அ.முத்துலிங்கம் அவர்களின் பதிவை பாருங்கள்.
நம்ம வெட்டிப்பயல் சொன்னது (இங்கே) போல இனிமேல் லிங்க்கே கொடுத்து விடுகிறேன். ஈசியாக உள்ளது. அதுதான் நியாயமும் கூட. முன்பே தோன்றவில்லை. வெட்டி... தேங்க்ஸ். நல்ல வழி.
அதிலிருந்து எனக்கு பிடித்த சில வரிகள்..
- புத்தகத்தை வாசிக்காத மனிதர், எழுத்தறிவில்லாதவரிலும் பார்க்க ஒரு விதத்திலும் உயர்ந்தவர் அல்ல என்கிறார் மார்க் ட்வெய்ன் என்ற அறிஞர். நல்ல புத்தகங்களை தேடுவது அவ்வளவு கடினமான விஷயம்.
- ஒருவர் ஆரம்பத்தில் எப்படிப்பட்ட புத்தகத்தையும் படிக்கலாம். ஆனால் போகப்போக அவர் தன் தரத்தை மேம்படுத்திக்கொண்டே போகவேண்டும்.
- எண்ணிக்கை பிரதானமல்ல; தரம்தான் முக்கியம்.
சமீபத்தில் பி. அனந்தகிருஷ்ணன் எழுதிய 'புலி நகக்கொன்றை ' நாவலைப் படித்தபோது இந்த எண்ணங்கள் எனக்கு ஏற்பட்டன. இதை எழுதிய ஆசிரியர் இந்திய மத்திய அரசு அதிகாரியாக டில்லியில் வேலைபார்க்கிறார். அவர் முதலில் ஆங்கிலத்தில் The Tigerclaw Tree என்ற பெயரில் இதை எழுதி 1998 ல் பென்குயின் வெளியீடாக கொண்டுவந்துள்ளார். பிறகு அதே நாவலை மொழிபெயர்க்காமல் தமிழிலே திரும்பவும் எழுதினார். தமிழிலே முதலில் எழுதாதற்கு என்ன காரணம் என்று கேட்டால் 'பயம் ' என்று சொல்லியிருக்கிறார். இவ்வளவு அழகான தமிழ் நடையை வைத்துக்கொண்டு பயந்தால் மற்றவர்கள் கதி என்ன ஆவது என்று நான் நினைத்தேன்.
இந்த நாவலின் தலைப்பு பிரமாதம். இப்படியான ஒரு நாவலுக்கு தலைப்பு வைப்பது சிரமமானது. ஆனால் இந்தத் தலைப்பு மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது. ஐங்குறுநூறு 142 ஆவது பாடலில் இருந்து தனக்கு இந்த நாவலுக்கான தலைப்பு கிடைத்ததாக ஆசிரியர் சொல்கிறார்.
எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்
புள்ளிறை கூருந் துறைவனை
உள்ளேன் தோழி படா இயரென் கண்ணே.
'தோழி கேள். நான் அவனைப்பற்றி நினைக்கமாட்டேன். யாரை ? எவன் நாட்டின் மணலடர்ந்த கரையில் இருக்கும் புலி நகக் கொன்றை மரத்தின் தாழ்ந்த, பூத்திருக்கும் கிளைகளில் பறவைகள் ஆக்கிரமித்துக் கூச்சல் இட்டு அழிவு செய்துகொண்டிருக்கின்றனவோ அவனை. என் கண்களுக்கு சிறிது தூக்கம் கிடைக்கட்டும். ' ( ஞாழல் - புலிநகக்கொன்றை ) உண்மையில் இது காதலை சொல்லும் பாடலல்ல; குடும்பத்தைப் பற்றியது. எவ்வளவுதான் துன்பம் வந்தாலும் அவற்றை தாங்கிக்கொண்டு மரம் நிற்கிறது. பட்சிகள் அதன் கிளைகளையும், பூக்களையும் கொத்தி அழிவு செய்தபடியே இருக்கின்றன. ஆனால் மரம் ஒன்றுமே செய்வதில்லை, எதிர்பார்ப்பதும் இல்லை. உயிர் கொடுத்தபடியே இருக்கிறது. புலி நகக்கொன்றை. இதைவிட பொருத்தமான தலைப்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
- தேடுபவனிடம் தரமான இலக்கியங்கள் சிக்கும்