புனிறு தீர் பொழுது - 5

 புனிறு தீர் பொழுது - 4 : https://vidhoosh.blogspot.com/2022/05/4.html

புனிறு தீர் பொழுது - 3: https://vidhoosh.blogspot.com/2022/05/3.html

புனிறு தீர் பொழுது - 2: https://vidhoosh.blogspot.com/2022/05/2.html

புனிறு தீர் பொழுது - 1: https://vidhoosh.blogspot.com/2022/05/1.html

"என் குழந்தையை எனக்குப் பிடிக்கவில்லை. இப்படிச் சொல்வதற்காக என்னை ஒரு மோசமான அம்மா என்று எல்லோரும் நினைத்தால் என்ன செய்வது?"

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்மணி. அவர் பெயர் நவ்யா என்று வைத்துக் கொள்வோம். தான் தன் முதற் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, ​​பிரசவத்திற்குப் பிறகான எடையைக் குறைப்பது கடினமாக இருந்தது.

நவ்யா சொன்னது "கர்ப்பகாலத்தில் அது பற்றிய புத்தகங்களைப் படித்தேன், பல பெண்களிடம் அவர்களின் அனுபவத்தைப் பற்றிப் பேசினேன், எப்படிச் சிறப்பாகத் தயாராக இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆலோசனை கேட்டேன். ஆனால் இத்தனைக்கும் பிறகு எல்லாமே மங்கலாகி  என் வாழ்வின் மூன்று வாரங்களை இழந்தது போல் உள்ளது. நான் கவனக்குறைவாக மாறிவிட்டது மட்டும் தான் நினைவிருக்கிறது. என் குழந்தை என்னை விட அதிக கவனம் பெறுகிறதே என்று பொறாமை இருந்தது. என்னவோ என் வாழ்வே முடிந்துவிட்டது போல், இப்போது அனைவரின் கவனமும் குழந்தை மேல் மாறியது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத கோபம், சோகம் மற்றும் நம்பிக்கையின்மை போன்ற உணர்வுகளோடு போராடிக் கொண்டிருக்கிறேன். நான் தாய்ப்பால் கூட கொடுக்க விரும்பவில்லை."

நவ்யாவுக்கு நாம் திரைப்படங்களில் பார்க்கும்படி கொண்டாட்டமான கலகலப்பான கர்ப்பகாலமாக இருந்தது. அசௌகரியம், காலைச் சுகவீனம், கால் வீக்கம், முதுகு வலி போன்றவை ஏதும் இல்லை. அவரது குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் அவளை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்திருந்தது.

 அவருடைய வார்த்தைகளாலே சொல்வதென்றால்   “கருவுற்ற போது 60 கிலோ இருந்த நான், குழந்தை பிறந்த மாதத்தில் நான் 102 கிலோ ஆகி விட்டிருந்தேன். அதை ஒப்புக்கொள்ள நான் தயாராக இல்லை. நான் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். சில நேரம் குழந்தை யாரென்றே எனக்குத் அடையாளம் தெரியாது. நான் குழந்தையை என் கணவரிடம் கொடுத்து, 'எனக்கு இதைப் பிடிக்கவில்லை. இது என் குழந்தையில்லை. தயவுசெய்து இதை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்' என்று சொன்னேன். கணவர் அதிர்ச்சியில் கத்தினார். என்னுடன் சண்டை போட்டார். என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு ஒரு வாரம் ஆனது. அது என்னை என் தலையின் ஆழ்ந்த இருண்ட பகுதிகளைக் காட்டியது. என்னை கும்மிருட்டுக்கு அழைத்துச் சென்று திகிலூட்டியது. என் நம்பிக்கை முற்றிலும் சிதைந்தது. ஒரு வருடம் கழித்தும் என்னால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. நான் வெளியே செல்லக் கூட பயந்தேன். என்னுடல் முன்னைப் போல அழகாக இல்லை. வயிறு சரிந்து மார்பகங்கள் தளர்ந்து தொடைப் பகுதிகள் பெருத்து கண்ணாடியில் நானே என்னைப் பார்க்க விரும்பவில்லை. என் உடல் மீதான அவநம்பிக்கையில் கணவரோடு மீண்டும் தாம்பத்திய உறவு கொள்வது பயமூட்டுவதாக இருந்தது. மீண்டும் கர்ப்பமடைந்து விடுவோமோ என்ற அச்சம் மேலிட்டு உறவில் ஆர்வம் குறைந்தது. இதையெல்லாம் யாரிடம் சொல்வது?"

அவர் தன் அம்மா முதற்கொண்டு ஊரில் உள்ள பெண் தோழிகளின் உதவியை நாடினார். ஆனால் பேசிப் பேசிப் பார்த்த பின்னும், அவருக்கோ கிடைத்தது "உங்களுக்கு ஓய்வு தேவை" என்று டாக்டர் சொன்ன வெறும் அறிவுரை. "அட்ஜஸ்ட் செய்து கொள்" போன்ற "அம்மான்னா சும்மாவா" அறிவுரைகள் தான். அது மட்டும் இல்லை "குழந்தைக்குப் பாதுகாப்பான மடி தாயுடையது தான்" என்று வேறு   கூறப்பட்டது.

பேபி ப்ளூஸ்? நாங்கள் எல்லாரும் இதைக் கடந்துதான் வாழ்ந்திருக்கிறோம், இதெல்லாம் புதுசா, ரொம்ப அலட்டிக் கொள்ளாதே. ஊரில் இல்லாத அதிசயமா? என்றெல்லாம் ஏச்சுப்பேச்சுக்களைக் கேட்க நேரிடும் அன்புள்ள அம்மாக்களே, மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு உங்கள் தவறு அல்ல.

வேலைக்குப் போகும் பெண்கள் தாயாவது போராட்டம் என்றால், வீட்டு வேலை மட்டும் செய்து கொண்டு குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்கள் தாயாவது இன்னும் அதிக சிக்கலானது. குறைந்த பட்சம் வேலைக்கு போகும் பெண்களுக்கு குழந்தையை மற்றவர் பொறுப்பில் குற்றவுணர்வு ஏதும் இல்லாமல் விட்டுப் போகும் சுதந்திரமாவது இருக்கும்.

வேலைக்குப் போகாத பெண்களுக்கு மனச்சோர்வு என்பது ஒரு பொதுவான நிகழ்வாகும்.

மனச்சோர்வை பெரும்பாலும், மூளைக்கு அதிக வேலை தரும் செயல்கள், கடினமான இலக்குகள், மற்றும் உலகெங்கிலும் ஊதியம் மற்றும் வேலை அல்லது தொழில்களுடன் தொடர்புபடுத்துகிறோம்.

நம்மில் பெரும்பாலோர் மனநலம் பற்றி விவாதிக்கக் கூடத் தயங்குகிறோம், ஏதோ மனத்தடை இருக்கிறது. 

உங்கள் வீட்டில், உங்களைச் சுற்றியுள்ள பெண்களின் உண்மையான கதைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.  ஒருவர் தனக்கு திரும்பி கனவில் கூட வர விரும்பாத இருண்ட நாட்களைக் கடந்து இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு உண்மையான தைரியம் தேவை. எவ்வளவு அதிக வெளிச்சம் இருக்கிறதோ அவ்வளவு இருண்ட நிழல் விழுகிறது. அதே போல அடர்ந்த இருளுக்குப் பிறகும் வெளிச்சம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பிறருடைய அனுபவம் மற்றும் மருத்துவர் / மனநல நிபுணரின் ஆலோசனைகள் மனச்சோர்வைப் புரிந்துகொள்ள உதவும்.

மனச்சோர்வுக்கு ஒருவர் சுதந்திரமான எண்ணம் கொண்டவர், வெற்றிகரமானவர், உடற்பயிற்சி, தியானம், யோகா, சமூகப் பழக்க வழக்கம், நட்பு வட்டம், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், நேர்மறை மனப்பான்மை,  ஆரோக்கியமான வாழ்க்கை முறை பின்பற்றும்  நபர்  என்றெல்லாம் தெரியாது, இன்னின்னார் மன அழுத்தத்திற்கு ஆளாக முடியாது என்பதெல்லாம் தெரியாது.  மன அழுத்தம் என்ற பெயரில் இது சிறிய அளவில் ஊடுருவி, பின்னர் பெரியதாக மாறக்கூடும், மேலும் இது எந்த வயதினரையும் எந்த நேரத்திலும் பாதிக்கலாம்.

குழந்தைப் பேற்றுக்குப் பிறகு "எல்லாரும் செய்வதுதானே.. இதிலென்ன அதிசயம் ?" என்று கேட்பவர்கள் கூட என்னவற்றையெல்லாம் கடந்து வந்திருக்கக் கூடும்.

உடல் ரீதியாக ஈடுபட்டிருந்தாலும் நீங்கள் மனரீதியாக கவனம் செலுத்த இயலவில்லை என்பதை நீங்கள் அறியும் போது, உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.  எப்போதும் சோம்பேறித்தனமாக உணர்வது தான் முதல் அறிகுறி.

தூங்க விரும்பும்போது குழந்தை அல்லது வேலைகள் காரணமாக தூங்க முடியாது.

பசியாக உணர்ந்தாலும், உணவை அனுபவித்துச் சாப்பிட முடியாமல்  சோர்வாக இருக்கும் அல்லது சாப்பிடுவதற்கு பிடிக்காது. அல்லது அப்போதுதான் குழந்தை அழும் இல்லை, ஈரம் செய்து விடும்.

சமைக்க விரும்பாதபோது, ​​​​குழந்தைகளுக்கு சமைத்தே வேண்டும்.

ஓய்வெடுக்க விரும்பினால் அல்லது சிறிது நேரம் வீட்டை விட்டு வெளியே போக விரும்பினால், குழந்தைகளை விட்டு போக முடியாது

நாள் முழுவதும் பிஸியாக இருக்கும் முகம் கழுவக்கூட நேரமில்லாமல் இருக்கும். பாத்ரூமில் குளிக்கக் கூட சுதந்திரம் இல்லாமல் இருக்கும், பாத்ரூம் கதவைத் தாழ்பாள் இட்டுக் கொண்டால் குழந்தை வீறிட்டு அழும், அல்லது அதற்குள் ஏதாவது விஷமம் செய்து விடும்.

நவ்யாவுக்கு என்னவாயிற்று?

நவ்யா மகப்பேற்றுக்கு பிறகான மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது ஒரு கொடூரமான உணர்வுகளைத் தரும் அதீத மனநல நிலை. தனக்குப் பிறந்தக் குழந்தைக்கு உணர்ச்சிபூர்வமாக கவனமளிப்பதில் சிரமம் இருக்கும். இது குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணங்களுக்குக் கூட வழிவகுக்கும்.

இந்தியாவில் மகப்பேற்றுக்கு பிறகான மனநோயின் பரவல் பற்றிய புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. இந்தியாவில் பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு உள்ளவர்களுக்கு தன் மனநிலை பற்றிய மிகக் குறைவான விழிப்புணர்வு உள்ளது. ஒரு அன்பான குடும்ப சூழ்நிலை ஒரு புதிய தாயை ஹார்மோன் சமநிலையின் விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மனநலத்தை அல்லது மனநோய்கள் பற்றிய  களங்கம், சமூகப் பார்வை மற்றும் நாட்டில் தொழில்முறை உளவியல் நிபுணர்களின் பற்றாக்குறை பல பெண்களை PPD போன்ற மனநோய்களைத் தனியாகச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றது.

பிரசவத்திற்கு முந்தைய மனச்சோர்வு என்பது உலகளாவிய பிரச்சனையாகும் - ஏழு பெண்களில் ஒருவருக்கு மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு (PPD) ஏற்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இந்த எண்ணிக்கை ஐந்தில் ஒருவருக்கு உள்ளது. மனநல மற்றும் உளவியல் சிகிச்சை நிபுணர்களின் பற்றாக்குறை, அவசரமாக உதவிக்கு தகுந்த ஒருவரை அணுகுவதை சாத்தியமற்றதாக்குகிறது.

முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் ஜனவரி 2022ல் தூக்கில் தொங்கி மரணித்த நிலையில், PPD பரவலாக உள்ளது, ஆனால் எப்போதும் கண்டறியப்படுவதில்லை என்பது மீண்டும் கவனம் பெறுகிறது.

குழந்தையை ரத்தம் வருமளவு தாக்கியது, குழந்தையை ஒரு வாளி தண்ணீரில் மூழ்கடித்து கொன்றது, தலையணையால் அழுத்திக் கொன்றது, போன்ற செய்திகளை நாம் அவ்வப்போது தினசரிப் பத்திரிகைகளில் காண்கிறோம்.

அப்பெண்மணிகள் கைது செய்யப்பட்டு, தீராத அவப்பெயருடன், கண்ணீருடன் வாழ வேண்டியிருக்கிறது.

"எல்லோரும் என்னை ஒரு கொலையாளி என்கிறார்கள்." 27 வயது உமா சென்னையில் தன் குழந்தையை ஏரியில் வீசியதாக கைதாகி தண்டனை பெற்றவர்.

பெரும்பாலான பெண்கள் 3 முதல் 6 மாதங்களுக்குள் தகுந்த சிகிச்சை பெறும் போது குணமடைவார்கள். 4 தாய்மார்களில் 1 பேர் தங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகதாகும் போது கூட  மனச்சோர்விலேயே உள்ளனர். கவனிக்கப்படாத போது, மனநோயின் தீவிரம் அதிகரிக்கலாம். அன்புள்ள அம்மாக்களே, மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு உங்கள் தவறு அல்ல.

சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள முழுமையான உடல்நலப் பரிசோதனைக்குச் செல்லுங்கள். மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உணர்வுகளை நேர்மையாக அடையாளம் கண்டு அணுகுங்கள்.

புதியதாகத் தாயாகி இருப்பவரின் நடத்தையில் சிறிதளவு மாற்றங்கள் ஏற்பட்டாலும் குடும்பங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாமதமாகவே என்றாலும் சமீப காலமாக மருத்துவர்கள் கர்ப்பிணிப் பெண்களுடன் PPD பற்றிய ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளனர், அவர்கள் தேவைப்பட்டால் சரியான நேரத்தில் உதவி பெறலாம். இது அனைத்து மருத்துவர்களிடையேயும் வழக்கமாகிவிட்டால், விழிப்புணர்வு அதிகமாகும். பெண்கள் தாங்களாகவே முன்வந்து விரைவில் உதவியை அணுகுவதை உறுதிசெய்யலாம். உறவுச் சிக்கல்கள், உயிரிழப்புக்கள் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

ஒருவர் மன உளைச்சலில் இருப்பதாகத் தெரிய வந்தால் அல்லது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்தால், தமிழ்நாடு அரசு சுகாதார உதவி எண்ணை 104 அல்லது சினேகா தற்கொலை உதவி எண்ணை 044-24640050 என்ற எண்ணில் அழைக்கவும்.

5/5

புனிறு தீர் பொழுது - 4

புனிறு தீர் பொழுது - 3: https://vidhoosh.blogspot.com/2022/05/3.html

புனிறு தீர் பொழுது - 2: https://vidhoosh.blogspot.com/2022/05/2.html

புனிறு தீர் பொழுது - 1: https://vidhoosh.blogspot.com/2022/05/1.html

 

வேலைக்குப் போகும் தாய்மார்கள் PPDயை எப்படி சமாளிக்கிறார்கள்?

அன்று இரவு 2 மணி இருக்கும். என் அலுவலகத் தோழியிடம் (ஜானகி என்று வைத்துக் கொள்வோம்) இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவளுடைய கணவர் ஊரில் இல்லை. முதன்முதலாக டிப்ரஷன் அறிகுறிகளின் கோரப்பல் அவளுக்கு தெரியவந்திருக்கிறது. அது PPD என்று அவளுக்கும் தெரியாது. இன்னும் diagnose ஆக வில்லை. நள்ளிரவில் பதற்றம் மிகுந்து அழுகை பீறிட்டுக் கொண்டு வர, "I'm sorry it's late. But something is terribly wrong. I'm scared to be alone with the baby. I think it's panic attack. Please help" என்றாள். உடனே அவள் கணவருக்குத் தெரிவித்து விட்டு, அவளையும் அவள் கைக்குழந்தையையும் எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தேன். "I'm Ok" என்று சொல்லியபடி அசதியில் உறங்கிப் போனாள். ஆனால் அவள் ஓகே இல்லை என்பது எனக்குத் தெரியும்.

வெளி உலகத்திற்கு, அவளுக்கு உடல்நலக் குறைவு எதுவும் இல்லை. வேலைக்குப் போய் கொண்டிருந்தாள். தன் குழந்தையை நல்லவிதமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். வீட்டையும் நல்லவிதமாகவே நிர்வகித்தாள். ஆனால் இரவு நேரத்திலும் பணியிடத்திலும்  பாத்ரூமில் அழுது கொண்டிருப்பாள்.

PPD இல்லையா இருக்கிறதா என்பது தாண்டி, எண்ணற்ற பெண்களுக்கு, குழந்தைப் பேற்றுக்குப் பின்னால் மீண்டும் வேலைக்குச் செல்வது என்பதே மிகப்பெரிய சவால் தான்.  PPD, உடல் எடைகூடுதல் அல்லது சிசேரியன் வலிகள், தாய்ப்பால் ஊட்டுவதில் பிரச்சினைகள், போன்றவை இல்லாவிட்டாலும் கூட, முதல் இரண்டு வருடம் கைக்குழந்தை வளர்ப்பு என்பதே 24 மணிநேரத்துக்கும் உழைப்பைக் கேட்கும்.

இதையும் தாண்டி பொருளாதாரம் அல்லது குடும்ப சூழல் காரணமாகவோ, பணியிடத்து அழுத்தம் காரணமாகவோ, வேறெந்த காரணமோ, வேலைக்குப் போகிறாள் என்பதே சாதனைதான்.

பெண்கள் தன் உத்தியோகத்தை பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமில்லை, சுயசார்பு அடையவும் அலாதியான ஆத்ம திருப்தியும் அளிக்கிறது. குழந்தைப் பேறுக்கு பின்னும் நம் வாழ்க்கை முன்பு இருந்ததைப் போலவே இருக்கவும், நம் தினசரி வேலைகளையும் முன்பு போலவே கையாளவும் விரும்புகிறோம், எதிர்பார்க்கிறோம்.

பிரச்சனை என்னவென்றால், மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு மெதுவாக, நாம் உணரும் முன்னரே முழுமையாக ஆக்ரமித்து விடுகிறது. அதை உணரும் போதோ, அல்லது episodes எனப்படும் திடீர் திடீரென உண்டாகும் episodic attacksசை அனுபவிக்கும் போது, பயத்தாலும் பதட்டத்தாலும் அறிகுறிகளை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும்.

PPD என்பது தனிமையில் அழுவதோ பேபி ப்ளூஸ்-சோ மட்டுமல்ல. நம் வாழ்க்கையின் மிகப்பெரிய meeting / presentation போது ஏற்படும் panic attack போன்று, நாம் சற்றும்  எதிர்பார்க்காத போது, நிகழக்கூடும்.

PPDயால் ஒருவர் பாதிக்கப்பட்டால் என்னென்ன மாற்றங்கள் நிகழக்கூடும்.

மனநிலை மாற்றங்கள்: கோபம், பதட்டம், குற்ற உணர்வு, நம்பிக்கையின்மை, எதிலும் ஆர்வம் இல்லாமல் உணருவது, மகிழ்ச்சியை உணர முடியாமல் இருப்பது, அல்லது பீதி அடைதல் (பேய்/கருப்பு உருவங்கள், gory காட்சிகள் போன்றவை மீண்டும் மீண்டும் மனதில் தோன்றுவது), மனச்சோர்வு

நடவடிக்கை மாற்றங்கள்: அழுகை, அமைதியின்மை, தூக்கமின்மை, பசியின்மை, அதிக எரிச்சல் உணர்வு , குழந்தையுடன் பிணைப்பு ஏற்படுத்திக் கொள்வதில் சிரமம், வழக்கத்திற்கு மாறான உடற்சோர்வு அல்லது பசியின்மை

எடை: எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு

அறிவாற்றல்: கவனச் சிதறல், சுழற்சியாய் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வரும் தேவையற்ற, தவிர்க்க விரும்பியும் தவிர்க்கவே முடியாத எண்ணங்கள்

ஜானகி எப்போதும் சுறுசுறுப்பாய் வேலை செய்பவள். கணவரின் அலுவல் பயணங்கள் நிறைந்தது என்பதால், அவள் தனியாகவே பெரும்பாலும் தினசரி குடும்ப வேலைகளைத் திறமையாக நிர்வகிக்கிறாள். அவளே எல்லாவற்றையும் சமாளிப்பாள். தனது மற்ற பிரச்சினைகளைப் போலவே PPD-யையும் ஒரு கட்டம் வரை அவள் தானே சமாளித்துவிடலாம் என்று நினைத்தாள். பிரச்சினைகளை சரிசெய்வதற்கு நமக்கு பிரச்சினை ஏதோ இருக்கிறது என்று ஒப்புக்கொள்வது முதல் வழி, இரண்டாவது யாரிடமாவது உதவி கேட்பது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் கூட அதை நீங்கள் தனியாகக் கையாள வேண்டியதில்லை. உங்கள் அலுவலகத்தில் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது என்று நீங்கள் நினைத்தால், சொல்லத் தேவையில்லை. ஆனால் மறுத்தவரையோ அல்லது மனநல ஆலோசகரையோ பார்த்து பேசவேண்டியது அவசியம். ஜானகிக்கு PPD இருப்பது இதுவரை பணியிடத்தில் யாருக்கும் தெரியாது.

புத்திசாலித்தனமாகவும் சுதந்திரமாகவும் இருப்பது என்பது எப்போது, யாரிடம் உதவி கேட்க வேண்டும் என்பதை அறிவதுதான், இல்லையா?

பின்னோக்கிப் பார்த்தால், ஜானகி தன் அலுவலகத்தில் PPD பற்றி பேசாததும் சொல்லாமல் இருப்பதும் மிகவும் புத்திசாலித்தனமான நடவடிக்கை அல்ல, ஆனால் அவள் அப்படித்தான் செய்தாள். சொன்னால் அவள் தன் நற்பெயரையும் வேலையையும் கூட இழக்கக்கூடும் என்று நினைக்கிறாள். ஏன் ஜானகி அப்படி நினைக்கிறாள்?

இந்தியாவில் disabilities act என்பது பெயரளவில் தான் இருக்கிறது. சமீபத்தில் தான் அங்கங்கே ஒன்றிரண்டு நிறுவனங்கள் இதைக் குறித்து சிந்திக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். நாம் பேசுவது பெரும்பான்மை பெண்கள் வேலைக்குப் போகும் தனியார் நிறுவனங்களைப் பற்றி மட்டுமே. IT நிறுவனங்களில் WFH வசதி கூட கொரோனா காலகட்டத்துக்குப் பின்தான் பரவலாக ஆனது.

 

நிதர்சனத்தில், maternity leave என்பதே நிறைய பெண்களுக்கு இல்லை என்பதே உண்மை. ஏன்? Maternity leave என்பது விடுப்பில் செல்லும் பெண்ணுக்கு ஆறு மாத காலம் வரை முழுச் சம்பளம் அல்லது basic payயாவது தரவேண்டும், சட்டபூர்வமாக. ஆனால், நடைமுறையில் பெரும்பாலான நிறுவனங்கள் அவர்களை resign செய்யச் சொல்லி விட்டு, மீண்டும் வரச் சொல்கிறார்கள்.

ஆனால், PPDயை அல்லது உளவியல் நோய்கள் பொறுத்த வரை பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இயலாமை பற்றி அலுவலகத்துக்கு தெரியாவிட்டால், அலுவலகம் சட்டத்திற்குக் கட்டுப்படத் தேவையில்லை. சொன்னாலோ மதில் மேல் பூனை நிலைமைதான், எப்போது எந்தக் காரணம் சொல்லி வேலையை விட்டு அனுப்புவார்கள் என்று தெரியாது.

நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், பணியிடத்தில் ஜானகியால் முற்றிலும் பயனற்ற நாட்கள் இருந்தன. கூடுதல் வேலை செய்யும் நிலை இருந்தால், அவளால் எதுவும் செய்ய முடியாது, அழுவதைத் தவிர.

அவள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது (ஒவ்வொரு episode முடியும் போதும் அது நடக்கும்) அவள் நிறுவனத்திற்கு விலைமதிப்பற்ற சொத்து என்பதை நிரூபிப்பாள்.

PPDக்கிடையே அதிக வேலைகளை எடுத்துக்கொண்டு, அரைகுறையான வேலையைச் செய்வது அவளை dull light-டில் காட்டும். அவள் இன்னும் மோசமாக depressed ஆக உணருவாள். பின்னர்... கண்ணீர் காட்சிகள். இப்படித்தான் ஜானகியின் அந்த இரண்டு வருடங்கள் ஓடின. சரியான medications மற்றும் மனநல ஆலோசனைக்குப் பின் அவள் மீண்டு விட்டாள். அந்த இரு வருடங்கள் நரகமாக இருந்தாலும் - அவள் இன்னும் அதே நிறுவனத்தில் இருக்கிறாள், முன்பை விட நன்றாகவே இருக்கிறாள் இன்னும் உயர்ந்த பொறுப்பில்.

 

உங்கள் பணி ஒப்பந்தத்தின்படி, அது சம்பளப் பலன்களாக இருந்தாலும், வேறு எதுவாக இருந்தாலும் சரி, நிறுவனம் உங்களுக்கு என்ன வாக்குறுதியளித்தது என்பது குறித்து நீங்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியம். தவறான அல்லது போதுமான அறிவிப்பு இல்லாமல் பணிநீக்கம் செய்வது, அல்லது உங்களை வேலையை விட்டுச் செல்லச் சொல்வது என்று அந்த ஒப்பந்தத்தை மீறி நியாயம் வழங்கத் தவறினால், நீங்கள் நீதிமன்றத்திற்குப் போகலாம்.

 

நிறுவனத்துக்கு எதிராக நீங்கள் வழக்குத் தாக்கல் செய்தால், நீங்கள் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். முதலில், தீவிர ஆய்வுக்கு உங்களை நீங்களே ஆளாக்கிக் கொள்கிறீர்கள். உங்கள் தினசரி வேலை அட்டவணை (work schedule), நீங்கள் செய்த வேலை (work done), சக ஊழியர்களுடனான உங்கள் பழக்கம் (inter personal relationships at work) மற்றும் பலவற்றை நிறுவனம் ஆய்வு செய்யும். ஒரு சிறிய தவறு கூட உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம். கடந்த காலத்தில் உங்களுக்கு சிக்கல்கள் இருந்ததா என்று பார்க்க, நிறுவனம் உங்களின் முந்தைய வேலைவாய்ப்பு பதிவுகளை ஆராயலாம். கூடுதலாக, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை நுண்ணோக்கின் கீழ் வரலாம். மன அழுத்தத்திற்கான காரணம் வேலையா அல்லது தனிப்பட்ட வாழ்க்கையா என்பதை நிறுவனம் கண்டறிய முயற்சிக்கும். நீங்கள் 'வழக்குப் போடும்' பணியாளராகவும் பார்க்கப்படுவீர்கள், இது உங்கள் எதிர்கால வேலைவாய்ப்பை பாதிக்கும். பயமுறுத்துவதற்கு சொல்லவில்லை.. ஒரு HR ஊழியராக என் கடந்த கால அனுபவங்களில் இவை எல்லாம் நிகழ்வதைப் பார்த்திருக்கிறேன். மனம் வெதும்பி, அப்படித் துன்புறும் பணியாளருக்கு, அவர் பக்கம் நியாயம் இருந்தால் வேறு நிறுவனங்களில் பணியமர்த்த recommend செய்வதைத் தவிர வேறேதும் செய்ய முடியவில்லை என்பதே வெட்கம் கெட்ட உண்மை.

 

4/5

புனிறு தீர் பொழுது - 3

 புனிறு தீர் பொழுது - 2: https://vidhoosh.blogspot.com/2022/05/2.html

புனிறு தீர் பொழுது - 1: https://vidhoosh.blogspot.com/2022/05/1.html

பெண்களில் மனச்சோர்வு ஏன் அதிகமாக உள்ளது?

ஏன் என்பதை புரிந்து கொள்ள முதலில் மனச்சோர்வைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கடினமான காலங்களை கடந்து செல்வது எவ்வளவு கஷ்டமானது என்பது கிட்டத்தட்ட நம் அனைவருக்கும் தெரியும்.

பெரும்பாலும் கட்டுப்படுத்த முடியாத எதிர்மறை உணர்வுகளோடும், நம்பிக்கையிழந்தவர்களாக, எதிலும் நாட்டமில்லாமல், செய்யும் வேலைகளில் ஆர்வமில்லாது உணர்ந்தால், ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

உதாரணத்துக்கு டியர் காம்ரேட் என்ற ஒரு திரைப்படம். அதில் தொழில்முறை சிக்கலில் மாட்டிக்கொண்டு கதாநாயகி மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவார். அமைதியாக ஒதுங்கி இருப்பதன் மூலம் அதை சரி செய்து விடமுடியும் என்று நம்புவார். நாயகன் உறவுச் சிக்கல் மற்றும் தாத்தாவின் மரணத்தால் ஏற்பட்ட மனஅழுத்தத்தை சமாளிக்க சூழலில் இருந்து escape ஆகி பறவைகள் குரல்களை பதிந்து, ஊர் ஊராக நாடோடி போல சுற்றுவது என்று அலைவார். இப்படியெல்லாம் ஊரைச்சுற்றி தீர்த்துவிட மனச்சோர்வு என்பது "ப்ளூஸ்" மட்டுமல்ல. தன் சொந்த முயற்சியில் சரியாகி விடக்கூடிய ஒன்றல்ல. எந்த ஊருக்குப் போனாலும் மண்டை பத்திரமாக உங்களோடு தானே இருக்கும். பிரச்சினை மண்டையில் தானே.

இதை சுலபமாக புரிந்து கொள்ள பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் போது அவள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மாதவிடாய் சுழற்சியின் போது ஈஸ்ட்ரோஜன் அளவு இரண்டு முறை உயரும், குறையும். mid-follicular கட்டத்தில், அதாவது மாதவிடாய் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஈஸ்ட்ரோஜன் அளவுகள் அதிகரித்து, ovulation / கருமுட்டை வெளியிட்ட பின்னர் அதிவேகமாகக் குறையும். இது முதல் முறை.

இதைத் தொடர்ந்து, மாதவிடாய் சுழற்சியின் முடிவில் குறைவதோடு, இது கருமுட்டை வெளியிட்ட பின்னரும் மாதவிடாய் தொடங்கும் முன்னும் ஏற்படும். இந்த நேரத்தில், கருப்பையின் lining (uterus lining) கர்ப்பத்திற்கு தயாராகும் வகையில் தடிமனாக இருக்கும். இந்தக் கட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் இரண்டாம் முறை உயர்கிறது.

மாதவிடாய் சுழற்சியில் 10 முதல் 17 வரை ஈஸ்ட்ரோஜனின் உச்சநிலையால் தொடர்ச்சியான ஹார்மோன் மாற்றங்கள் எல்லா நாளிலும் நிகழ்கிறது.

பெண்களுக்கேயான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மனச்சோர்வுடன் தொடர்புடையது.  பெண்களில் மனஉளைச்சல் (2வது கட்டம் மனஅழுத்தம், 3வது கட்டம் மனச்சோர்வு) பாதிப்பின் தொடக்கமானது அவர்களின் இனப்பெருக்க ஆண்டுகளுடன் (14 முதல் 44 வயது வரை) ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகியவை நியூரோட்ரான்ஸ்மிட்டர், நியூரோஎண்டோகிரைன் மற்றும் சர்க்காடியன் அமைப்புகளை பாதிக்கின்றன.

ஏற்கனவே ஹார்மோன் பாதிப்புகள், ஏற்கனவே பரம்பரை நோய் பாதிப்பு வரலாறு இருக்கும் பட்சத்தில் அப்பெண் அவளுக்கு இருக்கும் கல்வி, தொழில், மற்றும் சமூக உறவுகள் போன்ற புற அழுத்தங்களைப் (environmental stressors) பொறுத்து அதிகரிக்கும்.

இதை சுலபமாகப் புரிந்து கொள்ள, ஒரு உதாரணம் சொல்கிறேன். ஏற்கனவே ஒரு கோப்பை பாதி நிரம்பி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது குடும்பத்தில் ரத்த சம்பந்தம் உடைய ஒருவருக்கு நோய் பாதிப்பு ஏற்கனவே இருக்கிறது (தாய்வழி / தந்தைவழி) என்று வைத்துக் கொள்வோம். இது பாதி நிரம்பிய கோப்பை.

சூழ்நிலை அழுத்தங்கள் அந்தக் கோப்பையை நிரப்பும். சூழ்நிலை அழுத்தங்கள் மேலும் மேலும் அதிகமாக ஆகும் போது கோப்பை நிரம்பி வழியும். இது spill-over. இந்த spill over தான் மனஅழுத்தம் மனச்சோர்வாக மாறும் கட்டம். இதை நாம் தெளிவாக புரிந்து கொண்டால் prevention is possible.

ஏற்கனவே பரம்பரை பாதிப்பு இருக்கும் பட்சத்தில், சூழலும் அவளுக்கு பதற்றம் நிறைந்ததாக அமையும் போது,  பருவமடையும் பெண் மன அழுத்தத்திற்கு ஆளாகிறாள்.  மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை நிகழ்வுகளின் விளைவாக மிகவும் சிக்கலான தேவையற்ற பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

உணரப்பட்ட சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் மனச்சோர்வு யாரையும் பாதிக்கலாம். ஒவ்வொரு நபருக்கும் அவர்தம் தனிப்பட்ட காரணிகள் மற்றும் அறிகுறிகள் இருந்தாலும், மூளை வேதியியல் மாற்றங்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மரபணு காரணிகள் பெரும்பாலும் பொதுவானதாகவே இருக்கின்றது.

சமூக பாலின வேறுபாடுகள் மனச்சோர்வின் விகிதங்களிலும் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும். 13-25 வயது வரை பெண்கள் பொதுவாக மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவராகவும், நட்பு பாராட்டுபவராகவும், உணர்திறன் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். அதே சமயம் அதே வயதுடைய ஆண்களோ தங்கள் வாழ்க்கையில் தன்னிச்சையாக நடக்கவும் மற்றும் சுதந்திரமாக இருக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதேபோல, ஸ்டோய்ஸிசம் (ஞானம், நீதி, வீரம் மற்றும் நிதானம் போன்ற திறன்கள்), தைரியம் மற்றும் உணர்ச்சிகளை உள்ளபடி அப்படியே வெளிக்காட்டுவது போன்ற சமூகத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் பெண்ணுக்கு உரியதாகக் கருதப்படும் எதையும் தவிர்ப்பது போன்ற விதிமுறைகளை வலியுறுத்துகிறது.

இல்லத்தரசிகளாகவும் தாயாகவும் மாறும் பெண்களைப் பொறுத்தவரை சமூகத்தில் அவர்கள் பங்களிப்புக்கள் மதிக்கப்படாமலே போய்விடுகிறது என்பது ஒரு பின்னடைவாகவே இருக்கிறது. இதற்கிடையில், வீட்டிற்கு வெளியே ஒரு வேலையை/தொழிலைத் தொடரும் பெண்கள் பாலினப் பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையை எதிர்கொள்ளலாம். அதோடு மனைவி மற்றும் தாயாக குடும்பத்தில் அவர்களின் பங்கு மற்றும் அவர்களின் தொழில் ஆகியவற்றுக்கு இடையே ஓயாத அல்லாட்டத்தை உணர்கிறார்கள் என்பதும் கவனிக்கவேண்டிய ஒன்று.

பங்களிப்பு vs நன்மைகள் என்ற பார்வையில் குடும்பம் மற்றும் தொழிற் சூழல்கள் இரண்டுமே பெண்களை விட ஆண்களுக்கு பயனளிக்கிற ஒன்றாகவே இருக்கிறது. இது பெண்களில் மனச்சோர்வு அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

பெண் மனநிலை மற்றும் பாலின ஹார்மோன்களுக்கு இடையிலான தொடர்பையும் தெளிவாகக் காட்டுகிறது.

அப்போது மாதவிடாய் நின்று போகும் மெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் பிரச்சினைகளில் இருந்து விடுதலையா?  அதுவும் கிடையாது. ஒரு பெண்ணின் மனச்சோர்வுக்குப் பங்களிக்கும் பிற ஹார்மோன் காரணிகளான ஹைபோதாலமிக்-பிட்யூட்டரி-அட்ரீனல் (HPA) ஆக்சிஸ் மற்றும் தைராய்டு செயல்பாடு தொடர்பான வேறுபாடுகள் ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டால் அதிகமாகும். பெரி-மெனோபாஸ் என்பது தீவிர மனச்சோர்வின் வரலாற்றைக் கொண்டவர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் காலமாகும்.  பெரிமெனோபாஸ் என்பது மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் மாற்றம். பெண்களுக்கு வெவ்வேறு வயதுகளில் பெரிமெனோபாஸ் தொடங்குகிறது. சிலருக்கு 40களில் மாதவிடாய் ஒழுங்கற்ற தன்மை, அதிக ரத்தப்போக்கு, 5-6 நாட்களுக்கும் மேல் தொடரும் ரத்தப்போக்கு, போன்ற அறிகுறிகளை கவனிக்கலாம். இது தவிர மன உளைச்சல், தூக்கமின்மை, எரிச்சலான உணர்வு, உடல் உறவில் நாட்டம் குறைவது, அதிக வியர்வை, படபடப்பு, தலைவலி, யோனி வறட்சி, அவ்வறட்சியால் ஏற்படும் புண்கள் மற்றும் வலிமிகுந்த உடலுறவு போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.

 

மாதவிடாய் சுழற்சியின் தொடக்கத்திற்கு முன் ஏற்படும் மனச்சோர்வு அறிகுறிகள் அதாவது ப்ரீ மென்ஸ்டூரல் டிஸ்ஃபோரிக் டிஸார்டர் (PMDD), பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வு (PPD),  மற்றும் மாதவிடாய் நின்றபின் மனச்சோர்வு (PMD) மற்றும் பதட்டம் உள்ளிட்ட உளவியல் நோய்களின் குறிப்பிட்ட வடிவங்களை பெண்கள் அனுபவிக்கின்றனர், அவை கருப்பை ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையவையாகவும் இருப்பினும், அடிப்படை காரணங்கள் ஏதும் தெளிவாக இல்லை; எனவே, பெண்களுக்கு என்று குறிப்பிட்ட சிகிச்சைகள் இதுவரை உருவாக்கப்படவில்லை.

அப்படியென்றால் எப்படி சமாளிப்பது? பெண்கள் பிரச்சினைகளைச் சரிசெய்யும் திறன் கொண்ட ஒரு மேஜிக் பட்டன் இருக்கிறதா?

3/5

புனிறு தீர் பொழுது - 2

 

புனிறு தீர் பொழுது - 1: https://vidhoosh.blogspot.com/2022/05/1.html

பிறப்புக்கு முந்தைய கர்ப்பகாலம் மற்றும்  பிரசவத்திற்கு பிந்தைய காலங்களில்  மிகவும் பொதுவான ரீதியில் உளவியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவ்வுளவியல் சிக்கல்கள் பல்வேறு தீவிரத்தன்மை மற்றும் பலவகையான அறிகுறிகளுடன் இருக்கின்றன.

 

மனநல கோளாறுகளின் அறிகுறிகளுக்கு தெளிவான காரணங்கள் எதுவும் இல்லை. மகப்பேற்றுக்கு பிறகான மனநல கோளாறு இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில், பெண்களிடையே பாலின அடிப்படையிலானதாகவும், குடும்ப வரலாற்றில் பரம்பரை நோயாக மனநல நோய்கள் இருந்து வந்திருப்பின் அதிகமாக ஏற்படுகிறது. திட்டமிடப்படாத கர்ப்பம், டீனேஜ் கர்ப்பம், திருமணம் ஆகாமல் கர்ப்பமானது, கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்திற்குப் பின் கணவர் மரணமடைதல்/பிரிதல், கணவர் அல்லாத மற்றவர்களோடு உடல் உறவு வைத்திருத்தல், குறைவான அல்லது போதுமான கல்வியறிவு இல்லாத தாய்மார்கள், புகைபிடிக்கும் / மதுவருந்தும் பழக்கம் உள்ள பெண்கள், பொருளாதாரத் சிக்கல்கள், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை நிகழ்வுகள், குழந்தை பராமரிப்பு தொடர்பான மன அழுத்தங்கள் தைராய்டு கோளாறு, குறைந்த எடையுடன் குழந்தை  மற்றும் பிறவி குறைபாடுள்ள குழந்தை பிறந்த தாய்மார்கள் போன்ற பல்வேறு காரணிகளால் பாதிப்படையும் மரபணு பாதிப்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றின் கலவையால் ஏற்படலாம்.

 

மிகவும் பொதுவான மனநலப் பிரச்சனைகளில் ஒன்று பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு ஆகும். முதல் குழந்தை பிறந்த முதல் வருடத்தில் முதல் சில வாரங்களில் ஏற்படுகிறது.  கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் கர்ப்ப காலத்தில் முதலில் மனச்சோர்வடைவார்கள்.

மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு மேற்கத்திய சமூகங்களில் உள்ள அனைத்து தாய்மார்களிலும் தோராயமாக இந்தியப் பெண்களில் 23% என சமீபத்திய தொற்றுநோயியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

கொரோனா காலகட்டத்தில் பதிவாகியுள்ள மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வின் காரணம் 34 சதவீதம் பெண் குழந்தை பிறப்போடு தொடர்புடையது என்று அறியத் தருகிறது.

 

பல ஆய்வுகள் நீண்டகால, கடுமையான மனச்சோர்வு அப்பெண்களின் சமூக உறவுகள், குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கத்தை ஆவணப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக அதிக விவாகரத்து விகிதங்கள், குழந்தையுடன் அதிக பிணைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் அப்பெண், அவள் குடும்பம்  பாதிப்படைவது மட்டும் அவளுக்கு பிறந்த குழந்தைகளிடையே உடல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியைக் குறைக்கிறது.

 

என்னோடு பணியில் இருந்த 50 வயதுப் பெண்மணி ஒருவர், சிறந்த தலைமைப் பண்புகள் உடையவர். முக பக்கவாத பாதிப்பு உடையவர். இது அவர் இரண்டு வயதுக்கு குழந்தையாய் இருந்த போது அவரது அம்மா அடித்ததால் ஏற்பட்ட பாதிப்பு. இதனால் அவருக்கு அவருடைய அம்மா மீது தீராத ஆனால் வெளிப்படுத்த முடியாத வன்மமும், கோபமும் உண்டு. முக பக்கவாதத்தால் பேசும் போது அவரது வாய் இடது புறமாய் இழுத்துக்கொள்ளும். ஆனால் புதிதாகப் பார்ப்பவருக்கு (அல்லது) இந்த விஷயம் தெரியாதவருக்கு அதை கவனிக்கத் தோன்றாது. ஆனால், அப்பெண்மணியோ அவர் உரையாடும் போதும், மேடைப் பேச்சின் போதும் மிகவும் பதட்டமாய் இருப்பார். அவர் தாய்க்கு PPD.

 

23 வயது பெண், அவள் தாய்க்கு self harming / self injurious behaviour symptoms கொண்ட PPD. பிறந்ததில் இருந்து 15 வருடங்கள் தாயைப் பிரிந்தே வளர்த்திருக்கிறாள். அவள் பருவம் எய்திய போது தாய் அவளோடு இருக்கவில்லை. 23 வயதிலும் அவளுக்கு தன் உணர்வுகளை சரியான விதத்தில் வெளிப்படுத்தத் தெரியவில்லை, அதிக மகிழ்ச்சி அல்லது துக்கம் ஏற்படும் போது கார்ட்டூன் காரெக்டர்கள் (டோரேமான், மிக்கி மவுஸ் போன்றவை) போல குரல் எழுப்புகிறாள். அவளால் யாரையும் நம்ப முடியாத trust issues இருக்கிறது. யாராவது வேலை சொன்னால், சோர்வாக இருந்தாலும் கூட அதை செய்கிறாள் - அமைதியாக. உரத்த குரலில் பேசினால் பயப்படுகிறாள்.

 

ஒரு உதாரணத்துக்குத் தான் சொல்லி இருக்கிறேன். தாயின் PPD பாதிப்பு, குழந்தைகளுக்கு ஒரு ஸ்பெக்ட்ரம் போன்ற பலவகைப்பட்ட மனநல பாதிப்பை உண்டாக்கும்.

 

தாய்வழி மனநலப் பிரச்சனைகள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல; இது குறைவான உணர்திறன் கொண்ட குழந்தைகளின் நடத்தை பிரச்சனைகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. பிறந்த குழந்தைகளுக்கும் அவர்களின் தாய், மற்றும் முதன்மை பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான அன்றாட தொடர்புகள் குழந்தைப் பருவம் முழுவதும் நரம்பியல், அறிவாற்றல், உணர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சியை பாதிக்கின்றன.

 

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் தாய்வழி மனநலக் கோளாறுகளின் எதிர்மறையான விளைவுகள் வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீண்டகால சமூகத் துன்பங்களின் காரணமாக உள்ளன என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. குறைந்த வருமானம் கொண்ட சமூக அமைப்புகளில், தாய்வழி மனச்சோர்வு குறைந்த பிறப்பு எடை மற்றும் முதல் வருடத்தில் ஊட்டச்சத்து குறைவாக இருப்பது, அதிக வயிற்றுப்போக்கு நோய்கள், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி குறைபாடு ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடையதாக இருக்கின்றது.

 

அதிக வருமானம் கொண்ட நாடுகளில், பிரசவத்திற்குப் பின் வழக்கமான  கவனிப்புடன் உளவியல் ஆலோசனைகள் மனச்சோர்வைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை சான்றுகள் காட்டுகின்றன.

 

அதேபோல, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்தாலும் கூட, இந்தியாவில் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு, நீண்ட நாட்கள் தொடர்ந்து தாய்ப்பாலூட்டுதல், குழந்தை பராமரிப்பில் குடும்ப ஆதரவின் மூலம் சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் குழு உளவியல் நுட்பங்கள் இந்திய குடும்ப அமைப்பில் மிகவும் பயனுள்ளதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கின்றன.

இந்தியாவின் பெரும்பாலான இடங்களில், பெண்கள் பிரசவங்கள் பொதுவானதாக இருக்கும் கூட்டுக் குடும்பங்களிலும், நெரிசலான இடங்களில் வசிக்கும் குடும்பங்களிலும், ஒட்டுமொத்த குடும்பம் மற்றும் சமூகம் சம்பந்தப்பட்ட தலையீடுகள் அதிகமிருக்கும் பெண்களுக்கு, இப்படிப்பட்ட சூழ்நிலைகள் மனஅழுத்தத்தைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரியவருகிறது.

பல தலைமுறைகளாக கூட்டுக் குடும்பங்களில் பெண்கள் வாழும் அமைப்புகளில், இந்த அணுகுமுறை புதிய குழந்தை மற்றும் தாயைப் பராமரிக்கும் பொதுவான முயற்சியில் முழு குடும்பத்தையும் ஈடுபடுத்துவதை சாத்தியமாக்கும்.

ஆனால் அதே சமயம் மனநோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களைப் பராமரிப்பதற்கான ஒரு மாதிரியை உருவாக்க நாம் ஒரு சமூகமாய் ஒன்றுபட்டு முன்னெடுக்க வேண்டும். இதில் குடும்பம் தவிர, மகப்பேறு மருத்துவர், மனநல நிபுணர், மற்றும் சமூக நலப் பணியாளர்/செவிலியர்கள்/பயிற்சி பெற்ற மருத்துவச்சிகள் அல்லது ஆயாக்கள் ஆகியோரைக் கொண்ட தாய்-சேய் பராமரிப்பில் கவனம் செலுத்தும் குழுவை உள்ளடக்கி ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தி அதை சமூகத்திற்கு அணுகக்கூடிய வகையில் உத்திகள் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

 

குழந்தை பிறப்பதற்கு முன்பும், பிறக்கும் போதும், பின்பும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதுகாப்பாக உணர்வது ஒவ்வொரு பெண்ணின் உரிமை.  மனநல நிபுணர்கள், மகப்பேறியல் நிபுணர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் நிரல் திட்டமிடுபவர்கள் தங்கள் நாட்டிற்கு அல்லது உள்ளூர் சமூகத்திற்கு ஏற்ற மலிவு விலையில் உத்திகளைத் திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் கூடுதல் பொறுப்பு ஏற்று பாதுகாப்பான தாய்மை மற்றும் குழந்தை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் கலாச்சார ரீதியாக நல்ல நடைமுறைகளை உருவாக்கி பரிந்துரைப்பது அவசியம்.

 

2/5

புனிறு தீர் பொழுது - 1

எங்கள் அபார்ட்மென்ட்டில் புதியதாக தாயான ஒருவரைச் சமீபத்தில் சந்தித்த போது அவர் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார். ஏற்கனவே மூன்று வயதில் ஒரு குழந்தை வேறு இருக்கிறான். தன்னை PPD காரணமாக விவாகரத்து செய்வதால் அதை எப்படி சட்டபூர்வமாகச் சமாளிப்பது என்று கேட்டார்.

PPD ஆங்கிலத்தில் போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் என்றறியப்படும் மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு.
நம் உடலில் இருந்து ஒரு பாகம் திடீரென்று கழற்றி வைக்கப் பட்டால் எப்படி இருக்கும்?

பல் விழுவது முதல் அப்பன்டிசிஸ் நீக்கம் வரை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஏறத்தாழ பத்து மாத காலம் உடலோடு ஒன்றாக இருந்த வயிற்றுச் சுமை திடீரென்று பெறுவலியோடு நீங்கும் பொழுது ஒரு பெண்ணின் உடல் மனம் ஆன்மா எல்லாவற்றிலும் அதீத மாற்றங்கள் ஏற்படும்.
குழந்தை பிறந்து முதல் மூன்று வாரங்களில் ஒரு பெண்ணுக்கு சோகம், எதையோ இழந்து விட்ட உணர்வு, பதற்றம், குற்றவுணர்வு போன்றவை ஏற்படக்கூடும்.
இதற்கு ஆண் பெண் பாலின பாகுபாடு அல்லது ஆதிக்க மனநிலை என்று எல்லாவித காரணங்களும் பிரித்து ஆராயப்பட்டு விட்டன. ஆனால், பிள்ளைப்பேறுக்கு பிறகான பெண்கள் மனநலம் பற்றி நாம் கவனஞ் செலுத்தி அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அதுதான் மகப்பேறு விடுப்பு இருக்கிறதே? அந்த ஆறு மாதகாலம் அம்மா வீட்டில் தானே இருக்கிறார்கள்? அதிக வேலைகள் செய்ய விடுவதில்லையே? வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருக்கிறோமே? என்று நீங்கள் சமாதானப் படுத்திக் கொள்ளும் காரணங்கள் எல்லாமே முதன் முதலில் தாயான பெண்ணுக்கு செய்வதாக ஏமாற்றிக் கொள்வதுதான். நாம் பார்க்கும் திரைப்படங்களில் கூட "தாய்மை"யை அலாதியான ஆனந்தமயமான குதூகலமான ஒன்றையே பார்க்கிறோம். போதாக்குறைக்கு அவளை சகமனுஷியாகப் பார்ப்பதைக் கூட நிறுத்திவிட்டு "தெய்வீக" கிரீடத்தை வேறு ஏற்றி வைத்து சுமக்க வைக்கிறோம்.
இந்தியாவில் மகப்பேற்றுக்குப் பிறகான மனஅழுத்தம் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறதா என்று நீங்கள் யோசித்தால் இந்தக் கட்டுரை உங்களுக்கு ஒரு விழிப்புணர்வாய் இருக்கும். சிவில் கோர்ட்டில் கவனித்துப் பார்த்திருந்தீர்கள் என்றால், பெரும்பாலான விவாகரத்துகள் திருமணமாகி குறைந்த காலகட்டத்துக்குள்ளேயோ அல்லது இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளை நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் டேகேர் சென்டரில் விட்டு வரும்படியாகவே இருக்கும்.
இந்தியாவில் மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு அல்லது பேபி ப்ளூஸ் என்பது ஒருபோதும் விவாதிக்கப்படாத ஒரு விஷயமாகவே இருக்கிறது. தாத்தா பாட்டிக்கள் புதிய வாரிசு கூட அந்த அற்புதக் கணங்களை மகிழ்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கணவன்மார்களோ குழந்தையைக் கையாள்வதற்கு மிகவும் பயப்படுகிறார்கள் அல்லது மனைவிக்கு உதவுவதில் குழப்பமடைகிறார்கள். இந்தக் கூத்தில் "அவள்" கஷ்டப்படுகிறாளா என்று கூட யாரும் பார்ப்பதில்லை.
புதிய உயிருக்கு அபரிமிதமான அன்பும் கவனமும் தேவை. ஆனால் தாய்க்கு அவள் கர்ப்பமாக இருந்தபோது பெற்ற அக்கறை போல அவ்வளவு அதிகமாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் அவளுக்கான கவனம் தேவை.
அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை, நம்மால் டயாபெட்டீஸ், கான்ஸர், HIV-AIDS-STD, ஆனானப்பட்ட கொரோனா போன்ற எல்லாவற்றையும் சகஜமாக ஏற்றுக் கொள்ள முடிந்து விட்டது. ஆனால் அது எந்த வகையான மனநலப் பிரச்சனையாக இருந்தாலும், அது தனக்கும் தன் குடும்பத்துக்கும் தீராத களங்கம் உண்டாக்கி விட்டதை போல ஒரு மாயை ஏற்பட்டு விடுகிறது. மிக சர்வ சாதாரணமாக 5ல் ஒருவருக்கு இருக்கும் டிப்ரஷன் என்ற மனச்சோர்வை குடும்பத்தினர்கள் கையாள்வதை நான் பார்த்திருக்கிறேன். தன் குடும்ப உறுப்பினர் ஒருவர் மனச்சோர்வடைந்துள்ளார், ஆனால் ஒருபோதும் அது பற்றி வெளிப்படையாக விவாதிக்கப்படுவதில்லை! ஏதோ மனஅழுத்தம் தொற்றிக்கொள்ளும் வியாதி போல பதறிப் போகிறார்கள்! அதை முடி மறைத்து, பாதிப்படைந்த நபரைக் குற்றவுணர்வுக்குத் தள்ளி, ஏதோ நடக்கூடாத ஒன்று நடந்து விட்டதைப் போல மேலும் பதட்டத்துக்கு ஆளாக்கி, மாத்திரை மருந்துகளை சாப்பிடவிடாமல் செய்து, இன்னுமும் மூடி மூடி வியாதி அதிகமாக ஆகி விடும்.
இந்தியப் பெண்கள் இயற்கையாகவே தாய்மை குணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கள் குழந்தைகளின் மீது அன்பும், பற்றும் தன்னிச்சையாய் வந்து விடவேண்டியதாக இருக்கிறது. மிகக் கசப்பான உண்மை என்னவெனில், ஒவ்வொரு 7 பெண்களில் ஒருவர் பிரசவத்திற்குப் பின் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார். இதைப் பற்றி ஒருபோதும் பேசப்படுவதில்லை - ஏனென்றால் குழந்தையைக் கவனிக்கவே முழு நேரமும் தேவைப்படும் போது அதன் அம்மாவுக்கு யாருக்கு நேரம் இருக்கிறது?
மனச்சோர்வு என்பது ஒரு தாற்காலிக conditionதான் என்பதை புரிந்து கொள்ளவோ அல்லது ஒப்புக்கொள்ளவோ தவறிவிட்டோம். நிலைமை இப்படி இருக்கும் போது, பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வை அவர்கள் எவ்வாறு புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும், குழந்தை பிறந்த பிறகு ஒரு தாய் சோகமாக இருக்கக்கூடும் அல்லது மனச்சோர்வடைந்திருப்பாள் என்பதை நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பெரியவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
சில கணவர்கள் தம் மனைவி பிள்ளைப் பேற்றுக்கு பின் வரக்கூடிய மனச்சோர்வு (PPD) ஏற்படும்போது அதை எப்படி கையாளுவது என்று தெரியாமல், உறவுச் சிக்கல் பெரிதாகாமல் அல்லது மேலும் மனஅழுத்தத்தை உண்டாக்கிக் கொள்ளாமல் சரியான முறையில் அதைப் பற்றி நேர்மறையாக உரையாடி சரி செய்து கொள்வது என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பது ஒரு பெரிய காரணமாக இருக்கிறது.
நம்மிடம் உள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால் சாதாரண உரையாடல் (discussion) கூட விவாதமாகவே (argument) ஆக்கி விடுவதுதான். உரக்கச் சத்தமாய் அல்லது கீழ்மைப் படுத்தி அல்லது (பெரும்பாலும் பழிச்சொல் பயன்படுத்தி) அதட்டிப் பேசுவது ஆளுமை குணம், அல்லது எதிராளியை அடக்கும் ஒரு உத்தி என்று நம்புவதுதான்.
மகப்பேற்றுக்கு பிறகான மனஅழுத்தம் எப்போது மனச்சோர்வு ஆகிவிடுகிறது என்று என் கூட பணிபுரிந்த பெண்கள் அனைவரையும் நினைத்துப் பார்க்கிறேன்.
என் முதல் குழந்தையைப் பெற்ற பிறகு உடலிலோ மனத்திலோ பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. எனக்கான வாழ்க்கைப் பயணம் அப்போதுதான் துவங்கி இருந்தது. ஆனால் இரண்டாவது குழந்தை, ஆமாம், அப்போதுதான் நான் நன்றாக மாட்டிக்கொண்டேன். ஏனென்றால், என் தொழில்முறையில் ஏணியின் உச்சிக்கு ஒரு படி தான் இருந்தது. Social support என்று நாம் சொல்லிக் கொள்ளும் அம்மா-வழி / புகுந்த வீட்டு வழி ஆதரவுக்கு இருப்பவர்கள் எல்லோருமே வயதானவர்களாக ஆகிவிட்டிருந்தனர். எனக்கும் ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான வயதும் உடல் பலமும் இல்லாமல் ஆகி விட்டிருந்தது. உண்மையில் இது மிக மிக மிக மிகவும் கடினமானது என்பதைத் தவிர வேறெந்த மந்திரஜாலமேதும் அதற்குப் பதிலாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. "அதை எப்படிச் சமாளிப்பது" என்ற கேள்வி, மேற்சொன்ன எல்லாவற்றிற்கும் ஒரு நல்ல தீர்வாக, பிரச்சினைகளைச் சரிசெய்யும் திறன் கொண்ட ஒரு மேஜிக் பட்டன் போல என்னை இதைப் பற்றி எழுதத் தூண்டுகிறது.
இப்போது PPDயின் தாக்கம் விவகாரத்துக்கானக் காரணங்களை எவ்வாறு உண்டாக்குகின்றன என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். சரியாகக் கண்டறியப்படாத (undiagnosed) PPD காரணமாக இன்று நம் சமூகத்தில் 20-30% முதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகிறது. நான் ஏற்கனவே கற்றறிந்தது என்னவென்றால், பெற்றோர் ஆன பிறகு முதல் வருடம் திருமணமான தம்பதிகளுக்கு மிகவும் சவாலானது. இந்த சவால் தீராத பிரச்சினையாகும் என்பது பிரசவத்திற்கு முந்தைய மனநிலை அல்லது மகப்பேற்றுக்கு பிறகான மனஅழுத்தம் (கவனிக்க: மனச் சோர்வு இல்லை) போன்ற கவலைகள், உறவுச் சிக்கல்களை ஏற்கனவே சரியாய் நிர்வகிக்காத ஒரு ஜோடிக்குப் பொருந்தும்.
விவாகரத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்று தம்பதிச் சண்டைகள், பெரும்பாலும் பேசினாலே தீரக்கூடிய சில்லரைத்தனமான, ஆனால் பேசாமல் இருந்ததால் புகைச்சலாகிவிட்ட சண்டையாகவே இருக்கின்றன.
பல சமயங்களில், ஒரு பெண் மகப்பேற்றுக்கு பிறகு ரத்த இழப்பினால் ஏற்பட்ட நலக் குறைவு, உடல் அசதி, மன அழுத்தம், சோர்வு அல்லது பதட்டம் ஆகிவற்றால் அவதிப்படும்போது அவளுடைய துணை குழப்பமடைகிறான். அவளுக்கு எப்படி உதவுவது என்று தெரியாமல் அல்லது தன்னால் எதுவும் செய்ய முடியாது ஆகி அக் கையாலாகாதத்தனம் கோபமாக மாறுகிறது.
மேலும் பெண்களுக்கு எப்போதுமே தனது பிரச்சினைகளை தன் துணைவருக்கு எப்படி விளக்குவது என்று தெரியாது. ஏனெனில் biological wiring அப்படியானது பெண்களின் துரதிருஷ்டம்.
இருவருக்கும் குழப்பம், ஏமாற்றம் அதனால் கோபம். அப்பாவுக்கு அம்மா மீது கோபம். அம்மாவுக்கு அப்பா மீது கோபம். என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மற்றவரிடம் எப்படிப் பேசுவது என்று இருவருக்கும் தெரியாது, அதனால் அவர்கள் பேசுவதை நிறுத்துகிறார்கள். அல்லது பேசுவது கத்தலும் கூச்சலுமாக மாறும். மனங்கள் உடைந்து திருமண உறவு முடிவடைகிறது.
மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு காரணமாக சம்பந்தப்பட்ட ஒவ்வொரு உறவிலும் போராட்டங்கள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் திருமண பந்தம் இதிலிருந்து மீள முடியாது சிக்கலில் மாட்டிக் கொள்கிறது.
விவாகரத்துக்கான காரணம் மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு என்று நாம் கருதலாம், PPD உண்மையில் ஒட்டகத்தின் முதுகை உடைத்த கடைசி வைக்கோற்புல்லாக இருக்கலாம். பெரும்பாலும் தினப்பாடு வேலைகளின் சவால்கள், நம்பிக்கையின்மை, விசுவாசமின்மை, பொருளாதாரச் சிக்கல்கள், அல்லது சரியே செய்ய முடியாத வேறுபாடுகள் போன்ற பெரிதாக்கப்பட்ட ஏதோவொன்றின் காரணமாக திருமணம் முடிவடைகிறது.
உறவு மோதல் ஒரு கசப்பான உண்மை. பெண்கள் மனதாலும் உடலாலும் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் வரையில் அவர்களைச் சார்ந்த குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை. அந்த அம்மா யாராக இருந்தாலும், அவள் எவ்வளவு வலிமையானவளாக இருந்தாலும், சில நேரங்களில் அம்மாக்களுக்கு அவர்கள் உணரும் எண்ணற்ற சிக்கலான உணர்ச்சிகளை அவள் அதைத் தனியே கடந்து செல்வாள் என்று எதிர்பார்க்க முடியாது. அப்போது அந்தப் புதைமணலில் இருந்து மீண்டும் அவளை மீட்டு உருவாக்க கணவன்-மனைவி இரண்டு பேரும் ஒன்றாக முயற்சி செய்ய வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சாதாரண மனிதன்

எங்கிருந்தும்... எங்கும்

சென்று சேர்கின்றன
அவன் கால்கள்
வெகு சாதாரணமாக
அந்தச் சாதாரண நடையால்
பூமி தட்டையாகிறது
அந்தக் கால்கள் இயங்கும் போதெல்லாம்
அது எங்கிருந்து செல்கிறதோ
அங்கே மீண்டும் வருகிறது
ஒரு துன்பத்திலிருந்து
அடுத்தத் துன்பத்திற்கு
நகர்வதைப் போலவே
தன் துன்பங்களைத் தொடர்ந்து
நடக்கின்றன அக்கால்கள்
மிகச் சாதாரணமாக.
- விதூஷ் / 9.May.2022

நிலைக்கண்ணாடி

 என்ன சொன்னீர்கள்

'அது மிகவும் முக்கியமா?'
என்றா கேட்டீர்கள்
உங்களிடமிருந்து பதில்களை மட்டுமே
பெறும் கேள்விகளைக் கேட்கும்
யாருக்கும் கேட்காத குரல்கள் கேட்டு
அழ விரும்பும் போதெல்லாம் சிரிப்பீர்கள்
இந்த விசித்திரமான நகரத்தின்
விசித்திரம் உங்களை பயமுறுத்துகிறதா?
இந்த நகரத்திலிருந்து உங்களால்
தப்பிச் செல்ல முடியும்
வேறொரு விசித்திரமான உலகத்திற்கு
அங்கே எல்லாம் வேறுபட்டவையாய் இருக்கின்றன
உங்களை அவர்கள் அனைவரும்
விசித்திரமானவர்கள் என்று கூறுகிறார்கள்
இங்கே அது இயல்புக்கு மாறாக இருக்கின்றது
நீங்கள் வித்தியாசமாக இருக்க விரும்பினால்
நீங்கள் சுதந்திரமாக இருக்க விரும்பினால்
தேடிக் கொண்டே இருங்கள்
நிலைக்கண்ணாடியில் ஒரு நாள்
மாறுவேடத்தில் வருவீர்கள்.
- விதூஷ் / 9.5.2022