திருநீற்றுப் பதிகம்


ஆசிரிய விருத்தம்

1. கொண்ட கொண் டிட்டவெகு
சொரூபங்களுக்கழகு கொடுக்கச் சமைந்த நீறு
கொடிய வெண்ணாயிரஞ் சமணரைக் கழுவினிற்
கொலை செய்து கண்ட நீறு
துண்டகண்டப்படக் கொடூர வெஞ்சூரனுடல்
துணிக்கவேல் தொட்டநீறு
சொல்லரிய பூதப் பிசாசு பில்லி
சூனியஞ் சுடரிட்டெரித்த நீறு
செண்டுபோற் கயிலை மலையெடுத்தவன்
கூன் முதுகு செவ்வையாய் நிமிர்த்தநீறு
சிவபக்தியில்லாத முழு மூடர்
நெஞ்சந் திடுக்கிடத் தொடுத்தநீறு
அண்ட நவகண்ட முதல் வணங்கித்
துதித்திட ஆண்மையாய் வந்த நீறு
அடியவர்க்கருள் கிருபைபொழி
பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.

2. சம்பந்தராகவே தென்னவன்
கூடலிற் சமணரையழித்த நீறு
சகல குருபரவனாக அரசனுக்கு
வுபதேசந் தானாயுரைத்த நீறு
நம்பின அடியவர்கள் ஈடேற
வினையோட நாதனாய் வந்தநீறு
நாற்பத் தெண்ணாயிரம் ரிஷிகள்
முனி சித்தர்கள் நம்பியே பூசுநீறு
கம்ப மதயானை மாமுகவனுக் கிளையவன்
கருதியே தந்த நீறு
காலனிட தூதனை நாடாமல் எந்நாளும்
காக்கவே வந்த நீறு
அம்பிகை திரிசூலி சுந்தரி சவுந்தரி
அபிராமிவல்லி தந்த
அடியவர்க்கருள் கிருபை பொழி
பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.

3. அரவங்கள் பூதங்கள் மிருகங்கள்
பேய்களை அடக்கவே இட்டநீறு
அஷ்டபாக்கிய லட்சுமி இஷ்ட
முடலெந் நாளும் அகலாமல் இட்டநீறு
இரவுபகல் மறவாமல் முருகர்
திருநாமமே இறைஞ்சித் தரித்தநீறு
எதிராளி நெஞ்சங் கலங்கிப்
பயந்தோட ஏற்கவே இட்டநீறு
பரவு பல பிணிகளும் உறவு கெடுகோள்களும்
பணிந்தோட விட்டநீறு
பஞ்சபாதகமுடன் மிஞ்சிடும் வல்வினை
பணிந்திட வணிந்த நீறு
அரசனுடன் மந்திரியாண் புவி வீரரும்
மதி வசியமான நீறு
அடியவர்க்கருள் கிருபைபொழி
பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.

4. இருப்பான தலமெலா மென்றுந்
துதிப்பதற் கீடேற்றஞ் செய்யுநீறு
எங்கெங்கிருந்தாலுமேத்திப்
பணிந்திடவெதிராக நிற்குநீறு
திருப்பரங்குன்றமுஞ் செந்தில்
கதிர்காமமுந் திருச்சோலைக்குகந்தநீறு
திருத்தணிகை சுவாமிமலை திருவேரகம்புகழ்
செவ்வேலர் தந்த நீறு
பொருப்புகள் முடிதோறும் பதகமலமுத்திரை
புகழ்பெருக வந்தநீறு
பூசைசெய் யைவராற்றிருவா வினன்குடி
போதிக்க வந்தநீறு
அருட்பாதம் நத்தியே நினைப்பவர்கள்
நெஞ்சினில் அகலாதிருந்த நீறு
அடியவர்க்கருள் கிருபைபொழி
பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.

5. நூலைப்பகுத்த விடைமாதர்க்கு
வேலாக நுதலிற்றரித்த நீறு
நூரு நூறாயிர மீமிசை வந்தாலுமொரு
நொடிற்றொலைக்கு நீறு
வேலைக்கடிந்து வெகு சூரர்கள் மடியவே
வெற்றிவேல் தொட்டநீறு
வேதனைச் சிறையிட்டு பிரணவத்துட்பொருள்
விமலற்குரைத்த நீறு
வாலைப் பருவமாய் வயது நூறாகவே
வசியகரமான நீறு
மாறாத செல்வமும் பேறான வாழ்வுடன்
வரிசை தர வந்தநீறு
ஆலவாய்ச் சொக்கருடன் ஆனந்தத்
தாண்டவம் ஆடிச் செழித்த நீறு
அடியவர்க்கருள் கிருபைபொழி
பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.

6. ஓராறு சென்னியு மீராறு
புயமென்னுள்ளம் பதித்தநீறு
ஓதுதமிழ் மதுரையி லுமை பெண்
பேசவே உபதேசமான நீறு
காரானை முகவனுக்கிளையவன்
விராலிமலைக் காங்கேயன் தந்த நீறு
கயிலைமலை யொரு நொடியில்
அரனை வலமாகவே காணவே வந்த நீறு
பேரான வசுரருங் குன்றமும்
வேலாற்பொடிபடத் துணித்த நீறு
பொற்சந்தி மலையிலுறை வள்ளியுட நாயகன்
பொன்னாடி வணங்கு நீறு
ஆறாடு செஞ்சடைக் கயிலை நாய
கனுமைக் கழகு பெறவந்த நீறு
அடியவர்க்கருள் கிருபைபொழி
பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.

7. எத்தேச காலமும் முத்தைய
ரென்னுமிவ் வேழைக் கிரங்குநீறு
எழிலான கிருத்திகை தவறாமல் அனுஷ்டிக்க
இன்பங்கள் தந்தநீறு
சிற்றிடை வள்ளியுடன் தினைப்புனங் காத்திடச்
சிவசித்தாய் நின்றநீறு
சிற்றூரு வேடர்கள் சிவபக்த ராகவே
திருவுருக்கொண்ட நீறு
முத்தமிழ்க்காகவே அருணகிரிநாதருக்கு
மோக்ஷங் கொடுத்தநீறு
முப்பத்துமுக்கோடி தேவாதி தேவரும்
முருகரென வந்தநீறு
அத்தனருள் கந்தனார் நித்தம்
விளையாடவே அகலாமலிட்டநீறு
அடியவர்க்கருள் கிருபைபொழி
பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.

8. வேதாள பூதப் பிசாசு பில்லி
சூனிய மிரட்டித் துரத்தநீறு
வெண்டையந் தண்டையொடு கிண்கிணி
சிலம்பசைய வீரவேல் தொட்டநீறு
சூதான களபமுலை வள்ளியிட நாயகன்
சுப்பிரமணியர் தந்தநீறு
தும்புரு நாரதர் கிம்புருடர் போற்றித்
துலங்கவே வந்தநீறு
ஓம் முருகாவென்று உள்ளமது
குளிரவே உற்றதுணையானநீறு
ஓம் நமசிவாய குரு ஞானாதி தேசிகன்
ஒளியாகி வந்தநீறு
ஆதாரமாகவே நெஞ்சினில் எப்பொழுது
மறவாது நின்றநீறு
அடியவர்க்கருள் கிருபைபொழி
பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.

9. துஷ்டப் பிசாசு பிணி கிட்ட
வெட்டாமலே சுடரிட்டெரித்த நீறு
சுற்றவே நிற்கின்ற அஷ்டதிசை பாலரும்
சொல்லுமுன் வணங்குநீறு
வட்டமாய்ப் படர்தேகம் பதினெட்டு
குஷ்டமும் வாராமற் பூசு நீறு
வாளரவம் வண்டுகடி சிலந்தி தேள்
விஷமெலாம் வாங்கவு மணிந்தநீறு
கொட்டமிடு சூரரை வெட்டிப் பலியிட்டு
செயங் கொள்ளவே வந்தநீறு
கூறுமொழி நக்கீரர் மேன்மைபெற
வேல்வாங்கி குன்றைப் பிளந்தநீறு
அஷ்டதிசை பதினாறு முக்கோண சட்கோண
மறுபத்து நாலுகலையும்
அடியவர்க்கருள் கிருபைபொழி
பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.

10. மருமலர் கமலத் துதித்தவன்
கிளைவழி வாழ்விக்க வந்தநீறு
மன்னுபிர மாமுனி அகஸ்தியர்
போகருடன் வழிகொள்ள வந்தநீறு
சரணமலான்பனாங் குலாலகுலத்
திருக்கை தண்டமிட்டுதவுநீறு
சண்முக நதிமூழ்கி கிரிவலம் வந்தோர்க்கு
சகலபிணி தீர்த்தநீறு
வறுமைபடு மெளியார்க்குங் கொலை செய்த
பாவற்கும் வருவிதர மொத்தநீறு
வாழ்வு கார்த்திகை சோம சுக்கிர வாரஞ்சஷ்டி
வந்திப்போர்க் கருளுநீறு
அருமறைகள் பரவுகுரு சிவசமயந்
தழைக்கவே அவதரித்தருளு நீறு
அடியவர்க்கருள் கிருபைபொழி
பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.

11. பத்தான கவிதையும் மனதிற் உதிப்போர்க்குப்
பாக்கியந் தந்தநீறு
பரிவாக எந்நாளும் சரவணபவா வென்ன
பரிசுபெற வைக்கும்நீறு
கஸ்தூரி குங்குமம் கமழ
வள்ளி நாயகன் காங்கேயன் தந்தநீறு
கார்த்திகை நாள் தோன்றி வெற்றி வேலாயுதன்
கடம்பனார் தந்தநீறு
முத்து நவரத்தினத் தண்டையணி பாதநன்
முடிமேற்றரித்த நீறு
முழு நீல மயிலேறி வந்துமுன்
நின்றுமே முன்கையிற்றந்த நீறு
அத்தனாற் பங்கினிற் சத்துரு சங்காரியாய்
அபிராமிவல்லி தந்த
அடியவர்க்கருள் கிருபைபொழி
பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.

12. வட்டச் சடாட்சரச் சரவணபவா வென்று
மதியிற்று திக்கும் நீறு
வாதாடி வந்தெதிர்த்திட்ட பூதங்களை
மார்பைப் பிளந்தநீறு
இஷ்டமுடன் சரியையொடு கிரியையோக
ஞானமேற்க வேதந்த நீறு
இன்பமாகவே கயிலை மலையேறி
மோக்ஷத்திலிருக்கத் தகுந்த நீறு
எட்டுத் திசையதிர மயிலேறி
உலகைவல மிமைக்கு முன் வந்தநீறு
இமையவர் முனிவர்கள் தேவேந்திரனாதியர்
யிடரழித்திட்ட நீறு
அஷ்டதிசை பெற்ற தீவேழு
மீரேழுகை அரசாளவந்தநீறு
அடியவர்க்கருள் கிருபைபொழி
பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.

திருநீற்றுப் பதிகம் முற்றிற்று.

0 comments:

Post a Comment