இதன் பெயர் தனிமை

இந்த ஒண்டுக்குடித்தன வாழ்க்கை மிகவும் நிதானமாகவே போய்கொண்டிருக்கிறது. இவருக்கு இந்த கிராமத்துக்கு வேலை மாற்றம் வந்த பின், தனிவீட்டில் இருக்கவேண்டாம் என்று இந்த ஒண்டுக்குடித்தனத்தை நாங்களே தேர்வு செய்து வந்தோம். இங்கு வந்துதான் கருவுற்றேன். நாட்கள் கரைந்து கொண்டிருக்கின்றன. பிரசவம் எப்போதும் நிகழலாம், நடப்பதை யாரால் தடுக்க முடியும்? எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. பத்து மாசமும் முழுதாய் முடிந்து விடுமா? தெரியவில்லை. தண்ணீர் குழாய்க்கு அருகில் நின்று எல்லோரும் ஏதேதோ நகைச்சுவைகளைப் பகிர்ந்து சிரித்துக் கொண்டிருந்தனர். நான் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த ஒண்டுக்குடித்தனத்தில் நாங்கள் மொத்தம் ஆறு குடித்தனக்காரர்கள் என மொத்தம் முப்பது பேர் இருக்கிறோம். தனிச் சமையல் என்றாலும், வெளி வாசல் ஒன்றாக இருக்கிறது. முதல் அறையில் வீட்டின் சொந்தக்காரர் தங்கியுள்ளார்கள். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அவர்கள் அறைக்கு பக்கத்து அறையில் எல்லாக் குழந்தைகளும் விளையாட என்று இடம் ஒதுக்கியுள்ளார். அவர்கள் மூலமாக யாரார் வீட்டில் இல்லையில்லை, யாரார் அறையில் என்ன நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரிந்தே விடுகிறது. என்ன சமையல், அம்மா எத்தனை மணிக்கு எழுந்தாள்? என்று எதுவுமே இரகசியம் கிடையாது.

என்றேனும் தலைக்கு குளித்துவிட்டால் கூட, தண்ணீர் பம்பில் தண்ணீர் பிடிக்கும் போது பின்னாலிருந்து களுக்கென்று சிரித்துக் கொள்ளும் மற்ற பெண்களை நினைத்தால் கொஞ்சம் பரிதாபமாவே இருக்கிறது எனக்கு. ஒருமுறை "நீ வாட்ச் கட்டிக்கொண்டு சமையல் செய்வாயாமே?" என்றும் சிரித்துக் கொண்டே கேட்டது நினைவுக்கு வந்தது. இதில் சிரிக்க என்ன விஷயம் இருக்கிறது என்றே ஆச்சரியப்பட்டு கொண்டே அவர்களைப் பார்த்தாலும் "இந்த பூனையும் பாலைக் குடிக்குமா?"ன்னு பார்கிறாள் பார்-என்று அதற்கும் சிரிப்பார்கள். எனக்கு கொஞ்சம் இவர்களில் சிரிப்பு முட்டாள்தனமாகப் பட்டாலும், நானும் ஒரு புன்னகையை சிந்திக் கொண்டே நகர்ந்து விடுவேன்.

எனக்கு பொதுவாகவே மற்ற பெண்களோடு வீட்டு விஷயங்கள் நகை, சேலை என்று உரையாடுவது எனக்குக் கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது. மற்றவர் வீட்டுக்குள் சென்று பொழுது போக்கிற்கு பேசுவது என்பதும் ஒப்புதலாக இல்லாததால் இவர்கள் என்னவோ என்னை வேற்று கிரகவாசி போலவே பார்க்கிறார்கள். 'குதிரை' என்று பட்டப் பெயர் எனக்கு இருப்பதாக அவர்களுக்குள் ஒருத்தியே கூறிச்சென்றது உச்சகட்ட நகைச்சுவை.

கருவுற்றதிலிருந்து அலுவலகம் செல்வதில்லை. வலுவற்ற கருப்பை என்று மருத்துவர்கள் அறிவித்து முழு ஓய்வில் இருக்குமாறு கூறிவிட்டனர். அப்போதிலிருந்து காலை நடைப்பயிற்சி மட்டும்தான் என்று பார்த்து பார்த்து பரிந்து கொள்கிறார் என் கணவர். அலுவலகம் செல்லாத ஆரம்ப நாட்கள் மெதுவாக சாப்பாடு, கொஞ்சம் உறக்கம், வானொலி கேட்பது, என்று ரொம்ப சந்தோஷமாகவே கழிந்தது. அப்புறம்தான் மதியங்கள் ரொம்ப நீளமாக ஆரம்பித்தது. மற்ற பெண்களைப் போல இருக்க முடியவில்லையே என்ற குற்றவுணர்வும் அதிகமாக ஆரம்பித்தது. குழந்தை வளர வளர வயிறு கனமாகி நடப்பதும் சிரமாமாகிப் போனது. பாதங்கள் வீங்கிக் கொண்டு வலி விண்விண்னென்று துளைத்தது. கணவரும் இரவு வர நேரமாகிப் போவதால் உணவை தானே பரிமாறி உண்கிறார். நானும் இப்போதெல்லாம் சீக்கிரம் உறங்கிப் போகிறேன். வாரம் ஒரு நாள் அப்பாவோடும் மாமனாரோடும் தொலைபேசுவதோடு சரியென யாருமற்ற தீவாகிப் போனது ஒண்டுக் குடித்தன அறை. கணவரை காலையில் அலுவலகம் அனுப்பிவிட்டு மீதி நாள் முழுதும் புத்தகங்களோடும் வானொலியோடும் ஐக்கியமாவது என ஊமை வாழ்க்கையாகிப் போனது. அம்மாவும் இல்லாமல், மாமியாரும் இல்லாமல்... பெண்களே இல்லாத வீட்டில் திருமணம் செய்து கொண்டு வந்தது தவறோ என்ற உணர்வு கூட அவ்வப்போது தோன்றிக் கொண்டேயிருந்து வேதனை செய்தது.

வீட்டுக்கார அம்மா வந்து எப்போதாவது "இன்னிக்கு என்ன சமையல்?", "அம்மா வீட்டிலிருந்து கடிதாசு வந்திருக்கா?" என்றெல்லாம் கேட்பார். இன்னும் சில முறை "இன்னிக்கு சப்பாத்தி பண்ணேன், இந்தா ஒரு வாய் சாப்பிட்டு பாரு" என்று கொடுப்பார். பெரும்பாலும் அவர் கேட்பதற்கும் கூட ஒரு வரியில் பதில் சொல்லி முடித்துக் கொள்கிறேன். அவரும் சிறிது நேரம் உட்கார்ந்து மற்ற வீட்டுக்காரிகள் பற்றியெல்லாம் பேசி விட்டுச் சென்று விடுவார். அவருக்கு என் பதில்களைப் பற்றிய கவலை இருப்பதாகத் தெரிவதில்லை. "நீ ஒருத்திதான் எதிர்வாதம் பண்ணாமல் கேட்டுக் கொள்கிறாய்" என்று போகிற போக்கில் பாராட்டிச் செல்வார். எனக்கு பேசு பொருள் ஏதும் இல்லாமற் போனது எப்படி? என்று அப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியவில்லை.

மற்ற பெண்கள் எல்லோருமே தன் வீட்டுச் சமையலை இன்னொருவருக்குக் கொடுப்பதும், பகிர்ந்து கொள்வது, தன் சேலைப் பெருமைகளைப் பேசுவதும் என இயல்பாக இருக்கிறார்கள். சமையல் மட்டும் என்றில்லாமல் அவர்கள் எல்லோருமே தன் சேலை, உள்பாவாடை, சோப்பு, நகைகள், துண்டு என்று பகிர்ந்து எல்லோரும் உபயோகித்து கொண்டிருந்தனர். எனக்குத்தான் இப்படி பகிர்ந்து கொள்வது பற்றிய அருவெறுப்பு மிகுந்து இருந்தது. நான் ஏன் அவ்வாறான இயல்பில் இல்லை என்ற எண்ணமே கொஞ்சம் மூச்சடைப்பது போல இருந்தது. என் தனிமை கூட தனியாக இல்லை என்பதும் என் அறைக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கிறது போன்ற உணர்வும் இந்த ஒண்டுக் குடித்தனத்திற்கு வந்ததிலிருந்து இருக்கிறது. இப்போதும் அப்படியே. எப்படியாவது அவர்களுக்குள் ஒருத்தியாகி விட வேண்டும் என்று நானும் தினமும் நினைத்துக் கொள்வேன். ஆனால் அப்படி இருந்து விட முடிவதில்லை. காலை ஆறு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரைக்கும் எப்போது வேண்டுமானாலும் யாரேனும் தன்னிச்சையாக அறைக்குள் வந்து இங்குதான் இருக்கிறாயா என்று கேட்டுவிட்டுச் செல்வது கூட என் நிம்மதியைக் குலைப்பதாகவே தோன்றியது. நானும் என் புன்னகை, என் சமையல், என் சாப்பாடு, என் அறை என்று இருந்து கொண்டே இருப்பது பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்களோ?

குழந்தைகளுக்கு சாப்பாடு கட்டி என்னிடம் கொடுத்துவிட்டு அவர்கள் சினிமா பார்க்கச் செல்வார்கள். அப்போதும் கூட அவர்களோடு இணைந்து நானும் போயிருக்கலாம் என்று சற்று தாமதமாகவேத் தோன்றும். ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் விளக்கு போட்டுக் கொண்டு அப்படி என்ன புத்தகப் படிப்பு வேண்டிக்கிடக்கிறது அது வாயும் வயிறுமா இருக்கும்போது என்று ஒருவர் மாற்றி ஒருவர் என்னிடம் கேட்கும் போதும் புன்னகைக் மட்டுமே தோன்றுகிறது. அப்போது அவர்கள் ஆனாலும் இவ்வளவு ஊமைகுசும்பு ஆகாதுடி உனக்கு என்றே கூறிச் செல்கின்றனர். எனக்கு பேசு பொருள் ஏதுமில்லை என்று எப்படி இவர்களுக்கு உணர்த்துவது? கொஞ்சம் என்னைப் பற்றிய எரிச்சல் கூடி எனக்கே புகைய ஆரம்பித்தது.

எனக்கு வேறு ஏதோ ஒன்று தேவையாக இருந்தது, அது என்னவென்றும் அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறேன். தீபாவளி அன்று கூட அனைவரும் இணைந்து பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்திருந்தனர். அந்த நாளும் எந்த வித்யாசமும் இன்றியே எனக்கு போனது. கணவரும் எப்போதும் போல அலுவலகம் சென்று வந்தார். இப்படியே ஒன்பதாம் மாதமும் ஒருவழியாக வந்தது. ஒவ்வொரு வாரமும் தொலைபேசியில் அப்பாவும் மாமனாரும் மாற்றி மாற்றி "வயிற்றில் குழந்தை என்னவெல்லாம் செய்கிறது" என்று கேட்டுக் கொண்டிருந்தனர். நானும் சுவாரசியமில்லாத பதிலாக தூங்கிக் கொண்டிருக்கு என்றே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் கேட்கும் கேள்விகள் எல்லாமே கொஞ்சம் தர்மசங்கடமாகவே இருந்தன. மாமியாரும் அம்மாவும் செய்தது எதிர்பார்ப்பா தவமா என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அப்பாவும் மாமனாருமாக சேர்ந்து அனுப்பி வைத்த அழகான கூடையில் குழந்தைக்கு வேண்டிய துணிமணிகள் எல்லாம் கூரியரில் வந்து சேர்ந்த நாள் இரவு பதினோரு மணிக்கு லேசாக வலிக்கத் துவங்கியது. வலி உயிர் போகும் என்றல்லவா வீட்டுக்காரம்மா சொன்னார். அப்படியொன்றும் வலிக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டேன். மருத்துவர் சொன்னபடியே பார்லி தண்ணீர் என்று என்னவெல்லாமோ சுயவைத்தியங்கள் செய்து கொண்டேன். அப்படியே உறங்கியும் போனேன்.

காலையில் கணவரிடம் இது பற்றிய பகிர்ந்து கொண்டதும் உடனே மருத்துவமனையில் சேர்த்து விட்டார். இவ்வளவு சீக்கிரம் சேர்த்து என்ன ஆகப்போகிறது என்று கேட்டாலும் பதிலில்லை. மருத்துவமனை இரண்டு மாடிகள் கொண்டதாக இருந்தது. கீழே ஒவ்வொரு அறையிலும் மூன்று படுக்கைள் போடப்பட்டு இருந்தது. மொத்தம் நாலைந்து பேர்தான் நோயாளியாகளாக இருந்தனர். மாடியில் இருந்த தனியறைகளில் இன்னொரு பெண் அன்றுதான் பிரசவித்து இருந்தாள். அவர்கள் எல்லோருமே பெரும்பாலான நேரங்களில் தூங்கிக் கொண்டே இருந்தார்கள். அங்கேயும் ஜன்னல் வழியே மரஞ்செடிகளையும் குருவிகளையும் பார்த்துக் கொண்டே நேரத்தை கழிக்கத் துவங்கினேன். ஒரு அலை போல வலிக்கத் துவங்கியது. முதுகு வேறு பிடித்துக் கொண்டாற் போல உணர்வில், இவ்வளவு பெரிய வயிறோடு குனியவும் முடியாமல் நிமிரவும் முடியாமல் தவிக்கிறேன். வலியில் குரல் கம்மி அப்போதும் பேச வரவில்லை. மருத்துவமனை வராண்டா வரை வந்து எட்டிப் பார்க்கிறேன். யாரும் இல்லை.

"அம்மா.... ஆ.."

ஒரு செவிலி வந்து என்னை பிடித்துக் கொண்டிருந்தாள். மிகவும் பயமாகவே இருந்தது. கீழே விழுந்து விடுவேன் என்ற உணர்வு மேலிட்டது. என் உடைகளை மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். இந்த நிமிடம்தான் அம்மா அருகில் இல்லாதது ரொம்பவே வருத்தியது. நான் அழத் துவங்கினேன்.

'இந்த வலிக்கே அழ ஆரம்பிச்சிட்டீங்க' என்று சிரித்தாள் செவிலி. என் முதுகில் ஆறுதலாக தட்டிக் கொடுத்தாள். உடை மாற்றிக் கொள்ளவும் உதவினாள். 'இன்னும் ஒரு மணிநேரம் ஆகும்' என்று கூறிவிட்டு சென்று விட்டாள். 'உங்க வீட்டுக்காரருக்கு ஆள் அனுப்பிட்டேனம்மா' என்றாள். கொஞ்சம் பயம் குறைந்தது போல இருந்தது.

மறுபடியும் அலை எழும்பியது. மருத்துவர் வந்து ஏதேதோ சொல்லிவிட்டு இரண்டு ஊசிகள் போட்டுச் சென்றார். ரொம்பவும் அசதியாக இருந்தது. விண்விண்னென்ற வலி சுருட்டி கால் நரம்புகளும் இழுக்க ஆரம்பித்தன. கத்தாமல் இருந்தால் அந்த அழுத்தத்திலேயே இதயம் நின்று விடும் போலத் தோன்றியது. என்னையும் மீறி குரல் எழும்பியது.

ஆறு மணிநேரம் கழிந்தது. கண்விழித்தபோது இத்தனை நாளும் எது என்னை தனிமையாக்கியாதாக நினைத்து வருந்திக் கொண்டிருந்தேனோ அது என் கைகளில் இருந்தது. மெதுவாகக் கண்திறந்து என்னைப் பார்த்தது. ஜன்னல் வழியாக வந்த வெயிலின் வெளிச்சத்தில் கண்கூச கண்ணை மூடிக் கொண்டது.

'இத்தனை நாள் கருப்பை இருட்டுல தனியா இருந்தது இல்லையா...அதான் கண் கூசுது போலருக்கு' என்றார் வீட்டுக்காரம்மா.

28 comments:

எல் கே said...

அருமையான நடை விதூஷ்.. வாழ்த்துக்கள்

soundr said...

//'இத்தனை நாள் கருப்பை இருட்டுல தனியா இருந்தது இல்லையா...அதான் கண் கூசுது போலருக்கு' என்றார் வீட்டுக்காரம்மா//


இதற்கு பதில் பேசினாயா? புன்னகையை சிந்தினாயா?


http://vaarththai.wordpress.com

Radhakrishnan said...

கருவுற்றால் தனித்து போய்விடுவார்களா? தனிமையாய் உணர்வார்களா? படிக்க மிகவும் நன்றாக இருந்தது. ஒரு பெண்ணின் உணர்வு படம் பிடிக்கப்பட்டு இருந்தது. நான் கவிதையாய் முடித்து இருப்பீர்கள் என நினைத்தேன்.

Vidhya Chandrasekaran said...

அத்தனை பேர் உடனிருந்து சில சமயங்களில் ரொம்பவே தனிமையை உணர்ந்திருக்கிறேன். though i know its weird to think like that. cant help it. trying to figure out wat makes me to think so.

btw post was good:)

பா.ராஜாராம் said...

அற்புதமாய் வந்திருக்கு சகோ!

உணர்வுகளை, வலியை அப்படியே கடத்த முடிந்திருக்கிறது. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல சிறுகதை வாசித்த நிறைவு வித்யா.

http://rkguru.blogspot.com/ said...

நல்ல பதிவு ........வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

சாந்தி மாரியப்பன் said...

நிறைவாக இருக்கிறது....

எண்ணங்கள் 13189034291840215795 said...

எனக்கு பொதுவாகவே மற்ற பெண்களோடு வீட்டு விஷயங்கள் நகை, சேலை என்று உரையாடுவது எனக்குக் கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது. மற்றவர் வீட்டுக்குள் சென்று பொழுது போக்கிற்கு பேசுவது என்பதும் ஒப்புதலாக இல்லாததால் இவர்கள் என்னவோ என்னை வேற்று கிரகவாசி போலவே பார்க்கிறார்கள்.

---------------------------

அப்படியே என் குணத்தை...:))

அருமை கதை.

எறும்பு said...

நல்லாருக்கு..

எறும்பு said...

ஆமா நீங்க கதைதான் எழுதுவீங்களா? ஒரு புனைவு, சொற்சித்திரம் இந்த மாதிரி ஏதும் முயற்சி பண்ணுங்க.. உங்களுக்கு பிரகாசாமான எதிர்காலம் இருக்கு.

:)

நேசமித்ரன் said...

ஒரு கருமுட்டையின் விந்துத்துளியின் பயணமாக .சூனியத்தில் ஒளிந்து வளர்வதாகத்தான் தன்னிலையில் பேசும் குரலாகத்தான் மொத்தக் கதையையும் புரிந்து கொள்கிறேன் கடைசி வரி என்பது திறப்பு அவ்வளவுதான்

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களிடமிருந்து ஒரு நல்ல படைப்பு

பனித்துளி சங்கர் said...

நேர்த்தியான எழுத்து நடையில் மிகவும் சிறப்பான கதை . பகிர்வுக்கு நன்றி !

sakthi said...

விதூஷ் ஒரு தேர்ந்த எழுத்தாளாரால் மட்டுமே இத்தனை அழகாய் ஒரு படைப்பை தர இயலும் நீங்கள் ஒரு அஷ்டவதானி கலக்குங்க!!!

sakthi said...

விண்விண்னென்ற வலி சுருட்டி கால் நரம்புகளும் இழுக்க ஆரம்பித்தன. கத்தாமல் இருந்தால் அந்த அழுத்தத்திலேயே இதயம் நின்று விடும் போலத் தோன்றியது. என்னையும் மீறி குரல் எழும்பியது.

எனக்கு இந்த பிரச்னையில்லை பா எப்பவும் சீசர் தான்!!

நசரேயன் said...

ரெம்ப நாளைக்கு அப்புறமா ஒரு நல்ல இடுகை..

அப்ப நான் இதுவரைக்கும் எழுதினது என்னன்னு கேள்வி கேட்கக்௬டாது சரியா?

rajasundararajan said...

//அம்மாவும் இல்லாமல், மாமியாரும் இல்லாமல்...// கதைசொல்லியின் தனிமை உணர்வுக்கான நியாயம் இதில் திட்டமிடப்பட்டு இருக்கிறது. அருமை!

//'இத்தனை நாள் கருப்பை இருட்டுல தனியா இருந்தது இல்லையா...அதான் கண் கூசுது போலருக்கு'//

இந்த உலகக் கருப்பை இருட்டில் தனியா நாம் எந்த வெளிச்சம் கண்டு கண் கூச இருக்கிறோம்?

Vidhoosh said...

நன்றி எல்.கே. :)

நன்றி சிதம்பரம் சௌந்தர பாண்டியன். பதில் சொன்னாங்களோ என்னவோ? தெரிலங்க? அடுத்த முறை பார்த்தேன்னா கேட்கறேன். :)

நன்றி வி.ஆர். : சில பெண்கள் உணர்கிறார்கள். கருவுற்ற காலங்கள் பெண்களுக்கு பெரிய சவால்தான்.

நன்றி வித்யா: ஒரு தரம் என் 'மென்டார்' காசி மேட்டில் ஒரு ஸ்கூலுக்கு அழைத்து சென்றார். அது வரை அலுவலக சம்பந்தமாக வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பேன். எந்த டாபிக்கில் வேண்டுமானாலும் பேச முடியும் என்று நினைத்திருந்தேன்.
அந்தக் குழந்தைகளோடு என்ன பேசுவது என்று தெரியாமல் முழி முழின்னு முழிச்சு திண்டாடினேன். :-)) "விதூஷு, உனக்கு பிசினஸ் சம்பந்தமாக மட்டுமே பேசத் தெரியும்டி முட்டாளே! என்று பொளேரென்று கன்னத்தில் அறைந்த உணர்வு.

நன்றி பாரா அண்ணா. :)

நன்றி குரு :)

நன்றி டி.வி.ஆர். சார். :)

நன்றி அமைதி சாரல். :)

நன்றி புன்னகை தேசம். :) அட!

நன்றி எறும்பாரே!! சும்மாவே இருக்காது எறும்பு...

நன்றி நேசன். அந்த ஆதங்கம் எனக்கும் உண்டு. ரொம்ப ரொம்ப முறுக்கிக் கொண்டு நின்ற கதையை 'அவர் இவர் அவள்' கற்றுக் கொடுத்த பாடத்தில் திருத்தி எழுதியது.

நன்றி சங்கர்:)

நன்றி சக்தி: சாகித்ய அகாடமி வாங்காமல் ஓயரதில்லை அப்டீன்னு பாஸ்கர் (கணவர்) வேற உசுப்பேத்தி உசுப்பேத்தி எம்பி எம்பி குதிக்கிறேன். சுவரு வழியா எட்டிக் கூட பார்க்க முடியல.. :))

நன்றி நசர். தோழியோடு பதிவர் "சமுத்திரம்" என்றே நினைத்தேன் :)) இந்தியா வரும் போது சொல்லி விடுங்க.

நன்றி சார். உங்களுக்கும், நசரேயன் மற்றும் நேசனுக்கு பயந்து கொண்டே இந்தக் கதையை அவ்ளோ ஜாக்கிரதையாக எடிட் செய்து வெளியிட்டேன். எல்லாம் அவர்-இவர்-அவள் கொடுத்த பாடம்தான்.

காரணம் தெரியாத தனிமை மற்றும் இலக்கிலாமல் சூனியத்தில் தேடுதல்/வெறித்தல் என்பது ஏறத்தாழ ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் கடந்து வருவதுதான். நாம் யாரை பிரச்சினையாகப் பார்கிறோமோ, அவர்களின் உணர்வுகளைப் பற்றி சிந்திக்க தவறி விடும் நிலையிலேயே இப்படி ஆகிறது. மற்றவர் உணர்வுகள் புரிபடாமலேயே, தன்னிச்சையாக காலப் போக்கில், அதை(யும்) கடக்கும் போது ஏற்படும் வலி முறுக்கிக் கொண்டு ரொம்ப வலிக்கும். கடைசியில் உணர்ந்து பார்த்தால் நம்மிடமே அதற்கான தெளிவும் Solution-னும் இருக்கும். அந்த உணர்வைத் தரும் KNOT என்பதாக நினைத்து எழுதினேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பதிவு நன்று!

அன்புடன் மலிக்கா said...

கதை வெகு அருமை
கண்முன்னே கட்சிகள்..

http://niroodai.blogspot.com

மரா said...

பரவாயில்லை. எம்பட ரேஞ்சுக்கு இல்லைனாலும் தொடர்ந்து எழுதுனீங்கன்னா நல்ல எளக்கியவாதியாகிரலாம். :)

ILA (a) இளா said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்சிபஎபா இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.நன்றி!

Sundar சுந்தர் said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கே!
நல்ல நடை... சுருக்கமாய் வீட்டிற்குள் சேர்த்து, பின் நெருக்கம் கூட்டி, எண்ணங்கள் தெளிவாய், பின் உணர்வுகள் விளங்குவதுமாக, ரொம்ப இலகுவாய், கதை சொல்லி விட்டாய்.
//தனியா இருந்தது இல்லையா...அதான் கண் கூசுது போலருக்கு// அர்த்தமான முடிவு :)

உன் பிரசுரத்திற்க்கான தொகுப்பில் சேர்ப்பாயாக.

அது சரி(18185106603874041862) said...

படிக்கும் போதே அறையிலிருந்த காற்றும் விலகி தனிமை ஏற்படுவது போல ஒரு உணர்வு...

ரொம்ப நல்லாருக்கு விதூஷ்...

நந்தாகுமாரன் said...

nice story in soliloquy/monologue style

Matangi Mawley said...

beautiful!!!!!!!!!

அன்பரசன் said...

Nice

நாணல் said...

உணர்வுகளை அழகா படம் பிடித்திருக்கிறீங்க :)
படித்து முடிக்கையில் குழந்தையை கையில் தூக்கி கொஞ்சிய உணர்வு ...

Post a Comment