிசு பிசு... கை பிசு பிசு என்றாக வேண்டுமானா எப்போதும் பிசைந்து உருட்டி ... அதெல்லாம் செய்ஞ்சு பாத்தாத்தான் ருசி :))


thanks: google images
அவிச்ச கிழங்கு: ஆமாங்க ஆமா.. இது மரவள்ளிக் கிழங்கேதான். லேசா உப்புபோட்டு வேகவிட்டு, தோலோடு நறுக்கி தருவாங்க.








அப்புறம் ஃபடாஃபட் என்றொரு மிட்டாயும் கிடைக்கும்... சுவை கூட மறந்து விட்டது. :(

ஜுஜூபி

மிஸ்டர் பாப்

நியூட்ரின் சாக்கலேட்

சோன் பப்டி

குட்டிப் பானையில் வரும் குல்பி ஐஸ்

கோலா ஐஸ்

டிக்டாக் ஐஸ்

கொடுக்காபுளி

கரும்பு ஜூஸ்

இன்னும் என்னென்ன இருக்கு... நினைவில் வருவதை பகிருங்கள். போட்டோக்கள் கிடைக்க கிடைக்க இங்கே update செய்வேன். உங்களிடம் இருந்தாலும் அனுப்புங்களேன் ப்ளீஸ் :-)

அந்த த்ரீ டி ஸ்கேல், சென்ட்டு ரப்பர், டபிள் சைடு மாக்னெட் பாக்ஸ் எல்லாம் நினைவிருக்கா? :-))

37 comments:

எல் கே said...

malaum niniavugal

Anonymous said...

சூப்பர் இனிப்பு பதிவு. சக்கரை வள்ளிக்கிழங்கு ஆஸி, நியூஸில கூட கிடைக்குது. நல்லா ருசியாவும் இருக்கு

சங்கர் said...

எங்க ஊர்ல, ஆரஞ்சு மிட்டாயும் புளிப்பு மிட்டாயும் வேறு வேறு, புளிப்பு மிட்டாய், என்பது இலந்தை பழ பேஸ்டு, சின்ன கவரில் வரும்

சங்கர் said...

//குட்டுருண்டை//

இதை நாங்க நொக்கட்டாம் புளின்னு சொல்லுவோம், இடிச்சி தின்னுட்டு நாலு நாள் நாக்கில் புண்ணோடு சுத்துவோம் :)

சங்கர் said...

அப்பளப்பூ விட்டுடீங்களே

சங்கர் said...

அச்சு முறுக்கு

Vidhoosh said...

ஆங்.. கரெக்ட் சங்கர்.. அப்புறம் பூ மாதிரி ஷேப்ல அரை திதிப்பாய் வடாம் மாதிரி வரும், பேரு என்னன்னு மறந்து போச்சு.. அச்சுல வச்சு எண்ணையில் பொரிக்கும் நொறுக்ஸ் .. நல்ல டேஸ்ட் ... slurp. :)

Vidhoosh said...

இலந்தை பழ பேஸ்டு "இலந்தை வடை" இல்லையோ?

சங்கர் said...

தித்திப்பாய் இருக்கும் முறுக்கு தான் அச்சு முறுக்கு,

எங்க ஊர்ல இலந்த வடைனு சொல்ல மாட்டங்க, மைக்கேல் மதன காமராஜன்ல, காமேஸ்வரன் மளிகை வாங்க போகும்போது கூட போறவரு கேப்பாரு “புளிப்பு மிட்டாய்”

இராகவன் நைஜிரியா said...

ஹும்... அது அந்த காலம்..

குச்சி ஐஸ், பால் ஐஸ், சேமியா ஐஸ்... இதெல்லாம் மறந்துட்டாப்பல இருக்கு..

மாதேவி said...

அருமையான இனிப்புகள்.

Vidhya Chandrasekaran said...

பல்ப மிட்டாய் - ஸ்லேட் பல்பம் மாதிரி நீட்டு நீட்டாய் இருக்கும்.

போவண்ட்டோ, கோல்ட் ஸ்பாட்.

ஹனி கேக் என பேக்கரிகளில் விற்பார்கள். கேக்கின் அடிபாகத்தில் தேன் மாதிரி சிரப் பேஸோடு ரொம்ப நல்லாருக்கும். இப்ப அது எந்த பேக்கரிலயும் கிடைக்க மாட்டேங்கிறது.

துளசி கோபால் said...

என்னப்பா...... இது? இவ்ளோ வெரைய்ட்டீ இருக்கா?

எங்க காலத்துலே ரொம்பக் கொஞ்சம்:(

ஜவ்வு மிட்டாய் ஏக்கம் இன்னும் இருக்கு. அதுலே மூக்குச்சீந்துன கையை துடைச்சுருப்பான்னு சொல்லி என்னை வாங்கவிடாம குடும்பம் சதி பண்ணிருச்சு. ஒரு வாட்ச் வாங்கிக் கையிலே கட்டிக்கணுமுன்னு இப்பக்கூட ஆசை இருக்கு.

கடலைமிட்டாய் எக்கச்சக்கமாத் தின்னுருக்கேன். கடலை மிட்டாய் செய்யும் வீடு பக்கத்துத் தெருவில் இருந்துச்சு. அங்கே போனால் முனை முறிஞ்ச, துண்டுகள் சரியா வராம உடைஞ்ச பீஸ்கள்ன்னு கடையில் பத்து பைசாவுக்குக் கிடைக்கும் அளவைப்போல பத்துமடங்கு கிடைக்கும். (அப்பவே டைரக்ட்டா மேனுஃபேக்ச்சரிடம் வியாபாரம்!)

குட்டுருண்டைன்னு பெயர் எல்லாம் இல்லாம பள்ளீக்கூடத்துக்குப் போகும்போது வீட்டில் யாருக்கும் தெரியாமப் புளியை 'எடுத்துக்கிட்டு'ப் போகணும். தோழிகள் ஒவ்வொருத்தரும் வெல்லம், மிளகாய், உப்புன்னு கொண்டு வருவாங்க. நல்லா கல்லைவச்சு மையா இடிச்சு உருட்டி வாயிலே போட்டு கன்னத்தின் ஓரமா அதக்கிக்கணும். அப்படியே மெள்ள மெள்ள ஜூஸ் வரவர முழுங்கணும்.நாக்கெல்லாம் புண்ணாகி, வீட்டுலே கொழம்பு சாதம் சாப்பிடமுடியாமப்போகும் போது....... மாட்டிக்குவேன். பலநாட்களில் புளியைக் கண்டுபிடிச்சுருவாங்க. ச்பெஷல் டேன்னு அன்னிக்குப் பாவாடை கட்டி இருப்பேன். இடுப்பில் மடிச்சுச் சொருகி வச்சுருப்பதை அக்காக்கள் கண்டு பிடிச்சுருவாங்க. அதான் பாவாடை ஒரு பக்கம் தூக்கிக்கிட்டு இருக்குமே:-)

எலந்த வடை இப்பவும் பிடிக்கும். மகளுக்கு அறிமுகம் செஞ்சு வச்சதில் அவளுக்கும் பிடிச்சுப்போச்சு. சென்னை அம்பிகா அப்பளம் டிப்போவில் வழக்கமா வாங்குவேன்.


பல்லிமிட்டாய், சிகரெட் மிட்டாய் எல்லாம் ஓக்கே ரகம்தான்.

அப்புறம் கோழிமுட்டை முட்டாய்ன்னு ஒன்னு இருக்கும். வாய் முழுசும் கொள்ளாது அப்போ! மணிக்கணக்கா வாயில் வச்சுருந்து சப்பிக் கடைசியில் ஒரு முழு பாதாம் பருப்பு அதுலே இருக்கும்.

கமர்கட் அக்காஸ் ஃபேவரிட். வீட்டுலே நோன்பு காலத்தில் வேணுமுன்னே வெல்லப்பாகை முறுக விட்டுட்டு அச்சச்சோன்னு சொல்லிக்கிட்டே ஏற்கெனவே திருவி ஒளிச்சுவச்ச தேங்காய்ப்பூவைப்போட்டு கமர்கட் பண்ணிருவாங்க.

தேன்மிட்டாய் தின்னதே இல்லை.

ராமலக்ஷ்மி said...

தித்திப்பான நினைவுகளை எழுப்பி விட்டது பதிவு. கல்கோனா கருப்பாக இருக்கும். நிமிடக் கணக்கில் வாயில் வைத்திருந்தால்தான் கரையும். சூடன் மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய்(மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணத்தில் வெவ்வேறு சுவையில்),சீரக மிட்டாய், தேங்காய் மிட்டாய்(வெள்ளை மட்டுமின்றி மெஜாந்தா கலரிலும்),கடலைமிட்டாய் (2,5, 10 பைசாக்களுக்கு அதற்கேற்ற சைசுகளில்), ஜவ்வு மிட்டாய்(துளசி மேடம் சொல்லும் சுகாதாரப் பிரச்சனை உண்டு), வண்டியில் வரும் டிங்டிங் மிட்டாய்(சோன்பப்டி) இப்படியாக எத்தனை?

அருநெல்லிக்காய், எலந்தப்பழம்.

கனி ஐஸ் வெள்ளைநிற தள்ளு வண்டியில்.

செண்ட் ரப்பர் கீழே வெள்ளையும் மேலே பச்சையுமாய் ஏபிசிடி படங்களுடன். ம்ம்ம். சொல்லிட்டே போகலாம்:)!

அன்புடன் அருணா said...

அட!நானும் கல்கோண பதிவு போட்டுருக்கேனே!!!!http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2010/08/1.html
திருவிளையாடல் மிட்டாய் கேள்விப்பட்டிருக்கீங்களா????ஏன் அந்தப் பேர் வந்தது???

ஸ்ரீமதன் said...

சாப்பிட - குச்சி கெழங்கு ,கொடுக்காபுளி , நெல்லிக்காய் ( சிறுசு ,பெருசு ரெண்டும் ) , நவாப்பழம் , கலாக்காய், லாலிபாப் , மேலே சக்கரை தூவிய கலர் கலர் குட்டி ஜவ்வு மிட்டாய் ,

குடிக்க - பன்னீர் சோடா ,கோலி சோடா, லவ்-ஓ ,டொரினோ ,நன்னாரி சர்பத்,ரொம்ப சாப்பிட்டு அஜீர்ணம் ஆனா ஜின்ஜெர் கலர்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ச்சோ ஸ்வீட் விதூஷ்!
இதைப் படித்ததும் காலச்சக்கரத்தில் ஏறி அந்தக் காலத்துக்கு போய் ஒரு ரவுண்டு வெளுத்துக் கட்டிட்டு வருவமானு இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

களாக்காய், புளியங்காய்,
நெல்லிக்காய்,புண்ணாக்கு மிட்டாய், இலந்தப் பழம்,கொடுக்காப்புளிப் பழம் இதெல்லாம் பள்ளிவாசலில் கிடைக்கும்.

Sriakila said...

இப்படியெல்லாம் படத்தைப் போட்டு ஏன் சப்புக்கொட்ட வைக்கறீங்க?

இதில நான் சாப்பிட்டு டேஸ்ட் பண்ணுனது;

சூட மிட்டாய் ம்ம்ம்ம்..
கடலை மிட்டாய் ங்ங்ங்..ங் நல்லாக் கடிச்சு சாப்பிட்டேன்.
தேங்காய் மிட்டாய் அம்மாடி! அத நான் யாருக்கும் தரவே மாட்டேன். நானே தான் சாப்பிடுவேன். ம்ம்..அம்..

பஞ்சு மிட்டாய்.. ப்ச்..அத நான் கொஞ்சமாத்தான் சாப்பிட்டேன்.

தாரணி பிரியா said...

ஜவ்வு மிட்டாய் தவிர மத்தது எல்லாம் இப்ப கூட எங்க ஊருல கிடைக்குதே :). குட்டுருண்டை நாங்க வேற ஏதோ பேரு சொல்லுவோம் மறந்து போச்சு :(. சாப்பிட்டுட்டு நாக்கை புண்ணாக்கிட்டு வீட்டுல திட்டு வாங்கினது எல்லாம் ஞாபகம் வருது.

சாந்தி மாரியப்பன் said...

நினைவுகளை அருவியாக கொட்ட வெச்சிட்டீங்க.. இதில் புளி எனக்குப்பிடிக்காது.. அதைத்தவிர மத்ததெல்லாம் ஒருகை.. ச்சே.. ஒரு வாய் பார்த்ததுண்டு, பலப்ப மிட்டாய்ன்னு சொல்லப்படற குச்சிமிட்டாய் உட்பட :-)))ஜீரகமிட்டாய் இப்பவரைக்கும் தொடருது. ஆனா, இங்கே பெருஞ்சீரகம்ன்னு சொல்லப்படற சோம்பு அதனுள் இருக்கும்.

கண்ணா.. said...

கல்கோனா தலைப்பை பாத்து நீங்க மிஸ் பண்ண எதையாவது லிஸ்ட் பண்ணலாம்னு வந்தா இங்க எல்லாரும் எனக்கு தெரிஞ்சதெல்லாம் சொல்லிட்டாங்களே... கொஞ்சம் முன்னாடி வந்துருக்கலாம். வட போச்சே :(

Paleo God said...

புளியாம்பழத்துக்கு இணை ஏதுங்க? :)

துளசி கோபால் said...

ஷங்கர்,

இனிப்பா புளியம்பழம் இங்கே கிடைக்குது. இறக்குமதி சரக்கு தாய்லாந்துலே இருந்து.

Vidhoosh said...

துளசி அம்மா :))))) ROFL

Paleo God said...

டீச்சர் :)

ஆனாலும் ஓட்டைப் பிரித்து அது இளம் பச்சை நிறத்திலிருந்து பழுக்க ஆரம்பிக்கும் நிலையில் சாப்பிடுவது என்பது விவரணைக்கு அப்பாற்பட்டது. (கூங்கா என்று நண்பர்கள் சொல்வார்கள்) ஸ்ஸ்ஸ் :))

நீங்கள் சொல்வதுபோல இங்கேயும் பாக்கெட்டில் அடைத்து விற்கிறார்கள் ஆனால் என்னமோ செயற்கையாக தோன்றுகிறது. மரத்தினடியில் தேடுவதும் கல்லெறிந்து கிடைப்பதும்...ஹும்ம்.

துளசி கோபால் said...

ஷங்கர் அதுக்குப்பெயர் உதப்பழம்:-)

இனிப்பும் புளிப்புமா இருக்கும். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எச்சி ஊறுது:-)

Thangamani said...

இனிப்பான பதிவு!சிறியவயது நினைவுகளைக் கிளறிவிட்டது!!
கல்கோனாவை, அணுகுண்டுமிட்டாய் என்று சொல்லுவோம்.
கெட்டிப் பாகில் தேங்காய் கடலை போட்ட இனிப்பு!
கடிக்க முடியாது.கன்னத்தில் அடக்கி வைத்துக் கொண்டு
எச்சில் ஊற,ஊற சுவைக்க வேண்டும்.
சிகரெட்டு முட்டாய் வெறும் சக்கரைதான்...
இருந்தாலும் இன்னிக்கும் இனிக்கும் நினைவுதான்!

அன்புடன்,
தங்கமணி.

ambi said...

ஆவ்வ்வ்வ். ஸ்கூல் வாசல்ல கிடைக்கற எல்லா ஐட்டமும் இங்க இருக்கே..

துளசி டீச்சர், வல்லிமா, ரா.லன்னு பல மொட்ட பாஸ்கள் ஏற்கனவே இருந்து இருக்காங்க போலிருக்கே. :))

Vidhoosh said...

இன்னும் போட்டோக்கள் கிடைக்கலை. கிடைச்சதும் மீண்டும் வரும். :)

நன்றி எல்.கே. :)

நன்றி சின்ன அம்மிணி.. :)

நன்றி சங்கர். :)

நன்றி இராகவன் அண்ணா.. அடுத்த போஸ்ட்ல போட்டுடலாம்.. பால் ஐஸ், சேமியா ஐஸா ... இதுக்குன்னே ஊருக்கு போனும் போலருக்கு :))

நன்றி மாதேவி.

நன்றி வித்யா .. ஆமாம்.. பலப்ப மிட்டாய் மறந்து போச்சு, பவண்டோ, காளி மார்க் கோலி சோடா, கோல்ட் ஸ்பாட், எல்லாமும்..:( சமீபத்தில் கரூர் போயிருந்த போது கோலி சோடா பல கடைகளில் கேட்டு பார்த்தேன்.. கிடைக்கலை :(
ஹனி கேக் ?? நினைவே இல்லை..

ஆமா துளசி அம்மா.. :)) குட்டுருண்டை சாப்பிட்டா எனக்கு உள் கன்னத்தில் புண்ணாகிடும் :)) வத்த குழம்பு வேற ரொம்ப பிடிக்குமா.. அப்போதான் மாட்டிப்பேன். :) பச்ச புளிய சாப்டா ரத்தம் சுண்டிடும்னு பயமுறுத்துவாங்க.
கோழி முட்டை முட்டை.. ஆமா.. இதுவும் ஞாபகமே வரலை. தேடனும் ... தேன் மிட்டாய் அதே மாதிரி வீட்டிலேயே செய்ய கற்று கொண்டு விட்டேன். அடுத்த முறை பார்க்கும் போது கொண்டு வந்து தரேன். :)

ரொம்ப நன்றிங்க ராமலக்ஷ்மி :)

அருணா; உங்க பதிவு சூப்பர்.. :) அதென்னங்க திருவிளையாடல் மிட்டாய் ??? எனக்கு தெரிலையே? :))

நன்றி ஸ்ரீமதன் - அடேடே.. லவ்-ஒ.. டொரினோ.. ஜிஞ்சர் கலர், நன்னாரி.. இஞ்சி மொரப்பா.. களாக்காய் & நவாபழம் எல்லாம் மறந்து போச்சு பாருங்க... :) குட்டி ஜவ்வு மிட்டாய் தான் ஜுஜூபி... போட்டோ பிடிக்கணும்..

ஆமாங்க.. நா.கு.மனசு. :) எதுக்குமே டிமாண்ட் இருந்தாத்தான் மதிப்பு, இல்லையா. எங்களுக்கு இதெல்லாம் கிடைப்பதே பெரிய விஷயமாக இருந்தது, அதனால் இப்பொது அல்பமாய் தோன்றும் இது போன்றவை எப்போதும் பொக்கிஷமாக இருக்கு :)

வ.சி.அம்மா.. புண்ணாக்கு மிட்டாயா? அதென்னதது..

ஸ்ரீ அகிலா: நன்றிங்க. :)

தாபி: போட்டோவை புடிச்சு போட்டு, எல்லாத்துலேயும் ஒரு பாக்கெட் பார்சல் அனுப்புங்கள். முக்கியமா எலந்த வடை :))

அமைதி: :)) என்ன செய்யறது..

கண்ணா: மீ தி லாஸ்ட்ன்னு சொல்லிக்க வேண்டியதுதான். :))

நன்றி மோகன்குமார். :)

ஆமா ஷங்கர்.. நம்ம திட்டம் பளிச்ச பக்கத்துலேயே ஒரு தோட்டம் போட்டுடலாம்.. :))

துளசியம்மா: உதப்பழம் இப்போ அவசியம் தேவைதான்.. கந்தர்வன் ரெண்டாம் கல்யாணம் பண்ண கதையெல்லாம் உங்களுக்கு தெரியுமா... என்கிட்டே ஆதாரம் இருக்கே.. :)))))

தங்கமணி அம்மா: ரொம்ப நன்றிங்க உங்கள் வருகைக்கு. மிக அருமையான நினைவுகளை கோர்த்து வைத்து இருக்கீங்க உங்க பதிவுகளிலே. :)

அம்பி: மொட்ட பாஸுகள் எல்லாருமே nostalgia-& குசும்பு புடிச்ச பதிவுக்கு மட்டும் தான் வராங்க.. என்ன செய்யலாம்...:))

கோவி.கண்ணன் said...

எல்லாமே எனக்கு பிடிச்ச ஐயிட்டம்.

என் பொண்ணுக்கு 5 வயது வரை பல்லி மிட்டாய் என்றால் உயிர்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சூடம் மிட்டாய்.. ஹ்ம்..
ஆசைய கிளப்பிவிட்டுட்டீங்க..:)
நல்ல பதிவு. எல்லாத்தையும் இனோருமுறை நினைச்சுக்கறதுக்கு..

நன்றி......

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

சாந்தி மாரியப்பன் said...

இன்னும் ரெண்டொண்ணு இருக்கு. அயினிச்சக்க, உப்பு போட்ட, கொல்லாம்பழம்ன்னு சொல்லப்படும் முந்திரிப்பழம், சப்ஜா விதை போட்ட குச்சி ஐஸ்,சாப்பிட ஆரம்பிக்கும்போது கடுகுபோல இருக்கும் விதைகள்.. ஐஸ் உருக ஆரம்பிக்கும்போது ஊறி ஜவ்வரிசி மாதிரி ஆயிடும்.

அப்புறம் மலைஆரஞ்சுப்பழம்.ஒரு கீத்தை நாலா வெட்டி வெச்சிருப்பாங்க.மலை ஆரஞ்சில் தோல் தடிமனா இருக்கும். கட்பண்ணி சிலேட் அழிக்க உபயோகப்படுத்தலாம் தெரியுமோ :-)))))

Vidhoosh said...

நன்றி கோவி.கண்ணன். :)

நன்றி முத்துலெட்சுமி :)

நன்றி டி வி ஆர் சார். சௌக்கியமா இருக்கீங்களா?

அயினிச்சக்க, உப்பு போட்ட, கொல்லாம்பழம்ன்னு சொல்லப்படும் முந்திரிப்பழம், சப்ஜா விதை போட்ட குச்சி ஐஸ்,மலைஆரஞ்சுப்பழம் எதுவுமே சாப்டதில்லை அமைதி. :(

VijayaLakshmi said...

If you are wondering where to buy Regi Vadiyalu then SITARA FOODS is an answer for you. Home Made premium Quality and Best in taste regi vadiyalu elantha vadai regi vadiyalu can be ordered using below link

Kudrat Kart said...

Wow Thats a traditional recipe and my all time favorite.I can live full day on it looks mouthwatering. nice post.

Lemon Pickle
Pure Honey
Almond Oil
Coconut Oil
Kudratkart

Post a Comment