டிஸ்கி: இது முற்றிலும் என் சொந்தக் கருத்துதான். ஈவெராவை நான் படித்ததில்லை, அவரை எனக்கு பிடிக்காது என்பதால் இனியெப்போதும் படிக்கவும் மாட்டேன். ஈ.வெ.ராவுக்கும் எனது கருத்துக்களுக்கும் சம்மந்தம் இல்லை. அப்படி நீங்களாக நினைத்துக் கொண்டால் அது லதா மங்கேஷகர் பாடகியானதற்கு ஒரு காரணியாக தன்னை நினைத்துக் கொள்ளும் சீமான் என்று நான் சொல்வேன். பரவாயில்லையா? ஈவெரா அபிமானிகள் என்னை புறக்கணித்துவிடலாம். உங்கள் அளவுக்கு அறிவு இல்லை எனக்கு என்பதை ஏற்கனவே ஏற்றுக் கொள்கிறேன். உங்களுக்கெல்லாம் உட்கார்ந்து வரிவரியாக பதில் சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன். Don't waste your time trashing here.
----------------------------------------------------
பெண்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பங்களைச் செய்ய சுதந்திரம் வேண்டும் என்று போராடும் அதே வேளையில், ஏதோ ஒரு சமூகச் சொத்து போல பெண்கள் தங்கள் உடலை (கருப்பை) என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இன்றும் சமூகம் காரசாரமாக விவாதங்களை நடத்துவது முரண்பாடாக இல்லையா? நான் பன்னிரண்டாவது படிக்கும் போது, வேலைக்கு போய் கொண்டிருந்த ஒரு பெண் தாய்பாலை பாட்டிலில் அடைத்து கொடுத்த காரணத்துக்காக 'நீயெல்லாம் ஒரு அம்மாவா?' என்று கேட்ட குடும்பத்தைக் கண்டேன். பெண்ணியம் மற்றும் பெண்ணுடல் பற்றிய சமூகத்தின் பார்வை குறித்த அதிர்ச்சியைக் கொடுத்த கணம் அது.
பெண்கள் அனைத்து உரிமைகளுடன் கூடிய முழுமையான தனிநபர்களாக இல்லாமல், அவர்களின் உடல் தோற்றத்தை வைத்து எடைபோடப்படும் போதும், மற்றவர்களின் ஆசைகள் அல்லது தேவைகளை நிறைவேற்றுவதற்கான கருவிகளாக கருதப்படும் போதும் அவர்கள் objectify செய்யப்படுகிறார்கள். ஒரு பெண்ணின் மதிப்பு அவளது தோற்றத்தில் உள்ளது என்ற எண்ணத்தை வலுப்படுத்த, நம்பத்தகாத அழகு standards இருக்கின்றன.
பெண்கள் பெரும்பாலும் கார்கள் முதல் கொலோன் வரை பொருட்களை விற்பனை செய்வதற்கான eye-candyகளாக சித்தரிக்கப்படுகிறார்கள், அவர்களின் திறமைகள் அல்லது புத்திசாலித்தனத்தை விட அவர்களின் உடல் அமைப்பு கவனம் பெறுகிறது. அலுவலகங்களில் கூட அவர்களின் தொழில்முறை பங்களிப்புகளை குறைக்கும் வகையில் பெண்கள் அவர்களின் திறமையை விட அவர்களின் தோற்றத்திற்காக அதிகமாக மதிப்பிடப்படுகிறார்கள்.
ஆடை அணிவது கூட விகிதாசாரமற்ற முறையில் பெண்களைக் குறிவைக்கின்றன. சமூகம் revealing dressingகை விமர்சிக்கும் அதேவேளையில், அவ்வகை உடையலங்காரங்களை அழகுக்கான standardsகளாக முன்னிறுத்தி இளம் பெண்களின் பொருத்தமான உடையாக வலியுறுத்துகின்றன. அதே நேரத்தில் பெண்கள் தேவையற்ற கவனத்தை பெறுவதைத் தவிர்க்க ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்துகொள்ள வேண்டும் அல்லது உடை அணிய வேண்டும் என்றும் சமூகத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
இவையெல்லாம் பெண்களை ஆணின் விருப்பத்திற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு காட்சிப்பொருளாக மட்டுமே அவளது மதிப்பைக் குறைத்து விடுகிறது.
பெண் தலைவர்கள்/பிரபலங்கள் பெரும்பாலும் அவர்களின் கொள்கைகள் அல்லது சாதனைகளை விட அவர்களின் தோற்றம் அல்லது தனிப்பட்ட வாழ்க்கை அடிப்படையில் மட்டுமே ஆராயப்படுகின்றனர்.
அவளுடைய தொழில்முறை லட்சியங்களை விட பெண்கள் குடும்பப் பொறுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற ஒரே மாதிரியான கருத்துக்கள் தொடர்கின்றன. உடைமைகளாகக் கருதப்படும் எந்தவொன்றுமே அதன் தனித்துவத்தை இழக்கின்றது.
பெரும்பாலான சமூகங்களில் பெண்கள் அவர்களின் வரதட்சணை மதிப்பு அல்லது கருவுறும் திறனுக்கு மதிப்பளிக்கப்படுகிறார்கள். அங்கே அவர்கள் பொருளீட்டும் ஒரு வழியாகவோ அல்லது இனப்பெருக்கத்துக்கான ஒன்றாகவோ objectify செய்யப்படுகிறார்கள்.
திரைப்படங்கள் மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகளில் உள்ள பெண் கதாபாத்திரங்கள் hyper-sexualised ஆக இருக்கின்றன. ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண் கதாபாத்திரங்களின் முக்கியத்துவத்தில் குறைவான கவனம் செலுத்தப்படுகிறது.
பெண்களுக்கான பாத்திரங்கள் பெரும்பாலும் காதல் வயப்படும் ஒன்றாகவோ, விமர்சனம்/கேலிக்குறியதாகவோ அல்லது அழுமூஞ்சித்தனமான ஒன்றாகவோ வரையறுக்கப்படுகின்றன.
அப்ஜெக்டிஃபிகேஷன் என்பது ஆழமாக வேரூன்றிய ஒரு பிரச்சினையாகும், இது பெண்களின் தனித்துவத்தை அழிக்கிறது. சுயமரியாதை, சமத்துவம், தன்னம்பிக்கை போன்ற தனி நபர் ஆற்றல்களை வளர்க்கும் முயற்சிகளை நோக்கி முன்னேறுவதைத் தடுக்கிறது.
நயன்தாரா செய்யும் ஒவ்வொன்றும் பேசுபொருளாக ஆகும் காரணம் அவரது தன்னம்பிக்கையான நிலைப்பாடு, அல்லது அப்படி இருப்பது போன்ற தோற்ற மயக்கத்தை உண்டு பண்ணி வைத்திருக்கிறார். ஆனால் உண்மையாகப் பார்த்தால், அவரும் இந்த objectificationனுக்கு அப்பாற்பட்டவர் இல்லை. சினிமாவுக்கான body standardsகளைப் பெற அவர் பல்வேறு அறுவைசிகிச்சைகள் செய்து கொண்டார், அதே போலத்தான் இந்த வாடகைத் தாய் ஏற்பாடும் இருக்கலாம். அல்லது வேறு மருத்துவ காரணங்களும் இருக்கலாம். இப்போதும் கூட அவரது மார்கட்டு சரிந்து விட்டது என்று எக்காளமாய் எழுதும் ஆட்கள் இருக்கிறார்கள்தானே.
நயன்தாரா எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், இப்படி யோசிக்கும் மனது எந்தளவு சாக்கடைப் புழுவுக்கும் கீழ்த்தரமானது என்பதை உணர்ந்திருந்தால் உங்கள் வாய் மட்டுமல்ல உடல் முழுதும் துர்நாற்றம் எடுக்கும் ஒன்றாகவே உணர்ந்திருக்கக்கூடும். அப்படி எல்லாம் யோசிக்கும் மூளை என்ற ஒன்று இருந்தால் தானே? கழுத்துக்குக் கீழ் சதைபிண்டமாக ஒன்று இருந்தால் போதும் என்ற பார்வையில் வாழும் போது, சிந்தனை வேறு எப்படி போகும்?
ஒரு பக்கம் கணம் சமூகம் வாடகைத் தாய்களை அவர்களது தாராள மனப்பான்மையின் காரணமாக தேவதைகள் என்று கொண்டாடுகிறார்கள். அடுத்த பக்கமே, குழந்தைகளைப் பெற்றெடுக்க இஷ்டம் இல்லை என்று சொல்லும் சுதந்திரம் பெண்களுக்கு இருக்க வேண்டுமா என்று அவர்களே கேள்வி எழுப்புகிறார்கள். ஏனென்றால், வெளிப்படையாகவே, பெண்ணுடல் மற்றும் அவளுடைய கருப்பை அவளது பெண்மையை நிர்ணயிக்கிறது என்பது பொதுக் கருத்துடனேயே அவள் வாழ்வு முடிந்து விடுகிறது.
குழந்தையைப் பராமரிப்பது முதல் அவர்களை பெரியவர்களாக்கி வளர்ப்பது வரை, மற்ற வீட்டு வேலைகளோடு அவள் மீது திணிக்கப்படுகிறது. இதில் அவள் தன் தனித் திறன்களை வெளிக்காட்ட வேண்டும் என்றால், இவை அனைத்தையும் முடித்து விட்டு பின் எஞ்சி இருக்கும் நேரத்தில் தான் செய்ய முடியும் என்பது கண்ணுக்குத் தெரியாத காற்சங்கிலி. பல பெண்கள் சோர்ந்து போவது இங்கேதான்.
இவ்வளவு செய்த பின்னும், ஆண்களுக்கு இருக்கும் ரிடயர்மென்ட் பெண்களுக்கு கிடையாது. ஏதோ ஒரு விதத்தில் சமையல்கட்டை அவளுக்கான பாதுகாப்பு கவசமாக உருவாக்கி 'அம்மா-கை சமையல்' என்ற போலி பிம்பத்தில் சிக்க வைத்திருக்கிறார்கள். ஏன், ஹோட்டல்களில் எல்லாம் ஆண்கள் சமைப்பது இல்லையா என்றால், ஆமாம், ஆனால் காய் நறுக்குவது முதல் பாத்திரம் கழுவுவது வரை ஒவ்வொரு வேலைக்கும் ஒரு ஆள். வீட்டில் சும்மாதானே இருக்கிறாய் என்ற எகத்தாளம் கூட வராது.
வாடகைத் தாய்மை, பெண்களின் விடுதலை, ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் உரிமை மற்றும் கருப்பை சுதந்திரம் ஆகியவை ஒரு பெண்ணுக்கு தன் உடல் மீதான உரிமை மற்றும் சமூக விதிமுறைகள் பற்றிய விவாதங்களில் சிக்கலாகப் பின்னிப் பிணைந்துள்ளன.
பெண்களின் விடுதலை என்பது பெண்கள் மீதான ஒடுக்குமுறை பார்வைக்கு எதிராக போராடுகிறது. வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் சமத்துவத்திற்காக, பொறுப்புக்களைப் பகிர்வதற்கான போராட்டம். இது ஆண்களை எதிர்த்து செய்யப்படும் போர் இல்லை. இது பெண்கள் மீதான கீழ்த்தரமான பார்வை கொண்ட ஒவ்வொருவரையும் காலாவதியான ஒன்றாக ஆக்கவேண்டிய கடமை. அது பணியிடத்தில் வேறுபாடு, கருப்பை உரிமைகள் அல்லது சமூக விதிமுறைகள் என ஒரு பெண்ணின் விதியைக் கட்டுப்படுத்துவதற்கான எதையும் உடைக்கும் உரிமையை காட்டுகிறது.
கருப்பை மீதான உரிமை என்பது ஒரு பெண்ணின் தன்னிச்சையான முடிவுக்கான அதிகாரம் மற்றும் அவளது உடல் தொடர்பான முடிவெடுக்கும் ஆற்றலைக் குறிக்கிறது. இதில் கருவுறுதல், பிரசவம், கருத்தடை, கருப்பை சிகிச்சைகள், வாடகைத் தாய், கருக்கலைப்பு மற்றும் ஒட்டுமொத்த இனப்பெருக்க ஆரோக்கியம் ஆகியவை அடங்கும். இது உடல் மீதான அதிகாரத்தை வலியுறுத்துகிறது. அதாவது புறவயமான வற்புறுத்தல், பாகுபாடு அல்லது சமூகத் தீர்ப்பிலிருந்து விடுபட்டு, தனது உடல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தீர்மானிக்க ஒரு பெண்ணுக்கு மட்டுமே அதிகாரம் இருக்க வேண்டும் என்று கோருகிறது.
இந்த அடிப்படையில் வாடகைத் தாய் தன் முடிவை எடுப்பதற்கு ஒரு பெண்ணின் தனிப்பட்ட அல்லது அவளது தேவைகளின் அடிப்படையிலான விருப்பத்தை எடுத்துக்காட்டுகிறது. இங்கே அவளது முடிவுகள் பணத்துக்காக எடுக்கப்பட்டாலும், அல்லது அன்பினால் இலவசமாகவே ஏதோ ஒரு சக குடும்பத்துப் பெண்ணால் செய்யப்படுகிறது என்றாலுமே பெரும்பாலும் தார்மீக நெறிமுறைகள், எளியோர் மீதான சுரண்டல் மற்றும் தன் முடிவுகள் மீதான அதிகாரம் பற்றிய விவாதங்களைத் தூண்டுகிறது. அத்துடன் அவரது உடலைப் பற்றி முடிவெடுக்கும் உரிமை பற்றியும்தான்.
இவை ஒவ்வொன்றும் கூட்டாக பெண்களின் வாழ்க்கையை நீண்ட காலமாக ஆன்மா இல்லாத ஒரு உடலாக மட்டுமே பார்க்கும் சமூக கட்டமைப்புகளை உடைப்பதை வலியுறுத்துகின்றன. கருத்தரிப்பது, தத்தெடுப்பது அல்லது வாடகைத் தாய் முறையைப் பயன்படுத்துவது, என்பதெல்லாம் சமூக அல்லது குடும்ப அழுத்தங்களிலிருந்து விடுபட்ட பெண்ணின் முடிவு மட்டுமே இருக்க வேண்டும்.
ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் உரிமை என்பதில், அவளது உடல், உணர்ச்சி மற்றும் சமூக அடையாளத்துடன் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளது. இது குறித்து முடிவெடுக்க ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமை உண்டு என்பதை மறந்து விட்டு, 'அம்மா தெய்வம்' என்ற உட்பட்ச கற்பனையான அரியணையில் ஏற்றிவிட்டு அவளை அவளது விருப்பத்தை மீறிய செயல்களை செய்யக் கட்டாயப்படுத்தும் எதுவுமே பெண்களுக்கு எதிரானவைதான்.
கருப்பை உரிமை என்பது சில சமூக விரோத சிந்தனையாளர்களால் யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்வது என்று திரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சரியான மகப்பேறு பராமரிப்பு, கருவுறுதல் சிகிச்சைகள் அல்லது கருத்தடைகளைப் பெறுவதை உறுதிசெய்து, அவர்களின் விருப்பத்தை ஆதரித்து, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் என்பதே கருப்பை உரிமை. ஒரு பெண் பூப்படையாமல் இருந்தாலும், மருத்துவக் காரணங்களால் கருவுற முடியாத நிலையில் இருந்தாலும், இல்லை அவள் விருப்பத்தின் பேரிலோ வேறேதோ காரணங்களாலும் கூட கருவுறும் விருப்பமில்லாமல் இருந்தால் அவள் உரிமைகளை பாதுகாத்தல் இந்த சமூகத்தின் கடமை. இந்த உரிமையானது உயிரியல் திறனைப் பற்றியது மட்டுமல்ல, எப்போது, எப்படி, அல்லது தான் பெற்றோராக வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுப்பதில் மற்றவரின் வற்புறுத்துதல், பாகுபாடு அல்லது களங்கம் ஆகியவற்றிலிருந்து சுதந்திரம் பற்றியது.
பேச வேண்டியவற்றைப் பேசாமல், யாருடன் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதரில் உறவு கொள்ளலாம், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்ற பாலியல் ரீதியில் மட்டுமே பரப்பப்படும் கருத்துக்கள் எல்லாமே பெண்ணுடல் மீதான சுரண்டல்கள் தான். இங்கே பொறுப்புக்களைச் சுமக்க மறுக்கும் ஒரு ஆணின் விருப்பம் மட்டுமே நிறைவேறுகிறது. அந்தப் பெண்ணின் நிலை என்னவாகும்?
உடலுறவு மட்டுமே உறவை நிலைநாட்ட ஒரே வழி அல்ல. எப்படி?
நாம் காதல் என்று அழைப்பது உண்மையில் பரஸ்பர லாப நஷ்டங்களைக் கணக்குப் போட்டு செய்யப்படும் ஒரு திட்டம்தான். காதல் என்பது ஒன்று சேர்வதே தவிர, பிரிந்து போவது அல்ல என்று நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நாம் வாழ்க்கையை வாழ்க்கையாக பார்க்கவில்லை. நம் கல்வி முறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்று எல்லாமே கன்ஸ்யூமரிஸம் அடிப்படையில் எப்படியெல்லாம் எல்லாவற்றையும் நமது நன்மைக்காக எப்படிப் பயன்படுத்துவது என்று மட்டுமே திணிக்கிறது.
ப்ரோபயாடிக் பாக்டீரியாவிலிருந்து கிரகத்தின் மிகப்பெரிய விலங்கான சுறாவின் எலும்புகள் மட்டுமல்ல சக மனிதர்கள் வரை அனைத்தையும் நமது நன்மைக்காக பயன்படுத்த விரும்புகிறோம். இந்த பூமியையே நமது நன்மைக்காகப் பயன்படுத்த விரும்புகிறோம். இதில், துரதிர்ஷ்டவசமாக, இன்று மக்கள் 'உறவுகள்' என்று அழைப்பதிலும் உண்மையில் உள்ளது transactionsதான். நீ இதை எனக்குக் கொடு, நான் உனக்கு அதைத் தருகிறேன். நீ எனக்கு இதைத் தராத பட்சத்தில் நான் அதை உனக்குத் தரமாட்டேன் என்று ஒவ்வொன்றையும் கணக்குப் போட்டு, எடைகளை சமப்படுத்துவதில் உறவுகளின் அன்பு கரைந்து போகிறது.
அதனால் தான் transactionsகளின் காலாவதி தேதியின் அடிப்படையில் காதல் தீர்ந்து போகும் போது விவாகரத்துக்கள் பற்றிய யோசனைகள் பெறுகி வருகின்றன. ஒரு transaction எவ்வளவு காலம் நீடிக்கும்? அதன் மதிப்பு இருக்கும் வரைதானே. நாம் அறியாத உண்மையான் வாழ்க்கைப் பகிர்வின் ஆழம் வேறு. உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக நீங்கள் ஒருவரை சேர்க்க விரும்பினால், உங்களில் ஒரு பகுதியை நீங்கள் விட்டுக்கொடுக்க வேண்டும். அதுதான் காதலில் விழுதல், காதலில் பறக்க முடியாது, காதலில் நடக்க முடியாது, ஆனால் காதலில்விழ முடியும்.
ஆனால், பெரும்பாலான மக்களுக்கு, இது ஒரு டிரான்சாக்ஷனல் திட்டமாக மாறிவிட்டது - நான் விரும்புவதை எவ்வாறு பெறுவது? காதல் என்பது நீங்கள் விரும்பியதைப் பெறுவது அல்ல. லாபத்தைப் பற்றி நினைக்கும் தருணத்தில், காதல் மறைந்து போகிறது. ஹார்மோன்கள் காரணமாக மட்டுமே, ஈர்ப்பு உண்டாகிறது. ஒன்று சேர்கிறார்கள், இல்லையெனில், சமூகங்கள் கட்டமைக்கப்பட்ட விதத்தில் இணையாக மாறுகிறார்கள். காதலுக்கு அங்கே இடமேயில்லை. இந்த ட்ரான்சாக்ஷன்களில் உங்களிடமிருந்து நான் எதைப் பெற முடியும் என்பதைப் பற்றியது மட்டுமே எஞ்சி நிற்கிறது. அப்படியானால், இயற்கையாகவே நீங்கள் ஒருவரிடமிருந்து மகிழ்ச்சியைப் பெற முயற்சிக்கிறீர்கள். என்றால், அது நடக்காது. சிறந்ததை பகிர்ந்து கொள்ளும் போதே காதல் தன் வேலையைச் செய்யும்.
நாம் உறவு என்று கூறும்போது, மற்ற நாடுகளில் அது உடல் சார்ந்த உறவு.. இணைகளின் உறவையே குறிக்கிறது. ஆனால் இந்தியாவில் அது பல விஷயங்களாக இருக்கலாம். அது நம் பெற்றோருடன், நம் உடன்பிறந்தவர்களுடன், நம் நண்பர்களுடன், குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே, என பலவிதமான உறவுகள்.
ஏனெனில் உடல் என்பது உறவுகளை நிறுவுவதற்கான ஒரே வழி அல்ல! அறிவுபூர்வமாக நீங்கள் உறவுகளைப் பேண முடியும், உணர்வுபூர்வமாக நீங்கள் உறவுகளைப் பேண முடியும்.
அறிவுபூர்வமான உறவுகளும், உணர்ச்சிபூர்வமான உறவுகளும் உடல் உறவை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும். எப்படி? வெளிப்படையாகவே சொன்னால், உடல்கள் புறவயமாக மட்டுமே இணைய முடியும், இது உறவு அல்ல. உடலைத் தாண்டிய உறவை ஏற்படுத்த மனமும் உணர்ச்சியும் தேவை, இல்லையா? அதனால்தான் உடலால் இல்லாவிட்டாலும், மனதாலும் உணர்ச்சிபூர்வமாகவும் இணையும் இவ்வகை உறவுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை ஆகின்றன. அப்போதுதான் வாழ்க்கை சக்திவாய்ந்ததாக மாறும், அந்த உறவு மட்டுமே உங்கள் இருப்புக்கு அர்த்தமுள்ளதாக உங்களுக்குத் தெரியும்.
நாகரீக சமூகம் பல இணைகளை அங்கீகரிக்கவில்லை? அத்தகைய உறவுகளில் ஈடுபடும்போது ஒருவர் தங்களுக்கு தாங்களே உளவியல் ரீதியாக என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்?
பல வாழ்க்கைத் துணைகள் என்ற கருத்து வரலாற்று ரீதியாக சமூகத் தேவைகளிலிருந்து எழுந்தது. முந்தைய காலங்களில், ஆண்கள் பெரும்பாலும் போர்கள் அல்லது ஆபத்தான படையெடுப்பு தாக்குதல்களில் இறந்தனர். பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். சமூகக் குழுக்களுக்குள் குழுப்பாதுகாப்புக்காக ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொண்டனர். தொடர்ச்சியான குழந்தைப்பேறு காரணமாக வீட்டுக்குள்ளேயே இருக்கும் பெண்கள், உயிர்வாழ்வதே சவாலாக இருக்கும் படையெடுப்புக்கள் நிறைந்த உலகில் ஆண் பாதுகாப்பை நம்பியிருந்தனர்.
இன்று, பாலின மற்றும் மக்கள் தொகை விகிதங்கள் ஏறத்தாழ சமநிலையில் உள்ளன. இப்போதும் அத்தகைய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவது சமூக குழப்பத்தை உருவாக்கும். அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாதபோது, நட்பு-தோழமை போன்ற மக்களின் நாகரீக நடத்தை உடைந்து போகிறது. இத்தகைய ஏற்பாடுகள் மோதல் மற்றும் சமத்துவமின்மைக்கு வழிவகுக்கும், குறிப்பாக பெண்களுக்கு, அவர்களின் சமூக நிலையை மோசமாக்கும்.
உளவியல் அடிப்படையில் பார்த்தால், உடல் என்பது சதை மற்றும் ரத்தத்தைக் காட்டிலும் மிக பெரிதானது. இது பரிணாமங்களின் நினைவுகளைச் சுமக்கும் ஆற்றல்களின் கட்டமைப்பு. பல இணைகளைக் கொண்டவர்களுக்கு இந்த கட்டமைப்பை உடைப்பது முரண்பட்ட நினைவுகளை அறிமுகப்படுத்துகிறது, உணர்ச்சி மற்றும் உடலின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கிறது.
வரலாற்று ரீதியாக, திரௌபதி போன்ற உருவகங்கள் இதை விளக்குகின்றன. அவளது வாழ்க்கை கொந்தளிப்பு நிறைந்தது. அவளது வாழ்க்கை உறவுகளின் சிக்கலில் இருந்து உருவானது. அத்தகைய உறவுகள் தனிநபர்களையும் சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கும் என்பதை அவளது நிலைமை எடுத்துக்காட்டுகிறது. ஒருவரின் உடல் ஆற்றலைப் பேணுவது உயிர்வாழ்ந்திருப்பதற்கு அப்பால் தங்கள் வாழ்க்கையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டவர்களுக்கு அவசியமானது.
திருமணம் என்பது மனிதனின் உடல், உணர்ச்சி, உளவியல், சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகளிலிருந்து எழுகிறது. உடலோடு மனமும் முதிர்ச்சியடையும் போது, இந்த தேவைகள் உருவாகின்றன. எட்டு வயதில், திருமணம் என்ற எண்ணம் அபத்தமானது. 14 வயதிற்குள், அது கொஞ்சம் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடும், 18க்குள் திருமணம் பற்றிய அபிப்பிராயங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களைப் பொறுத்தது.
இன்று, பொருளாதார மற்றும் சமூக சுதந்திரம், குறிப்பாக பெண்களுக்கு, திருமணம் செய்வதற்கான சில சமூக அழுத்தங்களை நீக்குகிறது. போலவே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டிய அழுத்தங்களையும்.
இருப்பினும், பிற தேவைகள் உள்ளன. உணர்ச்சி ரீதியான தோழமை, உளவியல் ஆதரவு மற்றும் உடல் நெருக்கம். ஒவ்வொரு தனிநபரும் இந்த தேவைகளை சமூக அல்லது வெளிப்புற அழுத்தங்களின்றி, தெளிவுடன் மதிப்பீடு செய்ய வேண்டும்.
லிவிங் டுகெதர் போன்ற நவீன வாழ்வுமுறைகள் பாரம்பரிய கட்டமைப்புகளைத் தவிர்த்துவிடலாம் ஆனால் அடிப்படை மனித உளவியல் அமைப்பை மாற்றாது. ஒரு உறவு உணர்ச்சி மற்றும் உடல் நெருக்கத்தை உள்ளடக்கியதாக இருந்தால், அது ஒரு சான்றிதழ் இல்லாமலேயே திருமணம் போன்றதுதான். இருப்பினும், இணைகளை புதிது புதிதாக மாற்றும் போது, அத்தகைய வகையில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் உளவியல் குழப்பத்தையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் உருவாக்கலாம். ஏனெனில் உடல் வலுவான நினைவாற்றலைக் கொண்டுள்ளது, மனதளவில் மட்டுமல்ல, ஆற்றலிலும்.
வரலாற்று ரீதியாக, உடல் நெருக்கம் புனிதமானதாகக் காணப்பட்டது, ஏனெனில் அது உடலின் நினைவுகளில் ஆழமான முத்திரைகளை பதிக்கிறது. இதுபோன்ற பல முத்திரைகள் உடல் நினைவுகளைக் குழப்பி, உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும். ஒருவரின் மகிழ்ச்சியையும் தெளிவான சிந்தனையையும் பாதிக்கலாம். அதனால்தான் ஆன்மீக உயர்வை நாடுபவர்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, பிரம்மச்சரியத்தைத் தேர்வு செய்கிறார்கள்.
சுயபரிசோதனைக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சமூக தாக்கங்களிலிருந்து வெளிப்பட்டு, உங்கள் தேவைகளைப் பற்றி சுயமாக சிந்தித்து, முடிவு செய்யவும். நீங்கள் ஒரு தேர்வு செய்தவுடன், அதை முழு மனதுடன் உறுதியுடன் பின்பற்றலாம், சமூகத்தின் பார்வை எப்படி இருந்தாலும்.
மன நிறைவுக்கான திறவுகோல் சிறந்த வாழ்க்கையைத் தேடுவது இல்லை, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதையில் உங்களை முழுமையாக முன்னடத்திச் செல்வது பற்றியது. எந்தவொரு செயலிலும் உண்மையான ஈடுபாடு, எவ்வளவு சாதாரணமானதாக இருந்தாலும், ஆழ்ந்த அனுபவங்களுக்கு வழிவகுக்கும். நீங்கள் தொடர்ந்து இரண்டாவது ஒன்றை அதற்கு மாற்றாக யோசித்து, அதை அடையும் வழிகளை யூகிக்கும்போது, சமரசம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு, ஒரு மழுப்பலான விருப்பத்தை சிறந்ததென துரத்தும் வாழ்க்கையாகி, நிலைமை இன்னும் வீணாகிவிடும்.
எனவே, நீங்கள் திருமணம் செய்து கொண்டிருந்தாலும், தனிமையில் இருந்தாலும், அல்லது ஆன்மீகப் பாதையில் சென்றாலும், அதை முழுமையாக ஏற்றுத்தழுவுங்கள். அரை மனதுடன், ஸ்திரமற்ற வாழ்க்கை ஒன்றை தேர்ந்தெடுப்பதும், குழப்பமான வாழ்க்கையை வாழ்வது வருத்தத்திற்கும் அதிருப்திக்கும் மட்டுமே வழிவகுக்கும்.
இறுதியில், கேள்வி என்னவென்றால், திருமணம் செய்து கொள்வதா அல்லது தனிமையில் இருப்பதா, அல்லது குழந்தை தேவையா இல்லையா, என்பது பற்றியெல்லாம் அல்ல. மாறாக ஒருவரின் தேர்வுகள் தெளிவாக எடுக்கப்பட்டவையா அல்லது குழப்பத்தில் இருந்து எழுகின்றனவா என்பதுதான்.
அதே போலத்தான் வாடகைத் தாய்மை, சமூக அழுத்தங்களில் இருந்து விடுதலை, ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் உரிமை மற்றும் கருப்பை சுதந்திரம் போன்றவையும்.
இந்தப் போராட்டங்கள் எல்லாம் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தான். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து கௌரவமான வாழ்க்கையை தர முடியாத பொருளாதார நிலையில், குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கும் தம்பதியினரில் ஒரு ஆணும்தான் இருக்கிறான்.
0 comments:
Post a Comment