ஹல்திராம் ரசகுல்லாவும் கொஞ்சம் காராசேவும்

பதிவுலகில் எளிமையான வார்த்தைகளுடன் கவிதைகள் காணக் கிடைக்கச் செய்யும் யாத்ரா, பா.ராஜாராம் வரிசையில் நான் மிகவும் விரும்பிப் படிக்கும் கவிதை சிற்பி கவிஞர் ராஜா சந்திரசேகர்.

நாம் எளிதில் கடந்து சென்று விடும் தருணங்களை படம்பிடித்துக் காட்டி, இதோ பார், இப்படி இருக்கு அப்படி இருக்கு என்று ஒரு குழந்தையின் மகிழ்வோடு, அவரிடம் பேசும்போதே விழியோரச் சுருக்கங்களில் காணக் கிடைக்கும் மகிழ்வின் ஒளியும், ஒரு perfect கலைஞனாக, கவிதைகளின் நூல் பிடிபடும் போதெல்லாம் குதூகலித்து மகிழ்ந்து, கண்ணாடிவளைச் சில்லு கொண்டு சின்ன வயதில் செய்து மகிழ்ந்த கலீடாஸ்கோப் ஜாலங்கள் தெரியும் இவர் கவிதைகளில். பென்சில் நதி நெகிழ்ந்து வழிந்து போகும் இடமெல்லாம் பசுமை, வளமை, வாழ்வின் நிர்வாணம்.

ராஜா சந்திரசேகர் கவிதைகள் என்றொரு தளத்தில் நிறைய பிரமிக்க வைக்கும் வார்த்தைக் கோர்ப்புக்கள், எண்ணச் சிதறல்கள் என்று இறைந்து கிடக்கின்றன.

இவரது அனுபவ சித்தனின் குறிப்புக்கள் அடர்த்தியானவை. ஒவ்வொரு கவிதையும் ஒரு கட்டுரையாகும் வளமையும், நாவலாகும் உணர்வுகளும், கதையாகும் வாழ்க்கையும் செறிந்தவை.

நிறைய கவிதைகளில் குழந்தையின் பார்வையில் விரியும் உலகமாகவும் சொற்கள் கொஞ்சி மகிழ முடிகிறது. நிறைய கவிதைகளுக்குள் கவிஞன் எட்டி நின்று இரண்டு மனசுக்குள் கூடு பாய்ந்து இரண்டு மனசுகளையும், சிலமுறை அதையும் தாண்டிய எண்ணிக்கையில் பாய்ச்சிய ஒளி வெள்ளமாய் தெறிக்கும் பல வண்ணங்களைப் பீய்ச்சிய பிரமிடை படித்து விட்ட கருவமும் ஓங்குகிறது.

அதுவரை ராஜாசந்திரசேகர் கவிதைகள் மட்டுமே படித்து வந்த நான், சில நாட்கள் முன், நான் இவர் தளத்தை கூகிளில் சிங்கமும் எலியும் என்ற குழந்தைக் கதையை தேடும் போது பென்சில் நதியைச் சென்றடைந்தேன். சிங்கமும் சுண்டெலியும். பிரமித்து நிற்கிறேன்.
சிங்கம் தூங்காது
சுண்டெலிதான் தூங்கும்
நீ சிங்கமா சுண்டெலியா
மகனிடம் கேட்டேன்
உடனே சொன்னான்
நிறைய சிங்கம்
கொஞ்சம் சுண்டெலி

அவரது ஒரு சில கவிதைகளை எடுத்துத் தருகிறேன். மிகுதிய பென்சில் நதியில் பருகிக் கொள்ளுங்கள்.
===========================

அம்மாவுக்கு பெரிய மீசை
குழந்தை கிறுக்கிய
புகைப்படத்தில்

===========================

ஒரு கவிதையில்
வைத்துப் பார்க்க வேண்டும்
பேருந்தில் தரிசித்த
குழந்தையின் புன்னகையை

===========================

கட்டியிருந்த ஆடு
திரும்பி வந்தபோது
தொங்கிக் கொண்டிருந்தது

என்ற இவரது கவிதையைப் படித்ததும், இன்னதென்று சொல்ல முடியாத உணர்வுகள் எனக்கு.
ownership, திருட்டு,
சொத்து, உணவு,
இழப்பு, கொலை,
நேயம், குரூரம்
என்று பல மனித முகங்கள் தொங்கிக் கொண்டிருக்கும் ஆட்டுக்கு பின்னால். கிடாகளுக்கு குழந்தைகளை காக்க வேண்டிய கடமை இருக்கிறதோ என்னவோ, ஆடுகளுக்கு குட்டிகள் இருந்தால் யார் அவைகளுக்கு பாலூட்டுவார்கள்?

எத்தனை வாழ்க்கை இக்கவிதை வரிகளுக்குள்? உங்களுக்கு எத்தனை பேர் தெரிகிறார்கள் என்று கண்டிபிடியுங்கள் பார்க்கலாம்?

===========================

எனக்குள்
மீதி கவிதை
கவிதையில்
முடியாத நான்

என்று கூறும் இவர் எழுதிய மனிதர்களையும், சில வாழ்க்கைத் தருணங்களையும் படித்துக்கொண்டே, ருசிக்கத்தான் வேண்டும் ஹல்திராம் ரசகுல்லாவும் கொஞ்சம் காராசேவும், வித்தியாசமே தெரியாது, கொஞ்சம் தேநீரும் இருந்தால்.

22 comments:

VISA said...

கவித...கவித....கவித!!!!

சென்ஷி said...

அருமையான பகிர்வு விதூஷ்... ராஜா சந்திரசேகர் கவிதைகளின் எளிமைத்தன்மையுடன் முடிந்தும் முடிவடையாத சொற்களின் ஆட்சி பிரமிப்பு தருபவை. எனக்கு மிகப் பிடித்த கவிஞர்.

மிக்க நன்றி!

ஈரோடு கதிர் said...

ராஜா சந்திரசேகர் கவிதைகள் அழகு

pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.com/2010/04/blog-post_12.html

தோழிக்கு விருது

அம்பிகா said...

அருமையான அறிமுகம். நன்றி விதூஷ்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான பகிர்வு

Vidhya Chandrasekaran said...

நல்ல பகிர்வு.

(எனக்குப் புரியுதே. கவிதைதானா:))))

சைவகொத்துப்பரோட்டா said...

காரசேவு ருசியா இருக்கு!!!

Ahamed irshad said...

//அம்மாவுக்கு பெரிய மீசை
குழந்தை கிறுக்கிய
புகைப்படத்தில்//

ரசித்த கவிதை...

Unknown said...

//ownership, திருட்டு,
சொத்து, உணவு,
இழப்பு, கொலை,
நேயம், குரூரம்
என்று பல மனித முகங்கள் தொங்கிக் கொண்டிருக்கும் ஆட்டுக்கு பின்னால். கிடாகளுக்கு குழந்தைகளை காக்க வேண்டிய கடமை இருக்கிறதோ என்னவோ, ஆடுகளுக்கு குட்டிகள் இருந்தால் யார் அவைகளுக்கு பாலூட்டுவார்கள்?//

விதூஷ், அவர் சொல்லி இருக்கும் காட்சிப்படிமத்தைத் தாண்டி அதிகமாக யோசித்து இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.

//கட்டியிருந்த ஆடு
திரும்பி வந்தபோது
தொங்கிக் கொண்டிருந்தது//

கசாப்புக்கடையில் கட்டி இருந்த ஆடு, அவர் திரும்பி வரும்போது கறியாகி கொக்கியில் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதை வாழ்க்கையின் நிலையற்றத் தன்மையாகவே புரிந்துகொள்கிறேன்.

ஒரு செய்திக்கு: எந்தக் கிடா (ஆண்) ஆடுகளும் தன் குட்டிகளைப் பாதுகாப்பதில்லை. கசாப்புக்கடைக்காரர்களும் பால் தரும் பெட்டை ஆடுகளைக் கறியாக்குவதில்லை.

Anonymous said...

எளிமையா இருக்கு கவிதைகள். அதனாலயே புடிச்சும் இருக்கு. பகிர்ந்தமைக்கு நன்றி

துபாய் ராஜா said...

அருமையான பகிர்வு.

"உழவன்" "Uzhavan" said...

ம்ம்.. என்னமா எழுதியிருக்காரு.. நல்ல பகிர்வு விதூஷ் மேடம்.

நேசமித்ரன் said...

நல்ல விரிவான பகிர்வு

பார்க்கத் தெரிந்தவனுக்கு கவிதை
ம்ம் பார்க்கத்தெரிகிறது உங்களுக்கு

:)

கவிதன் said...

மிக நல்ல பகிர்வு ..... நன்றி!!!

அன்புடன் அருணா said...

எனக்கும் கூட மிகவும் பிடிக்கும் இவரின் க்விதைகள்!
தவிர ஹல்திராம் ரசகுல்லாவும் காராசேவும் சூப்பர் காம்பினேஷன்!

மரா said...

அறிமுகத்திற்கு நன்றி.

Chitra said...

எனக்குள்
மீதி கவிதை
கவிதையில்
முடியாத நான்

..... super!

பகிர்வுக்கு நன்றி. உங்களுக்கும் நல்ல ரசிப்பு திறன்.

அமுதா கிருஷ்ணா said...

ஹெட்டிங் படிக்கும் போதே வாயெல்லாம் ஊருதே....

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்வு சகோ!

வாசிக்கவும்,கற்றுக் கொள்ளவும்,சந்திராவின் தளம் எனக்கு.

//பதிவுலகில் எளிமையான வார்த்தைகளுடன் கவிதைகள் காணக் கிடைக்கச் செய்யும் யாத்ரா, பா.ராஜாராம் வரிசையில்..//

ஊருக்கு வரும்போது என்ன வாங்கிட்டு வரட்டும் வித்யா? :-)

Vidhoosh said...

நன்றி ராஜாராம் அண்ணா: தேன்மிட்டாயும் காத்தாடியும் - ரொம்ப நாளாச்சு! :)

Vidhoosh said...

எல்லோருக்கும் நன்றீஸ் சகாஸ்.

கே.வி.ஆர். நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தால் மேலும் இது பற்றி பேசலாம்.

உண்மையாகவே black tea-யோடு ரசகுல்லாவும், காராசேவும் ரொம்ப அற்புதமா இருக்கும்.

என்னை ராணியாக்கி பார்க்கும் புதுகை தென்றலுக்கு ரொம்ப நன்றி. :)

Post a Comment