தணிகாசலர் பஞ்சரத்தினம்


சீர்புகழும் சென்னைபுரி திருவல்லிக்கேணி நகர்
செங்குந்தர் வீதிவாழும்
சிவனருள் பாலனே, சிவசுப்பிரமணியனே!
சிவகாமித் தவப்புதல்வனே!
கார்புகழும் போரில் அசுரர்குலம் வேரறக்
கண்டித்த கதிர்வேலனே!
கனகமயிலேறி வரும் தெய்வயானை பாகனே!
கனகவள்ளி நாயகனே!
பார்புகழும் உனதன்பர் உளங்கனத்திட வந்துநீ
பன்மைவரந்தந்த பரனே!
பங்கயன் சிறைமீட்டு வைத்ததொரு பாகனே !
பழனிமலை வடிவேலனே!
தார்புகழும் மாயனிட தங்கையுட மைந்தனே
ஜனகன்மகள்பதி மருகனே!
தகதகென மயிலேறி திருநடன மாடிவரும்
தணிகாசலக் கடவுளே!

சித்திரவிநோதமுடன் திகழான சென்னியும்
சிறப்பான பன்னிருகையும்
திருமுடியில் மகுடமும் சுட்டியும் பட்டமும்
திருநீற்றுக் காப்புமழகும்
இரத்தினக் கடுக்கனும் புஜகீர்த்தி பளபளென
ரவிதைக் கண்டிகை மார்பினில்
ரஜிததிருமேனியும் உச்சிதப்பூநூலும்
இலட்சண முகத்தினழகும்
நெற்றியில் திலகமும் நிகக்கன வடிவேலும்
நிறைந்த வொட்டியாணமழகும்
நிகரான தண்டையும் நீலமயில் சேர்வையும்
நின்பெருமை சொல்லவெளிதோ
தத்திவரும் சூரனைத் துளைத்து நீயமர்செய்த
தயாபரமான துரையே
தகதகென மயிலேறி திருநடன மாடிவரும்
தணிகாசலக் கடவுளே!

ஓராறுமுகம் ஆட ஈராறுபுசம் ஆட
ஓங்குவடிவேலும் ஆட
உச்சிதக் குண்டலமும் கச்சிதமுடியாட
ஒளியான சுட்டியாட
பாராட தண்டையும் பரதச்சிலம்பாட
பணிந்திடும் பக்தராடப்
பன்னிரு கரம் ஆட பணிந்த பூஷணம் ஆட
பவளவெண்குடைகள் ஆட
தோராத மயிலாடக் கோழித்துவசம் ஆட
துலங்குநீர்க் காவி ஆட
தொண்டர்கள் முதலான சண்டிகேஸ்வரர் ஆட
தொந்த நவவீரர் ஆட
தீராத தவ முனிவர்தானாட நீயாடி
தமியனேன் முன்பு வருவாய்
தகதகென மயிலேறி திருநடனம் ஆடி வரும்
தணிகாசலக் கடவுளே!

தந்தைதாய் தெய்வமும் நீயே கெதியயலால்
தற்காக்க ஒருவரில்லை
தைரியஞ்சொல்லவும் தாபமது தீர்க்கவும்
தரணியில் எவருமில்லை
சந்ததமும் நால்வேதம் உன்னையே புகழ்ந்து
'சரணாகதி' என்றவர்க்கு
சாலோக சாமீப சாரூப மேலான சாயுச்சியம்
தந்த குருவே
வந்தனம் செய்யும் உனதன்பர்க்கிரங்கி நீ
வன்மையுடன் வரமளிப்பாய்
வள்ளி தெய்வயானையுடன் வாழு மயிலேறியே
வரவேண்டும் எந்தனருகே
தந்திரம் உகந்த திரு மாயனிட மருகனே
தற்பராநந்தபரனே
தகதகென மயிலேறி திருநடனமாடிவரும்
தணிகாசலக் கடவுளே!


நஞ்சுண்ட பரமகுரு வானதொரு தெய்வமே!
நாதனே! குமரகுருவே!
நாயகா! உன்னைவிட வேறுதுணையில்லை, எனை
ஆதரிப்பவரு மில்லை;
பஞ்சையும் நானென்ன பாவங்கள் செய்தேனோ?
பரிதவித் திடவும் நீதான்
பாராதிருப்பதும் தர்மமோ? உந்தனைப்
பார்த்தவர்கள் ஏசார்களோ?
கொஞ்சமென் றென்னைநீ விட்டுவிட்டாலுமே
குழந்தை நான் விடுவதில்லை;
கோபமோ என்மீதில்? தாபமோ என் செய்வேன்?
கொத்தடிமை கொண்ட முருகா!
தஞ்சமென்றேயுனைக் கெஞ்சியே வருந்திடத்
தற்காத்தருள் புரிகுவாய்
தகதகென மயிலேறி திருநடனமாடிவரும்
தணிகாசலக் கடவுளே!

0 comments:

Post a Comment