தோத்திரப் பாடல்கள் - பாரதி
வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்
வெளியி லிரத்தக் களியோடு பூதம் பாடப் - பாட்டின்
அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக் - களித்
தாடுங் காளீ சாமுண்டீ - கங் காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.
ஐந்நூறு பூதம் சிந்திப் போயொன் றாகப் - பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.
பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் - சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய - அங்கே
ஊழாம் பேய்தான் ஓஹோ ஹோ வென்றலைய - வெறித்
துறுமித் திரிவாய் செருவெங் கூத்தே புரிவாய்
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.
சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் - சட்டச்
சடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி - அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல்போய் எட்டித் - தானே
எரியுங் கோலங் கண்டேசாகும் காலம்
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.
காலத் தொடுநிர் மூலம்படு மூவுலகும் - அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.
அடுத்து: யார் காளீ?
8 comments:
ஊழிக் காத்து ஆடுற அளவுக்கு இப்போ இங்க என்ன நடந்து போச்சு தாயி..?
இது படிக்கும்போது வட இந்திய (லே), பாக்கிஸ்தானில் நடந்து கொண்டு இருக்கும் இயற்கையின் சீற்றம் தான் மனதில் வருகிறது.
யார் காளீ ? காளி தான சரியான பதம் ஈ காரம் வருமா?
:)
ஸ்கூலில் இந்தப் பாடலை மியுசிக் டீச்சர் பாடியதாய் மங்கல் நினைவுகள்.
யார் காளி? நாந்தான்.
நீங்க - பத்ரகாளி:))))))))))))))
உத, விஜய், கார்த்திகா:
யார் காளீ என்ற ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்தேன். எதையோ படிக்கப் போய் பாரதியின் ஊழிக்கூத்து கண்ணில் சிக்கி விட்டது, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பரிமாணங்கள்.. ஆனால் அதே திகைப்புதான் எனக்கு...
வித்யா & co:
//பத்ரகாளி:))))))))))))))//ஆமா.. ஜ்ஜ்ஜ்ஜாக்கிரதை...
வித்யாவும் எறும்பும் இன்னிக்கு ஏமாந்து போயிருப்பீங்க. better luck next time :))
பாரதியால் மட்டுமே முடியும்
இதை படிக்கும் பொழுது எழுத்துக்களின் வழியே ரெளத்திரம் ஏற,
இசையையும் கவிதையில் நுழைக்க.....
//அடுத்து: யார் காளீ?//
மாமியார் கூட எதாவது சண்டையா!?
:)
//வித்யாவும் எறும்பும் இன்னிக்கு ஏமாந்து போயிருப்பீங்க. better luck next time :))//
//ஊழிக் காத்து ஆடுற அளவுக்கு இப்போ இங்க என்ன நடந்து போச்சு தாயி..?//
//மாமியார் கூட எதாவது சண்டையா!?//
எறும்பு, வித்யா, நசர், சக்தி,
இதோ! :-))
Post a Comment