ஸ்ரீ ராம நவமி - ஸ்ரீராமர் பதிகம்


(இருபது சில்லறை கட்டடம் தொகுப்பு நூலில் இருந்து. புத்தகம் இனிமேலும் பாதுகாக்க இயலாத நிலையில் இருப்பதால் இங்கே சேமிக்கவும், ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டும். இதில் நூற்றியெட்டு முறை "ராமஜயம்" என்று வருவது குறிப்பிடத்தகுந்தது.)

பன்னிருசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்

1. சீர்மேவு மாழ்வார்கள் பன்னிருவ ருன் புகழ்
செப்பவும் ராம ஜெயமே! திருவடிக் கண்பராய்ச்
செல்வமு முத்தியுஞ் சித்திதரும் ராம ஜெயமே!
கார் மேகவண்ணனே யென்ற திரௌபதையை முன்
காத்திட்ட ராமஜெயமே!கரி யாதி மூலமென் றோல
மிட முதலையைக் கண்டித்த ராமஜெயமே! பார்மீதி
லுன்பாத தூளிபட் டெழுந்தகலி பரிவான ராம
ஜெயமே! பாங்கான வேடன் மரா மரா வெனப்
பதவி புரிந்திட்ட ராமஜெயமே! ஆர்தானுரை
க்கவரு வாருத்தனாமத்தை யனு தினமும் ராம
ஜெயமே! ஐயனே யெனை யாளுமெய்யனே
ஸ்ரீமதே ராமாநுஜாய நமவே.

2. விஞ்சுகா ரணியவன ரிஷிகளு க்காதரவுமே
விடும் ராமஜெயமே! மேலான தசரதன் மைந்தனாய்ப்
புவிதனில் விரைந்திடும் ராமஜெயமே! செஞ்சொன் மொழி
ஜெனகராஜன் வில்லொடித்து ஜெயம் பெற்ற ராமஜெயமே!
சீதைக் கிரண்டு வரங்கொடுத்துமே யயோத்தியில்சீர்
பெற்ற ராமஜெயமே, தஞ்சமென்றனுமன்றனக்கு
சிரஞ்சீவி தந்திட்ட ராமஜெயமே! தந்தைக் குரைத்த சொல்
வழுவாது தாரணியில் தரித்தருளும் ராமஜெயமே!
அஞ்சலென் றடியேனை யாதரித் துன்பாத மருள் செயும்
ராமஜெயமே! ஐயனே யெனை யாளுமெய்யனே
ஸ்ரீ மதே ராமாநுஜாய நமவே.


3. விண்ணொளிய தாகவே நந்தகோபன் மனையில்
விளையாடும் ராமஜெயமே, வில்விஜயனுக்குப்பகவத்
கீதையோதியே வெற்றி தரும் ராமஜெயமே, கண்ணொளிய
தாகவே யன்புடன் கோவுகளைக் காத்ததும் ராமஜெயமே!
கஞ்சனை வதைத்துடல் கிழித்தெறிந்தனைவர்க்குங்
காட்சிதரும் ராமஜெயமே
கன்றென கரனைப் பாய்ந்து குடலைக் கிழித்து
மறை கொண்டுவரும் ராமஜெயமே
கொற்றவன் தசரதன் பெற்றசீர் மைந்தனே
கோவிந்த ராமஜெயமே
அண்ணலே யுனது திருவடியார்கள்
பங்கினிலமர்ந்தருளும் ராமஜெயமே
ஐயனே யெனையாளு மெய்யனே
ஸ்ரீ மதே ராமாநுஜாய நமவே.

4. உற்றமிதிலைப்பதியில் வில்லி ரண்டாகவே
யொடித்தது ராமஜெயமே
உம்பர்தொழு மங்கையை யுணர்ந்து
திருமந்திர முவந்தருளும் ராமஜெயமே
கொற்றவர்கள் கண்டுதொழ பரசுராமன் கையில்
கொண்டதும் ராமஜெயமே
கோதண்ட வாள்கதை சங்குசக்ராயுத
கோபால ராமஜெயமே
மெத்தவரு மூலபல மத்தனையுமே கொன்று
வெற்றிபெறும் ராமஜெயமே
மெலிவுற்ற சுக்ரீவனுக்காக
வாலியை வீழ்வித்த ராமஜெயமே,
அத்தனே யெனையாளுங் சுத்தனே
மெய்ஞ்ஞான மருள் புரியும் ராமஜெயமே
ஐயனே யெனையாளு மெய்யனே
ஸ்ரீ மதே ராமாநுஜாய நமவே.

5. சோதியே யென்று மறைவேதியர்களோதவுஞ்
சொல்லரிய ராமஜெயமே
சோம்புடனே வந்த விபீஷணன்
குறைதீர்க்கத் தோன்றிடும் ராமஜெயமே
ஊதிய குழலினாலே கனத்தனவிலே
யுகந்ததும் ராமஜெயமே
உயர்கருடன் மீதினிலிலட்சமி சமேதனா
யுலாவிவரும் ராமஜெயமே
நீதியே வழுவாமல் அஷ்டாட்சரப்
பொருளில் நின்றது ராமஜெயமே
நித்தனா யத்தனாய்ச் சுத்தனாய்
வைகுந்த நிலைகொண்ட ராமஜெயமே
ஆதியே நின்னாம மோதுவோர்க்கெந்நாளு
மருள்புரியும் ராமஜெயமே
ஐயனே யெனையாளு மெய்யனே
ஸ்ரீ மதே ராமாநுஜாய நமவே.

6. மண்டலம் புகழவே வாசுதேவன்
மைந்தனாய் வந்தருளும் ராமஜெயமே.
மாயாவதாரமாய் கோபஸ்திரீமா
ரெலாமயல்பூண்ட ராமஜெயமே
விண்டலம்புகழ் திருப்பதிகனூற் றெட்டினும்
விளங்கினதும் ராமஜெயமே
வேதவேதாந்த பரிபூரண தயாபர
மெய்ஞ்ஞான ராமஜெயமே
கொண்டல்மணி வண்ணனாய்ப் பாற்கடலிலே
பள்ளி கொண்டதும் ராமஜெயமே
கோடானு கோடிபேர் பல்லாண்டு கூறியே
கொண்டாடும் ராமஜெயமே
அண்டர்தினமே தொழும் புண்டரீக பாதனே
யரும்பொருளும் ராமஜெயமே
ஐயனே யெனையாளு மெய்யனே
ஸ்ரீ மதே ராமாநுஜாய நமவே.

7. முப்பத்து முக்கோடி தேவரு முனிவரும்
மொழிகின்ற ராமஜெயமே
மூவரும் ராமஜெயமே யெனவுரைக்க
நன்முத்திதரும் ராமஜெயமே
செப்புமந்திரமெலாம் ராமஜெயமே
மார்பில் திருவளரும் ராமஜெயமே
சீர்கொண்ட ராமஜெய மாரிகண்டு
பணிகுவார் சித்திரமொளி ராமஜெயமே
ஒப்பரிய ராமஜெய மெய்ப் பொருளும்
ராமஜெயம் ஓதரிய ராமஜெயமே
உட்சதரும் ராமஜெயம் பட்சதரும்
ராமஜெயம் ஓங்கார ராமஜெயமே
அப்பனே ராமஜெயமன்று துதிசெய்யவு
மன்புதரும் ராமஜெயமே
ஐயனே யெனையாளு மெய்யனே
ஸ்ரீ மதே ராமாநுஜாய நமவே.

8. சத்தியும் ராமஜெயமூர்த்தியும்
ராமஜெயஞ் சர்வமும் ராமஜெயமே
சாத்திரமும் ராமஜெயம் தோத்திரமு மிராமஜெயஞ்
சதுர்வேத மிராமஜெயமே,
பத்தியும் ராமஜெயம் சித்தியும்
ராமஜெயம் பதவியும் ராமஜெயமே
பக்தர்தொழும் ராமஜெயம் சித்தர்தொழும்
ராமஜெயம் பலவிதமும் ராமஜெயமே
வெற்றியும் ராமஜெயம் புத்தியும் ராமஜெயம்
மெய்ப்பொருளும் ராமஜெயமே,
வேள்வியும் ராமஜெயம் ஆவியும் ராமஜெயம்
மேல்வீடும் ராமஜெயமே
அத்தியின் மேல்பவனிவரும் நித்திய கல்யாணனே
ஆனந்த ராமஜெயமே
ஐயனே யெனையாளு மெய்யனே
ஸ்ரீ மதே ராமாநுஜாய நமவே.

9. பாடவறியேன் ராமஜெயமென்று
நின்புகழ் பகரவறியேன் ராமஜெயமே
பக்தியாய் ராமஜெயமென்றனது
பாதமலர் பணியறியேன் ராமஜெயமே,
தேடவறியே னின்னை ராமஜெயமே
தேவருக்கு முனிவர்க்கும்
யாவருக்கு மரிதான
தேனமுதே ராமஜெயமே
நாடவறியே னின்னை ராமஜெயமே
யெனநவிலவறியேன் ராமஜெயமே,
உனக்கடிமை யானே னெனக்குகதி
நல்குவாய் ராமஜெயமே,
ஆடரவ முண்டபல கோடி பேருண்ட
பொருளானந்த ராமஜெயமே,
ஐயனே எனையாளு மெய்யனே
ஸ்ரீ மதே ராமாநுஜாய நமவே.

10. விரிவாய கண்டபரிபூரணமுமாய் எங்கும்
விளையாடுகின்ற ஜோதி
விண்ணவர்க் கமுதளித்த வண்ணலே
உன்புகழ் விளம்புதற் கரிதுகண்டாய்,
தெரியாமல் நாயேனிடர்க் கடலிலே மூழ்கி
சிந்தைமிக நொந்துருகினேன்
தேவாதி தேவனே வைகுந்தவாசனே
செந்தாமரைக் கண்ணனே
பரிவான உனது திருவடியே
எனக்கருதி பரமபுருஷா
உனக்குப் பாரமோ துயர்களைய நேரமோ
விவ்வேனள பக்ஷம்வைத்தடியேன் மீதில்
அரியே நமோ வேத நாராயணா
கிருபை அருள்புரியும் ராமஜெயமே,
ஐயனே யெனையாளு மெய்யனே
ஸ்ரீ மதே ராமாநுஜாய நமவே.

11. சீர்கொண்ட ராமஜெய மென்றுதிரு
மந்திரஞ் செபிக்கவறியாம னாயேன்,
செப்பினேன் ராமஜெய மப்பனே
நூற்றெட்டுத் திருநாம மிராமஜெயமே,
நீர்கொண்ட பாதமிசை மலர்கொண்டு
சாத்தியே நித்தமு மிராமஜெயமே
நெஞ்சினி லிராமஜெய மந்திரமு
வந்தருளும் நீங்காமல் ராமஜெயமே
கார்கொண்ட திருமேனி ராமஜெயமே
யென்னைக் காத்தருளும் ராமஜெயமே
காதலால் ராமஜெய மேவென்று
நம்பினேன் காத்தனே ராமஜெயமே
ஆர்கண்டு மறியாதுமூல மந்திரமான
வாதியே ராமஜெயமே
ஐயனே யெனையாளு மெய்யனே
ஸ்ரீ மதே ராமாநுஜாய நமவே.

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஸ்ரீ "ராமஜயம்"

எல் கே said...

ராம் ராம்

தி. ரா. ச.(T.R.C.) said...

ராம நாமமு ஜன்ம ரக்ஷக மந்த்ரமு தாமசமு சேயகவே பஜிம்பவே மனஸா...மஹான் தியாகராஜர்

Post a Comment