3.00 AM
ப்ராணாயம தியான சூர்ய நமஸ்காரம்,
ஆரோகணம் அவரோகணம்
பாடிக்கொண்டே குளித்தல்
பால் குக்கர், பெர்குலேட்டர்
வாசல் தெளிப்பு ஸ்டார் கோலம் முடித்து
குத்துவிளக்கு, பால் நிவேதனம்
முதல் டிகாக்ஷனில் டிகிரி காப்பி
மற்றும் வயலின் பயிற்சிகள்
எப்போதும் தனியாக உட்கார்ந்து ரு(ர)சித்தல்
4:30 AM
வாஷிங் மெஷினின் கர்ரென்ற நாராசம்
கொம்பெடுத்து சிலம்பாடி துணி உலர்த்தல்
குக்கர் விசிலுக்கு திரும்பிப் பார்த்தல்
புளி கரைத்து சாம்பார், பொரியலுக்கு தாளித்தல்
மைசூர் ரசத்தை மூக்காலே வெறித்து பார்த்தல், இட்லிக்கு சட்னி,
உப்பு போடும் முன் அனைத்தையுமே இரண்டாக பிரித்தல்,
மதியத்திற்கு மூன்று சாப்பாடு, ரெண்டு ஸ்நாக்ஸ் வைத்தல்
7:00 AM முதல்
"ஆயாச்சா" என்ற குரலுக்கு,
சக்கரை இல்லாமல் இரண்டு
சக்கரை போட்டு ஒன்று, பால் ஒன்று
ஒரு ஓட்ஸ் கஞ்சி, ஒரு சாதாக் கஞ்சி
ஒரே ஒரு டேபிள்தான் நல்லவேளை
குளிப்பாட்டுதல், உடையணிவித்தல், இட்லி பரிமாறுதல்,
அனுப்பி வைத்தல், முகம் அலம்பி தயாராகுதல்
அலுவலகம் செல்லல், "எஸ் சார்" சொல்லிக் கொண்டே இருத்தல்
வீடு திரும்பல், குளித்தல், வீட்டுப் பாடம் செய்வித்தல்
ரேடியோ துணையுடன் சப்பாத்திகள்
பயற்றம்பருப்பு தால் மற்றும் பொறியல்
பாத்திரம் தேய்த்தல், துணி மடித்தல்,
மறுநாளுக்கான கறிகாய் நறுக்குதல்
இடைப்பட்ட பொழுதுகளில்
எழுதுதல்
வாசித்தல்
மொழிபெயர்த்தல்
சந்திப்பில் இருத்தல்
நண்பர்கள் பரிந்துரைத்த
நல்ல திரைப்படம் பார்த்துக் கொண்டிருத்தல்
கைபேசியில் அழைப்பை ஏற்றல்
பாதியிலேயே நிறுத்திவிட்டு திரும்பல்
எளிதாகத்தான் இருக்கிறது
இடைப்பட்ட பொழுதுகள் மட்டும் இல்லாதிருத்தல்
31 comments:
கவிதை முழுதும் பெருமூச்சின் இழை.பரபரப்பின் வண்ணம் தோய்த்த ஒரு நாளின் ஒவியம் இத்தனை அழகாய்..அற்புதம் விதூஷ்.நல்ல கவிதைக்கு ஒரு பூங்கொத்து.
:(
ஒரு நாள் கழிந்தது!!!
அழகுன்னு சொன்னா சரியா இருக்குமா.
இவ்ளோ வேலைகள் செய்தல், இத்துடன் வாசித்தல், கவிதை எழுதுதல், கலக்குதல், அதகளப்படுத்துதல், படிப்பவர்களை மிகவும் வியப்படைய வைத்தல், படித்தபின் எல்லோரும் கைத்தட்டுதல்!
:)) சூப்பர்ப்!
3 A.M.,
:-))!!!!???
நல்ல பதிவு விதூஷ்!
//ஒரே ஒரு டேபிள்தான் நல்லவேளை//
ரசித்தேன்... வலித்தது.
3 AM ??? :-(
பரபரப்பு, பதைபதைப்பு.
ஒருநாள் கஷ்டம் தினம்தினமும்....
அப்பாடி...மூணு மணியிலிருந்தா???
கொஞ்சம் வலித்தாலும்,
வியந்துதான்போனேன்.
அருமையான பதிவு வித்யா.
அதிகாலை எழுந்தும் கூட ஓயவில்லை பரபரப்பு. வாழ்க்கையை பரபரப்பில் தொலைத்தவர்களின் கண்ணீர் இந்த கவிதையில் தெறிக்கும். நல்லா இருக்குங்க விதூஷ்.
3 மணியில் இருந்தா? மலைப்பா இருக்கு. ஹ்ம்ம் ரியாத் பெண்கள் கொஞ்சம் கொடுத்து வச்சவங்க போலிருக்கு :-)
//எளிதாகத்தான் இருக்கிறது
இடைப்பட்ட பொழுதுகள் மட்டும் இல்லாதிருத்தல்//
நச்
Marvelous woman role in family.Good narration. ( sorry no tamil fonts.)
படிக்கவே மூச்சு முட்டுது:(
இருக்குடி மகளே - எனக்கு எனக்கே சொல்லிக்கிறேன்.
எளிமை - யதார்த்தம்
வாழ்த்துக்கள்
விஜய்
நன்றி சுந்தர்ஜி :) பெருமூச்சு இல்லீங்க சார், மேல் மூச்சு கீழ் மூச்சு :))
விசா: நன்றி. வருத்தப்பட ஏதும் இல்லை. எப்போதும் சுய விருப்பங்களை மட்டுமே காம்ப்ரமைஸ் செய்ய வேண்டி இருக்கிறதே என்ற ஆதங்கம் மட்டுமே.
மணிஜீ:நன்றிங்க
புதுகைத் தென்றல்: அழகுதான்.
அநன்யா மஹாதேவன்: :)) நடுத்தர வயதில் எல்லா பெண்மணிகளும் இப்படி அடுத்தவருக்கு மட்டுமே சேவகர்கள் ஆகி விடுகிறார்கள். இதனாலேயே பாதி பெண்கள் சுய விருப்பங்களை விட்டு விடுகிறார்கள்.. அதைத்தான் இடைப்பட்ட பொழுது என்ற பொருளில் குறித்துள்ளேன். நன்றிங்க கைதட்டலுக்கு.
டி.வீ.ஆர். சார். :)) என்ன செய்யறது. எனக்கு பிடித்த வேலைகளை எப்போது பார்ப்பது? அதிகாலையில் நிறையா இடைப்பட்ட பொழுது இருக்கும். அமைதியாக இருக்கும். அதிகாலை அற்புதமான பொழுதுங்க.
நன்றிங்க தீபா. ஆமாம்.. தினம் சாப்பிட்டே ஆக வேண்டித்தான் இருக்கு. இவற்றையெல்லாம் முடியாது என்று தள்ளவே முடியாது. எல்லாப் பெண்களுமே, தன் கனவுகளுக்கும் பொறுப்புக்களுக்குமான பாலத்தின் மேல், ஒரு நிலையில் இப்படி பரபரத்து ஓட வேண்டியதாக இருக்கு அதுவும் நடுத்தர வயதில்.
க.பாலாசி: நன்றிங்க. கஷ்டம் இல்லைங்க. சமாளிக்கும் போது கொஞ்சம் மூச்சு திணறும் அவ்ளோதான்.
சுந்தரா: நன்றிங்க. :)
வி.ராதாகிருஷ்ணன் சார்: கண்ணீர் இல்லைங்க. கனவுகளைத் தொலைக்க முடியாமல் திண்டாடும் நிலை மட்டுமே.
கே.வி.ஆர்: நன்றிங்க. இடைப்பட்ட பொழுதுகளை மட்டும்தான் எளிதில் procrastinate செய்து நாளைக்கு பாத்துக்கலாம் என்றும், பாதியில் விட்டு விட்டு, மனசாட்சியே இல்லாமல் எழுந்தும் வர முடிகிறது.
நன்றிங்க சுரேஷ்.
நன்றிங்க வித்யா. அந்த நாள் ரொம்ப தூரத்தில் இல்லை. தயாரா இருங்க.. :))
இடைப்பட்ட பொழுதுகள் மட்டும் இல்லாதிருத்தல் எளிதாக உள்ளதா?
என்னடா இது :-)
3.00 AM ஆஆ .. மயக்கமா வருது :-)
neat. well expressed.
இனிது :)
நல்லா இருக்கு விதூஷ் .ஆனா ஏதாவது செய்துகொண்டே தானே இருக்கணும் வாழ்க்கையை வாழ்க்கை என்பதற்கு ?உங்கள் இடைப்பட்ட நேரம் அழகாய் உள்ளது /
எளிதாகத்தான் இருக்கிறது
இடைப்பட்ட பொழுதுகள் மட்டும் இல்லாதிருத்தல்
..... ஒவ்வொரு நாள் நடக்கும் விஷயங்களை கூட, அருமையாக சொல்லியிருக்கும் விதத்துக்கு பாராட்டுக்கள்.
porupppaana kudumba ssthree.....!
azhagu:)
இதுக்கு என்ன பின்னூட்டம் போடன்னு ரொம்ப நேரமா யோசிக்கறேன்.
:)
அம்மா ஞாபகம் வந்துடுச்சு...
என்னவோ ரொம்ப நாளைக்கு அப்புறம் பாரதிதாசன் படிக்கணும் போல இருக்குங்க
தவணை சுவாசம் ஆசுவாசமாகும் நீளமான கவிதை நாள்
:)
அம்மாடி மூச்சு வாங்குது விதூஷ். ம்ம்ம்ம் இடைப்பட்ட பொழுதுகள் படுத்தும்பாடு இருக்கே...
wow awsome poem,
in some lines I realy thought Sujatha has come back again, best wishes.
இடைப்பட்ட பொழுதுகள் கிடைக்கிறது என்பதே ஆச்சரியத்தை தருகிறது.
வாழ்த்துகள்.
விடிகாலை மூன்று மணிக்கு எழுந்திருப்பதே பெரும் சாதனையாச்சே.
ரொம்ப கனம்......எதுவும் உடையும் முன் குறைத்தல், உடைந்த பின் குறைவதை விட எல்லோருக்கும் நல்லது. None can finish a marathon by sprinting all the time.
அருமையான கவிதை!!!
ரசித்த வரிகள்!!
///எளிதாகத்தான் இருக்கிறது
இடைப்பட்ட பொழுதுகள் மட்டும் இல்லாதிருத்தல் //
//மைசூர் ரசத்தை மூக்காலே வெறித்து பார்த்தல்//
பெண் பாடு. பெரும்பாடு.
Post a Comment