ராமரக்ஷா ஸ்தோத்திர விளக்கம் 1


முன்பு யாரோ நண்பர் ஒருவர் கேட்டிருந்தார் என ஸ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்திரத்தை பகிர்ந்திருந்தேன். நம் எறும்பு ராஜகோபால் ஆர்வத்தோடு இந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தைக் கேட்டிருந்தார்.

கீலகம் என்றால் என்ன என்று வேறு கேட்டு வைத்தார். கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகி விட்டது. சமயம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி வைத்தேன், இப்போது தான் முடிந்தது. இதோ. முதலில் ஸ்லோகங்களின் பல்வேறு அமைப்பு, அவற்றை ஏன் சொல்ல வேண்டும் என்பதை அறியலாம்.

ரிஷி, சந்தம், தேவதா, பீஜம், சக்தி, கீலகம் ஆகியவை ஸ்லோகங்களில் ஏன் அமைந்திருக்கிறது? அவற்றின் முக்கியத்துவம் என்ன?

மந்திரங்கள் பொதுவாக லௌகீக மந்திரங்களாகவும் (உலக ஆசைகளை அடைய) மோக்ஷ மந்திரங்களாகவும் (இறை ஞானம் அடைய) என இரண்டு வகைகளாக அறியப்படுகிறது. ஒவ்வொரு மந்திரங்களும் ஷடாங்கம் என்ற ஆறு அங்கங்களைக் கொண்டு அமைந்திருக்கும். அவையாவன

1.ரிஷி
2.சந்தம்
3.தேவதா
4.பீஜம்
5.கீலகம்
6.ஷக்தி

ரிஷி என்பது குறிப்பிட்ட அந்த ஸ்லோகத்தை இயற்றிவரோ அல்லது முதன் முதலாக ஸ்லோகத்தை ஜபித்து (உபாசகர்) அதன் பயனை (சித்தி) அடைந்தவர் என்றறியலாம்.

சந்தம் என்பது சரியான உச்சரிப்புக்கான இலக்கணம். சிலபிள்/ரிதம் அல்லது தமிழ் இலக்கண விகிதத்திலும் சந்தம் என்றே கொள்ளலாம். சந்தத்தில் நான்கு சரணங்களும், ஒவ்வொரு சரணத்திலும் எட்டு அக்ஷரங்களும் (சிலபிள்ஸ்) வருமாறு அமைந்தும், 5-6-7வது அக்ஷரங்கள் மிகச்சரியான மாத்திரைகளைக் கொண்டுள்ள ஸ்லோகங்களை அனுஷ்டுப் சந்த(ம்)ஹ என்றறியப்படுகிறது.

தேவதா என்றால் மந்திரத்தை ஜபிப்பதால் மனமகிழ்ந்து அருளும் இறைவன்.

பீஜம் என்றால் விதை. இங்கே மந்திரத்தின் அடிப்படை குணம் அல்லது தத்துவம். உதாரணத்துக்கு உச்சரிப்பு மற்றும் பலனுக்கான வகையில், ப்ருத்வி, ஜலம், அக்னி, வாயு, ஆகாசம், சூர்யன், சந்திரன் ஆகிய தத்வங்கள் அந்தந்த குணத்துக்கு உண்டான பலங்களை அளிக்கும் வகையில் உள்ளன. எந்த விதையோ அந்த மரம், அதற்கான பழங்களும் நிழலும் என்பதாக மந்திரத்தில் பீஜம் அமைகிறது. பீஜத்தின் ஆற்றல் செலுத்தும் வழியிலேயே ஜபத்தின் பலனை அமைக்கிறது. இவ்வகையில் பீஜம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

சக்தி என்பது மந்திர ஜபத்தினால் உண்டாகும் / உருவாக்கப்படும் ஆற்றல் அல்லது ஆரா-தேஜஸ் அல்லது ஒளிக்கற்றை. அதாவது மந்திரத்தை ஜபிப்பதால் நமக்கு உண்டாகக் கூடிய ஆற்றல் என்று அறியப் படுகிறது.

கீலகம் என்பது ஜபிக்கும் மந்திரத்தின் சாவி, மந்த்ர இரகசியம் என்று அறியப்படுகிறது. கீலக ஜபம் மந்திரத்தின் பலனை முழுமையாக அடைய உதவும். அதாவது பெரும்பாலான கீலகங்கள் ஜபிப்பவரின் அறிவு, ஆற்றல், ஆசாபாசங்கள் ஆகியவற்றை மூலதேவதை (ஸ்லோகத்தின் தேவதா) முன் சமர்பித்து, அவற்றைப் பெருக்கிக் கொள்ள உபாசகருக்கு வாய்ப்பு கிடைக்கும். வாய்ப்பை அறிந்து பலனை அடைவது உபாசகரின் திறமையால் மட்டுமே இயலும். ஆகையால் ஸ்லோகங்கள் மந்திரங்கள் பூஜை புனஸ்காரங்கள் எல்லாமே, நமக்கு கிடைக்காமல், ஆனால் நாம் கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படும் வாய்ப்புக்கான சாவி மட்டுமே, அச்சாவியைக் கொண்டு வாய்ப்பு எனும் பூட்டைத் திறந்து பலனைப் பெறுவது நம் கையில்தான் இருக்கிறது. வெறும் மந்திரத்தால் மாங்காய் காய்க்காது.

இதையும் தவிர கவசம், சங்கல்பம், அர்த்தம் ஆகியவை பூஜாவிதானங்களில் காணக் கிடைக்கின்றன. அவையாவன மந்திர ஜபத்தை உச்சாடனை செய்யும் போது ஏதும் தடங்கல்கள் உண்டாகாமல் காக்கக் கூடியது கவச மந்திரம். குறிக்கோள்கள் இல்லாத செயல் எப்படி பயனளிக்காதோ அதே போல சங்கல்பம் இல்லாத மந்திரத்தாலும் பயனில்லை. சங்கல்பம் என்பது நமது வேண்டுதல்கள், பகவானுக்கு முன் நாம் வைக்கும் மனு போன்றது. அர்த்தம் என்பது ஸ்லோகத்தின் அர்த்தம், பொருள். ஸ்லோகத்தை முழுமையாகப் புரிந்து அதன் ஆற்றலை அனுபவிக்க அர்த்தம் தெரிந்து தெளிவாகப் புரிந்து சரியான உச்சரிப்போடு படிப்பது/ஜபிப்பது அவசியம்.

ந்யாஸம் என்பது உபாசகர் தன்னையே உள்ளடக்கி, ஒன்றாக்கி இறைவனாக உருவகப்படுத்திக் கொண்டு மந்திரம் ஜபிப்பது ஆகும். இதில் அங்க ந்யாஸம், கர ந்யாஸம், ரிஷ்யாதி ந்யாஸம், ஹ்ருதயாதி ந்யாஸம், பஞ்சதத்வ ந்யாஸம், வர்ண ந்யாஸம் ஆகியவை. தற்காலத்தில் ரிஷ்யாதி ந்யாஸம்-தான் ஸ்லோக மந்திரங்களாகப் புழக்கத்தில் உள்ளன.

மந்திர விதிகள், சட்டதிட்டங்கள், பூஜை முறைகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றை எல்லாம் தகுந்த குரு-வைக் கொண்டு தீக்ஷைப் பெற்று அறியப் பெறலாம். ஆனால் இறைவன் ப்ரசாதங்களையோ, ஆடம்பர பூஜை முறைகளையோ கொள்வதை விட அர்பணிப்பையும் பக்தியையும் குறிக்கோள்களையும் மட்டுமே காண்கிறான். பக்தி அனைத்தையும் விட மிக முக்கியம் என்றறிக. பக்தியின் அடிப்படை எதைக் குறித்து குறிக்கோளோடு செயல்பட்டுக் கொண்டே இருக்கிறோமோ அது உங்களை நிச்சயம் வந்தடையும் என்பதே.

பதிவு நீளமாகி விடும் என்பதால் ஸ்ரீராமரக்ஷா ஸ்தோத்திர விளக்கம் நாளை....

4 comments:

ராஜகோபால்.S.M said...

Super...Thank you..

ராஜகோபால்.S.M said...


கோடானு கோடி நன்றிகள் கோடானு கோடி நன்றிகள் +Vidhoosh S ராமர் உங்களை ரக்ஷிக்கட்டும்

Vasudevan Tirumurti said...

yes, now I can comment.
thanks!

வல்லிசிம்ஹன் said...

நன்றி விதூஷ்.
ரக்ஷைக்குக் காத்திருக்கிறேன்.

Post a Comment