பாகம் 1 இங்கே
இவர்:
வாசலில் ஸ்டார் கோலம் போட்டு இரண்டு பக்கமும் ஸ்வஸ்திக் வரையப் பட்டிருந்தது. காய்ந்து போன மாவிலைகள் நிலை வாசலில் ஊசலாடிக் கொண்டிருந்தன. பச்சைக் கதவில் பெயிண்டால் வரைந்த மஞ்சள் பொட்டுக்கு நடுவே ஒரு சிவப்பு புள்ளி ஜொலித்துக் கொண்டிருந்தது. அதற்கு சற்றே மேலே ஒரு கண் திருஷ்டி கணபதி பார்த்துக் கொண்டிருந்தார். நிலைப்படியில் கோலமாவால் வரைந்த அரிசி மாவு நான்கு பார்டர் கோடுகளையும், இடையில் இருந்த சுழிக்களையும் பிள்ளையார் எறும்பு மொய்த்துக் கொண்டிருந்தன.
வீடு மேற்கூரையைத் தாங்கும் தேக்கு மர உத்திரத்தில் கட்டியிருந்த தாம்புக் கயிற்றில் நான்கைந்து முடிச்சுக்கள் பிசுக்கேறிக் கிடந்தன. அதில் பரிதாபமாய் சுருண்டு கொண்டு கிடந்த ஒரு வாழைத் தாரில் இருந்த ஒரே ஒரு வாழை பழமும் கனிந்து சொட்டிக் கொண்டிருந்தது.
ஊதுபத்தி வாசனை மெல்லியதாகவும், சாம்பிராணி அடர்த்தியாகவும் சூழ்ந்து கொண்டு, கண்ணீர் புகை பரப்பிக் கொண்டிருந்தது. ஒரே ஒரு நீள கூடமும், தாழ்வாரமும் அதை ஒட்டிய சமையல் அறையும் என்று வீடு புகைக் கருப்பேரி, சூடச் சாம்பல் பூசி, சிவனே என்று கிடந்தது.
கூடத்து ஓரத்தில் சுவரெல்லாம் ஆணி அடித்து பொக்கியத்தில் அங்கிங்குமாக காலெண்டர் லட்சுமிகளும் பிள்ளையார்களும் வேங்கடாசலபதியும் அருள் மழை பொழிந்து கொண்டிருந்தார்கள். ஓரத்தில் ஒரு ஸ்டீல் நாற்காலி ஒன்று மடித்து இருந்தது. வீடு முழுக்கத் தண்ணீரைத் தெளித்து மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார் இவர்.
இவர் அரசு பள்ளியில் வாத்தியார். மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்துவதை விட, இராமாயண மகாபாரதம் பேசுவதில் அதிக விருப்பம். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. இவரே அதைப் படித்துப் படித்து வேறு எதையும் பாடம் பண்ணாமல் இருக்கிறபடியால் பாடங்கள் நடத்தும் முயற்சிகளை வீணாகச் செய்வதில்லை.
இவரது பல்வேறு சத்-அசத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று ஆஸ்தீகவாதியாக இருத்தல். மனைவி உயிரோடு இல்லாததால் குழந்தைகளும் இல்லை. ஒண்டிக் கட்டை.
"இங்கிலீஷ்ல கூட the worst moment for the atheist is when he is really thankful and has nobody to thank அப்டீன்னு சொல்லி இருக்காங்க தெரியுமா?"
=================================================================================
அவர்:
அரக்கு வண்ணத்தில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டிய வாசல். ஓரத்தில் சற்றே தள்ளி நிறுத்தப் பட்டிருந்த ஒரு பஜாஜ் ஸ்கூட்டருக்கு கையாலே வெளிர் பச்சை வண்ண பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது. மரக் கலரில் இருந்த கதவுக்கு சற்றே மேலே 'என்னைப் பார் சிரி' என்று சொல்லிக் கொண்டு ஏதோ ஒரு சினிமா நடிகையின் படம் இருந்தது. நிலைப்படியின் இரண்டு பக்கமும் கொஞ்சமாய் மணல் சேர்ந்து சிவப்பு எறும்பு குடும்பமும் அங்கேயே குடி இருந்தது.
உத்திரத்தில் இருந்து நீண்ட தாம்புக் கயிற்றின் முனை தலை நுழைக்கும் படியாக சுருக்கு போட்டு முடிச்சிடப்பட்டிருந்தது. அதில் மாட்டப்பட்டிருந்த ஒரு ஈரத் துண்டிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. வீடெல்லாம் சிகரட் புகை நாசியைத் துளைத்துத் தொண்டையைக் கரிக்கும் மணம் சூழ்ந்திருந்தது. ஒட்டடை அடிக்கப்படாமல் அங்கங்கே கருப்பாய் ஊசலாடிக் கொண்டிருந்தன.
செல்லோ டேப் கொண்டு ஒட்டப் பட்ட ஓரம் மடங்கிய போஸ்டரில் ரவீனா டாண்டன் புடவை கட்டி மோனப் புன்னகை புரிந்து கொண்டிருந்தாள். ஜன்னலில் இருந்த ஒத்தை ஸ்டீரியோ டேப் ரிகார்டரில் பீதோவன் இசை மென்மையாய் பரவிக் கொண்டிருந்தது.
அருகிருந்த இரும்பு அலமாரி முழுதும் சிவப்பு அட்டை போட்ட புத்தகங்கள். கீழே சற்று தள்ளி மூங்கில் மோடா ஒன்று இருந்தது. ஒரு கையில் தேநீர் கோப்பையும் ஒரு கையில் புத்தகமுமாய் அமர்ந்திருக்கிறார் அவர்.
இவர் ஒரு வக்கீல். பணம் பொருள் சம்பாதிப்பதை விட சட்டத்தைக் காப்பாற்றுவதில் ரொம்ப ஆர்வம். நேர்மையான காரணங்கள் இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே வழக்காட சம்மதிப்பார் இவர். அதனாலேயே அதிக வழக்குகள் தோல்வி அடைந்து இப்போது அதிகம் வழக்குகள் ஏதும் இல்லாமல் சட்ட புத்தகங்களைக் கொண்டு ஒரு 'லா டைஜஸ்ட்' என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை நடத்தி கடனாளி ஆகி கொண்டிருக்கிறார் இவர்.
இவரது பல்வேறு சத்-அசத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று நாத்தீகவாதியாக இருத்தல். நிரந்தர வருமானம் இல்லாததால் யாரும் பெண் கொடுக்கவில்லை. ஒண்டிக் கட்டை.
"அதென்னது அது... ஏதோ சொல்வாளே all thinking men are atheists அப்டீன்னு... அதான் நான்"
=================================================================================
அவள்:
இந்தக் கதவுக்கு அருகில் சின்னதாய் ஒரு ரோஜாச்செடி தொட்டியும் அந்தப் பக்கம் பணம் நிறைய சேரும் என்ற நம்பிக்கையில் வைத்து ஜன்னலில் ஏற்றி விடப்பட்ட மணி பிளான்ட் கொடியும். வாசற்படிக்கு அருகில் சங்கிலியால் கட்டப் பட்ட ஒரு ஸ்கூட்டி, சீட்டு கிழிந்து ஸ்பாஞ் வெளி வந்திருந்தது. ஸ்கூட்டியின் மேற்புறமெல்லாம் ஏகப்பட்ட கீறல் விழுந்து, ஃபைபர் உடைந்திருந்தது. கதவுக்கு சற்றே மேலே ஹார்ஸ் ஷூ ஒன்று மாட்டப்பட்டிருந்தது. நிலைப் படியில் ஒரு சின்ன கப்பில் சர்க்கரை வைக்கப் பட்டிருந்தது. அதை சுற்றியும் எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன.
உத்திரத்தில் சின்னச் சின்ன வளையங்கள் பொருத்தி நீளமாய் திரைச்சீலை தொங்கிக் கொண்டு அந்த அறையை இரண்டாய் பிரித்து இருந்தது. அவளுக்கு அம்மா அப்பா இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு புகைப்படம் சுவற்றில் இருந்தது. அம்மா அப்பா இருவருக்கு மட்டும் பொட்டு வைத்து கொஞ்சமாய் உதிர்ந்து ஃபிரேம் ஓரத்தில் சந்தனம் குங்குமம் உதிர்ந்து சேர்ந்திருந்தது. தொலைக்காட்சிப் பெட்டியில் என்.டி. டீவியில் பிரணாய் ராய் செய்திகள் படித்துக் கொண்டிருந்தார்.
அவள் டீவியில் செய்தி வாசிப்பவள். கலவரம் ஒன்றில் காயமுற்ற தாய் தந்தையை பணம் இல்லாததால் மருத்துவம் செய்ய முடியாமல், இருவரையும் இழந்து தனித்து இருப்பவள். சினிமாவில் நடித்த்தால் பணமும் புகழும் கிடைக்கும் என்று நம்பி எப்படியாவது சினிமா நடிகை ஆக வேண்டும் என்பதே அவள் லட்சியம். துக்கம் சந்தோஷம் இரண்டையுமே அவளுக்கு செய்தி ஸ்க்ரோல்ஸ்லைடாக மட்டுமே தெரியும் அளவுக்கு உணர்வுகளால் இறுகி இருப்பவள்.
இவளது பல்வேறு சத்-அசத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று யாரை பற்றியும் எதை பற்றியும் கவலைப்படாமல் இருத்தல். முன்னின்று எடுத்து சொல்லி திருமணம் நடத்த யாரும் இல்லாததால் ஒண்டிக் கட்டை.
"it is regarded by the common people as true, by the wise as false, and by the rulers as useful. பணமிருந்தால் யு கேன் ரூல் தி வேர்ல்ட்"
=================================================================================
...............தொடரும்...............
=================================================================================
பாகம் 2 இங்கே
இருளில் தன் நிழல் கூட பூதங்கள் போன்றதொரு பயத்தைக் கொடுத்தது. புத்தகத்தை மூடி வைத்து விட்டு, ஜன்னலோரம் வந்து நின்றார் அவர். விடியற்காலை ஆகி விட்டிருந்தது. புழுக்கம் வேறு அதிகமாகவும் அப்போதுதான் மின்விசிறி போடப்படாமல் இருப்பதை கவனித்தார் அவர்.
"எனக்கு என்ன ஆச்சு. இலட்சியம் நேர்மை அது இது என் வாழ்கையை வீணாக அடித்து விட்டேனோ. என் வயதே ஆனாலும் அரசாங்க உத்தியோகம் நிரந்தர வருமானம் நிம்மதியான வாழ்க்கை என்று காலத்தை ஒட்டுகிறாரே கருப்பையா வாத்தியார். பெரிசா என்ன சாதிச்சோம். என்னோட படிச்சவன் எல்லாம் பொண்டாட்டி குழந்தை குட்டி, காரு பங்களான்னு படு சௌக்கியமா இருக்காங்க.. இந்தத் தூக்கில் தொங்கக் கூட தைரியம் இல்லாமல்.... இன்னிக்கு ஒரு வழியாய் இந்தப் போராட்டத்தை முடிக்க வேண்டியதுதான்... நாளை தெருவுக்கு வந்துவிடும் என் உடல்" என்று நினைக்கும் போதே அவருக்குள் ஒரு பெருமூச்சு எழும்பி கன்னத்தை நனைத்தது.
"அழுகிறேனோ"
"ஏன் இந்த அழுகை. நெஞ்சு கூட கொஞ்சம் வலிக்கிறதே. அப்படியென்றால் நான் போடுவதெல்லாம் பொய் வேஷமா... உயிரில்லாத என் உடல் என்னவாகும், நான் போனதைக் குறித்து யாரும் அழுவார்களா.."
"இல்லை.. இன்றோடு முடித்தே விட வேண்டும்" கதவை 'பட்' என்று சாத்தும் விழையும் போதுதான் அவர் அவளைக் கவனித்தார். யாரவள்?
"ஹையோ. இந்த விடியாமூஞ்சியை போகும்போதே பார்த்தாச்சு. இன்னிக்கு பொழுது எப்படிப் போகுமோ தெரியவில்லை? சனியன்." என்று சற்றே உரக்கவே திட்டியபடி ஸ்கூட்டியை நகர்த்தப் பார்த்தாள் அவள். பின் டயரில் முழுதும் காற்று இறங்கியிருந்தது.
"மேடம்... ஏதும் உதவி தேவையா" என்று கேட்டார் இவர்.
"ம்ச்" என்றபடி வேறு பதிலேதும் கூறாமல் விரைந்தாள் அவள்.
ஸ்டார் கோலம் போட்டுக் கொண்டிருந்த கருப்பையா இவரை பார்த்து புன்னகைத்தார். "என்ன சார். இன்னிக்கு எங்கேயும் போகலையா"
"இந்த ஆள் பேச ஆரம்பிச்சுடுவாரே" என்று மனசுக்குள் புலம்பியபடியே "இல்ல சார். வேலை ஏதும் இல்லை" என்றார்.
"இவ்ளோ நாள் பக்கத்துல இருக்கோம். உங்க பேரே தெரியாது சார். வக்கீலா சார் நீங்க.. நீங்க போடும் காபி வாசனை ஆளை தூக்கும் சார் ஹி ஹி " என்றபடி வீட்டுக்குள்ளேயே வந்து விட்டிருந்தார்.
வீட்டுக்குள் தொங்கிக் கொண்டிருந்த தூக்குக் கயிற்றைப் பார்த்ததும் "அம்மா.. மகமாயி.. இது என்ன.. என்ன சார்..." என்று திடுக்கிட்டார்.
தர்மசங்கடமாய்ப் போனது இவருக்கு.
"ஆமா உங்க பேரு என்னான்னு சொன்னிங்க"
"ராமன்.. பால் இன்னும் வாங்கப் போகலை சார்" என்றபடி வாசற் படிக்கு அருகில் நின்று கதவை நன்றாகத் திறந்து வைத்துக்கொண்டே சொன்னார் அவர்.
"நீங்க ராமாயணம் படிச்சிருக்கீங்களா..." என்றபடியே தரையில் அமர்ந்து கொண்டார் கருப்பையா "அந்த மகாமாயியே பார்த்து என்னை அனுப்பி வச்சிருக்கா" என்று புன்னகைத்தார்.
"மகமாயி எல்லாம் ஒன்னும் இல்லீங்க. இந்தக் கயிறு இங்கதான் மூணு வருஷமா தொங்கிட்டிருக்கு ... நான்தான் தொங்கலை" என்றார் ராமன்.
"ராமனை போல ஒரு ஆதர்ஷபுருஷன் யாருமே கிடையாது தெரியுங்களா.. கடவுள்னா அவருதாங்க"
"ம்ம். ஆனா பகவான் கிகவான் என்று யாருங்கிடையாது. ராமன் அன்னிக்கி ராஜாவா இருந்தார். அதுனால எல்லோருக்கும் அவரைத் தெரிஞ்சுது, இதிகாசம் படிச்சுட்டீங்க. அவரை மாதிரி ஆயிரம் பேர் இருக்காங்க லோகத்துல.. "
"பிரமாதமா பேசுறீங்க ராமன். பிராமணரா நீங்க... பேச்சுல தெரியுது. அதான். அது சரி.. அப்போ ராமன் வேண்டாம்.. சீதையை மாதிரி யாராவது உண்டா."
"498 A தெரியுமோ... இன்னிக்கு சீதைகளும் ராதைகளும் அதைத்தான் ஆயுதமா எடுத்துண்டு இருக்கா... அந்த சீதை மாதிரி கண்ணீர் விட்டுண்டு உக்காதிருக்க மாட்டா.. உங்க ராமருக்கும் லட்சுமணனுக்கும் desertion கேசும் சேத்து போட்டு போறும் போறும்னு எண்ண வச்சிருப்பா தெரியுமோ" என்று உரக்க சிரித்தார்.
கருப்பையா முகம் ஃபேர் அண்ட் லவ்லி இல்லாமலேயே சிவந்தது. "இப்டியே பேசிக்கிட்டு இருங்க.. ஒரு பய பொண்ணு தரமாட்டான்... தொலையட்டும்.. முப்பத்து முக்கோடி தெய்வங்கள் இருக்குன்னு சொல்லி இருக்கே உங்க புத்தகங்களிலே ... அதுல ஒன்னு கூடவா இல்லைன்னு சொல்றீங்க.. ராமாயணம் வேண்டாம். மகாபாரதத்துல நிறையா கேரக்டர் இருக்கு... அதுலேர்ந்து பேசலாம்.."
"ஸ்கூல் லீவா சார் இன்னிக்கு.."
"கிருஷ்ணன் எவ்ளோ பெரிய புத்திசாலி..."
"பரமார்த்தன்தான் போங்க.. அதுக்கு பேரு ராஜதந்திரம் சார்.. அப்டீன்னா நேருவும் பிஸ்மார்க்கும்தான் பகவான். அவரை ஏன் நமஸ்காரம் செய்யறதில்லை"
"துரோணாச்சாரியார்... எவ்ளோ பெரிய குரு"
"அவருக்கு நீங்க உசத்தி சார்... குறைஞ்சபட்சம் பாடம் சொல்லிதரலேன்னா கூட விரல வெட்டாம இருக்கீங்களே..."
"தான வீரன் கர்ணன்??"
"முட்டாள் ... இமோஷனல் முட்டாள் சார் அவன்"
கருப்பையாவுக்கு வேறு யாரும் நினைவுக்கு வரவில்லை. "கடவுளே யாரும் இல்லையோ... கடவுளும் ஒருவேளை மனுஷந்தானோ?" யோசிக்க ஆரம்பித்தார் கருப்பையா.
=================================================================================(அடுத்தது கடைசி பகுதி)
=================================================================================
மறுநாள் வாயிற்கதவை திறக்கும் போதுதான் அவள் நினைவுக்கு வந்தாள்.
"போய் அவட்ட ஒருவார்த்தை பேசிட்டு வந்துடலாம்.." என்று அவள் வீட்டை நோக்கி சென்றார். வீடு இன்னும் பூட்டியே இருப்பதை கவனித்தார் ராமன்.
பக்கத்துக்கு வீட்டு பெண்மணி "சுமன் ராத்திரியெல்லாம் வீட்டுக்கு வரலைங்க.. எங்கயும் போகாது... ஆபீசு முடிஞ்சு ஏழு மணிக்கெல்லாம் திரும்பிரும்.."
"அப்டீங்களா.. ஏதும் போன் நம்பர் இருக்கா" என்று கேட்டார் ராமன்.
"இல்லீங்க."
உறவுகள் யாருமின்றி தனித்திருக்கும் பெண் இரவெல்லாம் வீடு திரும்பவில்லை. என்னாவாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டே நகர்ந்து வந்தார். ஸ்கூட்டியிலேயே வண்டிசாவியை வைத்துவிட்டுப் போயிருந்தாள் சுமன். சைடு பாக்சைத் திறந்ததில் டிபன் டப்பாவும், விசிடிங் கார்டு பவுச் ஒன்றும் இருந்தது. அதிலிருந்த எண்ணைத் தொடர்பு கொண்ட போது அவள் சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளாகி அரசு மருத்துவமனையில் இருப்பதாகத் தெரிந்தது.
கருப்பையா ஸ்கூலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். "கருப்பையா சார். அந்தப் பொண்ணு ஆஸ்பத்திரியில் இருக்காம்.. யாருமில்லை பாவம். வரீங்களா போய் பாத்திரலாம்" என்றார்.
அசட்டு பிசட்டு என்று சிரித்தார் கருப்பையா. "ரொம்பதான் துடிக்கிறீங்க... திமிரு புடிச்ச பொண்ணுங்க அது" என்று ஒரு மூட்டையைத் தூக்கப் பார்த்தார். "ஒரு கை பிடிங்க ராமன்.." என்றார்.
"என்னது சார் அது.. இப்டி கனக்குது" என்றார் ராமன்.
"சாமி படங்கதான் சார்.. நீங்க நேத்து சொன்னீங்க பாருங்க.. அதான். சாமின்னு ஒன்னு இருந்தா என்னை இப்படி அனாதையாக்கி இருக்குமா. அதிர்ஷ்டம் ஒன்னு தான் வேணும் சார் வாழ்கையில"
ராமன் "கிடக்கட்டும் விடுங்க சார்" என்றார்.
"வாங்க சார். போயி பார்க்கலாம். பணம் கிணம் தேவைப்படுமா" என்றார் கருப்பையா.
"எதுக்கும் வச்சுக்குங்க சார். அவங்க ஆபிஸ்லேயும் ஏதும் செய்றாங்களான்னு தெரில. விசாரிச்சுக்கலாம். என்கிட்டே பத்து பைசா கிடையாது"
===========
இருவருமாய் சுமனை பார்க்கும் போது தலை கை கால் என்று கட்டு போடப்பட்டிருந்தது. அந்தப் பெண் கருப்பையாவை பார்த்து "நன்றி சார்" என்றாள்.
"எனக்கெதுக்குமா நன்றி. எதிர் வீட்ல இருக்காரே வக்கீலு, அந்தாளு விடிய காலையிலேர்ந்து உன்ன தேடிக்கிட்டு வந்துட்டாரு.. அவரு சொல்லித்தான் எனக்கே தெரியும். ஏதோ மருந்து வேணுமாம். வாங்க போயிருக்காரு. இன்னிக்கு டிஸ்சார்ஜு பண்ணிருவாங்க போல.. ?" என்று கேட்டார்.
"ஆபீசுல இன்னிக்கு வரை பணம் கட்டிட்டாங்க. மாலையில் டிஸ்சார்ஜு பண்ணிருவாங்க. யாரும் உதவிக்கு இல்லை.. எங்க போறதுன்னு தெரில சார்."
"சரிம்மா. இதான் என் போன் நம்பர். நான் ஸ்கூலுக்கு போகணும். அந்தாளு உன்கூட இருக்கேன்னு சொன்னாரு.. தெய்வாம் மனுஷ ரூபேனாம்னு சொல்வாங்க. தெய்வம்னு தனியா யாரும் இல்லைம்மா. சாமியே கிடையாது. ராமன் மாதிரி ஆளுங்கதான் தெய்வம்"
ராமன் அதற்குள் வந்து விட்டார். சுமன் அவரை நோக்கி "ரொம்ப நன்றி சார். நீங்கதான் கடவுள் மாதிரி உதவி செய்யறீங்க" என்று கையெடுத்து கும்பிட்டாள்.
கையில் இருந்த ஜூஸை டேபிள் மேலே வைத்து விட்டு, அவளை நோக்கி "நானா.. அந்தக் கடவுள்தாங்க என்னை காப்பாத்தியிருக்கார். இல்லன்னா நேத்தோட என் கதை முடிஞ்சிருக்கும். சும்மா ஏதும் நினைவில் இருக்கும் ஒரு கார் நம்பர் சொல்லுங்க. அம்பதாயிரம் வரைக்கும் நஷ்ட ஈடு கேஸ் போட்டு வாங்கிரலாம்" என்றார் ராமன்.
"அதெல்லாம் வேணாம் சார். பணமா முக்கியம். மனுஷங்கதான் சார் வேணும்" என்றாள் அவள்.
ராமன் வாங்கி வந்த ஜூஸை கருப்பையா ருசித்துக் கொண்டிருந்தார்.
முற்றும்.
11 comments:
மக்கள்ஸ். ஏதும் பார்த்து தீர்ப்பு சொல்லுங்க. :))
கொஞ்சம் over-edit ஆனா உணர்வு இருக்கு. சுமன் பகுதிகள் நிறையா வெட்டி போட்டாச்சு.
சுந்தர்: அவ்வ்வ்... நண்பனா நீ??
உண்மையான மனுசங்க மட்டும் போதாது! பணமும் வேணும். பணம் மட்டும் போதாது உண்மையான மனுசங்களும் வேணும்.
ஆனா இந்த இரண்டும் யாருக்கும் ஒரு சேர கிடைக்காது.
1. கதையில ஒரு தொய்வு இருக்குங்க.
2. நாத்திகவாதி, ஆஸ்திகவாதி, நேர்மை அப்படி இப்படினு இருந்தாலும் கதை ஏனோ மனசுல ஒட்டலைங்க.
3. ராமன் கடவுள் காப்பாத்தினாருனு சொல்றதும், கடவுளை சொன்னதும் தன்னோட நேர்மைய தொலைக்கிறதா சொல்றது போல இருக்குற கருத்துல தவறு இருக்குதுங்க.
4. மனிசனோட தேவைக்குத்தான் கடவுள் அப்படின்னுட்டு கருப்பையா மாறுரது அத்தனை உறுதியா இல்லைங்க.
இப்படி நினைச்சப்ப மாறுரவங்க மனுசங்க இல்லைங்க, அதான் சுமன் சொல்றா, மனுசங்கதான் வேணும் னு. :)
இவர் அவர் அவள் - ஒரு தரம் படிக்கலாம்.
செம ஃபார்மல இருக்கீங்க போல
தொடர்க !
படித்தேன் நல்லாருக்கு.
மூன்றையும் முதலில் இருந்து வாசிக்கும் போது அற்புதமாய் வந்திருக்கு வித்யா.
மூன்றாவது பகுதியை ரொம்ப எடிட் பண்ணிட்டீங்கலோன்னு இருக்கு. :-(
சுமன் பகுதி மிக அவசியமானது.
crispy- யை consider பண்ணும் போது,ஆன்மா அடிபடும்(இல்லை என்று நீங்கள் சொன்னாலும்)
ஐந்து பாகங்களாக இருந்தால்,என்ன வந்து விட போகிறது?
மொத்தத்தில்,
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பாஸ்!(பாஸ்?)
யெஸ் பாஸ்!
ராதாகிருஷ்ணன் சார், காமராஜ் சார் : :) ஏமாத்தி விட்டதுக்கு சாரிங்க. ஸ்ஸ் என்ன சொல்ல..?
பக்குவம் பத்தலை ராஜாராம் அண்ணே. இன்னும் எழுதி எழுதி பாக்கணும். வெட்டி வெட்டி எறியணும். எனக்கே தோணித்து, சுமன் ரொம்ப காணாம போயிட்டாளோன்னு. பார்க்கலாம், கற்றல் வழி... கொஞ்சம் ஓவர் எடிட் ஆகி ... ஹி ஹி யாகிடுச்சு. :)
நேசன் சொன்ன மாதிரி "தொடர்க !"" :)) நேசன் பின்னூட்டம் பாத்தீரா... நக்கல்ஸ் மன்னன் :)) கொஞ்சம் என்னான்னு கேளுங்கண்ணே ...
நல்லா வந்துருக்கு வித்யா ! மூவரையும் சேர்த்து ஒரு முடிச்சு .எழுதுங்கள்
கதை சுமார் ரகம் தான்,காரணம் என்னோட எதிர் பார்ப்பு அதிகமாக இருந்து இருக்கலாம், இல்லை எனக்கு புரியாம இருந்து இருக்கலாம்,
இந்த இரண்டு காரணங்களும் உண்மையாகும் பட்சத்திலே நீங்க இந்த கதையை இந்தியிலே எழுதி இருக்கலாம்.
மூணு கட்டைகளையும் அப்படியே விட்டதுக்கு பதிலா, ஒரு கட்டை, இன்னொரு கட்டையை அடிச்சி சவக்கட்டை ஆக்கி இருந்தா ஒரு சோக இழையோட மனசிலே நிக்கும், ஒரு கட்டையும், இன்னொரு கட்டையும் சேர்த்து வைத்து இருந்தால் ஒரு புரட்சியா இருந்து இருக்கும்.
கட்டைகள் மூணும் அப்படியே இருக்கிறதாலே, ஆரம்பித்த இடத்துக்கே வந்த மாதிரி இருக்கு, இதோட விமர்சனம் முடியுது சோடா குடிக்கணும் போல இருக்கு...
சரி, இவ்வளவு பேர் இவ்வளவு அடிச்சாலும் தாங்கறே. இன்னும் கொஞ்சம் வாங்கிக்கோ....
முதலில், சக்கரை:
நல்ல கரு: ஒரு பார்வையில் ஒன்றுக்கொன்று அடிப்படையில் முரணாக தோணினாலும், ஒன்றோடொன்று ஒன்ற முடியும் :)
களம்: 3 பாத்திரங்கள்; சின்ன தெரு கோடி - சிறுகதைக்கு கச்சிதம்.
இப்ப கொஞ்சம் மருந்து:
Characters were built to novel level, this distracted the thin thread that moves the short story. When you build short story, its the thread that should be more prominent and should leave the character build up to the readers imagination, after building only to the level required for your story. இங்கிலீஷ் மருந்து - மனசு கலைக்காம கொடுக்க வசதி.
இப்ப இன்னும் கொஞ்சம் சக்கரை:
நீ நல்லா திறம்பட செய்வ. இன்னும் கொஞ்சம் அதற்குரிய முயற்சி செய். திறந்த மனசோட, உன்னை நீயே தட்டி கேள் & தட்டி கொடு. உயர்வாய் இன்னும்.
.... இது அலுவலில் appraisal season. விமர்சனம் பண்ணுகிற வாரம்...அதான் உனக்கும் ஒன்னு :)
நேற்று, பாகம் 2 படித்துவிட்டு பாகம் 1 நாடிப் படித்து, இன்று காலை பாகம் 3 தேடி வந்து காணாமல் பின்னூட்டம் இட்ட கதை பாகம் 2 பின்னூட்டங்களில்.
இன்று இரவு, "இ.அ.அ. - கடைசிப் பாகம்" என்று கண்டு வாசிக்கத் தொடங்கினால், முதற் பாகம் அப்படியே மீண்டு பதிவாகி இருந்தது.
------------------------------
தொடரும்
------------------------------
என்று வேறு முடிந்திருந்தது. ஆகா, சூப்பர் டெக்னிக்கா இருக்கே! இவரவரவள் தத்தம் நிலைமை/ நிலைபாடுகளில் மாறுதல் இல்லாமல் அப்படியே தொடர்ந்தார்கள் என்பதை இப்படிப் பின்நவீனத்துவமாக யாரால் சொல்ல முடியும் என்று வியந்...
பாகம் 2
அடுத்தது கடைசிப் பகுதி
ஏமாந்துவிட்டேன்.
சரி, வந்ததுக்கு ஏதாவது சொல்ல வேண்டாமா?
1) கருப்பையா வாத்தியாரைக் குறிக்கும் போதெல்லாம் 'இவர்' என்றே வரவேண்டியது அவசியம்.
2) மூவரும் தத்தம் கொள்கைகளில் மாறிவிடுகிறார்கள். ஆக, அவர்கள் கேரக்டர் ஆக நிற்கவில்லை. அவர்கள் மாறிப் பேசியிருக்க வேண்டிய அவசியம் என்ன? சம்பவத்தில் அது வாசகனுக்கு விளங்கி வர வேண்டும். ஓரளவுக்கு வந்திருக்கிறது. அந்த அக்கறையோடு எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்
சுமன் பாத்திரம் நீங்கள் கூறுவது போலவே ...இன்னும் கொஞ்சம் விளக்கங்கள் இருந்திருக்கலாம்...
ஒருவேளை இன்னும் ஒரு பகுதி வந்திருக்கலாமோ...மற்றபடி கதையின் கரு நன்று..
Post a Comment